மன்னை முத்துக்குமார்
எது தடையாக இருக்கிறது?...

பொது உண்மைகளை அலசும்போது, பொருளாதார வல்லுநர்கள் ஓர் எச்சரிக்கையை மேற்கொள்ளுவர். நாம் ஒரு பொருளாதார மனிதனை அடிப்படை உண்மையாக வைத்துக் கொண்டால், பிற புறச் சூழல்களும் சரிசமமாக அமைந்திருக்கின்றன என்னும் கருத்து நிலையிலேயே - அப்படி ஒரு பொருளாதார மனிதனைக் கற்பனை செய்து கொள்கிறோம் என்றுதான் - அவர்கள் எச்சரிக்கை வரையறையுடன் தமது ஆய்வுகளையும், முடிவுகளையும் வெளியிடுவர். ஆனால், தொழிலாளர் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள் பயன்படுத்தும் பிற புறச்சூழல்களின் சாதக நிலையை அறவே மறந்து விடுகின்றனர். அய்ரோப்பாவில்கூட, மார்க்ஸ் சொன்னது சரியாக இருந்தது என்று சொல்வதற்கில்லை.

"ஜெர்மனியில் ஓர் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மனிதன் இருக்கிறான். அதே போல் பிரான்சில் சுரண்டப்பட்டு, அழிக்கப்பட்ட ஒரு கைவினைஞன் இருக்கிறான். இரு நாட்டு ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மனிதர்களும் - ஓர் இனம், ஒரு கொள்கை, ஒரு கடந்த காலம், ஒரு நிகழ்காலம், ஓர் எதிர்காலம் என்பதற்குச் சொந்தக்காரர்கள்தான்; அவர்கள் ஒன்று சேர வேண்டும்'' என்று மார்க்ஸ் காலத்தில் அறைகூவல் விடப்பட்டது.

ஆனால், உண்மையில் ஜெர்மனியில் உள்ள ஏழை - ஒடுக்கப்பட்ட மனிதனும், பிரான்சில் சுரண்டப்பட்டு வாழ்வே சிதைந்து போன கைவினைஞனும் இணைந்து நிற்கிறார்களா? நூறு ஆண்டுகள் கடந்த பிறகும் அவர்கள் ஒன்றுபடக் கற்றுக் கொள்ளவில்லை. கடந்த உலகப் போரில் கூட, அவர்கள் எதிரெதிர் அணியில் நின்று மூர்க்கத்துடன் போரிட்டனர். இந்தியாவுக்கும் அது பொருந்தும். இந்தியாவிலும் அத்தகைய ஒற்றுமை ஏற்படவேயில்லை.

பணக்கார வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற தெளிவான பிரிவினை - இந்தியாவில் ஏற்படவே இல்லை. எல்லா தொழிலாளர்களும் ஒரே வர்க்கம் என்பது ஒரு லட்சியம். அது அடையப்பட வேண்டிய லட்சியமே ஒழிய, அதுவே இன்றைய உண்மையான சூழல் என்று முடிவு செய்து கொள்வது தவறு. இந்நிலையில் தொழிலாளர் அணிகளை எப்படி திரட்ட முடியும்? தொழிலாளர்களிடையே எப்படி ஒற்றுமையைக் கொண்டு வர முடியும்?

ஒரு பிரிவுத் தொழிலாளர்கள், இன்னொரு பிரிவுத் தொழிலாளர்களை நசுக்குவதைத் தடுப்பதன் மூலம்தான் - அவர்களிடையே ஒற்றுமையை உருவாக்க இயலும். ஒடுக்கப்பட்ட பிரிவுகள் அமைப்பு ரீதியாகத் திரள்வதைத் தடுப்பதன் மூலம் அது முடியாது. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் பிரிவினரைத் தடுப்பதன் மூலம் அத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது.

இனம், மதம் ஆகிய பின்னணியில் பகைமை கொள்ளுவதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து களைவதுதான் ஒற்றுமையைக் கொண்டு வருவதற்கான ஒரே வழி. ஒரு தொழிலாளி மற்ற தொழிலாளர்களுக்குத் தர விரும்பாத உரிமைகளை, அவன் மட்டும் பெற வேண்டும் என்பது தவறான சிந்தனை என்பது, அவனுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.

தொழிலாளர்களிடையே ஒற்றுமையைக் கொண்டு வர சிறந்த வழி - தங்களுக்கிடையே சமூக வேறுபாடுகளைக் கடைப்பிடிக்கும் போக்கு, தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையைச் சிதைத்து விடும் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதுதான். வேறு வார்த்தைகளில் சொன்னால், சமத்துவமின்மை என்னும் குணாம்சத்தை அதாவது பார்ப்பனியத்தைத் தொழிலாளர் மத்தியிலிருந்து வேரோடு களைந்தெறிய வேண்டும். இத்தகைய முயற்சியில் இறங்கிய தொழிலாளர் தலைவர்கள் யார்? முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர் தலைவர்கள் ஆவேசமாகப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், பார்ப்பனியத்திற்கு எதிராக தொழிலாளர்களிடையே எவருமே பேசியதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் அவர்கள் சாதிக்கும் மவுனம் வெளிப்படையாகத் தெரிகிறது.

ஒரு வேளை தொழிலாளர் அமைப்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றுக்கும் - பார்ப்பனியத்துக்கும் தொடர்பே இல்லையென்று அவர்கள் நினைக்கிறார்களா? அல்லது தொழிலாளர்கள் சிதறிக் கிடப்பதற்கு பார்ப்பனியம் பெருமளவு காரணமாக இருக்கிறது என்பது, இன்னும் அவர்களுக்குத் தெரியவே இல்லையா? ஒருவேளை இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தால் தொழிலாளர் உணர்வுகளைப் புண்படுத்தி விடக் கூடாது; அப்போதுதான் நாம் தலைமைப் பொறுப்பில் நீடிக்க முடியும் என்று நம்புகிறார்களா?

இப்படித் தொழிலாளர் வர்க்கம் சிதறுண்டு கிடப்பதற்கு அடிப்படைக் காரணம் பார்ப்பனியமே என்பதை ஏற்றுக் கொண்டால், அந்தப் பார்ப்பனியப் போக்கு தொழிலாளர்களிடையே நிலவுவதையும் விளக்கியே ஆக வேண்டும். இந்தத் தொற்று நோயை அலட்சியம் செய்வதாலோ, அதைப் பற்றி மவுனம் சாதிப்பதாலோ - அதை ஒழித்துவிட முடியாது. இந்தப் பார்ப்பனியப் போக்கைத் தேடிக் கண்டறிந்து, தோண்டித் துருவி ஆராய்ந்து அடியோடு கில்லி எறிய வேண்டும். அப்போதுதான் தொழிலாளர் ஒற்றுமை சாத்தியப்படும்.


(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்: 179)
மன்னை முத்துக்குமார்
கும்பகோணத்தில் நடந்த இழிவு நீக்க போராட்டத்தில் தந்தை பெரியாரின் உரை..

Get this widget Track details eSnips Social DNA
மன்னை முத்துக்குமார்
தன் மதிப்பு, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளர வேண்டும் ..

நமது "குடி அரசு'ப் பத்திரிகை ஆரம்பித்து ஆறு மாதங்களாகின்றது. அது முக்கியமாய் நமது நாட்டுக்கு சுயராஜ்யமாகிய ‘மகாத்மா'வின் நிர்மாணத் திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரவும், தமிழர்களாகிய தீண்டாதார் முதலியோருடைய முன்னேற்றத்துக்கென்று உழைக்கவுமே ஏற்படுத்தப்பட்டது. இத்தொண்டில், ‘குடி அரசு' சிறிதுங் கள்ளங் கபடமின்றி யாருடைய விருப்பு வெறுப்பையும் பொருட்படுத்தாது, தனது ‘ஆத்மா'வையே படம் பிடித்தாற்போல் தைரியமாய் வெளிப்படுத்தி தொண்டு செய்து வந்திருக்கின்றது வரவும் உத்தேசித்திருக்கின்றது.

‘குடி அரசு' குறிப்பிட்ட கருத்தைக் கொண்ட பிரச்சாரப் பத்திரிகையே அல்லாமல் வெறும் வர்த்தமானப் பத்திரிகை அல்லவாதலால், வியாபார முறையையோ பொருள் சம்பாதிப்பதையோ தனது சுய வாழ்வுக்கு ஓர் தொழிலாகக் கருதியோ, சுய நலத்திற்காக கீர்த்தி பெற வேண்டுமென்பதையோ ஆதாரமாய்க் கொள்ளாமலும், வாசகர்களுக்கு போலி ஊக்கமும், பொய்யான உற்சாகமும் உண்டாகும் படியாக வீணாய் கண்ட கண்ட விஷயங்களையெல்லாம் கூலிக்கு எழுதச் செய்வித்தும், குறிப்பிட்ட அபிப்பிராயமில்லாமல் சமயத்திற்கேற்றார்போல் ஜனங்களின் மனதைக் கலங்கச் செய்து வருவதுமான பொறுப்பில்லாத ஓர் வேடிக்கைப் பத்திரிகையுமன்று.

உண்மையில், ‘குடி அரசு'க்கு எந்தப் பார்ப்பனரிடத்திலும், குரோதமோ வெறுப்போ கிடையாதென்பதை உறுதியாகச் சொல்லுவோம். ஆனால், பார்ப்பான் உயர்ந்தவன் என எண்ணிக் கொண்டிருப்பதிலும், மற்றவர்கள் தீண்டத்தகாதவர்கள், பார்க்கக் கூடாதவர்கள், ‘இழிவான' மிருக உரிமைக்கும் பாத்திரமில்லாதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணத்தினிடத்திலும், தங்கள் வகுப்பார்தான் முன்னணியிலிருக்க வேண்டும்; மேன்மையுடன் பிழைக்க வேண்டும்; மற்றவர்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டும், அதற்காக மற்றவர்களை உபயோகித்துக் கொண்டும் செய்யும் கொடுமையான சூழ்ச்சிகளிடத்திலுந்தான், ‘குடி அரசு'க்கு வெறுப்பு இருப்பதுடன், அதை அடியோடே களைந்தெறிய வேண்டுமென்று ஆவல் கொண்டு உழைத்து வருகிறது.

பார்ப்பனர்களின் தியாகமென்று சொல்லப்படுவதும், பார்ப்பனரல்லாதாரின் கெடுதிக்காகவே செய்யப்படுவதாய்க் காணப்படுகிறது. இந்நிலையில், தேசத்தின் பெரிய சமூகத்தாரான, பார்ப்பனரல்லாதாரைப் பலி கொடுத்து பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகளாய் நடக்க வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சமும் தோன்ற மாட்டேனென்கிறது. அல்லாமல், இவற்றைப் பற்றிய கவலை எடுத்துக் கொள்ளாமல் எப்படியோ போகட்டும் என விட்டுவிடுவதற்கும் மனம் ஒருப்படுவதில்லை.

இதை ஆரம்பத்திலேயே குடி அரசு' ‘முதலாவது இதழ் தலையங்கத்தில் ‘மக்களுக்குள் தன் மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும்; மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும்; உயர்வு, தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்துவரும் சாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும்; சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும். ஆனது பற்றியே, ‘நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற் சென்றிடித்தற் பொருட்டு' எனும் தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் வாக்கைக் கடைப்பிடித்து, ‘நண்பரேயாயினுமாகுக, அவர்தம் சொல்லும், செயலும் தேச விடுதலைக்குக் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக்கப்படும்' என நமது அபிப்பிராயத்தைத் தீர்க்கமாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.

பெரும்பாலும், பார்ப்பனர், செல்வந்தர், முதலாளிகள், வைதீகர் முதலியோருடைய குற்றங்களை எடுத்துச் சொல்லி வருவதால், அவர்கள் நமது பத்திரிகையை ஆதரிப்பார்களென்று எதிர்பார்ப்பது, பயித்தியக்காரத்தனமாகவே முடியும். ஆதலால், நமது பத்திரிகையை ஆதரிக்க வேண்டியது பார்ப்பனரல்லாதார், ஏழைகள், தொழிலாளிகள், தீண்டாதாரெனப்படுவோர் முதலிய ஒடுக்கப்பட்ட சமூகத்தாருக்கு ஏற்பட்ட முக்கிய கடனாகும். அந்தப்படி இக்கூட்டத்தார், நமது ‘குடி அரசு'வை ஆதரிக்கவில்லையானால், ‘குடி அரசு' தானாகவே மறைந்து போக வேண்டியதுதான் அதனுடைய கடமையே அல்லாமல், முன் சொன்னது போல் சுய நலம் முதலியவைகளுக்கென்று இப்பத்திரிகையை நடத்துவதில் பிரயோஜனமில்லை.

ஏனெனில், ‘குடி அரசு'வானது தன்னுழைப்பினாலும், தனது தியாகத்தினாலும் மக்கள், சிறப்பாய் பார்ப்பனரல்லாதார், தீண்டாதார் முதலியோர் விடுதலை பெற்று சுயமதிப்புடன் வாழ்ந்து தேசம் உண்மையான சுயராஜ்யமடைய வேண்டுமானால், தாழ்த்தப்பட்டவர்களெல்லாம் சம நிலைக்கு வர வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இன்றியமையாததெனக் கருதி, அதை எல்லா வகுப்பாரும் அடைய வேண்டுமென எதிர்பார்க்கிறதே ஒழிய, பொது மக்கள் வாழ்வால் ‘குடி அரசு' வாழ வேண்டுமென்று அது கருதவேயில்லை. ஆதலால், ‘குடி அரசு'வின் வாழ்வைக் கோருகிற ஒவ்வொருவரும் தங்களாலியன்ற அளவு போதிய சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுத்தும், மற்றும் தங்களால் கூடிய உதவி செய்தும் இதனை ஆதரிக்க வேண்டுகிறோம்.

‘குடி அரசு' இதழின் தலையங்கம் 1.11.1925



மன்னை முத்துக்குமார்
ஜனநாயகமும், சர்வாதிகாரமும் .
சர்வாதிகாரத்தை புத்தர் சற்றும் விரும்பவில்லை. அவர் ஜனநாயகவாதியாகப் பிறந்தார்; ஜனநாயகவாதியாகவே இறந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் 14 முடியரசு நாடுகளும் 4 குடியரசுகளும் இருந்தன. அவர் சாக்கிய வம்சத்தைச் சேர்ந்தவர்; சாக்கியர்களின் அரசு ஒரு குடியரசாகும். அவர் வைசாலி நாட்டிடம் மிகவும் அன்பு கொண்டு, அதைத் தமது இரண்டாவது சொந்த நாடாகக் கொண்டிருந்தார்.ஏனென்றால் அது ஒரு குடியரசாகும்.

அவர் மகாபரிநிர்வாணம் அடைவதற்கு முன் தமது கடைசி வர்ஷாவாசத்தை வைசாலியில்தான் கழித்தார். வர்ஷாவாசம் முடிந்தபின் அவர் தமது வழக்கப்படி வைசாலியை விட்டு வேறு எங்கேனும் செல்ல முடிவு செய்தார். சிறிது தூரம் சென்ற பிறகு அவர் வைசாலியைத் திரும்பிப் பார்த்து ஆன்ந்தாவிடம் கூறினார்: "ததாகதர் வைசாலியைப் பார்ப்பது இதுதான் கடைசிமுறை''. அந்தக் குடியரசிடம் அவர் அவ்வளவு அன்பு வைத்திருந்தார்.

அவர் முழுக்க முழுக்க சமத்துவத்தைப் பின்பற்றினார். ஆரம்பத்தில் புத்தர் உள்ளிட்ட எல்லா பிக்குகளும் கிழிந்த துணிகளால் ஆன ஆடைகளை அணிந்தார்கள். பிரபுத்துவ வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், பிக்கு சங்கத்தில் சேர்ந்து விடாமல் தடுப்பதற்காக இவ்வாறு விதி செய்யப்பட்டது. பின்னர் மாபெரும் மருத்துவரான ஜீவகன் முழுமையான துணியால் ஆன ஆடை ஒன்றைப் புத்தரை ஏற்றுக் கொள்ளச் செய்தார். புத்தர் உடனே ஆடை பற்றிய விதியை மாற்றி எல்லாருக்கும் அது பொருந்துமாறு செய்தார்.

புத்தரின் வளர்ப்புத் தாயான மகா பிரஜாபதி கோதமி, பிக்குணி சங்கத்தில் சேர்ந்திருந்தார். ஒரு முறை அவர் புத்தருக்குக் குளிர் ஏற்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டார். உடனே அவர் புத்தருக்கென தலைக்குக் கட்டும் துணி ஒன்றைத் தயாரிக்கத் தொடங்கினார். அதைச் செய்து முடித்ததும் புத்தரிடம் கொண்டு சென்று அதை அவர் அணிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், புத்தர் அதை ஏற்க மறுத்துவிட்டார். அது ஒரு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டால், சங்கம் முழுவதற்கும் அது அன்பளிப்பாக இருக்க வேண்டும் என்றும், சங்கத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டும் அன்பளிப்பாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார். தாயார் எவ்வளவோ மன்றாடிக் கேட்டும் புத்தர் அதை ஏற்க முடியாதென்று உறுதியாக மறுத்து விட்டார்.

பிக்கு சங்கம் மிகவும் ஜனநாயக முறையிலான அமைப்பைக் கொண்டிருந்தது. புத்தர், பிக்குகளில் ஒருவராகத்தான் இருந்தார். அதிகபட்சமாக, அவர் ஓர் அமைச்சரவையின் உறுப்பினர்களுக்கிடையே மூத்த அமைச்சரைப் போல் இருந்தார் எனலாம். அவர் ஒரு போதும் சர்வாதிகாரியாக இருக்கவில்லை. அவர் இறப்பதற்கு முன் இரண்டு முறை, அவருக்குப் பின் சங்கத்தை நிர்வகிக்க அதன் தலைவராக ஒருவரை நியமிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஒவ்வொரு முறையும் அவர் மறுத்து விட்டார். தம்மம்தான் சங்கத்தின் உயர் தளபதி என்று அவர் கூறினார். அவர் சர்வாதிகாரியாக இருக்கவோ, சர்வாதிகாரியை நியமிக்கவோ இணங்கவில்லை.

வழிவகைகளின் மதிப்பு எப்படிப் பட்டது? யாருடைய வழிவகைகள் மேலானவையாகவும் நீண்டகாலம் நிலைத்துப் பயன் தருவனவாகவும் உள்ளன?

பொதுவுடைமைவாதிகள், தங்களுடைய மதிப்பு மிக்க குறிக்கோள்களை அடைவதில் வேறு மதிப்புள்ள குறிக்கோள்களை அழித்து விடவில்லை என்று கூற முடியுமா? அவர்கள் தனிநபர் உடைமையை அழித்து விட்டார்கள். இது, மதிப்புமிக்க குறிக்கோள் என்று வைத்துக் கொண்டாலும், அதை அடையும் செயல் முறையில் வேறு குறிக்கோள் எதையும் அழித்து விடவில்லை என்று பொதுவுடைமைவாதிகள் கூற முடியுமா? தங்களுடைய குறிக்கோளை அடைவதற்காக அவர்கள் எத்தனை பேரைக் கொலை செய்திருக்கிறார்கள்? மனித உயிருக்கு மதிப்பு கிடையாதா? உடைமைகளின் சொந்தக்காரர்களின் உயிரை எடுக்காமல் உடைமைகளை மட்டும் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்க முடியாதா?

சர்வாதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சர்வாதிகாரத்தின் குறிக்கோள் புரட்சி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்பதே. இது ஒரு மதிப்புமிக்க குறிக்கோள். ஆனால், இந்தக் குறிக்கோளை அடைவதில் வேறு எந்த மதிப்புமிக்க குறிக்கோள்களையும் தாங்கள் அழித்துவிடவில்லை என்று பொதுவுடைமைவாதிகள் கூற முடியுமா? சர்வாதிகாரம் என்றால் தன்னுரிமை இல்லாமை அல்லது நாடாளுமன்ற அரசு இல்லாமை என்று கூறப்படுகிறது. இரண்டு விதமான பொருள்களுமே தெளிவாக இல்லை.

நாடாளுமன்ற அரசு இருக்கும்போது கூட தன்னுரிமை இல்லாமல் உள்ளது. ஏனென்றால் சட்டம் என்பது இருக்கும்போது தன்னுரிமை என்பது இல்லை. சர்வாதிகாரத்துக்கும் நாடாளுமன்ற அரசு முறைக்கும் இதில்தான் வேறுபாடு உள்ளது. நாடாளுமன்ற அரசில் தன்னுரிமையின் மீது அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளைக் குறை கூறுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது. நாடாளுமன்ற அரசில் உங்களுக்கென கடமையும் உரிமையும் இருக்கிறது. சட்டத்துக்குக் கீழ்ப்படிவது கடமை; அதைக் குறை கூறுவது உரிமை. சர்வாதிகாரத்தில் கீழ்ப்படியும் கடமை மட்டும்தான் உண்டு; குறை கூறும் உரிமை கிடையாது.

‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 3 பக்கம் : 451



மன்னை முத்துக்குமார்

பொது உடைமை அரசால் நன்மை உண்டாகுமா?


பொதுவுடைமைக் கொள்கையின்படி அரசு, நிரந்தர சர்வாதிகாரத் தன்மையுடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது, தங்களுடைய அரசியல் தத்துவத்தில் ஒரு பலவீனமான அம்சம் என்று பொதுவுடைமைவாதிகளே உணர்கிறார்கள். ஆனால், அரசு அமைப்பு இறுதியாக வாடி, காய்ந்து உதிர்ந்து போய் விடும் என்று கூறி அதன் கீழ் புகலிடம் தேடுகிறார்கள். ஆனால், அவர்கள் இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. எப்போது அது உதிர்ந்து போகும்? அரசு உதிர்ந்து போகும்போது அதன் இடத்துக்கு எது வரும்? முதல் கேள்விக்கு அவர்கள் நிச்சயமான பதில் எதுவும் கூற முடியாது.

ஒரு குறுகிய காலத்துக்கு சர்வாதிகாரம் இருப்பது, ஜனநாயகத்தைப் பாதுகாப்பானதாக வைப்பதற்குக் கூட நல்லதாக இருக்கலாம். சர்வாதிகாரம் தன் வேலையைச் செய்து முடித்தபிறகு, ஜனநாயகத்தின் பாதையில் எதிர்ப்படும் தடைகளையும் பாறைகளையும் அகற்றிய பிறகு, ஜனநாயகப் பாதையைப் பாதுகாப்பானதாக ஆக்கிய பிறகு அது, தன்னைத் தானே ஏன் கலைத்துக் கொள்ளக் கூடாது? அசோகரே இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கவில்லையா? அவர் கலிங்கத்தின் மீது வன்முறையைப் பயன்படுத்தினார். ஆனால், அதன்பிறகு அவர் வன்முறையை முற்றிலுமாகக் கைவிட்டார். இன்று நம்மில் வெற்றி பெற்றவர்கள், தங்களிடம் தோல்வியடைந்தவர்களின் ஆயுதங்களைக் களைவது மட்டுமின்றி, தங்களுடைய ஆயுதங்களையும் களைந்து விட்டால் உலகம் முழுவதும் அமைதி நிலவும்.

பொதுவுடைமைவாதிகள் இதற்கு எந்த பதிலையும் கூறவில்லை. அரசு வாடி, காய்ந்து உதிர்ந்து போகும் போது, அதன் இடத்துக்கு எது வரும் என்ற கேள்விக்கு நிறைவான பதில் கூறப்படவில்லை. இந்தக் கேள்வி, அரசு எப்போது உதிர்ந்து போகும் என்பதை விட முக்கியமானது. அதன் பிறகு அராஜகம் வருமா? அப்படியானால், பொதுவுடைமை அரசை உருவாக்குவது பயனற்ற செயலாகும். வன்முறையினால்தான் அதைத் தாங்கிப் பிடிக்க முடியும்; அதற்கு ஆதரவாக நிற்கும் வன்முறையை விலக்கிக் கொண்டால், அராஜகம் ஏற்படும் என்றால் பொதுவுடைமை அரசினால் என்ன நன்மை?

வன்முறையை விலக்கிக் கொண்டபிறகு, அது நிலைநிற்குமாறு தாங்கக் கூடியது மதம் ஒன்றுதான். ஆனால், பொதுவுடைமைவாதிகளுக்கு மதம் என்பது முற்றிலும் வெறுக்கத்தக்கதாகும். மதத்தின் மீது அவர்கள் மிக ஆழ்ந்த வெறுப்பு கொண்டிருப்பதால், பொதுவுடைமைக்கு உதவியாக இருக்கக் கூடிய மதங்களுக்கும், உதவியாயில்லாத மதங்களுக்கும் இடையே வேறுபாடு பார்க்க மறுக்கிறார்கள். பொதுவுடைமைவாதிகள் கிறித்துவ மதத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பை, புத்த மதத்தின் மீதும் காட்டுகிறார்கள்; இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் காணும் பொறுமை அவர்களிடம் இல்லை.

கிறித்துவ மதத்தின் மீது பொதுவுடைமைவாதிகள் கூறும் குற்றச்சாட்டு இரண்டு வகையானது. முதலாவது குற்றச்சாட்டு, கிறித்துவ மதம் மக்களை மறு உலக மனப்பான்மை கொண்டவர்களாக்கி, இந்த உலகில் வறுமையை சகித்துக் கொள்ளச் செய்கிறது என்பதாகும். முன்பு எடுத்துக்காட்டப்பட்ட மேற்கோள்களிலிருந்து புத்த மதத்தின் மீது இத்தகைய குற்றச்சாட்டைக் கூற முடியாது என்பது தெளிவாகும்.

கிறித்துவ மதத்தின் மீது பொதுவுடைமைவாதிகள் கூறும் இரண்டாவது குற்றச்சாட்டையும் புத்த மதத்தின் மீது கூறமுடியாது.

‘மதம் மக்களின் அபின்' என்று பொதுவுடைமைவாதிகள் கூறும் கூற்றில் இந்தக் குற்றச்சாட்டு அடங்கியுள்ளது. ‘பைபிளில்' கூறப்படும் மலைப் பிரசங்கத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. மலைப் பிரசங்கம் வறுமையையும் பலவீனத்தையும் மேல் நிலைக்கு உயர்த்துகிறது. ஏழைகளும் பலவீனர்களும் பரலோகத்தை அடைவார்கள் என்று அது வாக்களிக்கிறது. புத்தருடைய அறிவுரைகளில் மலைப் பிரசங்கத்தைப் போன்ற எதுவும் இல்லை. அவருடைய அறிவுரை, செல்வம் சேர்க்கச் சொல்கிறது. இது குறித்து புத்தர், தம்முடைய சீடர்களில் ஒருவரான அனாதபிண்டிகாவுக்கு அளித்த அறிவுரையை கீழே தருகிறேன்.

ஒருமுறை அனாதபிண்டிகா, புத்தர் தங்கியிருந்த இடத்துக்கு வந்தார். அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு அருகில் அமர்ந்து கொண்டு இவ்வாறு கேட்டார்: “இல்வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவனுக்குப் பெறுவதற்கு அரிதான, ஆனால், அதே நேரம் வரவேற்கத்தக்க, மகிழ்ச்சியான, உவப்பான விஷயங்கள் எவை என்று புத்தர் கூறுவாரா?''

புத்தர் இந்தக் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்: "இத்தகைய விஷயங்களில் முதலாவது விஷயம், சட்டப்படி செல்வம் சேர்ப்பதாகும். இரண்டாவது விஷயம், உங்களுடைய உறவினர்களும் சட்டப்படி செல்வம் சேர்க்குமாறு பார்த்துக் கொள்வதாகும். மூன்றாவது விஷயம், நீண்ட காலம் வாழ்ந்து முதுமை அடைவதாகும்.''

"உண்மையில் இல்வாழ்வான் பெறுவதற்கு அரிதான, ஆனால், வரவேற்கத்தக்க, மகிழ்ச்சியான, உவப்பான, இவற்றை அடைவதற்கு முன்பு நான்கு நிபந்தனைகள் உள்ளன.

நம்பிக்கை என்ற அருள்வளம், அறநெறி ஒழுக்க நடத்தை என்ற அருள்வளம், தாராளத்தன்மை என்ற அருள்வளம், விவேகம் என்ற அருள்வளம் ஆகியவை இந்த நிபந்தனைகளாகும்.''

(‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு': 3, பக்கம்: 453)


மன்னை முத்துக்குமார்
நம்முடைய இயக்கத்தின் நோக்கம் சமூக சமத்துவத்தை வளர்த்தெடுப்பதே ---அம்பேத்கர்

இம்மாநிலத்தில் மிகப்பெரும் தொண்டர் படை எழுப்பப் பட்டிருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் தொண்டர் படை 1926 வாக்கில் பம்பாயில் முதலில் தொடங்கப்பட்டது. சமதா சைனிக் தளம், நமது பொது அமைப்பின் பிரிக்க முடியாத அங்கமாகும். உண்மையிலேயே அதன் மிக வலிமை வாய்ந்த கருவியாகும். ஒரு காலத்தில், நமது மக்களுக்கு இந்து சமூகத்திற்குள்ளேயே சமமான இடத்தைப் பெற்றுத் தருவது நமது நோக்கமாக இருந்தது. ஆனால் இன்று, இந்துக்களுக்கு சமமாக – தனித்து, மாறுபட்டு நிற்கவே விரும்புகிறோம். நமது இயக்கத்தின் நோக்கம் மற்றும் குறிக்கோளில் ஏற்பட்ட மாற்றத்தோடு, சமதா சைனிக் தளத்தின் நோக்கத்திலும் குறிக்கோளிலும்கூட மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தங்களது அரசியல் கோரிக்கைகளை வெளியிடுவதற்குத் தகுந்த பாதுகாப்பான மேடையை அவர்கள் பெற முடியவில்லை. எனவே, இது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. இது முடியவே முடியாத காலம் ஒன்று இருந்தது. காங்கிரஸ் இயக்கம் மிகவும் வலுப்பெற்றதாக இருந்தது. அதனால் பம்பாய் நகரில் அவர்கள் வேறு எந்தக் கட்சியையும் எந்த அரசியல் கூட்டமும் நடத்த அனுமதிக்க மாட்டார்கள். அத்தகைய கூட்டங்களை காங்கிரஸ் தொண்டர்கள் வந்து கலைத்து விடுவார்கள். யாரும் கூட்டம் நடத்த முன்வர மாட்டார்கள். இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்க, தொண்டர் படையின் முதன்மைப் பணியோடு ஒரு புதிய பணியையும் சேர்க்க முடிவு செய்தோம். அதாவது, அவர்களை அரசியலில் பங்கேற்க வைப்பது.

காங்கிரஸ் தொண்டர்களின் கொந்தளிப்பான அடக்குமுறை நடவடிக்கைகளிலிருந்து நமது மேடைகளைக் காக்க வேண்டும். இது, காங்கிரஸ் தொண்டர்களின் அச்சுறுத்தலைச் சமாளிக்க, மிகவும் பயனுள்ள திட்டமாக அமைந்தது. முதல் வட்ட மேசை மாநாட்டிற்கு நான் புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், பம்பாயில் நடைபெற்ற ஒரு சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. வட்ட மேசை மாநாட்டில் நான் பங்கேற்பதை கண்டிக்கவும், நான் தாழ்த்தப்பட்ட மகக்களின் உண்மையான பிரதிநிதி அல்ல என்று அறிவிக்கவும், பம்பாயில் நான் வசித்த இடத்திற்கு அருகிலேயே தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரால் ஒரு பொதுக்கூட்டத்தை காங்கிரஸ் நடத்தியது.

அது தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் கூட்டமாக இருந்தால், எந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதைப் பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன் என்றும், அந்தக் கூட்டம் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் கூட்டம் அல்ல என்றும் கூட்ட அமைப்பாளர்களிடம் கூறினேன். அவர்கள் முடிவு செய்திருந்த நிலையிலிருந்து விலகிச் செல்ல மறுத்துவிட்டார்கள். மாலையில் கூட்டம் நடைபெற்றது. நமது தொண்டர்கள் பெருங்கூட்டமாக வந்தார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகும் வகையில் அந்தக் கூட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். மேசை, நாற்காலி, மணி ஆகியவற்றையெல்லாம் நமது தொண்டர்கள் வெற்றிச் சின்னமாக எடுத்து வந்து விட்டார்கள். நமது தொண்டர் படை பம்பாயில் மிகவும் வலிமை வாய்ந்தது. எப்பொழுதும், எவரும் நமது தொண்டர்களுக்குச் சவால் விடத் துணிந்ததில்லை. யாருடைய தொந்தரவும் இல்லாமல் நாம் நமது அரசியல் செயல்பாடுகளை நடத்திக் கொண்டு வருகிறோமென்றால், அது நமது தொண்டர் படையின் வலிமையினால்தான். நாம் அவர்களுக்குப் பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

நான் என்னளவில் அகிம்சையை நம்புகிறவன். ஆனால் அகிம்சையையும் பணிவையும் நான் வேறுபடுத்திப் பார்க்கிறேன். பணிவு என்பது வலுவற்ற தன்மை. தனக்குத்தானே புகுத்திக் கொள்ளும் வலுவற்ற தன்மை சிறப்பானதல்ல என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் சிறந்த ஞானி துக்காராம் வரையறுத்திருக்கிற வடிவில், நான் அகிம்சையின் மீது நம்பிக்கை கொண்டவன். 1. அனைத்து உயிர்களிடத்தும் அன்பும் கருணையும் காட்டுதல் 2. கேடு செய்பவர்களை அழித்தல் என அகிம்சையில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன என்று துக்காராம் மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறார். அகிம்சை பற்றிய வரையறையின் இரண்டாவது பகுதி அடிக்கடி மறைக்கப்பட்டு விடுகிறது. கேடு விளைவிப்பவர்களை அழிப்பது என்பது, அகிம்சை தத்துவத்தின் மூலாதாரமான கூறு.

அது இல்லாமல் அகிம்சை என்பது வெறும் கூடு. பேரின்பம் மட்டுமே. அது ஆக்கப்பணி அற்றுப் போகிறது. யாருக்கும் தீங்கு செய்யும் கெட்ட எண்ணம் நமக்கில்லாத வரையில், கேடு செய்பவர்களை அழிக்கும் பணியில் நம்மை நாம் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் வரையில், கையகப்படுத்துவதற்கோ, வலுவைக் கூட்டிக் கொள்வதற்கோ யாரும் அற்பத்தடை விதிக்க முடியாது. எந்த விமர்சனத்திற்கும் நீங்கள் அஞ்ச வேண்டாம். வேண்டுமென்றே எவருக்கும் தீங்கு செய்வதைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் உதவியை நாடுகிற ஒவ்வொருவருக்கும் முனைப்போடு உதவுங்கள். நீங்கள் நமது மக்களுக்குப் பெரும் தொண்டாற்றியவர்களாவீர்கள். இதுவரை உங்கள் நடவடிக்கைகளெல்லாம் பெரும்பாலும் நமது அரசியல் வாழ்வை ஆதாரமாகக் கொண்டிருந்தன. உங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டிய வேறு களங்களும் இருக்கின்றன.

(நாக்பூரில் நடைபெற்ற சமதா சைனிக் தள் மாநாட்டில் 20.7.1942 அன்று ஆற்றிய உரை - பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(3), பக்கம் 287)
மன்னை முத்துக்குமார்
தமிழ்த்தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்?

இவ்வுயர் நிலைப் பள்ளியின் இலக்கிய மன்றவிழாவில் நான் பங்கேற்றுக் கொள்ள வாய்ப்புக் கொடுத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் நான் யார், எனது கொள்கை என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நான் பொதுத் தொண்டு செய்கிறவன். நாட்டில் பலர் பொதுத் தொண்டு செய்கிறார்கள் என்றாலும், நான் மேற்கொண்டிருக்கிற தொண்டு மனிதத் தொண்டு – மக்கள் தொண்டாகும். நம் நாட்டைப் பொருத்தவரை, மனிதன் பகுத்தறிவு இருக்கும் மனிதனாக வேண்டும் என்று பாடுபடுகிறேன். மனிதன் மனிதனாக இல்லை.

பகுத்தறிவுள்ள மனித சமுதாயத்தில் ஒருவன் பறையன், ஒருவன் கவுண்டன், ஒருவன் செட்டி, ஒருவன் தென்னை மரம் உயரமுள்ள உயர்ந்த சாதி, இன்னொருவன் சாக்கடையைப் போல மிகக் கீழான இழிசாதிக்காரன் என்கின்ற பேதங்கள் இருக்கின்றன என்பதோடு, இந்த நாட்டில் பெண்கள் அடிமைகளாக, சமுதாயத்திற்குப் பயன்படாதவர்களாக இருக்கிறார்கள். பெண்கள், ஆண்களுக்கு அடிமையாகி ஆண்கள் வசதிப்படி குழந்தைப் பெற வேண்டியவர்களாக இருக்கிறார்களே ஒழிய, சம உரிமை உடையவர்களாக இல்லை.

இவர்கள் இந்த இழிவில் இருந்து தலை தூக்கா வண்ணம் கடவுள் என்ற பாறாங்கல்லும், அதன் மேல் மதம் என்ற பாழுங்கல்லும், அதன் மேல் சாஸ்திரங் கள் என்னும் கருங்கல்லையும் போட்டு அழுத்தி வைத்து இருக்கின்றார்கள். இவற்றிலிருந்து மனித சமுதாயம் தலைதூக்க வேண்டும் என்று எவனும் பாடுபட முன்வரவில்லை. எனக்கு மட்டும் இத்துணிவு எப்படி வந்தது என்றால் – கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர், மொழி, இலக்கியம், நாடு என்கின்ற எந்தப் பற்றும் எனக்கு இல்லை.

இலக்கியம் என்றால் அறிவு என்று தான் பொருள். ஆனால், நம் இலக்கியங்கள் அதற்கு மாறானதாகும். இங்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது கடவுள் வாழ்த்து என்று ஒன்றும், தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஒன்றும் பாடினார்கள். கடவுள் இங்கு எதற்கு? கடவுள் உங்களை வாழ்த்த வேண்டும் என்று நினைக்கின்றீர்களா அல்லது கடவுளை நீங்கள் வாழ்த்தி வாழ வைக்கின்றீர்களா என்பதைச் சிந்திக்க வேண்டும். கடவுள் வாழ்த்து எதற்கு? அதன் பொருள் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏதோ சம்பிரதாயம், வழக்கம், மூடநம்பிக்கை என்பதைத் தவிர, வேறு அதனால் எந்தப் பலன் ஏற்படும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னார்கள். என்ன தமிழ்த்தாய் வாழ்த்து? தமிழ்த்தாய் இந்நாட்டில் நமக்குத் தெரிய 3000 ஆண்டுகளுக்கு மேலிருக்கிறாள். அவள் இவ்வளவு நாளாக இருந்து உங்களுக்குச் செய்தது என்ன? ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமல் "அ' வருமா என்று கேட்கிறேன்.

திராவிட இயக்கம் தோன்றுகிறவரை, தமிழ்த்தாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்தும், நீங்கள் 100க்கு 5 பேர்தான் படித்திருந்தீர்கள். தமிழ்த்தாயால் உங்களைப் படித்தவர்களாக்க முடியவில்லையே! திராவிட இயக்கம் தோன்றிய பின் தானே இந்நாட்டில் கல்வி வளர்ச்சியடைந்தது? அறிவோடு நீங்கள் நன்றி காட்ட வேண்டுமானால், உங்களுக்குக் கல்வி கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். நம் மதம் சொல்வது என்ன என்றால், கீழ்ச்சாதிக்காரன் (சூத்திரன்) படிக்கக் கூடாது என்று சொல்கிறது. யார் இந்து என்று தங்களை ஒப்புக் கொள்கின்றார்களோ, அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள்தானே! தாய்மார்கள் அத்தனை பேரும் வைப்பாட்டிகள் (சூத்தரச்சிகள்) தானே? இந்த நிலையைப் போக்கத் தமிழ்த்தாய் செய்தது என்ன?

நம் இலக்கியங்கள் என்பவற்றில் ஒன்றுகூட மனித அறிவை வளர்க்கக் கூடியதாக, மனித சமுதாயத்தை வளர்ச்சியடையச் செய்யக் கூடியதாக இல்லை என்பதோடு, மக்களின் மூடநம்பிக்கையை – முட்டாள்தனத்தை வளர்க்கக் கூடியதாக இருக்கின்றன. இன்றைக்கு உலகில் காட்டுமிராண்டிகளாக, அறிவற்றவர்களாக, இழிமக்களாக இருப்வர்கள் நாம்தான் ஆவோம்.

முதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும். ஆசிரியர்கள் மூடநம்பிக்கைக்காரர்களாக இருப்பதாலேயே, அவர்களிடம் படிக்கிற மாணவர்கள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆகின்றனர். ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் முதன்மையாகப் பார்க்க வேண்டியது, அவர்கள் பகுத்தறிவுவாதியா என்பதுதான்.

நமது இலக்கியங்கள் அத்தனையும் குப்பைகளேயாகும். அந்தக் காலத்திற்கு அவை உயர்ந்தவையாக இருந்திருக்கலாமே ஒழிய, இன்றைக்குள்ள அறிவிற்கு அவை ஏற்புடையவை அல்ல. இலக்கியங்கள் என்றால், அவை எதிர்காலத்தைப் பற்றிய வளர்ச்சியினைக் குறிப்பிடக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இலக்கியங்கள் ஏதும் நம்மிடம் இல்லை. மாணவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். மற்றவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியினைச் செய்ய வேண்டும். எந்தக் காரியத்தை முன்னிட்டும் பிறருக்குத் தொந்தரவு செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும். மற்றவன் உனக்கு எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதனை நீ மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்.

Justify Full27.8.1971ம் தேதி மணப்பாறையில் ஆற்றிய உரை



மன்னை முத்துக்குமார்
மதப் பிரச்சினை மீதான இடர்ப்பாடுகளுக்கு முக்கிய காரணம், பெரும்பான்மை ஆட்சி புனிதமானது என்றும் எப்படியாவது அது பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் இந்துக்கள் வலியுறுத்துவதுதான். வேறு ஒரு ஆட்சிமுறை இருப்பதை இந்துக்கள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. தனி நபர்கள் மற்றும் தேசங்களுக்கிடையே எழும் முக்கிய தகராறுகள் அந்த முறையால் தீர்த்து வைக்கப்படுகின்றன. ஒருமித்து முடிவு செய்வது என்பதுதான் அந்த முறை. இதனைப் பரிசீலிக்கும் சிரமத்தை இந்து ஒருவர் எடுத்துக் கொண்டால், இது ஒரு கற்பனையல்ல, உண்மையானதே என்பதைத் தெரிந்து கொள்வார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் சிறுபான்மை வகுப்பினருக்குப் பாதுகாப்பை வழங்கத் தயாரில்லை என்றால், ஒருமனதான முடிவு என்ற விதியை ஏற்றுக் கொள்வீரா என்று ஒரு இந்துவைக் கேளுங்கள். கெட்டவாய்ப்பாக, இவ்விரண்டில் எதையும் அவர் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என்பதே தெரியவரும்.

பெரும்பான்மை ஆட்சி என்பதைப் பொறுத்தவரை, எவ்விதக் கட்டுப்பாட்டையும் இந்துக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. அவர்கள் விரும்பும் பெரும்பான்மை, வரம்பற்ற பெரும்பான்மை; ஓரளவு இணைந்த பெரும்பான்மையுடன் அவர்கள் நிறைவடைய மாட்டார்கள். வரம்பற்ற பெரும்பான்மை ஆட்சியை வற்புறுத்துவது, அரசியல் சித்தாந்திகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நியாயமான யோசனையா? வரையறையற்ற பெரும்பான்மை ஆட்சி என்று இந்துக்கள் வலியுறுத்திக் கொண்டிருப்பதற்கு, அமெரிக்க அய்க்கிய நாடுகளின் அரசியல் அரசமைப்புச் சட்டம்கூட ஆதரவாக இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது.

பெரும்பான்மை ஆட்சி என்பது ஒரு கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை; ஒரு விதியாகப் பொறுத்துக் கொள்ளப்படுகிறது. ஏன் அவ்வாறு பொறுத்துக் கொள்ளப்படுகிறது என்பதையும் கூறி விடுகிறேன். அதற்கு இரு காரணங்கள் உண்டு : (1) பெரும்பான்மை என்பது எப்பொழுதும் அரசியல் பெரும்பான்மை என்பதாலும், (2) சிறுபான்மையின் கருத்தை அரசியல் பெரும்பான்மையின் முடிவு பெருமளவு ஏற்று உட்கொள்வதாலும், அந்த முடிவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதில் சிறுபான்மையினர் அக்கறை கொள்வதில்லை.

இந்தியாவிலோ பெரும்பான்மை என்பது, அரசியல் ரீதியாக உருவாகும் பெரும்பான்மை அல்ல. இந்தியாவில் பெரும்பான்மை பிறவியிலேயே அமைவது; உருவாக்கப்பட்டதல்ல. வகுப்புவாத வாரியான பெரும்பான்மைக்கும் அரசியல் பெரும்பான்மைக்கும் உள்ள வித்தியாசம் இதுவே. அரசியல் பெரும்பான்மை என்பது, ஒரே நிலையானதோ நிரந்தரமானதோ அல்ல. அப்பெரும்பான்மை எப்பொழுதும் உருவாக்கப்படுகிறது, மாற்றம் பெறுகிறது, மீண்டும் உருவாகிறது. ஆனால், ஒரு வகுப்புவாதப் பெரும்பான்மை நிரந்தரமானது. இதை அழிக்கத்தான் முடியுமே தவிர அதனைத் திருத்த முடியாது. அரசியல் பெரும்பான்மையே ஆட்சேபனைக்குரியதாக இருக்கையில், வகுப்புவாரிப் பெரும்பான்மைக்கான ஆட்சேபணைகள் எப்படித் தவிர்க்க முடியாதவையாகும்?

அரசியலில், பெரும்பான்மை ஆட்சி என்ற கோட்பாட்டைக் கைவிடுவதால், வாழ்க்கையின் மற்ற துறைகளில் இந்துக்களை அது அதிகம் பாதிக்காது. சமூக வாழ்வில் அவர்கள் பெரும்பான்மையினராகவே இருப்பர். வியாபாரத்திலும் தொழிலிலும் அவர்களுக்கு இப்போதுள்ள ஏகபோக உரிமைகள் இருந்து வரும். சொத்துரிமையிலும் அவர்களது ஏகபோகம் தொடரும். ஒருமித்த தீர்மானம் என்கிற கோட்பாட்டை இந்துக்கள் ஏற்க வேண்டும் என்பது அல்ல. பெரும்பான்மைக் கோட்பாட்டைக் கைவிடும்படியும் அவர்களைக் கேட்டுக் கொள்வதும் என் நோக்கம் அன்று. அவர்களை நான் கேட்பதெல்லாம் ஒரு ஏறத்தாழ பெரும்பான்மையோடு திருப்தியடையுங்கள் என்பதுதான். இதை அவர்கள் ஏற்பது அவ்வளவு கடினமா?

இத்தகைய தியாகம் எதுவும் செய்யாமல், இந்திய சுதந்திரத்திற்குச் சிறுபான்மையினர் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று வெளியுலகிற்குக் காட்டிக் கொள்ள இந்துப் பெரும்பான்மைக்கு எவ்வித நியாயமும் கிடையாது. இந்தப் பொய்ப் பிரசாரம் பயனளிக்காது. ஏனெனில், சிறுபான்மையினர் அப்படி ஏதும் செய்யவில்லை. அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டால், சுதந்திரத்தையும் அவர்களுக்கு ஏற்படக் கூடிய இடர்களையும் ஏற்கத் தயாராக இருக்கிறார்கள். சிறுபான்மையினரின் இந்த நல்லெண்ணத்தை நன்றியுடன் பார்க்க வேண்டும்.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 1 பக்கம் : 376 - 378