முதல் தெய்வம் அறிவு;
இரண்டாவது தெய்வம் சுயமரியாதை;
மூன்றாவது தெய்வம் நன்னடத்தை.
இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை .
*
- அண்ணல் அம்பேத்கர்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தினாலோ, பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தினாலோ, ஆயுதப் புரட்சியினாலோ, வேறு எவ்வகைத் தத்துவங்களாலோகூட, சாதியை வேரறுக்க முடியாது.
இந்து சமூக சீர்திருத்தவாதிகளில் மிதவாதிகளின் பிரிவு ஒன்று உள்ளது. இந்தப் பிரிவினர், தீண்டாமை என்பது சாதி முறையிலிருந்து வேறுபட்டது என்று கருதுகிறார்கள். இந்தக் கருத்தைப் பின்பற்றி இவர்கள் சாதி முறையைத் தாக்காமலேயே தீண்டாமையை ஒழித்துவிட முடியும் என்று கருதுகிறார்கள். மத உணர்வுள்ள இந்து, சாதி முறையை ஒழிப்பதற்கு எதிராக இருப்பது போலவே, தீண்டாமையை ஒழிப்பதற்கும் எதிராகவே இருக்கிறார்.
சாதி முறைக்குத் தீங்கு இல்லாமல் தீண்டாமையை ஒழிக்க விரும்புவோர், மநுஸ்மிருதி பத்தாம் அத்தியாயம் நான்காம் சுலோகத்தைத் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள். இந்த சுலோகத்தில் மநு, நான்கு வர்ணங்கள்தான் உண்டு என்றும், அய்ந்தாவது வர்ணம் இல்லை என்றும் கூறுகிறார். இந்த சுலோகத்தின்படி, தீண்டத்தகாதவர்கள் நான்காம் வர்ணத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் சூத்திரர்களில் ஒரு பகுதியினர் என்றும், சூத்திரர்களைத் தொடுவதற்குத் தடை இல்லாததால் – தீண்டத்தகாதவர்களைத் தொடுவதற்கும் தடை இருக்க முடியாது என்று பொருள் கூறப்படுகிறது. அரசியல் ஈடுபாடு உள்ள இந்துவுக்கு இவ்வாறு பொருள் கூறுவது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், இது மநு கூற விரும்பும் கருத்துக்குப் பொருந்துவதாக இல்லை.
இந்த சுலோகத்துக்கு மற்றொரு விதமாகவும் பொருள் கூற முடியும். நான்கு வர்ணங்களுக்கு வெளியே உள்ள இந்த சமுதாயங்களை, அய்ந்தாம் வர்ணமாக ஏற்றுக் கொண்டு, சதுர்வர்ண முறையைப் பஞ்சவர்ண முறையாக விரிவுபடுத்த மநு தயாராக இல்லை என்பதும் இதன் பொருளாக இருக்க முடியும். அய்ந்தாம் வர்ணம் இல்லை என்று அவர் கூறுவதன் பொருள், இந்த சமுதாயம் நான்கு வர்ணங்களுக்கு பதில் அய்ந்து வர்ணங்களைக் கொண்டதாகச் செய்வதன் மூலம், நான்கு வர்ணங்களுக்கு வெளியில் உள்ள மக்களை இந்து சமூகத்தில் இணைத்துவிட விரும்பவில்லை என்பதேயாகும். அவர் கூற விரும்பிய கருத்து இதுதான் என்பது, ‘பாஹ்யர்கள்' அல்லது ‘வர்ண பாஹ்யர்கள்' என்ற ஒரு பிரிவைப் பற்றி அவர் பேசுவதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது.
எல்லா மக்களையும் நான்கு வர்ணங்களுக்குள் சேர்த்துக் கொள்ள மநு விரும்பியிருந்தால், சிலரை ‘வர்ண பாஹ்யர்கள்' என்று பேச காரணம் இல்லை. உண்மையில் வர்ண பாஹ்யர்களில் இரண்டு உட்பிரிவுகளை அவர் குறிப்பிடுகிறார். இந்த உட்பிரிவுகளை ‘ஹீனர்கள்' என்றும் ‘அந்த்யோவாசின்கள்' என்றும் அவர் அழைக்கிறார். இந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும்போது, மநுஸ்மிருதி சுலோகத்துக்குக் கூற முயலும் பொருள், தீவிர மதப் பற்றுள்ள இந்துவை ஏமாற்றிவிட முடியாது. தீண்டாமையைப் பின்பற்றுவது மநுஸ்மிருதிக்கு முரணானது என்றும், அதை ஒழிப்பது இந்து மதக் கோட்பாடுகளுக்கு முரணானது அல்ல என்றும் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
மநுஸ்மிருதிக்கு இவ்வாறு பொருள் கூறி எடுத்து வைக்கப்படும் வாதம், கல்வியறிவில்லாத சாதாரண இந்துவுக்குப் புரியாத அளவுக்கு அறிவு நுட்பம் வாய்ந்தது. அவருக்குத் தெரிந்தது, சமூக உறவுகளில் தாம் பின்பற்ற வேண்டிய மூன்று தடைகள் உள்ளன என்பதே. இந்தத் தடைகள் : 1. சேர்ந்து உண்ணக் கூடாது 2. கலப்புத் திருமணம் செய்யக் கூடாது 3. சில வகுப்பு மக்களைத் தொடக் கூடாது. முதல் இரண்டு தடைகளும் சாதிப் பிரிவினையாகும்; மூன்றாவது தடை தீண்டாமையாகும். சாதி இந்துவுக்குத் தடைகளின் எண்ணிக்கை பற்றிக் கவலையில்லை. தடைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் அவர் குறியாயிருக்கிறார். தடையைப் பின்பற்ற வேண்டாம் என்று அவரிடம் கூறினால், ஏன் வேண்டாம் என்று அவர் திருப்பிக் கேட்கிறார்.
அவருடைய வாதம் இதுதான் : முதல் இரண்டு தடைகளையும் நான் பின்பற்றலாம் என்றால், மூன்றாவது தடையைப் பின்பற்றுவதில் என்ன தவறு? உளவியல் ரீதியாக சாதியும் தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒருங்கிணைந்த முறையாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பதேயாகும்.
இந்தக் கருத்தை வைத்துப் பார்த்தால், சாதி முறையை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்து தவறானது. இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன, சேர்ந்தேதான் அவை வீழும்.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் 94)
நன்றி : தலித் முரசு மே2009
‘தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய ஆலய நுழைவுப் போராட்டத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம் காங்கியனூரில் தலித் மக்கள் மீது காவல் துறையினர் மிருகத்தனமான தடியடித் தாக்குதல் நடத்தினர். இப்போராட்டத்திற்கு தலைமையேற்ற சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதாவை காவல் துறையினர் கீழே தள்ளி, வயிற்றின் மேல் ஏறி நின்று, பூட்ஸ் கால்களால் உதைத்துள்ளனர். இதனால் அவரது கர்ப்பப்பை கடுமையாக பாதிப்படைந்து, தொடர்ச்சியான ரத்தக் கசிவு ஏற்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் சி.பி.எம். கட்சியினர் 104 பேர் கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இக்கொடுஞ்செயலைப் புரிந்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியபோதும், இதுவரை இதற்கான நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.'' – ‘தீக்கதிர்', 17.10.2009 அண்மைக்காலமாக சி.பி.எம். கட்சி, வர்ணப் பாகுபாட்டால் (வர்க்கப் பாகுபாட்டால் அல்ல) கீழ் ஜாதியாக்கப்பட்ட தலித் மக்களின் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதை வரவேற்கிறோம். ஆனால், இந்தியா முழுவதும் 25 கோடி மக்களாக ஊருக்கு அப்பால் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள தீண்டத்தகாத மக்களின் சிக்கலை, இவர்கள் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதற்கு இக்கட்சியின் புரட்சிகர கம்யூனிச செயல் திட்டங்கள் மட்டும் போதாது. புரட்சியாளர் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு செயல்திட்டங்களை ஆழமாகப் புரிந்து கொண்டு செயல்படுத்த முன்வர வேண்டும்.
‘‘உளவியல் ரீதியாக சாதியும் தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒருங்கிணைந்த முறையாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பதேயாகும். சாதி முறையை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்து தவறானது. இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன; சேர்ந்தேதான் அவை வீழும்'' என்கிறார் அம்பேத்கர் (தொகுதி 5, பக். 94).
ஆனால் தீண்டாமையை மட்டும் தனியாக ஒழித்துவிட முடியும் என்று சி.பி.எம். நம்புகிறது. அவர்களுடைய நம்பிக்கைக்காக தலித்துகள் இந்துக்களாக வாழ முடியாது. அரதப் பழசான ஆலய நுழைவுப் போராட்டங்கள், இம்மக்களை நிரந்தர இந்துக்களாக்கவே பயன்படும். கோயிலில் நுழையும் உரிமை கிடைத்தால், ஒருவன் இந்(து)திய சட்டப்படி உரிமையுள்ள கீழ் ஜாதிக்காரன் ஆகிறான். இவர்களுக்கு முன்னாலேயே இவ்வுரிமையைப் பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் உரிமையுள்ள சூத்திரர்கள்தானே! கோயில் நுழைவினால் யாரும் மேல் ஜாதியாகிவிட முடியாது; சம நிலையையும் பெற முடியாது. வேறு எதற்காக இந்த செயல் திட்டம்?
பொது இடங்களில் உரிமையைக் கோருவது ஜனநாயகத்தின் பாற்பட்டது. சாதியின் உற்பத்திக் கேந்திரமான இந்து கோயில்களில் அவ்வுரிமையைப் பெற முனைவது, இந்து மதத்தில் கீழ் ஜாதிகளுக்கான உரிமையைக் கோரி, இந்து அடிமையாக செத்துப்போவதற்கே வழிவகுக்கும். பெரியார் அயராது பாடுபட்ட சுயமரியாதை கிடைக்காது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரானாலும், பார்ப்பன மேலாதிக்கம்தான் ஒழியும். ஆனால், கீழ் ஜாதிக்காரன் மணியாட்டும் உரிமையைப் பெற்றுவிடுவதாலேயே அவனுடைய ஜாதி ஒழிந்துவிடப் போவதில்லை!
கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி, தீண்டாமையை ஒழிக்கும் சி.பி.எம். கட்சி, 14 கோரிக்கை கொண்ட பட்டியலை தமிழக முதல்வரிடம் கொடுக்கிறது. அவரும் அதை வாங்கிக் கொண்டு, 1969 முதல், தான் நிறைவேற்றிய நீண்ட பட்டியலை கொடுக்கிறார். இப்படி மாறி மாறி பட்டியல்களை வாசிப்பதாலும், மனு கொடுப்பதாலும் – தீண்டாமை ஒழிந்து விடாது. எது தீண்டாமை? பிருந்தா காரத் சட்டத்தை மீறி உத்தப்புரம் செல்கிறார். அவர் காவல் துறையால் தடுக்கப்பட்டவுடன், அவரை விடுவிக்க முதல்வர் தொலைபேசியிலேயே ஆணைகளைப் பிறப்பிக்கிறார். அவரைத் தடுத்த குற்றத்திற்காக, அடுத்த நாளே ஓர் அய்.ஏ.எஸ். தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. ஆனால், அதே கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கோயில் நுழைவுக்காக அதே சட்டத்தை மீறினால், அவரை கீழே தள்ளி, எட்டி உதைக்கிறது போலிஸ். பிருந்தா காரத்திற்கு ஒரு நீதி; லதாவுக்கு ஒரு நீதி. இதுதாண்டா தீண்டாமை!
தீண்டாமையை ஒழிக்கும் இவர்களின் பட்டியல்கள், எதைக் கிழித்துவிடும்? ஒருவனுடைய ஜாதியை அவனுடைய பிறப்பு தீர்மானிக்கும்வரை, அதற்கு இறப்பு இல்லை. இல்லவே இல்லை. அதனால்தான் தொடக்க காலங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி, எண்ணற்ற செயல் திட்டங்களை உருவாக்கி, சிந்தனை ரீதியாகவும் செயல் ரீதியாகவும் உழைத்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தையே எழுதி, அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தந்தும், இறுதியில் எந்த வழிமுறையும் பயன்படாது என நிராயுதபாணியாக பத்து லட்சம் மக்களுடன் நின்று உரத்துச் சொன்னாரே – ‘நான் இந்துவாக சாக மாட்டேன்' என்று. அந்த ஒற்றை வரியில்தான் இருக்கிறது சாதி – தீண்டாமை ஒழிப்பும், சமூக விடுதலையும்!
நன்றி --தலித் முரசு ஆசிரியர் குழு
நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ் உழைக்கும் வர்க்கங்கள் வாழ நேரிடுமாயின், அதைத் தங்கள் நலன்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அந்த வர்க்கங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைய வேண்டுமானால், இரண்டு செயல்களை அது செய்ய வேண்டும் என்பது என் கருத்து. முதலாவதாக, தொழிற்சங்கங்களை அமைப்பதை மட்டுமே இந்தியாவில் தொழிலாளர்களின் இறுதி லட்சியமாக, குறிக்கோளாகக் கொள்வதைக் கைவிட வேண்டும். அரசாங்கம் தொழிலாளர் கைகளுக்கு வருவதைத் தனது லட்சியமாக அது பிரகடனப்படுத்த வேண்டும். இதன் பொருட்டு, ஒரு தொழிலாளர் கட்சியை ஓர் அரசியல் கட்சியாக உருவாக்க வேண்டும். இத்தகையதொரு கட்சி, தொழிற்சங்கங்களையும் தனது அமைப்புக்குள் கொண்டிருக்கும் என்பதில் அய்யமில்லை.
மதத்தை மாற்றிக் கொள்வது என்பது, ஒருவரின் பெயரை மாற்றிக் கொள்வது போலத்தான். மதத்தை மாற்றிக் கொண்ட பிறகு பெயரையும் மாற்றிக் கொள்வது, உங்களுக்குக் கூடுதல் பயனளிக்கும். ஒருவர் தன்னை முஸ்லிம், கிறித்துவர், பவுத்தர், சீக்கியர் என்று அழைத்துக் கொள்வது, வெறும் மதமாற்றம் மட்டும் அல்ல; பெயர் மாற்றமும்கூட. மதமாற்றத்திற்கான இந்த இயக்கத்தைத் தொடங்கும்போதுகூட, பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களுடைய எதிர்ப்புகளில் உண்மை இருக்கிறதா என்று இனி பார்ப்போம்.
நம்முடைய முன்னோர்கள் இந்த மதத்தில் இருந்தார்கள் என்பதற்காகவே நாமும் அந்த மதத்தில் நீடித்திருக்க வேண்டும் என்று பிறவி முட்டாள் மட்டுமே சொல்வான். எந்த சாதாரண மனிதனும் மதம் மாறக் கூடாது என்ற கருத்தை ஒப்புக் கொள்ள மாட்டான். இதுபோன்ற வாதத்தை முன்னிறுத்தும் எவரும் வரலாற்றைப் படிக்கவே இல்லை என்பதுதான் உண்மை.
பழங்கால ஆரிய மதம், வேத மதம் என்று அழைக்கப்பட்டது. இது, ன்று தனித்த கூறுகளைக் கொண்டிருந்தது. மாட்டிறைச்சி தின்பது, மது அருந்துவது, கும்மாளமடிப்பது. அன்றைய மதத்தின் முக்கிய பகுதியாக இம்மூன்றும் இருந்தது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இதைப் பின்பற்றினர். இன்றைக்கும்கூட சில பேர் இத்தகைய வாழ்க்கை நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.
நம்முடைய மூதாதையர்களின் மதமே பின்பற்றப்பட வேண்டும் என்றால், இந்திய மக்கள் இந்து மதத்தைக் கைவிட்டுவிட்டு பவுத்தத்தை ஏன் தழுவினர்? வேத மதத்திலிருந்து ஏன் தங்களை விடுவித்துக் கொண்டனர். எனவே, இந்து மதம் என்பது நமது மூதாதையர்களின் மதம் அல்ல; இது, நம்மீது திணிக்கப்பட்ட அடிமைத்தனமே.
இந்து சமூகத்தைச் சீர்திருத்துவது, நம்முடைய நோக்கமோ, செயல் திட்டமோ அல்லவே அல்ல. நம்முடைய நோக்கம் சுதந்திரம் பெறுவது. வேறு எந்த வேலையும் நமக்கில்லை. நாம் மதமாற்றத்தின் மூலம் சுதந்திரத்தை அடைய முடியும் எனில், இந்து மதத்தைச் சீர்திருத்தும் பொறுப்பை ஏன் சுமக்க வேண்டும்? நம்முடைய பலத்தையும் உடைமைகளையும் நாம் ஏன் இதற்காகத் தியாகம் செய்ய வேண்டும்? நம்முடைய இயக்கத்தின் நோக்கம், இந்துமத சீர்திருத்தம் என்று ஒருவர்கூட தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நம்முடைய இயக்கத்தின் நோக்கம், தீண்டத்தகாத மக்களுக்கு சமூக விடுதலையைப் பெற்றுத் தருவதே ஆகும். மதம் மாறாமல் நாம் இந்த விடுதலையைப் பெறவே முடியாது.
தீண்டத்தகாத மக்களுக்கு சமத்துவமும் தேவை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இந்துவாக இருப்பதால் மட்டுமே ஒருவன் சமத்துவத்தை அடைய முடியும் என்றும், இல்லை எனில் முடியாது என்றும் எவருமே சொல்ல முடியாது. சமத்துவத்தை அடைய இரு வழிகள் உள்ளன. 1. இந்து மதத்தில் இருப்பது; 2. இந்து மதத்தை விட்டு விலகி மதம் மாறுவது.
இந்து மதத்தில் இருந்து கொண்டு எப்படி சமத்துவத்தை அடைய முடியும்? ஒருவன் தீண்டத்தகுந்தவனாகவோ, தீண்டத்தகாதவனாகவோ இருக்கக் கூடிய உணர்வைப் போக்குவது மட்டுமே பிரச்சினையைத் தீர்த்து விடாது. கலப்புத் திருமணத்தாலும், கலந்துண்ணுவதாலுமே சமத்துவத்தை அடைய முடியும்.
இதற்கு ‘சதுர்வர்ணம்' (நான்கு வர்ணம்) அழிக்கப்பட வேண்டும்; பார்ப்பன மதம் வேரறுக்கப்பட வேண்டும். இது சாத்தியமாகுமா? இல்லை எனில், இந்து மதத்தில் இருந்து கொண்டு சமத்துவத்தை எதிர்பார்ப்பது விவேகமாகுமா? இதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறுமா? ஒருபோதும் வெற்றி பெறாது.
மதமாற்றப் பாதை இதைவிட மிகமிக எளிதானது. இந்து சமூகம், வஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் சமமாக நடத்துகிறது. மிகத் தெளிவாக, மதமாற்றத்தின் மூலமே சமூக சமத்துவத்தைப் பெற முடியும். இது உண்மை எனில், இந்த எளிமையான வழியை நீங்கள் ஏன் பின்பற்றக் கூடாது?