பார்ப்பனியம் இருக்கும் வரை -கம்யூனிசம் -வளரவே முடியாது!
இன்றைய தொழிலாளி ஏன் தொழிலாளியாய் இருக்கிறான் என்றால் -அவன் சூத்திரனாக, நாலாவது ஜாதி மகனாகப் பிறந்ததனால்தான் தொழிலாளியாக இருக்கிறானே தவிர, வேறு என்ன காரணத்தினால் அவன் தொழிலாளியாக இருக்கிறான்? எந்தப் பார்ப்பானாவது மண் வெட்டுகிறானா? மண்வெட்டி பிடித்து வேலை செய்கிறானா? இல்லையே? ஏன்? அவர்கள் உழைக்கக் கூடாத ஜாதியிலே பிறந்தவர்கள்! உட்கார்ந்து சாப்பிடக் கூடிய ஜாதியிலே பிறந்தவர்கள் பிராமணர்கள் ஆவார்கள்.
நாம் உழைக்கப் பிறந்தவர்கள்; உழைத்து இன்னொருத்தருக்காகப் போடுவதற்காகவே பிறந்தவர்கள். கீழ் ஜாதிக்காரர்கள், சூத்திரர்கள் ஆவார்கள். இந்தப்படி அதாவது நாம் தொழிலாளியாக ஆவதற்கு, நம்மீது ஏற்பட்டிருக்கும் இழி ஜாதி தன்மை காரணமாக இருக்கிறபோது -அதை எடுத்துச் சொல்லாமல் சும்மா தொழிலாளி, தொழிலாளி என்ற சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? இந்தக் கம்யூனிஸ்டு வீரர்களைத்தானே கேட்கிறேன். இன்றைய பேதங்களின் இந்த அடிப்படையைப் பற்றி அவர்கள் சொல்ல வேண்டாமா? அதை விட்டுவிட்டு, இந்தப் பேதங்களை, பேதத்தின் காரணங்களை எடுத்துச் சொல்லுகிறவர்களைப் பார்த்து -இது பிற்போக்குச் சக்தி, வகுப்பு வாதம் என்று சொல்லுவது என்றால் என்ன நியாயம்?
மற்ற நாடுகளைப் போல் நம்முடைய நாட்டிலேயும் நாங்கள் காரியம் செய்கிறோம் என்று கம்யூனிஸ்டுகள் சொல்லுவார்களேயானால், அது தவறு. மற்ற நாடுகளுக்கும் இந்த நாட்டுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. மற்ற நாடுகளில் இந்த நாட்டைப் போல பார்ப்பான் இல்லை, பறையன் இல்லை. இந்தப் பார்ப்பான், பறையன் என்ற பேதத்துக்கு ஆதாரமான கடவுளும் இல்லை; மதமும் இல்லை; சாஸ்திரமும் இல்லை; நடப்பும் இல்லை. இந்த மாதிரியாக இந்த நாட்டு மனித சமுதாயத்தில் பார்ப்பான் என்று ஒரு ஜாதி உயர்ந்த ஜாதியாகவும்; பறையன் என்று ஒரு ஜாதி தாழ்ந்த ஜாதியாகவும் இருக்கிறது என்ற நிலைமையே மற்ற நாட்டுக்காரர்களுக்குத் தெரியாது.
இந்த நாட்டின் சமுதாயத்துறை மற்றும் நடப்பு முதலியவைகள் இன்றைக்கு இருக்கிறவர்களுக்கே தெரியாது என்றால், அந்தக் காலத்தில் இந்த மார்க்சுக்கும் ஏங்கெல்சுக்கும் இந்த நாட்டின் நிலைமையைப் பற்றி என்ன தெரிந்திருக்க முடியும்? அவர்களுக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல, இந்நாட்டில் இப்படி ஒரு அமைப்பு இருக்கும், ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் பிறப்பு ஜாதியின் பேரால் பெருத்த வசதி பெறுவார்கள்; இன்னொரு ஜாதியார் பிறப்பு ஜாதியின் பேரால் பெருமளவில் தொல்லைப்படுவார்கள் என்று அவர்கள் கற்பனை செய்து நினைத்துக்கூட இருக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது அவர்கள் சொன்னபடிதான் இங்கு நடக்க வேண்டும் என்று சொல்லுவது, எவ்வளவு பித்தலாட்டமான காரியம் என்று நினைத்துப் பாருங்கள்.
இன்றைக்கு இருக்கிற ஸ்டாலினையே (முன்னாள் ரஷ்ய நாட்டின் குடியரசுத் தலைவர்) பார்ப்பான், பறையன் என்று உச்சரிக்கச் சொல்லுங்கள். அவரால் இந்த உச்சரிப்பைக்கூட சரியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் நாட்டில் இப்படி இல்லை. தோழர்களே! இன்னொன்று சொல்லுகிறேன். கொஞ்ச நாளைக்கு முன் ஸ்டாலின் ஒரு சமயம் பேசுகையில், “இந்தியாவைப் பொறுத்தவரையில் சமுதாயத் துறையில் முதலில் வேலை செய்து, சமுதாய முற்போக்கு அடையச் செய்தால்தான் கம்யூனிசம் ஏற்படுத்த முடியும்” என்று சொல்லியிருக்கிறார். நான் இந்தப்படி சொல்லுகிறபோது, நம்முடைய அருமை கம்யூனிஸ்டு தோழர்கள் -எனக்குக் கம்யூனிசமே தெரியாது என்று சொன்னார்கள். இப்போது ஸ்டாலினே இந்தப்படி சொல்லியிருக்கிறார். இனிமேல் கம்யூனிஸ்டுகள் என்ன சொல்லுவார்களோ?
இந்த நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியும் சோஷியலிஸ்டு கட்சியும் யார் ஆதிக்கத்திலே, யார் தலைமையிலே இருக்கின்றன? இந்த நாட்டுப் பார்ப்பனர்கள்தான் இன்று கம்யூனிசமும் சோஷலிசமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனர்களா நமக்குக் கம்யூனிசம் சொல்லித் தருவது? அவர்கள் கற்றுக் கொடுக்கிற கம்யூனிசந்தான் பேதமில்லாத வாழ்க்கையைச் செய்யுமா? இப்படி மனம் அறிந்த காரியத்தை நீ மறைத்துக் கொண்டு பார்ப்பான், பறையன் என்று சொல்வது பிற்போக்கு சக்தி, வகுப்புவாதம் என்று சொல்லுவாயானால் -அதைப் பித்தலாட்டம் என்று சொல்லுவதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
இன்றைக்கு இருக்கிற கம்யூனிசவாதிகள் என்போர்கள் பச்சையாகச் சொல்லட்டுமே “பார்ப்பனர்கள் உயர் ஜாதி என்பது தவறு” அது போலவே மற்றவர்கள் தாழ்ந்த சாதியென்பது தவறு என்று. இந்தப்படியான தன்மைக்கு ஆதாரமாய் இருப்பவைகளையெல்லாம் நெருப்பிலே போட்டுப் பொசுக்க வேண்டும் என்று சொல்லட்டுமே! நான் வரவேற்கிறேன். அதை விட்டுவிட்டு, இந்தப் பிரச்சினை பற்றியே பேசக்கூடாது என்ற சொல்லிவிட்டால், என்ன சாதித்துவிட முடியும்? என்றைக்குக் கம்யூனிசத்தை இங்கே கொண்டு வந்துவிட முடியும்?
(பெரம்பூர் பொதுக் கூட்டத்தில் 2.1.1953 அன்று ஆற்றிய உரை)