மனிதன் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியுமாகும். இதற்கு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனம். அப்படிப்பட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற்கிடமான இடையூறு இருக்குமானால் அதை முதலில் களைந்தெறிய வேண்டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும். மனித ஜீவ கோடிகளின் திருப்திக்கும் இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதையே செய்ய வேண்டும்.
குடி அரசு - 17.08.1930
மக்களின் அன்பும் காதலும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அது இன்னவிதமாக இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்ப்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில் காதல் என்பது ஜீவசுபாவமானது. அதை ஏதோ ஒரு நிர்பந்தத்திற்காகத் தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தனமேயாகும். அன்பு, காதல் ஆகியவைகள் ஏற்படுவது ஜீவனுக்கு இயற்கை சுபாவம் என்றும் அது சுதந்திரமுடையதாயும் உண்மையுடையதாயும் இருக்க வேண்டுமென்றும் அதை ஒரு இடத்திலாவது ஒரு அளவிலாவது கட்டுப்படுத்துவது என்பது ஜீவ சுபாவத்திற்கும் இயற்கைத் தத்துவத்திற்கும் மீறினதென்றும் ஒப்புக் கொள்ளுகின்ற மக்கள் அன்பு ஒருவரிடம் தான் இருக்க வேண்டும்;
சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததேயாகும்.. ஜீவசுபாவங்களுக்கு இவ்விரண்டு வார்த்தையும் சிறிதும் பொருத்தமற்றதேயாகும். வாழ்க்கை ஒப்பந்த நிபந்தனைக்கு மாத்திரம் தேவையுடையதாகயிருக்கலாம். ஆன போதிலுங்கூட அவையும் இயற்கைக்கு முரணானது என்பதை யாவரும் ஒப்புக் கொண்டுதானாக வேண்டும். அதற்கு ஆதாரம் என்னவென்றால் மேலே சொல்லப்பட்டது போலவே அவ்விரண்டு வார்த்தையின் தத்துவங்களையும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு ஆண்கள் மீது சுமத்தப்படாமலும் ஆண்கள் அவற்றை ஏற்றுக் கொண்டு கட்டுப்படாமையும் அதைப் பற்றி லஷியம் செய்யாமையுமேயாகும.
மற்றும் வேறொரு அத்தாட்சியும் என்னவென்றால் மக்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்புத் தவறுதலும் விபசாரத்தனமும் கூடாது என்று பொதுவாக இருபாலர்களுக்குத் தானாகத் தோன்றாமலிருப்பதோடு பலர் கற்பித்தும் அதற்காகப் பல நிபந்தனைகளைக் கூட ஏற்படுத்தியும் மற்றும் எவ்வளவோ பயங்களைக் காட்டியும் அதனால் சிலராவது அடிதடி விரோதம், கொலை, உடல் நலிவு முதலியவைகளால் கஷ்டப்படுவதை நேரில் காணக்கூடிய சந்தர்ப்பங்களிருந்தும் இவ்வளவையும் மீறி மக்களுக்குக் கற்புக்கு விரோதமாகவும் விபசாரத்திற்கு அனுகூலமாகவும் உணர்ச்சியும் ஆசையும் ஏன் உண்டாக வேண்டுமென்பதைக் கவனித்தால் அது தானாக விளங்கும். இயற்கையோடு இயைந்த வாழ்வு எது என்பதையும் இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வு எதுவென்பதையும் எவ்வித நாட்டுப்பற்று, நடப்புப் பற்று, பிறப்புப் பற்று என்பதில்லாமல் நடுநிலையிலிருந்து தன் அநுபவத்தையும் தன் மனதில் தோன்றிய, தோன்றும் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் ஒரு உதாரணமாகவும் வைத்துக் கொண்டு பரிசுத்தமான உண்மையைக் காணுவானேயானால் அப்போதும் கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பதும், மற்றவர்களை அடிமையாகக் கட்டுப்படுத்த உண்டாக்கப்பட்ட சுயநல சூட்சி நிறைந்தது என்பதும் தானாகவே விளங்கிவிடும். மற்றும் விபசாரம் என்பது ஒருவனுடைய “பாத்தியதைக்கும்” ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுப்பாட்டிற்கும் மாத்திரம் விரோதமே தவிர உண்மையான ஒழுக்கத்திற்கு விரோதமல்ல
பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் கொள்கைகள் என்பன பொது ஜனங்களில் யாருடைய தனி சுதந்திரத்துக்கும் பாதக மேற்பட்டதாகவும் அதுவும் பிரயோகத்தில் சிறிதும் பாரபக்ஷம் உயர்வு தாழ்வு தத்துவம் கொண்டதல்லாததாகவும் இருக்கவேண்டுமென்பதோடு எல்லாவற்றையும் விட அவை முக்கியமாக இயற்கையோடியைந்ததாகவுமிருக்க வேண்டும். அப்படிப்பட்டவைகளும் மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் சிறிதும் பாதகமுண்டு பண்ணாததாகவுமிருக்க வேண்டும். நியாயமான என்றதினாலேயே எது நியாயம்? என்பதற்காக “தர்மசாஸ்திரங்களை”த் தேட வேண்டும் என்பது கருத்தல்ல. (மற்றெப்படி கண்டுபிடிப்பதென்றால் ஒருவன் தனக்கு நியாயம் என்று சொல்லப்படுவதானது பிறத்தியானும் அதையே தனக்கும் நியாயமென்று சொன்னால் அவன் முதலில் சொன்னவன் ஒப்புக்கொள்ளுகின்றானா என்று பார்த்து நிர்ணயிப்பதேயாகும். அதாவது இருவருக்கும் ஒன்று போன்றது) அன்றியும் அறிவுக்கும் சாத்தியத்திற்கும், அநுபவத்திற்கும் ஏற்றதாகவும் அவசியம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
இப்படிக்கெல்லாம் இல்லாமல் வெறும் நிர்ப்பந்தத்திற்கு நாணயமற்றதும் அறிவுக்கும் அநுபவத்திற்கும் ஒவ்வாததானது மான விஷயங்களுக்காக வலுத்தவர்கள் தந்திரக்காரர்கள் தங்களுக்குத் தோன்றின படிக்கெல்லாம் கட்டுப்பாடுகள் செய்து கொண்டு போவதானது எவ்விதப் பயனையும் தராததோடு மனித சமூகத்திற்கு வீண் கஷ்டத்தை உண்டாக்கி வருவதோடு, அது வெறும் அடிமைத்தனத்தையும், அறிவுத் தடையையும் தான் உண்டாக்கும்.
-
மனிதனின் ஜீவசுபாவம் என்னவென்றால் உணர்ச்சியும் இந்திரிய செயலும் ஆசையுமேயாகும். உணர்ச்சியின் காரணமாய் பசி, நித்திரை, புணர்ச்சி மூன்றும் முக்கியமான இன்றியமையாத இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம். இந்திரியங்களின் காரணமாய்ப் பஞ்சேந்திரியங்களும் அதாவது சரீரம், வாய், கண், மூக்கு, காது ஆகியவைகளின் செயல்களையும் முக்கியமான இன்றியமையாத இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம்.
ஆகவே பொது உணர்ச்சியும் இந்திரிய செயலும் மனிதனுக்கு ஆசையை உண்டாக்கிக் கொண்டேயிருக்கின்றது. ஆசையின் காரணமாய் எதையும் ஆசைப்படுவதும் அதுவும் அனேகமாய் அளவுக்கடங்காமல் மேலும் மேலும் போய்க் கொண்டிருப்பதும் சுபாவமாகவே இருக்கின்றதைப் பார்க்கின்றோம். ஆகவே உணர்ச்சியும் இந்திரிய செயலும் ஆசையும் மனிதனால் சாமான்யத்தில் கட்டுப்படுத்தக் கூடியதல்ல. யாராலாவது கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்றால் அப்படிப்பட்டவரைப் பற்றி நாம் இங்கு பேச வரவில்லை. நாம் சொல்லுவதும் அவருக்குச் சம்பந்தப்பட்டதல்ல. (அவர்கள் பல லட்சத்திற்கு ஒருவர் இருப்பார்களோ என்னமோ) அந்தப்படிக்கில்லாத சாதாரண மனித ஜீவனின் உணர்ச்சியையும் இந்திரிய செயலையும் ஆசையையும் கட்டுப்படுத்தும்படியானதாகக் கொள்கைகளை ஒழுக்கங்களை கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால் அது செலாவாணியாகுமா? செலாவாணியாவதாயிருந்தாலும் அதற்கு என்ன அவசியம் என்பன போன்றவைகளைக் கவனிக்க வேண்டாமாவென்று தான் கேட்கின்றோம்.
----குடி அரசு - 26.10.1930
ஒரு மனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஒரு மனுஷிக்கும் இருக்க வேண்டியது என்கின்ற முறையில் பார்க்கும்போது நமது புருஷர்கள் இரண்டு பெண்டாட்டிகளுடன் வாழுவது போலவே நமது பெண்கள் இரண்டு புருஷர்களுடன் வாழுவதில் குற்றமில்லை என்பதே நமதபிப்பிராயம் என்பதோடு, அம் முறையை இஷ்டப்படுபவர்கள் கையாளுவதில் எவ்விதத்தடையும் இருக்கக் கூடாது என்பதும் நமதபிப்பிராயமாகும்.
புருஷன் பெண்சாதியாக வாழுவது என்பது, புருஷன் பெண் சாதி என்பவர்களுடைய தனித்தனி சொந்த இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, அதில் ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதே அவ்விஷயத்தில் நமது அபிப்பிராயமாகும்.
ஆகவே, எந்தக் காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து அனுபவ குண தோஷம் கண்டு, மனதின் சுதந்திரத்தை மறுக்காமல், அடக்காமல், சுயேச்சையாய் நடக்க வேண்டியது தான் மனித தர்மம் என்றும், அந்தப்படி உலகமே சுயேச்சையாயிருக்க சௌகரியம் இருப்பதுதான் மனித சமூகவிடுதலை என்றும் சொல்லுகின்றோம். --குடி அரசு - 13.09.1931