மன்னை முத்துக்குமார்

தொழில் துறையில் நம்பர் ஒன், கல்வியில் நம்பர் ஒன், தகவல் தொழிநுட்ப பூங்கா, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இப்படி எதை வேண்டுமானாலும் பெருமை பேசிக்கொள்ளுங்கள், ஆனால் அதுக்கு முன் இதுக்கு வழி சொல்லுங்க,

இந்த இரட்டை குவளை முறை தமிழ்நாட்டில் இருப்பது ஆளும் ஆட்சியாளர்களுக்கு தெரியுமா? தெரியாதா? தெரியாது என்று சொன்னால் அதை ஒப்புக்கொள்ள எந்த சுப்பனும் இங்கே தயார் இல்லை, காரணம் மன்னர் ஆட்சி காலத்தில் இருந்த ஒற்றர் படையை காட்டிலும் இப்போது இருக்கும் உளவு படை சிறப்பானது. திறம்பட செயல்படவும் செய்கிறது , அப்படியானால் தமிழ் நாட்டில் நடக்கும் எந்த ஒரு குற்ற செயலையும் தடயவியல் கொண்டு கண்டுபிடிக்கும் இந்த அரசுக்கு இரட்டை குவளை முறை மட்டும் கண்ணுக்கு புலப்படவில்லை என்றால் எவனய்யா ஏற்றுக்கொள்வான், எது எப்படியோ நாங்க இங்கே ஊர் பெயர் , டீ கடை பெயர் , என்ற அரசுக்கு இது வரை தெரியாத அனைத்தையும் கொடுத்து உள்ளோம் இனியாவது என்ன முடிவு எடுக்கிறீகள் என்று பார்க்கலாம்.

தலித் மக்களுக்கு விபூதிக்கு பதிலாக மண்: ஒட்டன்சத்திரம் பகுதியில் தீண்டாமை - பட்டியல்

ஒட்டன் சத்திரம் பகுதியில் தீண்டாமையை பின்பற்றி இரட்டைக் குவளைகளை வைத்துள்ள தேனீர்க் கடைகள் தீண்டாமை பின்பற்றும் கோயில்கள், சுடுகாடுகளின் முதல் பட்டியலை ஏற்கனவே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஜூலை 15 இதழில் வெளியிடப்பட்டது. ஒட்டன்சத்திரம் பகுதியில் தீண்டாமையை பின்பற்றும் வணிக நிறுவனங்களின் இரண்டாவது பட்டியல் இங்கு வெளியிடப்படுகிறது.

ஒட்டன் சத்திரம் ஒன்றியம்: ஆமாங்க நம்ம சட்டமன்ற கொறடா வின் சொந்த தொகுதிதான்

பெருமாள் கோவில் வலசு, கள்ளி மந்தயம்

1. மல்லீசுவரன் தேனீர் கடை
2. காளியப்பன் தேனீர் கடை.
இரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், காளியம்மன் கோவிலில் நுழைய அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு.

அப்பியம்பட்டி நால்ரோடு, கள்ளி மந்தயம்
1. திருமலைச்சாமி தேனீர் கடை
இரட்டைக் குவளை, முருகன் சலூனில் முடிவெட்டத் தடை, சுடுகாடு இரண்டு.
2. தியாகராசன் தேனீர் கடை
காளியம்மன் கோவிலில் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு.

பிச்சைக்கல்பட்டி - மார்க்கம் பட்டி
காளியம்மன் கோவிலில் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு.
சிந்தலப்பட்டி
1. சின்னத்தாயி தேனீர் கடை
2. மயில்சாமி தேனீர் கடை
இரட்டைக் குவளை, காளி யம்மன், முத்தாலம்மன் கோவிலில் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நுழைய அனுமதி இல்லை.

சின்னக்கரட்டுப்பட்டி
ராமர் கோவிலில் அனுமதி இல்லை, சுடுகாடு இரண்டு.
பெரியகரட்டுப்பட்டி
நாயக்கர் தெருவில் செருப்புடன் நடக்க அனுமதி இல்லை. காளியம்மன் கோவிலில் நுழைய அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு.

அரசப்ப பிள்ளைபட்டி
1. பெரியசாமி தேனீர் கடை
2. மல்லிகா தேனீர் கடை
3. இரவி தேனீர் கடை
காளியம்மன் கோவில் விநாயகர் கோவில்களில் அனுமதி இல்லை. இங்குள்ள கிளை அஞ்சலகத்தில் பணிபுரியும் அஞ்சல்காரர் தலித் என் பதால் அரசு வழங்கியுள்ள மேசை நாற்காலியை அப்புறப்படுத்திவிட் டார்கள். சாதி இந்துவான அஞ்சல கரும், தலித் ஊழியர் நாற்காலியில் அமரக் கூடாது என்பதற்காக தானும் தரையில் உட்கார்ந்து பணிபுரிகிறார்.

சாமியார்புதூர்
1. இராமசாமி தேனீர் கடை
2. முருகேசன் தேனீர் கடை
3. சின்னதம்பி தேனீர் கடை
4. நல்லதம்பி தேனீர் கடை
5. கருப்பையா தேனீர் கடை
6. கருப்புச்சாமி தேனீர் கடை
ஆகிய கடைகளில் இரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், சுடுகாடு மூன்று.
குத்திலிப்பை
1. சின்னச்சாமி தேனீர் கடை
2. சுப்பிரமணி தேனீர் கடை
3. பெரியசாமி முதலியார் தேனீர் கடை
இரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், சுடுகாடு இரண்டு, தேநீர் கடையில் தண்ணீர் பானை இரண்டு. துர்க்கையம்மன் கோவிலில் அனுமதி இல்லை. (இது பழனி தேவஸ்தான கோவில்)

கலையரங்கில் அமர அனுமதி இல்லை. பேருந்து நிலையத்தில் அமர அனுமதி இல்லை. இங்குள்ள அஞ்சலகத்தில் அஞ்சல்காரர் தலித் (அருந்ததியர்) என்பதால் நாற்காலி யில் அமர அனுமதி இல்லை. தரையில்தான் கோணிப் பையில் அமரவேண்டும்.
சின்னக்காம்பட்டி

காளியம்மன்கோவிலில் நுழைய அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு. இங்கும் கிளை அஞ்சலகததில் அஞ்சல்காரர் தலித் (அருந்ததியர்) என்பதால் நாற்காலியில் அமர அனுமதி இல்லை. தரையில் கோணிப் பையில்தான் அமரவேண்டும்.
எல்லப்பட்டி - மார்க்கம்பட்டி
காளியம்மன் கோவிலில் அனுமதி இல்லை.
மாம்பாறை - மார்க்கம்பட்டி
முனியப்பன் கோவில் (இதுதான் இந்தப் பகுதியிலுள்ள கொங்கு இனத்தைச் சார்ந்த கவுண்டர்கள் கந்து வட்டி தொழில் செய்வதற்கு அனுகூலமான கடவுளாகக் கருதப் படுகிறது. தமிழகம் முழுதுமுள்ள (கொங்கு வேளாளக் கவுண்டர்கள்), இந்தியா முழுதும் உள்ள கந்து வட்டிக் கடைக்காரர்கள் இங்கு கிடாய் வெட்டி நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். நாத்திகர்களாக உள்ள கந்துவட்டி கவுண்டர்கள்கூட இங்கு நேர்த்திக் கடன் செலுத்து கிறார்கள்.)
இங்கு தலித்துகளுக்கு தனி மண்டபம். தலித்துகள் கவுண்டர் வெட்டும் கிடாய் விருந்தில் அனுமதி இல்லை. அப்படி வந்தாலும் அவர் களுக்கு உணவு வெறும் தரையில் தான். அதுவும் தனியாகத்தான். இங்கு தலித்துகளுக்கு விபூதி கொடுக்கப்படுவதில்லை. அதற்கு மாற்றாக மண்தான் வழங்கப்படு கிறது. இந்தக் கோவிலில் மட்டும் எந்தக் காலத்திலும் மதுவிலக்கு கிடையாது.
மார்க்கம்பட்டி
காளியம்மன், முத்தாலம்மன், விநாயகர்கோவில்களில் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு. தலித்துகள் இங்குள்ள ஓடையில்தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள். மழை காலங் களில் ஓடைகளில் தண்ணீர் வந்தா லும் அதில்தான் அடக்கம் செய்யப் படுகிறார்கள்.

ஓடைப்பட்டி - அம்பிளிக்கை
இங்குள்ள கிளை அஞ்சலகத்தில் பணிபுரியும் அஞ்சல்காரர் தலித் என்பதால் தரையில்தான் உட்கார்ந்து பணி புரிகிறார்.
1. பொன்னையன் முதலியார் டீ கடை
2. செங்கோடன் டீ கடை
3. செல்லமத்து டீ கடை
4. செல்வி டீ கடை
5. அத்திக்கோம்பைக்காரர் டீ கடை
இரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், சுடுகாடு இரண்டு. காளி யம்மன், முத்தாலம்மன், பகவதி யம்மன், பெருமாள் கோவில், விநாயகர் கோவில்களில் அனுமதி இல்லை. இங்குள்ள கலைரயரங்கில் தலித்துகள் அமர அனுமதி இல்லை.
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ செய்தி எதிரொலி
தலித் அஞ்சலக ஊழியருக்கு நாற்காலி மேசை வந்தது

ஒட்டன்சத்திரம், சேலம் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தேனீர்க் கடைகள், சுடுகாடுகள், முடிதிருத்தும் நிலையங்கள், கோயில்களில் நிலவும் தீண்டாமைகளை பட்டியலாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிட்ட பிறகு, உறங்கிய காவல்துறை விழித்துக் கொண்டு, செயல்படத் தொடங்கியுள்ளது.

ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள வெரியப்பூர் கிளை அஞ்சலகத்தில் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட அஞ்சல் ஊழியர், ஆதிக்கசாதி அதிகாரியுடன் சமமாக உட்காரக் கூடாது என்பதால் மேசை நாற்காலி வழங்காமல் தரையில் உட்கார வைத்து வேலை வாங்கி வருவதை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சுட்டிக்காட்டியது.

காவல்துறையின் சென்னை நகர இணை ஆணையாளரான இரவி, அய்.பி.எஸ். அவர்களின் சொந்த கிராமம் இது. செய்தியைப் படித்த அதிகாரி இரவி, வெரியப்பூரில் உள்ள தனது தந்தையார் முத்துச்சாமி அவர்களிடம் உடனே தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசியுள்ளார். முத்துச்சாமி அவர்கள் தி.மு.க.வைச் சார்ந்தவர். ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக பணியாற்றியவர். அவர் வெரியப்பூர் அஞ்சலகம் சென்று, நேரில் பார்வையிட்டு தரையில் தலித் அஞ்சல் ஊழியர் உட்கார வைக்கப்பட்டுள்ள அவலத்தை நிறுத்துமாறு கேட்டதாக தெரிகிறது.

இப்போது தலித் அஞ்சலக ஊழியருக்கு மேசை நாற்காலி வழங்கப்பட்டு, அதில் அமர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏடு வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்ற அனைத்து தேனீர்க்கடைகளுக்கும், காவல்துறையினர் நேரில் சென்று, இரட்டைக் குவளைகளை அகற்றுமாறு எச்சரிக்கை செய்து வருகிறார்கள். பார்ப்போம் என்ன நடக்குது என்று....

தொடரும் ...
நன்றி -பெரியார் திராவிடர் கழகம்