சிறுகதை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மன்னை முத்துக்குமார்
இது அனைவருக்கும் தெரிந்த கதை தான். தெரியாதவர்களுக்கு.

ஒரு ஊரில் ஒரு கல்வெட்டி இருந்தான். கல்லுடைப்பது அவன் வேலை. வருமானம் போதவில்லை. வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது அவனுக்கு.

ஒரு நாள், அவன் போன வழியில் ஒரு பணக்கார வீடு தென்பட்டது. அந்த வீட்டின் வாசல் வழியே அவன் கண்ணில் பட்ட அத்தனை பொருள்களும் செல்வங்களும் அவனை விழிபிதுங்க வைத்தன.

அடடா.. அந்த பணக்காரனுக்கு எத்தனை செல்வாக்கு… என நினைத்தான். பணக்காரன் மீது பொறாமையாக இருந்தது. தனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் எப்படியிருக்கும்? என நினைத்துப் பார்த்தான்.

அட, என்ன அதிசயம்… அவன் பணக்காரனாகிவிட்டான். வாழ்க்கையில் அவன் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு செல்வங்கள் குவிந்துவிட்டன.

மற்றொரு நாள்… ஒரு பெரிய அரசு அதிகாரி பல்லக்கில் அவனைத் தாண்டிச் சென்றார். அந்த அதிகாரியின் பின்னே பல சேவகர்கள்… படை வீரர்கள்… மக்கள் பயந்து கும்பிட்டு வழிவிட்டனர். அதிகாரியின் உத்தரவு தூள் பறந்தது. எப்பேர்ப்பட்ட பணக்காரனும் விழுந்து வணங்கினான். இப்போது கல்வெட்டிக்கு மனசெல்லாம் அந்த அதிகாரிதான் நின்றார்.

‘இருந்தா இப்படியல்லவா இருக்கணும்… என்னா அதிகாரம்..!’ என்று நினைத்தான். அவன் நினைப்பு பலித்தது. பெரும் அதிகாரம் படைத்த அதிகாரியாகிவிட்டான். அவனைப் பார்த்தாலே எல்லாம் பயந்தனர். கொஞ்ச நாளில் மக்கள் வெறுக்கும் அளவுக்கு அவன் அதிகாரம் எல்லை மீறிப் போனது.

ஒரு கோடை நாள்… தனது பல்லக்கில் பயணித்துக் கொண்டிருந்தான் இப்போது அதிகாரியாக இருக்கும் கல்வெட்டி. வெயில் சுள்ளென்று சுட்டது. இருக்கையில் உட்காரவே முடியாத அளவு வெப்பம் தகித்தது. அண்ணாந்து பார்த்தான்… வானத்தில் கம்பீரமாக தகதகத்தது சூரியன்!

“ஓ… உலகத்துக்கு மேலே உட்கார்ந்துகிட்டு இந்த சூரியன் என்னமா ஆட்டிப் படைக்குது… இருக்கட்டும். நானும் சூரியனாகி எல்லாரையும் எனக்கு கீழே வச்சி வாட்டி எடுப்பேன்…” என்றான்.

அவன் இப்போது சூரியனாகிவிட்டான்!

தனது கிரணங்களை பல மடங்கு வெப்பமாக்கி பூமியில் செலுத்தி அத்தனைப் பேரையும் துன்புறுத்தினான். விவசாயிகளும் தொழிலாளர்களும் சாபமிட்டனர் அவனுக்கு. அந்த நேரம் பார்த்து ஒரு கரிய மேகம் கடந்துபோனது. சூரியன் அந்த மேகத்துக்குள் மறைய, மக்கள் மகிழ்ந்தார்கள்.

“ஓ… மேகம் நினைச்சா சூரியனையே காலி பண்ணிடுமா… அப்ப நானும் மேகமாகிட்டா போச்சு,” என நினைத்தான். நினைத்தபடி மேகமாகிவிட்டான்.

இப்போது பூமியெங்கும் மழையை மடை திறந்த வெள்ளம் போல கொட்டினான். எங்கும் வெள்ளக்காடு. மக்கள் சபித்தனர். திடீரென பலத்த காற்று வீச, மேகம் தாக்குப் பிடிக்காமல் ஓடிப் போனது.

“பார்றா… காத்துக்கு எவ்வளவு சக்தி.. நானும் காத்தா மாறி உலகுக்கு ஒரு காட்டு காட்டப் போறேன்,” என்று நினைத்தான் மேகமாக இருந்த கல்வெட்டி.

அப்படியே நடந்தது. மேகம் இப்போது வலிமையான காற்றாகி மாறி, பூமியையே ஆட்டிப் பார்த்தது. மரங்களையும் வீடுகளையும் பெயர்த்தெடுத்து வீசியது. மக்கள் கோபமாகி திட்டித் தீர்த்தனர். அப்போது திடீரென ஏதோ ஒரு பெரிய உருவம் தடுத்து நிறுத்தியது போல உணர்வு. பார்த்தால் ஒரு பெரும் பாறை.

“ஓஹோ… காற்றையும் தடுக்கும் அளவு இந்தப் பாறைக்கு பலமா… நானும் பாறையாவேன்,” என்றான். பாறையானான். பூமியில் யாராலும் அசைக்க முடியாத பலத்துடன் இருந்தான். அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது… ஒரு உளியை வைத்து தன் மீதே யாரோ அடிக்கும் சத்தம்…

“அட… உலகின் சர்வ பலம் மிக்க இந்த பாறையை விட பலமானவன் யாரடா அது…?”

குனிந்து பார்த்தால்…

பாறையை உளியால் உடைத்துக் கொண்டிருந்தான் ஒரு கல்வெட்டி!

-------***-----
மன்னை முத்துக்குமார்

பெர்னாட்ஷாவைப் பார்த்து அவருடைய நண்பர் ஒருவர், "பெர்னாட்ஷா, திடீரென்று உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்.

அதற்குப் பெர்னாட்ஷா, "கடவுளுக்கு நன்றி சொல்வேன்" என்றார்.

குழப்பமடைந்த நண்பர், "கடவுளுக்கு நன்றியா? ஏன்?" என்று கேட்டார்.

"பைத்தியக்காரத்தனமான கேள்விகளைக் கேட்கும் உங்களைப் போன்றவர்கள் என்னை நெருங்கப் பயப்படுவார்கள் அல்லவா? அதனால்தான்" என்றார் ஷா அமைதியாக.

அந்த நண்பர் அசடு வழிந்து ஓடியே போய்விட்டாராம்.
மன்னை முத்துக்குமார்
துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே நண்பர்கள்.

முதல் நபர் உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது.

''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.

முதல் நபர் சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த நபரை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் இரண்டாவது நபர். அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது நபர் வந்தார். அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.

மூன்றாவது நபர் சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''
-

மன்னை முத்துக்குமார்
 
”தேனீ “ கிட்ட ஒரு பறவை , இவ்வளவு கடின உழைப்பால் நீ சேமிக்கும் தேனை மனிதர்கள் திருடிட்டு போயிடுறாங்களே அதுக்காக நீ வருந்த மாட்டியா?  என்றது.

அதற்கு ,தேனீ நான் ஏன் வருந்த வேண்டும்? நான் சேமிக்கும் தேனை வேண்டுமானால் மனிதர்கள் திருடிச் செல்ல முடியும், ஆனால் ஒரு போதும் பூவிலிருந்து தேனை எடுத்துச் சேமிக்கும் கலையை அவர்களால் திருட முடியாது , என்றதாம்.
மன்னை முத்துக்குமார்

நரேஷ்  ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார்.

  நரேஷ்  தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது.

வேறு ஒரு நகரம். அங்கே ஒரு விதவை. அவள் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இழந்தவள். இறந்துபோன தனது கணவனை அடக்கம் செய்து துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள்.

பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தனது கணிணியை  திறந்து துக்கக்கடிதங்கள் ஏதேனும் மின்னஞ்சல் ரூபத்தில் வந்திருக்கிறதா எனப் பார்வையிட்டாள்.

அவளுக்கு வந்திருந்த முதல் மின்னஞ்சல் கடிதத்தைப் படித்ததும் அவளுக்கு மயக்கம் வந்து தலைசுற்றிவிட்டது.தரையில் வீழ்ந்துவிட்டாள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த விதவையின் மகன் அந்த அறைப்பக்கமாக வந்தார். தனது தாய் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். கணிணி இயக்கத்திலேயே இருந்தது. கணினியில் தெரிந்த வாசகத்தைப் படித்தார். அதில் பின்வருமாறு இருந்தது.

அன்பான மனைவிக்கு,

எனது கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம் தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.
                                                                            
                                                                           இப்படிக்கு உன் அன்புக் கணவன்
.
--
நன்றி : இணையம் .
மன்னை முத்துக்குமார்
 ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். மரண படுக்கையில் இருக்கும் பொழுது மூன்று பேரையும் அழைத்து சொன்னார், எனது சொத்து முப்பது கோடி. நான் உங்களுக்கு சமமாக அளிக்கிறேன். அனால் ஒரு நிபந்தனை. நான் இறந்ததும் என்னை புதைக்கும் பொழுது, அதில் சரியாக பாதியை ஒவ்வொருவரும் என் கல்லறைக்குள் போட வேண்டும். அப்போது தான் அடுத்த பிறவியிலும் நான் பணக்காரனாக வாழ முடியும் என்றார்.

அனைவரும் சம்மதித்தனர்

ஒரு நாள் அவர் இறந்து போனார். காரியங்கள் முடிந்த பின்பு மகன்கள் பேசி கொண்டார்கள்.

'நீ அப்பா சொன்ன மாதிரி பணத்தை அவரது கல்லறையில் புதைத்தாயா ?

முதல் மகன் : நான் ஒரு கோடி போட்டேன்.

ரெண்டாவது மகன்: நானே பரவாயில்லை. மூணு கோடி போட்டேன். நீ என்னை விட மோசம்.

மூன்றாவது மகன்: நீங்கள் ரெண்டு பேரும் அப்பாவுக்கு குடுத்த சத்யத்தை மீறி விட்டீர்கள். நான் அப்படியில்லை. அப்பா அஞ்சு கோடி தான் கேட்டார். ஆனாலும் நான் அப்பா கொடுத்த பத்து கோடிக்கும் ஒரு செக் எழுதி போட்டுட்டேன்.

மன்னை முத்துக்குமார்
கொலம்பசைப் பாராட்டி நடைபெற்ற விருந்து ஒன்றில் அவர்மீது பொறாமை கொண்ட சிலரும் கலந்து கொண்டனர். அவர்களுள் ஒருவர், கொலம்பஸ் மட்டுமல்ல, வேறு யார் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்திருந்தாலும் புதிய நாடுகளைக் கண்டுபிடித்திருப்பார்கள் என்று கூறினார்.


இதனைக் கேட்ட கொலம்பஸ், விருந்தில் வைக்கப்பட்டிருந்த முட்டை ஒன்றினை எடுத்தார். சொன்னவரிடம் கொடுத்து, இதைச் செங்குத்தாக மேசையின்மேல் நிறுத்தி வையுங்கள் பார்க்கலாம் என்றார். நிறுத்தி வைத்துப் பார்த்து முடியாமல், உங்களால் செங்குத்தாக நிறுத்தி வைக்க முடியுமா? என்று கொலம்பசைக் கேட்டார்.

முட்டையை வாங்கிய கொலம்பஸ் குறுகலான பகுதியை மேசையின்மீது மெதுவாகத் தட்டினார். முட்டையில் சிறிய பள்ளம் விழ, முட்டை மேசையின்மீது செங்குத்தாக நின்றது. எதிரில் இருந்தவர், இப்படிச் செய்வது என்றால் நானும் செய்திருப்பேனே என்றதும்,

எந்தக் காரியத்தையும் ஒருவர் செய்து காட்டிய பிறகு அது சுலபமாகத்தான் தோன்றும். முதல்முறையாக அதைச் செய்வதற்குத்தான் மூளை வேண்டும் என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் கொலம்பஸ்.
மன்னை முத்துக்குமார்

ஒரு அரசன் சில கவிதைகளைப் புனைந்து தன் அமைச்சரிடம் படித்துக் காட்டினான். அமைச்சர் சொன்னார்,”இவை மோசமான மொக்கை கவிதைகள் உங்களால் முடியாத காரியத்தில் ஏன் மன்னா தலையிட வேண்டும்?” என்று கேட்டார். 

மன்னன் கடுங்கோபம் அடைந்து அமைச்சரைக் கழுதை லாயத்தில் அடைக்க உத்தரவிட்டான்.

சில தினங்களுக்குப் பிறகு அரசன் மேலும் சில கவிதைகளை எழுதி அமைச்சரைக் கூப்பிட்டனுப்பி காட்டினான்.அமைச்சர் கவிதைகளைப் படித்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.

”எங்கே போகிறீர்?”என்று அரசன் கேட்டான்.

”கழுதை லாயத்திற்கு”என்றார் அமைச்சர்.
மன்னை முத்துக்குமார்

 
ஒரு காட்டில் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பலத்த போர். காடு யாருக்குச் சொந்தமென்று. பல நாட்கள், மாதங்கள் நடைபெறுகிறது போர். ஒரு கட்டத்தில் விலங்கினங்கள் ஜெயிக்கிற மாதிரி
ஒரு சூழல் வருகிறது. பறவை

க்கூட்டத்தில் இருந்த வௌவால் இதைக் கணிக்கிறது. உடனே பறந்து விலங்கின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ள நினைக்கிறது.

வௌவாலைத் தடுக்கிற பறவைக்கூட்டணி. ‘நீ செய்வது நியாயமா’ என்று கேட்கிறது.

பறவைக்கூட்டணி தன்னைப் பார்த்து அவ்வாறு கேட்டதும் வௌவால் சொன்னது: ‘நானென்ன உங்களைப் போல முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறேனா? நான் குட்டியிட்டு பாலூட்டுகிறேன். பாலூட்டுவதால் நான் விலங்கினம்’ என்று சொல்லிவிட்டு விலங்குக் கூட்டணியில்… ச்சே. கூட்டத்தில் சேரப் பறந்தோடியது. போரில் வெல்ல எவர் வந்து கூட்டத்தில் சேர்ந்தாலும் சேர்த்துக் கொள்வோமென விலங்கினமும் வௌவாலைச் சேர்த்துக் கொண்டது.

போர் தொடர்ந்தது. இரு தரப்பும் சம பலத்தில் இருக்க, இப்போது பறவையினம் ஜெயிக்கிறாற்போல ஒரு தோற்றம். பயந்தது வௌவால். சடாரெனப் புறப்பட்டது பறவைக் கூட்டத்தில் சேர. தடுத்த விலங்கினத்திடம் கூறியது: ‘நானென்ன உங்களைப் போல நாலு காலால் நடக்கிறேனா? இதோ பாருங்கள்.. இறக்கை இருக்கிறது.. பறக்கிறேன். பறப்பதால் நான் பறவையினம்!’ என்று சொல்லிவிட்டுப் பறந்தது. கூட்டணி தர்மத்தில் பறவையினமும் வௌவாலைச் சேர்த்துக் கொண்டது!

மீண்டும் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் போர் தொடர்ந்தது. பொறுத்துப் பார்த்த வனதேவதை சடாரென இரண்டு தரப்பினரின் முன்பும் தோன்றினாள்.

“இதோ பாருங்கள்…. இந்தக் காடு உங்கள் இருவருக்கும் சொந்தமானதல்ல. அப்படி ஓர் எண்ணமிருந்தால் அதை மூட்டை கட்டி வையுங்கள். இந்தக் காடு எனக்குச் சொந்தம். இதில் நீங்கள் இருக்க வேண்டுமானால் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இந்த இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். இப்படி சண்டையிடுவீர்களேயானால் இப்போதே இந்தக் காட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்றது கண்டிப்பான குரலில்.

வனதேவதையின் உக்கிரத்தைக் கண்ட விலங்கினமும், பறவையினமும் தங்கள் போரை நிறுத்திக் கொள்வதென தீர்மானித்தன. போரை வாபஸ் வாங்கிக் கொண்டு ஒற்றுமையாக காட்டின் நலனுக்காக உழைப்பது என முடிவெடுத்தன.

இப்போது திண்டாடியது வௌவால். பறவையினம் ‘நீ என்ன எங்களைப் போல முட்டையிட்டா குஞ்சு பொரிக்கிறாய்? போ.. போ.. விலங்குகளுடனே வாழ்’ என்று துரத்த விலங்கினமோ ‘நீ இறக்கையெல்லாம் வைத்துக் கொண்டு பறக்கிற பறவையல்லவா.. போ.. போ… பறவைக் கூட்டத்தில் சென்று வாழ்’ என்று துரத்தின.

சந்தர்ப்பத்திற்காக மாறி மாறி கூட்டு சேர முற்பட்டதால் இரண்டு புறமும் சேர முடியாத வௌவால், அவமானத்தால் பகலில் தலைகாட்ட இயலாமல் பகல் முழுதும் தலைகீழாகத் தொங்கி இரவு மட்டுமே இரை தேடி, உண்ணும் வாய் வழியாகவே மலமும் கழிக்கிற அவல நிலைக்கு ஆளானதாம்!

இது லியோ டால்ஸ்டாய் சொன்ன கதை