மன்னை முத்துக்குமார்
.
பெண் கடவுள்களை பார்ப்பனர்கள் அரியணையில் அமர்த்தியது ஏன்?

கடவுள்களை வழிபடுவது என்பது, எங்கும் சாதாரணமாக வழக்கில் உள்ளது. ஆனால் பெண் கடவுள்களை வழிபடுவது சாதாரணமானதல்ல. காரணம், கடவுள்கள் பொதுவாக திருமணமாகாதவர்களாகவே இருக்கிறார்கள். பெண் கடவுள்கள் என்று உயர்த்தி வைப்பதற்கு, கடவுள்களுக்கு மனைவிகள் இல்லை. கடவுளை மணமானவராகக் கருதுவது, எந்தளவுக்கு மனம் ஒவ்வாததாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஏசுவைக் கடவுளின் மகன் என்று யூதர்களை ஏற்கச் செய்வது, தொடக்கக் காலத்தில் கிறித்துவர்களுக்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதைக் குறிப்பிடலாம்.

கடவுளுக்கு மணமாகவில்லை என்றும், அதனால் ஏசு எப்படிக் கடவுளின் மகனாக இருக்க முடியும் என்றும் யூதர்கள் கேட்டார்கள்.
இந்துக்கள் விஷயத்தில் நிலைமை முற்றிலும் வேறு விதமாக உள்ளது. அவர்கள் ஆண் கடவுள்களை வழிபடுவது மட்டுமின்றி, பெண் கடவுள்களையும் வழிபடுகிறார்கள்...

இதுவரை கூறியதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று, இந்துக் கடவுள் திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதும், அவர் சாதாரண மனிதனைவிட உயர்வாக நடந்து கொள்ளவில்லை என்பதால், அவரோ, அவரை வழிபடுகிறவர்களோ கூச்சப்பட வேண்டியதில்லை என்பதும் ஆகும். இரண்டாவது, கடவுளின் மனைவி அவரை மணந்து கொள்ளும் காரணத்தாலேயே, அந்தக் கடவுளை வழிபடுபவர்களின் வழிபாட்டுக்குத் தகுதி பெற்றுவிடுகிறார்.

வேத காலத்தைவிட்டு புராண காலத்திற்கு வந்தால், பல பெண் கடவுள்களின் பெயர்களைக் காண்கிறோம்: தேவி, உமா, சதி, அம்பிகை, பார்வதி, ஹேமாவதி, கவுரி, காளி, நிர்நிதி, சண்டி, காத்யாயினி, துர்கை, தஷ்புஜா, சிங்கவாகினி, மகிஷாசுர மர்த்தினி, ஜகதாத்திரி, முக்தகேசி, தாரா, சின்னமுஸ்தகா, ஜதக் கவுரி, பிரத்யங்கிரா, அன்னப்பூர்ணா, கணேஷ் ஜனனி, கிருஷ்ணக்ரோரா, லட்சுமி ஆகியோர். இந்தப் பெண் கடவுள்களில் யார் எவர் என்ற பட்டியலை வரைவது கடினம். முதலாவதாக இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பெண் கடவுள்களைக் குறிக்கின்றனவா அல்லது ஒரே பெண் கடவுளின் வெவ்வேறு பெயர்களா என்று கூறுவதும் கடினம். இதேபோல இவர்களின் தாய் தந்தை யார் என்று கூறுவதும் கடினம். இவர்களின் கணவர்கள் யார் என்பதையும் யாரும் உறுதியாகக் கூற முடியாது...

இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரும் ஒரே கடவுளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதாகக் காட்ட முயலுகின்றனர். இவர்களில் சரஸ்வதி பிரம்மாவின் மனைவி, லட்சுமி விஷ்ணுவின் மனைவி, பார்வதி சிவனின் மனைவி என்பதையும், இந்த மூன்று கடவுள்களும் ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதையும் பார்க்கும்போது, வராகப் புராணம் கூறும் விளக்கம் விந்தையாக உள்ளது.

கவுரி யார்? பார்வதியின் மற்றொரு பெயர் தான் கவுரி என்று புராணம் கூறுகிறது. இதற்குக் காரணம் பின்வருமாறு கூறப்படுகிறது: சொர்க்கத்தில் சிவனும் பார்வதியும் ஒன்றாக இருக்கும்போது, அவர்களிடையே சிறு சிறு சண்டைகள் வரும். அப்படியொரு நேரத்தில் சிவன் பார்வதியின் கருப்பு நிறத்தை சுட்டிக்காட்டி அவரைச் சீண்டினார். இதனால் மன வருத்தம் அடைந்த பார்வதி, சிலகாலம் சிவனை பிரிந்து சென்று கடும் தவம் புரிந்தார். அதன் விளைவாக பிரம்மா அவருடைய மேனி பொன் நிறமாக விளங்கும் என்று வரம் கொடுத்தார். இதனால் அவருக்கு கவுரி என்று பெயர் வந்தது.

மற்ற பெண் கடவுள்களைப் பார்த்தால், அவை ஒரே பெண் கடவுளின் வெவ்வேறு பெயர்களா? அல்லது தனித்தனி கடவுள்களா? என்று உறுதியாகத் தெரியவில்லை...வேதத்தில் கூறப்படும் பெண் கடவுள்களையும் புராணங்களில் கூறப்படும் பெண் கடவுள்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது வரலாற்றை எழுதுவது மட்டுமின்றி, அதற்குப் பொருள் கூறுவதையும் பணியாகக் கொண்டுள்ள ஒரு மாணவனுக்கு தவிர்க்க முடியாததாகும். ஒரு விஷயத்தில் இந்த இரண்டு வகை பெண் கடவுள்களுக்கிடையே பெரிய வேறுபாடு உள்ளது.

வேதத்தின் பெண் கடவுள்கள், கடவுள்களின் மனைவியர்களாக இருந்ததின் காரணமாகத்தான் வணங்கப்பட்டார்கள். புராணப் பெண் கடவுள்கள் அப்படியல்லர். இவர்கள் கடவுள்களின் மனைவியர் என்பதினாலன்றி, தங்களுடைய சொந்த முறையிலேயே வழிபாட்டைப் பெறுகிறார்கள். இந்த வேறுபாட்டிற்குக் காரணம், வேதப் பெண் கடவுள்கள் போர்க்களத்திற்கு சென்றதோ, வீரச்செயல்கள் புரிந்ததோ கிடையாது. ஆனால், புராணங்களின் பெண் கடவுள்கள் போர்க் களம் சென்று பெரும் வீரச் செயல்கள் புரிந்துள்ளார்கள். துர்கைக்கும் இரண்டு அசுரர்களுக்கும் இடையே பெரும் போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுவே துர்கைக்கு பெரும் புகழைக் கொடுத்தது...

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தமிழ் நூல் தொகுப்பு : 8, பக்கம்: 131)