மன்னை முத்துக்குமார்
அவனவன் எண்ணத்திற்கேற்ப தான் அவன் தேவையும் இருக்கும் . அதுக்கு ஒரு ஜென் கதை.


  புகழ்பெற்ற புத்தத் துறவி அவர். மலையடிவாரத்தில் ஒரு குடிசையில் தனியாக வசித்து வந்தார்.

அவருக்கென பெரிய தேவைகள் இல்லை. அவர் குடிசை வெறுமையாகக் கிடந்தது. அருகில் கிடைக்கும் பழங்கள், காய்கள் அல்லது விவசாயிகள் எப்போதாவது தரும் தானியங்களைச் சாப்பிடுவார். கட்டாந்தரையில்தான் தூங்குவார். எப்போதும் ஒரு பாறையில் அமர்ந்து தியானம் செய்வது அவர் வழக்கம்…

அவரது குடிசைக்கு கதவுண்டு. ஆனால் ஒரு நாளும் பூட்டப்பட்டதில்லை. திறந்தே கிடந்தது.

ஒரு நாள் மாலை நேரம்… குரு வெளியில் சென்றிருந்தார். ஒரு திருடன் மெதுவாக தவழந்தபடி அந்த வீட்டுக்குள் நுழைந்தான். உள்ளே வந்த பிறகுதான் அவனுக்குத் தெரிந்தது, அந்த வீட்டில் ஒன்றுமே இல்லை என்பது. அப்போது குரு வீட்டுக்கு திரும்பிவிட்டார். உள்ளே இருந்த திருடனைப் பிடித்துவிட்டார்.

பின்னர் அவனை பரிவுடன் நோக்கிய அவர், கைகளைப் பிடித்து குலுக்கினார்.
திருடனுக்கு ஆச்சர்யம்.

“பாவம்… நீண்ட தூரத்திலிருந்து வந்திருப்பாய் என நினைக்கிறேன். உன்னை வெறுங்கையுடன் அனுப்ப விரும்பவில்லை” என்றார் குரு.
உடனே, அந்த காலி வீட்டை மீண்டும் ஒரு முறை நோட்டமிட்டான் திருடன். ஒன்றுமே கண்ணுக்குப் புலப்படவில்லை. குருவும் ஒரு முறை அறையை நோட்டம் விட்டார்.

தான் அணிந்திருந்த ஒரே உடையை கழட்டி அவனுக்குக் கொடுத்து, “இதை எனது அன்பளிப்பாக வைத்துக்கொள்,” என்றார்.

வியப்புடன் அந்த உடையை வாங்கிக் கொண்ட திருடன், அந்த குளிர் இரவில் மெல்ல நழுவினான்.

வெற்றுடம்புடன் அறையில் இருந்த குரு, ஜன்னல் வழியே ஒளிர்ந்த நிலவை நோக்கினார். அவர் உதடுகள் இப்படி முணுமுணுத்தன…

“அவனுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்… உண்மையில் இந்த நிலவை அவனுக்குப் பரிசளிக்க நினைத்தேன். அவனோ அழுக்கு உடையோடு திருப்தியடைந்துவிட்டானே!”
.