மன்னை முத்துக்குமார்

ஒரு வயதான போர் வீரர்… பெரும் வீரர் அவர். பல போர்க்களம் பார்த்தவர். போர்க்கலையிலிருந்து ஒதுங்கி கிராமத்தில் தங்கி இளைஞர்கள் பலருக்கு பயிற்சி தந்து கொண்டிருந்தார்.

வயதானாலும் எந்த எதிராளியையும் தோற்கடித்து விடும் உடல் வலிவும் மன பலமும் அவருக்கு இருந்தது.

ஒரு இளம் வீரன் அந்த கிராமத்துக்கு வந்தான். இந்த முதிர்ந்த போர் வீரரை வீழ்த்தி முதன்மை வீரன் என தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளத் துடித்தான்.

அவனுக்கு உடல் பலம் மட்டுமல்ல, எதிராளியின் பலவீனத்தைக் கண்டுபிடித்து அவனை வீழ்த்தும் அசாத்தியத் திறமையும் இருந்தது. தன் பேச்சால் எதிராளியை தூண்டிவிட்டு, முதல் தாக்குதலுக்காக காத்திருப்பான். அதில் எதிராளியின் பலவீனம் அறிந்து, பலமாகத் தாக்கி எடுத்த எடுப்பில் வீழ்த்துவதுதான் அவன் சண்டை யுத்தி.

இப்படி அவனால் வீழ்த்தப்பட்ட வீரர்கள் பலர்.

கிராமத்தில், வயதான வீரரின் பயிற்சிக் கூடத்துக்கு வந்த வீரன், தன் திட்டத்தைச் சொன்னான். இதைக் கேட்ட முதிய வீரரின் மாணவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

இவனுடன் போட்டியிடுவதை வயதான வீரரும் விரும்பவில்லை. ஆனால் வருபவனுக்கும், தன் மாணவர்களுக்கும் ஒரு பாடம் கற்றுத்தர விரும்பினார்.

இளம் வீரனின் சவாலை ஏற்பதாக அறிவித்தார்.

நகரின் நாற்சந்தியில் மோதல் களம். களத்துக்கு வந்ததும் இளம் வீரன் முதியவரின் கோபத்தைத் தூண்டிவிட மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டினான். அவரது முகத்தில் காறி உமிழ்ந்தான். சிறு கற்களை வீசினான். மண்ணை வாரி இறைத்தான்.

அவரை அவமானப்படுத்தி, கோபப்படுத்தி தன் தாக்குதலைத் துவங்கலாமென்பது அவன் நோக்கம். ஆனால் வயதான வீரரோ அசைவற்று அமைதியாக நின்றிருந்தார். கடைசியில் களைத்துப் போய், தோற்றுவிட்ட மனதுடன் அந்த இளைஞன் களத்திலிருந்து வெளியேறினான்.

இளைஞர்கள் அனைவரும் தங்கள் குருவைச் சூழ்ந்து கொண்டனர். “என்ன இது… எப்படி இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொண்டீர்கள்? நீங்கள் தோற்றிருந்தாலும்கூட பரவாயில்லை, பதிலுக்கு உங்கள் வாளை உருவி அவனுடன் மோதியிருக்கலாமே.. இப்படி அமைதியாக இருந்து எங்களை அவமானப்படுத்திவிட்டீர்களே குருவே?,” என்றனர்.

குரு அதே அமைதியுடன் அவர்களை ஏற இறங்கப் பார்த்து, ஒரு கேள்வி கேட்டார்… “யாராவது உங்களுக்கு பரிசு கொடுக்க விரும்புகிறார்கள். அவர்களில் உங்கள் எதிரிகளும் இருக்கலாம். அந்தப் பரிசு மோசமானதாகவும் இருக்கலாம். அந்தப் பரிசை நீங்கள் பெற மறுத்துவிட்டால் அது யாருக்குச் சொந்தம்?”
.
.
.
.
ஒருவர் தரும் பரிசை ஏற்றுக் கொள்ளாதவரை, அந்தப் பரிசு கொடுத்தவருக்கே சொந்தமாகிறது. அது மரியாதையாக இருந்தாலும் சரி, அவமரியாதையாக இருந்தாலும் சரி!!