மன்னை முத்துக்குமார்
.

தர்மம் அதாவது ஏழைகளுக்குப் பிச்சை இடுதல் முதல் மற்றவர்களுக்குப் பலவித உதவிகள் செய்வது என்பதுவரை, அனேக விஷயங்கள் தர்மத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை பிச்சை கொடுத்தலை மிக நிர்பந்தமாகக் கட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.

எப்படியெனில், தர்மம் கொடுக்காதவன் பாவி என்றும் அவன் நரகத்துக்குப் போவான் என்றும், கடவுள் அவனை தண்டிப்பார் என்றும் இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாகக் கற்பித்து 32 தர்மங்களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால் அவனுக்கு இன்ன இன்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

அதுபோலவே, இஸ்லாம் மதம் என்பதிலும் அன்னியனுக்குப் பிச்சை கொடுத்தாக வேண்டும் என்றும், அது ஒருவனுடைய வருஷ வரும்படியில் அவனது செலவு போக மீதி உள்ளதில் 40இல் ஒரு பாகம் வருஷந்தோறும் பிச்சையாக பணம், சாப்பாடு, துணி முதலியவைகளாய் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படி செய்யாவிட்டால், மதத் துரோகம் என்றும் இந்தப்படி செய்யாதவன் இஸ்லாம் ஆகமாட்டான் என்றும்கூட கூறப்படுகிறது.

அதுபோலவே, கிறிஸ்தவ மதத்திலும் தர்மம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானதென்றும், தர்மம் செய்யாதவனுக்கு மோட்சமில்லை என்றும், உதாரணமாக ஒரு ஊசியின் காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே ஒழிய, பிச்சை கொடுக்காத பணக்காரன் ஒரு காலமும் மோட்சத்துக்குப் போக மாட்டான் என்றும் சொல்லப்படுகிறது.

செல்வம் என்பது உலகத்தின் பொதுச் சொத்து. அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்த ஜீவனுக்கும் அது பொதுச் சொத்தாகும். ஆனால், அந்தப் பொதுச் சொத்தானது பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப் போய்ச் சேரவும், மற்றொருவனுக்கு சிறிதுகூட இல்லாமல் தரித்திரம், பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப்படுகிறதே ஒழிய, மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.

இந்தப்படி செய்வது முடியாத காரியம் என்று யாராவது சொல்லுவார்களானால், ரஷ்யாவில் லெனின் என்ற ஒரு மனிதன் இந்தப்படி உத்திரவு போட்டு பணக்காரரும், பிச்சைக்காரரும் இல்லாமல் செய்துவிட்டாரே! இவர் கடவுளுக்கும் பெரியவரா என்று கேட்கிறேன். ஆதலால் தர்மம் பிறத்தியானுக்கு பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவுவது என்கின்ற முறைகள் எல்லாம் பணக்காரத் தன்மைக்கு அனுகூலமானதே தவிர பணக்காரத் தன்மையைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டதே தவிர, அவை ஒரு நாளும் ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் அனுகூலமானதல்ல.

ஏனெனில் பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்கின்ற காரியங்களால்தான், இல்லாத ஏழை மக்களை தரித்திரவாசிகளான மக்களைப் பிரித்தாள முடியும். ஏழை மக்கள் பிரிந்திருந்தால்தான் பணக்காரர்கள் வாழ முடியும். அன்றியும் பணக்கார மக்கள் மீது ஏழைமார்களுக்கு குரோதமும் வெறுப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்ற காரியத்திற்காகவே தர்மம் என்பதும், ஜக்காத் என்பதும், பிச்சை என்பதும் கற்பிக்கப்பட்டதே ஒழிய, பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதற்கோ அவர்களைக் காப்பாற்றுவதற்கோ ஏற்பட்டதல்ல.

எது எப்படி இருந்த போதிலும், உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழ வேண்டுமானால், பிச்சை கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான் மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியும். பிச்சை கொடுக்கும் வேலையை சர்க்காரே எற்றுக் கொண்டு அதற்குப் பணம் வேண்டுமானால், பணக்காரரிடம் இருந்து பிச்சை வரி என்று ஒரு வரியை கிறிஸ்து சொன்ன கணக்குப்படியோ, சர்க்கார் வசூலித்து, அதற்கு ஒரு இலாக்கா வைத்து விநியோகிக்க வேண்டும். அந்தப் பிச்சையை சர்க்கார் தொழிற்சாலைகள் வைத்து, அதன் மூலம் பிச்சைக்காரர்களிடம் வேலையை வாங்கிக்கொண்டு விநியோகிக்க வேண்டும். இந்தக் காரியத்துக்காக சர்க்கார் எந்தத் தொழிற்சாலை வைக்கிறார்களோ, அந்த மாதிரி தொழிற்சாலையை மற்றவர்கள் வைக்காமல் தடுத்துவிட வேண்டும்.

இப்படிச் செய்தால் பணக்காரர்கள் ஏற்பட்டு நாசமாய்ப் போனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லையாவது இல்லாமல் போய்விடும். பணக்காரத் தன்மை ஆட்சியில்லாத தேசம் எதிலும் இந்தக் காரியம் சுலபமாய் நடத்தலாம். ஆகவே, தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும், பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன்.

‘குடி அரசு' இதழின் தலையங்கம் 21.4.1945