மன்னை முத்துக்குமார்
.
ஆட்சி செய்யும் வகுப்பாரின் மனப்பாங்கு என்ன? அதனுடைய மரபு என்ன? அதனுடைய சமுதாயச் சிந்தனை என்ன?

பார்ப்பனர்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள், சரித்திர அடிப்படையில் பார்த்தால் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் (சூத்திரர்கள்,தீண்டப்படாதவர்கள்) ஜென்ம விரோதிகளாக இருந்து வருபவர்கள். இந்து சமுதாய மக்கள் தொகையில் இந்த இருவரும் 80 சதவிகிதத்தில் உள்ளனர் . இன்று இந்தியாவிலேயே, அடிமைப் படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த சாதாரண மனிதன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கை யோ, அபிலாஷையோ இல்லாது. இருப்பதற்கு முழுமையான காரணம், பார்ப்பனர்களும் அவர்களுடைய சித்தாந்தமுமேயாகும்.

பார்ப்பனியத்தின் தலையாய கொள்கைகள் அய்ந்து

(1) பலதரப்பட்ட வகுப்புகளுக்குள்ளே படிப்படியான சமத்துவமில்லாத உயர்வு தாழ்வு நிலைகள்

(2) சூத்திரர்கள் , தீண்டத்தகாதார்களுடைய மோசமான வலிவற்ற தன்மை

(3) சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது என்று தடை

(4) சூத்திரர்களும் , தீண்டப் படாதவர்களும் உயர்நிலையோ , ஆற்றலோ பெறுவதற்குத் தடை

(5) சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் பொரும் சேர்ப்பதற்குத் தடை பெண்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது .

பார்ப்பனியத்தின் அங்கீகரிக்கப் பட்ட சித்தாந்தம் உயர்வு-தாழ்வு நிலை, கீழ்த் தளத்தில் உள்ள வகுப்புகள் சமத்துவத் தன்மை அடைய விரும்புவதை ஈவு இரக்கமின்றி அழித்து வைப்பதே பார்ப்பனியத்தின் இன்றியமையாத கடமையாகும்.

ஒரு சிலர் மட்டும் படித்துள்ள நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் படித்த வகுப்பார் அதாவது பார்ப்பனர்கள் கல்வியைத் தங்களது ஏக போகமாக்கியுள்ளார்கள் . அது மட்டும் அல்லாது அடித்தளத்தில் உள்ள வகுப்புகள் கல்வியறிவு பெறுவது ஒரு பெரிய குற்றமாக வைத்துள்ளார்கள். அந்தக் குற்றத்திற்குத் தண்டனை நாக்கை வெட்டுவது அல்லது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது. மக்களை நிர்க்கதியாக்கிப் பிரிட்டிஷார் இந்தியாவை ஆளுகிறார்கள் என்ற காங்கிரஸ் அரசியல்வாதிகள் புகார் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள். சூத்திரர் களையும் , தீண்டத்தகாதவர்களையும் பராரிகளாக கதியற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஆண்ட ஒரு ஆட்சியை மறந்து விடுகிறார்கள். உண்மையிலேயே சூத்திரர்களும், தீண்டப்படாத வர்களும் வலிமையற்ற நிலையில் இருக்கவேண்டும் என்பதில் பார்ப்பனர்கள் மிகவும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஏனென்றால் தாங்கள் வலிமையுற்றவர்களாக ஆக வேண்டும் என்றும், தாங்கள் அனுபவிக்கும் சலுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எண்ணிச் சட்டத்தை மாற்றும் பொழுது ஒன்றை மாத்திரம் அவர்கள் மாற்றாது விட்டு விட்டார்கள் . எதை அவர்கள் நிலை குலையாமல் காப்பாற்றினார்கள்? சூத்திரர்கள் , தீண்டப்பாடதவர்களாக, வலிமை யற்றவர்களாகவே இருக்க வேண்டும் என்ற தடையை அவர்கள் நீக்காமல் விட்டு விட்டார்கள்.

இன்றைக்கு இந்தியாவிலேயே பெரும்பான்மை மக்கள் முற்றிலும் கோழையாக, உணர்ச்சியற்றும் , ஆண்மையற்றும் இருப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் வலிமையற்று இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வந்த தந்திரக் கொள்கையின் பலனேயாகும்.
பார்ப்பனர்கள் ஆதரவு பெறாத சமுதாயக் கெடுதியோ அல்லது சமுதாயக் குற்றமோ இல்லை.

ஒரு மனிதனைக் கண்டால் அவனிடத்தில் மனிதத் தன்மையே காட்டக்கூடாது என்பதுதான் பார்ப்பனர்களின் மதம்.


அதாவது சாதி உணர்ச்சியுடன் பார்க்கக் கூடாது என்பது பார்ப்பனர்களின் மதமாகும். மனிதன் செய்யக்கூடிய தவறுகள் தான் அவனுக்கு மதமாகிறது என்று ஊகிப்பது தவறான அடிப் படையில் அமைந்த எண்ணமாகும். ஏனென்றால் உலகத்தில் எந்த பாகத்திலாவது பெண்கள் மோசமாகக் கொடுமைப்படுத்தப்பட்டு அதனால் அவதியுறுகிறார்கள் என்றால் அந்தக் கொடுமைகளுக்குப் பார்ப்பான் தன்னுடைய ஆதரவைத் தந்திருக்கிறான். விதவைகள் `உடன்கட்டை ஏறுதல்’ என்ற பழக்கத்தினால் உயிருடன் கொளுத்தப் பட்டார்கள். `உடன்கட்டை ஏறுதல்’ என்ற தீய பழக்கத்திற்குப் பிராமணர்கள் தங்களுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறார்கள். விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக் கப்படவில்லை .

இந்தக் கோட்பாட்டிற்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவைத் தந்திருக்கிறான். பெண் 8 வயது அடைவதற்கு முன்னேயே திருமணம் செய்து கொடுத்தாக வேண்டும். கணவன் அந்தப் பெண்ணுடன் அதற்குப் பிறகு பாலுறவு செய்கின்ற உரிமையே பெற்றுள்ளான். அந்தப் பெண் பருவ பக்குவம் அடைந்தாளா இல்லையா என்பது பற்றிப் பொருட்படுத்தவில்லை. அந்தக் கோட்பாட்டுக்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறான். பார்ப்பனர்கள் , சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் சட்டம் இயற்றும் கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் சட்டம் இயற்றிய தன்மையையும், உலகத்தில் மற்றப் பாகங்களில் உள்ள படித்த வகுப்பைச் சேர்ந்த மக்கள் சட்டம் இயற்றிய தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பார்ப்பனர்களுடைய தன்மை மிகமிகக் கொடியதாகும். ஒரு படித்த வகுப்பார், தம்முடைய அறிவுத் திறனை, தம்முடைய நாட்டில் உள்ள கல்வி அறிவு இல்லாத மக்களை எப்பொழுதுமே அறியாமையிலும், வறுமையிலும்,ஆழ்த்தி வைக்க வேண்டும் என்ற கோட்பாடு அமைந்த தத்துவத்தைக் கண்டுபிடிக்கும் முறையில் அறிவை இழிசெயலுக்குப் பயன்படுத்தவில்லை. யாரைப்போல? இந்தியாவில்உள்ள பார்ப்பனர்கள் செய்தது போல்

தம்முடைய மூதாதைகள் உருவாக்கிய இந்தப் பார்ப்பனீயத் தத்துவத்தை இன்று ஒவ்வொரு பார்ப்பனனும் நம்புகிறான். இந்தச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அந்நியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் அயல் நாட்டினரைப்போல் தான் தோன்றும். ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ ஒரு யூதனுக்கு யூதன் அல்லாதவன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக் காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அதுபோலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.

தாழ்ந்த வகுப்பில் சூத்திர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும், பார்ப்பனர்களுக்குமிடையே உண்மையிலேயே ஒரு பெருத்த பிளவு இருக்கத்தான் செய்கிறது. பார்ப்பான், சூத்திரர்களுக்கும் தீண்டப் படாதவர்களுக்கும் அன்னியனாக மட்டும் இல்லை. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான். இவர்களுடைய தொடர்பை நினைக்கும் பொழுது மனச்சாட்சிக்கோ, நியாயத்திற்குகோ சிறிதும் இடமில்லை.

—— டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட “காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன?” என்ற நூலிலிருந்து – பக்கம் 215-216