மன்னை முத்துக்குமார்
.
ஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது



ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப் போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.

மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் முதலியவர்கள் இந்தப்படிதான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது, கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்டைய வாதம் என்னவென்றால், இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏங்கெல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் கீழ்ஜாதியாகவும் இருக்கிற சதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.

உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.

தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்கு சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றியமைத்தாக வேண்டும். ஆனால், சமூதாயப் புரட்சியை சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும். மக்கள் உள்ளத்திலே, இன்றைய சமூதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி, பிரத்தியட்ச (உண்மை) நிலையை மக்களுக்கு உணர்த்தினால் போதும். நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமூதாய அமைப்பை, இன்றைய சர்க்கார் அமைப்பு இருக்கும் போதே மாற்றிவிட முடியும் மக்கள் பகுத்தறிவு பெறும்படிச் செய்வதன் மூலமாக. 30 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம், திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவம் திமிரும்?

30 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள்? அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படும்படியாகச் செய்ததன் காரணமாக, நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

முதலில் இந்தக் காரியத்தைச் செய்வோம். பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட முடியும். பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவாரமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போமானால், தானாகவே பொருளாதார உரிமை வந்துவிடும். ஆகவே, இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.

இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே எடுத்துக் கொள்ளுங்களேன்: யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன் பார்ப்பான்; அதற்கடுத்தபடியாக பணக்காரன், நிலமுடையோன் சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். அதற்கடுத்தபடி, தூக்கியவன் தர்பார் என்பது போல இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால், சூத்திரனிலே தாழ்த்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே இல்லை. இப்போது சொல்லுங்கள்: பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடு, உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா, இல்லையா?

இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி, இந்த அமைப்பின் நிலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம். இன்னம் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில், இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்.

27.4.1953 அன்று, மன்னார்குடி வல்லூரில் ஆற்றிய உரை. "விடுதலை' 5.5.1953
1 Response
  1. சாதி ஒழிப்பு, மத எதிர்ப்பு முறையில் நாம் இருவருக்கும் ஒத்த சிந்தனை இருப்பதில் மகிழ்ச்சி, ஆனால் அதற்கு தயவுச்ய்து பெரியாரை முன் உதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள்!

    பெரியாரின் எதிர்ப்புகள் முழுக்க முழுக்க பார்பனிய எதிர்பாகவே இருந்தது, ஒருவேளை அன்றைய சூழ்நிலையில் அது முக்கியமானதாக பட்டிருக்கலாம், ஆகினும் கீழவெண்மணியில் நாயுடு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூலி பிரச்சனைக்காக தலித் மக்களை உயிரோடு எரித்து கொண்ர வழக்கில் பெரியாரின் நிலைப்பாடு நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை!

    இது சாதிய ரீதியான வன்முறை அல்ல, கூபி பிரச்சனை என்று ஒதுங்கி கொண்டார்! கூலி கொடுப்பவன் ஆண்டானாகவும், கூலி வாங்குவ்பவன் அடிமையாகவும் இருந்த காலட்க்ஹ்தில் உள் நுழந்த பார்பனியர்கள் ஏற்படுத்திவிடது தான் சாதிய முறை, ஆக அடிப்படையில் கூலி வாங்குபவனுக்கு தான் நாம் குரல் கொடுக்க வேண்டும்!

    இது தான் என்னுடய ப்ளாக்

    உங்களுடய பக்க கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்!