மன்னை முத்துக்குமார்

அடிமைகளாக வாழ விரும்புவோர் இதைப் படிக்க வேண்டியதில்லை

மதமாற்றம் என்பது குழந்தை விளையாட்டல்ல. இது, பொழுது போக்கிற்கான செய்தியும் அல்ல. ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமானதாக்குவது என்பது பற்றி இது பேசுகிறது. கப்பலைச் செலுத்துவதற்கு ஒரு மாலுமி எப்படி எல்லாவற்றையும் தயார் செய்வாரோ, அதேபோல், நாமும் மதமாற்றத்திற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களில் எத்தனை பேர் இந்து மதத்திலிருந்து வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று தெரிந்தால்தான், மதமாற்றத்திற்கான தயாரிப்புகளை நான் மேற்கொள்ள முடியும். மதமாற்றத்தைப் பற்றி புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், பாமர மக்கள் மதமாற்றம் குறித்து அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.


மதமாற்றத்தை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம். இது, சமூகம் மற்றும் மதம் சம்பந்தப்பட்டது; பொருளியல் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது. இதை எப்படிப் புரிந்து கொண்டாலும்,

தீண்டாமையின் தன்மையையும் அது எப்படித் தோன்றியது என்பதையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதைப் புரிந்து கொள்ளா விட்டால், நான் அறிவித்திருக்கும் மதமாற்றத்தின் உண்மையான பொருளை நீங்கள் உணர முடியாமல் போய்விடும்.

தீண்டாமையைப் பற்றியும் அது நடைமுறை வாழ்க்கையில் எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், உங்கள் மீது இழைக்கப்படும் வன்கொடுமைகளை மீண்டும் நினைத்துப் பாருங்கள். ஆனால், உங்களில் ஒரு சிலரே, இதுபோன்ற வன்கொடுமைகள் எல்லாம் ஏன் நடக்கிறது என்று சிந்தித்திருப்பீர்கள். சாதி இந்துக்களின் கொடுங்கோன்மைக்கு மூல காரணமாக இருப்பது எது? என்னைப் பொறுத்தவரை, இதை நீங்கள் புரிந்து கொள்வது மிக மிக அவசியம் என்று கருதுகிறேன்.

இது, இரு எதிரிகளுக்கிடையே நடைபெறும் சண்டை அல்ல. தீண்டாமைப் பிரச்சினை என்பது வகுப்புப் போராட்டத்துடன் தொடர்புடையது. இது, சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமாகும். இது, ஒரு மனிதனுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி அல்ல. இது, ஒரு வகுப்பு இன்னொரு வகுப்புக்கு எதிராக இழைக்கும் அநீதியாகும். இந்த வகுப்புப் போராட்டம், சமூக அந்தஸ்துடன் தொடர்புடையது. ஒரு வகுப்பு மற்றொரு வகுப்புடன் எப்படி உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று இப்போராட்டம் உணர்த்துகிறது. ஒரு வகுப்பு மற்ற வகுப்புடன் சமமான நிலையைக் கோரும் போதுதான் இப்போராட்டம் தொடங்குகிறது.

அவர்களுடைய கோபத்திற்கான காரணத்தைப் புரிந்து கொள்வது மிக எளிது. அவர்களுக்கு சமமாக நீங்கள் நடந்து கொள்வது, அவர்களைப் புண்படுத்துகிறது. தீண்டாமை என்பது குறுகிய அல்லது தற்காலிகமானது அல்ல. இது, நிரந்தரமான ஒன்று. இது, தலைமுறை தலைமுறையாக இருக்கக்கூடியது; ஒரு மனிதன் இறந்த பிறகும் தீண்டாமை தொடருகிறது. ஏனெனில், சமூகத்தின் அடிநிலையில் உங்களை வைத்திருக்கும் மதமே சாதி இந்துக்களின் நம்பிக்கையின்படி என்றுமே மாற்ற முடியாத ஒன்றாகும்.

காலத்திற்கேற்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதில் மாற்றங்களுக்கு வாய்ப்பே இல்லை. நீங்கள் படிநிலைப்படுத்தப்பட்ட இந்து மதத்தில் கீழ் நிலையில் இருக்கிறீர்கள். இறுதிவரை நீங்கள் அங்கேதான் இருக்க முடியும். இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டம், என்றென்றைக்கும் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் இதன் பொருள். இந்தப் போராட்டத்தை நீங்கள் எப்படி சந்திக்கப் போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.

இது குறித்து நீங்கள் சிந்திக்கவில்லை என்றால் வேறு வழியே இல்லை. சாதி இந்துக்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அடிமைகளாக வாழவிரும்புகிறவர்கள் இப்பிரச்சினை குறித்து எப்போதுமே கவலைப்படுவதில்லை. ஆனால், சுயமரியாதைமிக்க சமத்துவமிக்க வாழ்க்கையை வாழ விரும்புகின்றவர்கள் இது குறித்து சிந்தித்தாக வேண்டும்.

இப்போராட்டத்தை சமாளிப்பது எப்படி? என்னைப் பொருத்தவரை, இக்கேள்விக்கு விடை காண்பது கடினமல்ல. எந்தவொரு போராட்டத்திலும், யாருக்கு வலிமை அதிகம் இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றுவிடுவர் என்பதை இங்கு கூடியிருக்கும் அனைவரும் ஒத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன். வலிமையற்றவர், வெற்றிபெறும் வாய்ப்பை எதிர்ப்பார்த்திருக்க முடியாது. இது அனுபவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இனி இப்போராட்டத்தில் வெற்றிபெற, உங்களுக்குப் போதிய பலம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் ஆற்றிய உரை.