மன்னை முத்துக்குமார்
நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ் உழைக்கும் வர்க்கங்கள் வாழ நேரிடுமாயின், அதைத் தங்கள் நலன்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அந்த வர்க்கங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைய வேண்டுமானால், இரண்டு செயல்களை அது செய்ய வேண்டும் என்பது என் கருத்து. முதலாவதாக, தொழிற்சங்கங்களை அமைப்பதை மட்டுமே இந்தியாவில் தொழிலாளர்களின் இறுதி லட்சியமாக, குறிக்கோளாகக் கொள்வதைக் கைவிட வேண்டும். அரசாங்கம் தொழிலாளர் கைகளுக்கு வருவதைத் தனது லட்சியமாக அது பிரகடனப்படுத்த வேண்டும். இதன் பொருட்டு, ஒரு தொழிலாளர் கட்சியை ஓர் அரசியல் கட்சியாக உருவாக்க வேண்டும். இத்தகையதொரு கட்சி, தொழிற்சங்கங்களையும் தனது அமைப்புக்குள் கொண்டிருக்கும் என்பதில் அய்யமில்லை.


ஆனால், இத்தகைய கட்சி தொழிற்சங்க இயக்கத்தின் குறுகிய கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். ஏனென்றால், பொதுவாக தொழிற்சங்கங்கள் இறுதி நலன்களை விட, உடனடி நலன்களையும், தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தொழிற்சங்கத் தலைவர்களுக்குள்ள உரிமையையும் வலியுறுத்துபவையாகவுமே இருக்கும். மேலும், தொழிலாளர்களின் இந்தக் கட்சி, இந்து மகாசபை அல்லது காங்கிரஸ் போன்ற வகுப்புவாத அல்லது முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். காங்கிரசோ அல்லது இந்து மகாசபையோ, இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடி வருவதாக உரிமை கொண்டாடிவரும் கட்சிகள் என்பதற்காக, அவற்றில் சேர வேண்டிய அவசியமோ அல்லது அக்கட்சிகளின் கூட்டணியினராக இருக்க வேண்டிய கட்டாயமோ தொழிலாளர்களுக்கு இல்லை.

தொழிலாளர்களே தங்களது சொந்த அணிகளைக் கொண்ட ஒரு தனியான அரசியல் அமைப்பாக உருவாகி, இந்த இரு நோக்கங்களுக்காகவும் பாடுபட முடியும். காங்கிரஸ் மற்றும் இந்து மகாசபையின் உடும்புப் பிடிகளிலிருந்து விடுபடுவதன் மூலம் அது இந்தியாவின் விடுதலைக்காக சிறந்த முறையில் போராட முடியும். அதே நேரம், தேசியத்தின் பேரால் தான் ஏமாற்றப்படுவதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். இதை எல்லாம்விட முக்கியமாக, இந்திய அரசியலில் நடைபெற்றுவரும் பகுத்தறிவற்றத் தன்மைகளுக்கு அது முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

காங்கிரஸ் அரசியல் ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதையும் கொண்டுவரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. காங்கிரஸ் அரசியல், பகுத்தறிவுக்கு ஒவ்வாது இருப்பதே இதற்குக் காரணம். அக்கட்சிக்கு சரியான போட்டி இல்லாததாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஒரு தொழிற்கட்சி ஏற்படுமானால், கடந்த இருபதாண்டுகளாக இந்திய அரசியலில் கோலோச்சி வரும் நிலைக்கு அது முடிவு கட்டும். இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது செய்தி : அறிவாற்றல் இல்லையேல் அதிகாரம் இல்லை என்பதாகும்.

இந்தியாவில் ஒரு தொழிற்கட்சி அமைக்கப்படுமானால், ஆட்சிப் பீடத்தில் தன்னை அமர்த்த வேண்டும் என்ற ஒரு கேள்வி எழும் என்பது உறுதி. மற்ற வர்க்கங்களைவிட தொழிலாளர்கள் மோசமாக ஒன்றும் ஆட்சி செய்ய மாட்டார்கள் அல்லது உள்நாட்டு விவகாரங்களிலோ, அயல்நாட்டு விவகாரங்களிலோ அப்படி ஒன்றும் ஓட்டாண்டிகளாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்று நொண்டிச் சமாதானம் கூறுவது இக்கேள்விக்குச் சரியான, முறையான, நேரிய பதிலாக இருக்க முடியாது. மாறாக, தொழிலாளர்கள் சிறப்பாக, திறம்பட ஆட்சி செய்ய முடியும் என்பதைத் திட்டவட்டமாக மெய்ப்பித்தாக வேண்டும்.

அதேவேளை, பிற வர்க்கங்களின் அரசாங்கப் பாணியைவிட தொழிலாளர்களின் அரசாங்கப் பாணி மிகவும் கடினமானது என்பதையும் மறந்துவிடக் கூடாது. தொழிலாளர்களின் அரசாங்கம் வரைமுறையற்ற, கட்டுப்பாடற்ற அரசாங்கமாக இருக்க முடியாது. அது முக்கியமாகவே ஒரு கட்டுப்பாட்டு முறையில் அமைந்த அரசாங்கமாகவே இருக்கும். ஒரு சிறந்த கட்டுப்பாட்டு முறையை உருவாக்குவதற்கு அதிகளவு அறிவாற்றலும், பயிற்சியும் தேவை. இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள், படிப்பின் முக்கியத்துவத்தை உணரத் தவறிவிட்டது கெடுவாய்ப்பானதாகும். இந்தியாவிலுள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் செய்திருப்பதெல்லாம் தொழிலதிபர்கள் மீது எப்படி வன்மையோடு, உக்கிரத்தோடு வசைபாட முடியும் என்பதைக் கற்றுக் கொண்டிருப்பதுதான்.
ஆகவே, இந்தியத் தொழிலாளர் சங்கம் இந்தக் குறைபாட்டை உணர்ந்து கொண்டிருப்பதையும், தொழிலாளர் வர்க்கங்களுக்காக இந்தப் பயிற்சி முகாம்களைத் தொடங்க முன்வந்திருப்பதையும் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆட்சி புரிவதற்கு தொழிலாளர்களைத் தகுதியுடையவர்களாக ஆக்க, இந்தப் பயிற்சி முகாம்கள் சிறந்த சாதனங்களாக விளங்கும். ஒரு தொழிற்கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியத்தை சங்கம் மறந்துவிடாது என்றும் நம்புகிறேன். இது செய்யப்படுமானால், ஆளும் வர்க்கத்தின் நிலைக்குத் தங்களை உயர்த்தியமைக்காக, தொழிலாளர் வர்க்கங்கள் சங்கத்துக்குப் பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கும்.

(அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து)