மன்னை முத்துக்குமார்
"சிந்தனையே அறிவு; அதுவே மனித வாழ்வை உயர்த்தும்

வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க"

என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட தந்தை பெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.

பகுத்தறிவு

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி உயிர் நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ, அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள். மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள். பகுத்தறிவு பெறும்படியான சாதனம், நமக்கு நீண்ட நாளாகவே தடைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு வளர்ச்சி அடைய ஒட்டாமல் தடை செய்து கொண்டே வந்துள்ளார்கள்.

தடைக்கற்கள்

மக்களிடையே பகுத்தறிவைத் தடைப்படுத்த கடவும், மதம்,சாஸ்திரம்,முதலியவைகளைப் புகுத்தி நம்பும்படிச் செய்துவிட்டார்கள். பொதுவாகக் கடவுளைப் புகுத்தியவன், கடவுள் பக்திக்கு முதல் நிபந்தனையாகக் கடவுள் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் ஏற்படுத்தினான். கடவும் பஞ்சேந்திரியங்களுக்கு எட்டமுடியாத வஸ்து, அறிவுக்கு எட்டமுடியாத வஸ்து, பஞ்சேத்திரியம் என்றால் மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த அய்ந்துக்கும் கடவுள் எட்டமாட்டார்; இந்த அய்ந்தும் கொண்டு கடவுளைத் தேடவும் கூடாது என்பதாகும்.

இந்த இந்திரியங்களை எல்லாம் மீறிச் சிந்திக்க மனது என்று ஒன்று உள்ளது. இந்த மனதுக்கும் எட்டாதவர் கடவுள் என்று இத்தனை நிபந்தனைகளையும் போட்டுக் கடவுளைச் சொன்னான். கடவுள் என்றால் அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டும்; எங்கே ஏன் எப்படி என்று கேட்கக் கூடாது என்று கூறிவிட்டார்கள். கடவுள் போலவே மதத்தைம் பற்றியும் என்ன என்று சிந்திக்கக்கூடாது; மதம் எப்போது ஏற்பட்டது - யாரால் ஏற்பட்டது என்ன ஆதாரம் என்று சிந்திக்கக்கூடாது; சிந்தித்தால் மதம் போய்விடும். எனவே, அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

சாஸ்திரம்

கடவும், மதம் போலவே சாஸ்திரத்தைப் பற்றியும் ஆராயக்கூடாது; எவன் பகுத்தறிவு கொண்டு சாஸ்திரங்களை ஆராய்கின்றோனோ அவன் நரகத்திற்கும் போவான் என்றும் எழுதி வைத்துள்ளார்கள். எனவே, பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக்கொள்வது ஆகும். நமது இழிநிலை, முட்டாள்தனம் மாறவேண்டுமானால், நாம் ஒன்றும் கஷ்டப்பட வேண்டியதில்லை. பகுத்தறிவினைக் கொண்டு தாராளமாகப் பல தடவை நன்கு சிந்தித்தால் ஒவ்வொன்றும் தானாகவே நழுவி விடும்.

நாத்திகம் என்றால் ?

நமது கொள்கை பகுத்தறிவு - பகுத்தறிவு என்றால் நாத்திகம் ஆகும்; அறிவு கொண்டு சிந்திப்பதுதான் நாத்திகமாகும். கடவுள் மனதுக்கும், வாக்குக்கும் எட்டாதவர் என்று கூறப்பட்டாலும் - அதுதான் உலகத்தை உண்டாக்கி நம்மை எல்லாம் நடத்துகின்றது; எல்லாவிதமான சர்வ சக்திகளும் உடையது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கடவுள், நம்மைத் தவிர்த்து மற்ற உலகத்திற்கு, ஒன்றுதான். ஆனால், நமக்குத்தான் ஆயிரக்கணக்கில் கடவுள்கள். நம்மைத் தவிர்த்த மற்ற உலககிற்கு கடவுளுக்கு உருவம் இல்லை. நமது கடவுளுக்கோ பல்லாயிரக்கணக்கான உருவங்கள். மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை. நமது நாட்டுக் கடவுளுக்கு மட்டும் மனிதனுக்கு வேண்டியவை எல்லாமுமே வேண்டும்.

மூடநம்பிக்கை

மற்ற நாட்டுக்காரர்கள் கடவுள் - யோக்கியம், நாணயம், ஒழுக்கம் உடையது என்று உண்டாக்கி இருக்கிறார்கள். நமது நாட்டுக் கடவுளுக்கு இந்த ஒழுக்கம், நாணயம் எதுவும் கிடையாது. மனிதரில் கீழ்த்தரமானவனுக்கு என்னென்ன குணங்கள் இருக்குமோ அவைகள் அத்தனையும் கடவுளுக்கு ஏற்றி விட்டிருக்கிறார்கள். இப்படி ஏராளமாகப் பேதங்களும், நடப்புக்கு ஒவ்வாத காரியங்களும், காரியத்தில் கேடான குணங்களும் கடவுளுக்குக் கற்பித்திருக்கின்றார்கள். இவைகளையெல்லாம் நம்புவது தான் மூடநம்பிக்கை. நல்லவண்ணம் சிந்தித்து ஆராய்ந்து ஏற்கின்றதை ஏற்றுக்கொண்டு மற்றதைத் தள்ளுவது தான் பகுத்தறிவு

கடவுள் ஏன் ஒழிய வேண்டும்?

நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால், பகுத்தறிவிற்கு ஏற்ற கடவுள் இருக்கின்றதா என்பதைச் சிந்தித்தும் பார்த்தால் இல்லவே இல்லை. உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்கவேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தாம் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது?

ஒழுங்கான கடவுள் ஏது?

நமக்கு ஒழுக்கமான கடவுளே இல்லையே; சைவ சமயத்தில் கந்தன் - முருகன் - சும்பிரமணியன் என்று ஒரு கடவுள். அவனுக்கும் போட்டியாக வைணவத்தில் ராமன் என்று ஒரு கடவுள். இப்படியாகப் பல கடவுள்கள் கூறப்படுகின்றன. இந்த கந்தனைப்பற்றிய கதையும் அசிங்கம் - ஆபாசமாக இருக்கும்; ராமனைப் பற்றிய கதையும் ரொம்பவும் ஒழுக்கக் கேடாக இருக்கும். காரணம் இந்தக் கதைகள் ரொம்பக் காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்டமையால் பகுத்தறிவைப் பற்றிய கவலையே இல்லை. மக்கள் அறிவுகொண்டு சிந்தித்தல் வேண்டும். அதுவே பகுத்தறிவை வளர்க்கும். பகுத்தறிவிற்குத் தடையாக இருப்பது கடவுள், மூடநம்பிக்கை, சிந்திக்க ஒட்டாத நிலை.

சிந்தனையே அறிவு; அதுவே மனித வாழ்வை உயர்த்தும்.


தந்தை பெரியார் - நூல்:-"உயர் எண்ணங்கள்" பக்கம்:- 3
மன்னை முத்துக்குமார்
பட்டியல் சாதியினரின் கொள்கைகள் உலகையே மறு சீரமைக்கக் கூடியவை.....
அம்பேத்கர் ....

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடும்போது, எல்லோரும் ஒன்றிணைவார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் வெளியேறி, ஒரு வெற்றிடம் ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சமூக, பொருளாதார நிலைமைகளை மறு ஆய்வு செய்யும்போது நிலப்பிரபுக்களும், விவசாயத் தொழிலாளர்களும், முதலாளிகளும், தொழிலாளர்களும் ஒன்றிணைந்து செயல்பட முடியுமா?
சுயராஜ்ஜியம் வந்த மறுகணமே காங்கிரஸ் கட்சி சிதறி விடும். ஆனால், பட்டியல் சாதியினரின் கட்சி என்றென்றும் நீடித்திருக்கும். அது ஒரு நிரந்தரக் கட்சி. அது சில அடிப்படைக் கொள்கைகளோடு இருக்கிறது.

பட்டியல் சாதியினர் ரொட்டிக்காகவும், மீனுக்காகவும் போராடுகின்றனர் என்று கூறுவது கடைந்தெடுத்த முட்டாள்தனம். அவர்கள் இந்த நாடு பின்பற்ற வேண்டிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த கொள்கைகளுக்காகப் போராடுகின்றனர். அவர்களுடைய கொள்கைகள், பட்டியல் சாதியினரின் நலன்கள் என்ற குறுகிய வட்டத்தைக் கடந்து நிற்கின்றன. அவர்களுடைய கொள்கைகள் இந்தியாவை மட்டுமல்ல; அது உலகையே மறு சீரமைக்கக் கூடியவை. பட்டியல் சாதியினரை மேம்படுத்துவதைவிட, இந்தியாவில் வேறு உன்னதமான எந்தப் பணியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியில் எனக்கு பல நண்பர்கள் உள்ளனர். அவர்கள் என்னுடைய அரசியலை விரும்பவில்லை என்றாலும், என் மீது அன்பு கொண்டுள்ளனர். நான் காங்கிரசில் இணைந்து நாட்டின் பரந்துபட்ட நலன்களுக்காக உழைத்தால், ஒரு நாள் நான் காங்கிரஸ் கட்சியின் தலைவராகலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இத்தகைய யோசனைகள் என்னை எப்போதும் கவர்ந்ததில்லை. நான் இந்த வகுப்பினரிடைய பிறந்துள்ளதால், இம்மக்களுக்காக நான் முதலில் எதையாவது செய்தாக வேண்டும் என்று நினைக்கிறேன்.

பட்டியல் சாதியினரின் நலன்களுக்காகப் பாடுபடும் திறமையுள்ள நானோ, மற்றவர்களோ-இந்தப் பணியை கைவிட்டு வேறு பணிக்குச் சென்று விட்டால், இப்பணியைச் செய்ய வேறு எவரும் வரமாட்டார்கள். இந்நிலையில், பட்டியல் சாதியினரின் நிலைமை கடந்த 2000 ஆண்டுகளாக எத்தகைய உருக்குலைந்த நிலையில் இருந்து வந்துள்ளதோ, அதே போலவே அது
தொடரும் என்று தான் நான் கருதுகிறேன். ஆனால் இது ஒரு குறுகிய கருத்துதான். இப்பணியை நான்
மேற்கொண்டதற்கு மற்றொரு காரணம், இப்பணி மிகவும் உயர்வான பணி என்பதுதான்.

இந்துக்களின் செயல்திட்டம் என்ன? காங்கிரசின் செயல்திட்டம் என்ன? தேச சுதந்திரம் என்கிறார்களே, அது என்ன? இந்துக்களின் செயல்திட்டம் என்பது, உறிஞ்சும் வகுப்பினரின் செயல்திட்டம் போன்றது. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் ரத்தத்திலும், பலத்திலும், உழைப்பிலும் இவர்கள் வாழ்கின்றனர். அரசியல் மற்றும் அறக்கோட்பாடுகளை அறிந்தவர்கள், ஒவ்வொரு சமூகத்தின் பொருளாதார, சமூக அமைப்பு-சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையாமல் உலகம் முழு விடுதலை பெறாது என்பதைப் புரிந்து கொள்வர். பட்டியல் சாதியினரின் மேம்பாட்டுக்கு உழைக்காமல் நாம் இந்துக்களின் மேம்பாட்டுக்குப் பாடுபட வேண்டும் என்று இவர்கள் சொல்வார்களா?

நாட்டின் சுதந்திரம் என்ற பணியை எடுத்துக் கொள்ளுங்கள். வலிமை பெற்றவர்கள் எளியவர்களை ஒடுக்குவதற்கான சுதந்திரத்திற்கும், நலிவடைந்தவர்கள் முழு மனிதனாக வளர்வதற்கு வாய்ப்பளிக்கும் சுதந்திரத்திற்கும் இடையில் பெருத்த வேறுபாடு உள்ளது. சுதந்திரம் என்று முட்டாள்தனமாகப் பேசும் இந்த தேச பக்தர்களிடம் நான் கேட்கிறேன், அவர்கள் இந்த சுதந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்? சமூக சுதந்திரம் இல்லாத சூழலில், மனிதர்களின் மனநிலை அப்படியே இருக்கும் நிலையில், ஆங்கிலேயரிடமிருந்து அவர்கள் பெறப் போகும் சுதந்திரம், ஒடுக்கப்பட்ட-அடக்கப்பட்ட மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் எனில், ஒருவர் ஏன் சுதந்திரத்திற்காகப் போராட வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. மாறாக, எமது குறிக்கோளை நீங்கள் பரிசீலித்தால், நாங்கள் எந்தக் கொள்கைக்காகப் போராடுகிறோம் என்று பார்த்தால், எங்கள் நோக்கம் குறுகியது அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

இன்றைய ஜனநாயக அமைப்பில் ஒரு செய்திப் பத்திரிகை என்பது, நல்லதொரு ஆட்சி முறைக்கு அடிப்படைத் தேவையாகும். மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதற்கான ஒரு வழிமுறையே இது. எனவே, ஒப்பிட இயலாத துன்பத்தில் சுழல்கிற பட்டியல் சாதியினரான நாம், இந்த நிலைமைகளைக் களைந்தெறியப் பாடுபடும் போது, தீண்டாமைக்கு ஆட்பட்ட எட்டுக் கோடி மக்களும் அரசியல் விழிப்புணர்வு பெற்றால் ஒழிய-நாம் நமது பணியில் வெற்றி பெற முடியாது. சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் சமூக,பொருளாதார அமைப்புகள் அமைந்தாலொழிய, உலகம் முழு விடுதலை பெற வழியில்லை.


மன்னை முத்துக்குமார்
நாமம் போட்டவன் இழிவானவன்;பட்டை போட்டவன் அசல் மடையன்...

நாங்கள் எதற்காக இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம், பிரச்சாரம் செய்து வருகின்றோம் என்பதை நீங்கள் உணர வேண்டும். இன்றைக்கு சமுதாயத் துறையில் 100க்கு 97 மக்களாக உள்ள நாம் 100க்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்களுக்கு தாசி மக்களாக, அடிமைகளாக அவமானத்தைச் சுமந்து கொண்டு, சூடு சொரணையற்ற மக்களாக உள்ளோம். இன்றைக்கு நாம் நமக்கு அந்நியமான ஆட்சியில் அடிமையாக இருக்கிறோம். நமக்கு அந்நியமான மொழி, கலாச்சாரம், நாகரிகம், உணவு, உடைப் பழக்கம் முதலியவற்றைக் கொண்டவர்களின் ஆட்சியின் கீழ் இருக்கிறோம். இந்த அவமானமும், கொடுமைகளும் போக்கப்பட வேண்டும் என்று நான் தான் பாடுபட்டுக் கொண்டு வருகிறேன்.

நான் கடுமையாகப் பேசுவதாகக் கூறுகிறார்கள். நான் கடுமையாகப் பேசாமல் வேறு என்ன செய்வது? எப்படியாவது அவனுக்கு ரோஷ உணர்ச்சி, மான உணர்ச்சியைத் தூண்டிவிட்டு திருத்த வேண்டும் என்பதுதான் எனது தொண்டுமுறை. பட்டைப் போட்டவனை அசல் மடையன் என்று சொல்கிறேன்; நாமம் போட்டவனைஎல்லாம் பார்ப்பனனின் இழிமக்கள் என்று கூறுகிறேன். ஆதாரம் இல்லாமலா கூறுகிறேன்? இந்த நாட்டு ராஜாக்களின் பெண்டாட்டிகள் எல்லாம் பார்ப்பானிடம் படுத்துப் புரண்டு இருக்கிறார்கள். அப்படிப் போவது புண்ணியமாகக் கருதப்பட்டு இருந்தது.

கேரளத்திலே நம்பூதிரிக்குப் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்வதிலே ஒவ்வொருவரும் பெருமைப்படுகிறானே! நாயருக்குப் பிறந்ததாகக் கூறினால் அவமானம்; நம்பூதிரிக்குப் பிறந்தவர் என்று கூறினால் வெகுமானம். அந்த நிலைமை அங்கு இருக்கிறதே! எப்படி எல்லாம் நம் நிலை இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். நான் கடவுளை கற்பித்தவனை முட்டாள் என்று சொல்லுகிறேன் என்று ஆத்திரப்படுகிறார்கள். கடவுள் இல்லை என்று சொன்னவர்களை உங்கள் சாஸ்திரத்தில் எவ்வளவு வசைபாடி இருக்கிறீர்கள். கடவுள் இல்லை என்று சொல்லுகிறவனின் பெண்டாட்டியை கற்பழிக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறானே வசைபாடியது மட்டுமல்ல கொலையே செய்து இருக்கிறார்களே!

இன்றைய அரசமைப்புச் சட்டத்திலிருந்து உங்கள் இந்து மத ஆதாரங்கள் அனைத்திலும் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பான், முஸ்லிம், கிறித்துவன் இவர்களைத் தவிர்த்து பாக்கி அத்தனைப் பேரும் சூத்திரர்கள் தானே! வெட்கப்பட வேண்டாமா? பார்ப்பான் ‘சர்மா' என்ற பட்டம் வைத்துக் கொள்ளலாம். சூத்திரன் மட்டும் ‘தாசன்' என்ற பட்டத்திற்கே அருகதை உடையவன், தாசன் என்றால் என்ன அர்த்தம்? ‘தாசிபுத்திரன்' என்றல்லவா அர்த்தம்? யாருக்கு ரோஷம் வருகிறது? யாருக்கு வெட்கம் வருகிறது? சொல்லுகிற எங்கள் மீது முட்டாள்தனமாக உங்களுக்குக் கோபம் வருகிறதே தவிர, உண்மையை உணர்ந்து பார்க்கவில்லையே?

சட்டத்திலேயே கூறி விட்டானய்யா, பார்ப்பானைத் தவிர அத்தனை பேரும் தாசிப்புத்திரன் என்று. சட்டத்திலே தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக வரி இருக்கிறது. ஆனால், அதற்கடுத்த வரியிலே என்ன கூறப்பட்டு இருக்கிறது? தீண்டாமை ஒழிக்கப்படுகிறது. ஆனால், மத சம்பந்தப்பட்ட காரியங்களில் மட்டும் தீண்டாமை அனுசரிக்கப்படும் என்றல்லவா எழுதி வைத்து இருக்கிறான். இது எந்த விதத்தில் நியாயம்? வெறுங்கல்லைத் தொட்டுப் பார்ப்பதற்கு ஒரு சாதிக்குதான் உரிமை உண்டென்றால், மற்றவன் கதி என்ன?

இதை எண்ணிப் பார்த்து மனம் புழுங்கிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டேன். மன்னார்குடி கோயிலைத் தேர்ந்தெடுத்து கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைவது என்று ஏற்பாடு செய்தேன். ஏராளமான தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள கையொப்பம் போட்டுக் கொடுத்தார்கள். நம் முதல்வர் கலைஞர் பார்த்தார். அய்யா எதற்காக இந்தப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்? நானே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் செய்கிறேன் என்று புது சட்டத்தையே உருவாக்கிவிட்டார்.

பார்த்தான் பார்ப்பான், சுப்ரீம் கோர்ட்டுக்கு படை எடுத்தான். கலைஞர் சட்டத்தைச் செல்லாது என்று தூக்கிப் போட்டுவிட்டான். நம் நிலை என்ன? பழைய கருப்பன் கருப்பனே என்ற தன்மைதான். நம்நிலைமை இப்படித்தான் நீடிக்க வேண்டுமா? நம் பிறவி இழிவுக்குப் பரிகாரமே கிடையாதா? பார்லிமெண்டைப் பொறுத்தவரை, எதிரிகளின் பலம்தான் அதிகம். அதில் பிரவேசித்து நாம் ஒன்றும் செய்ய முடியாது. எனவே, இந்த ஆட்சியில் இருந்து கொண்டு நம் இழிவை ஒழிக்க முடியாது. பிரிந்துதான் ஆகவேண்டும். பிரிவினை என்று கேட்டால் ஏழாண்டு தண்டனையாம், அனுபவிப்போமே!

சட்டத்தைக் கொளுத்திவிட்டு மூன்று ஆண்டு சிறை அனுபவிக்கவில்லையா? வெளிநாட்டுக்காரன் பார்த்தால் காறித் துப்ப மாட்டானா? நூற்றுக்கு மூன்று பேராக உள்ள கூட்டம் 97 பேர்களை ‘தாசிபுத்திரன்' என்று சொல்கிற அரசியல் சட்டம் இந்தியாவில் இன்னும் இருக்கிறதே என்று வெளிநாட்டுக்காரன் சிரிக்க மாட்டானா?

திருச்சியில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்புப் போராட்ட விளக்கக் கூட்டத்தில் ஆற்றிய உரை
'விடுதலை' 6.12.1973


மன்னை முத்துக்குமார்
இந்தியாவில் ஒருவனுடைய பிறப்பே
அவனை ஆளும் வர்க்கமாக மாற்றுகிறது


காங்கிரஸ், பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், பட்டியலின வகுப்பினருக்குப் பாதுகாப்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்ற பிரச்சினையைத் தீர்மானிப்பதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்பிரச்சினையைத் தீர்மானிக்கும் விஷயம், காங்கிரசின் பிரதிநிதித்துவத் தன்மைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. இந்த முடிவு, தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்க முடியும். இங்கு எழும் கேள்வி இதுதான்: பட்டியலின வகுப்பினர் கோரும் பாதுகாப்புகள் அவர்களுக்குத் தேவைதானா, அவசியம்தானா? காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற காரணத்துக்காக, பட்டியலின வகுப்பினருக்கு எதிராக காங்கிரசை வெளிநாட்டினர் ஆதரிப்பது நியாயமல்ல. பாதுகாப்புகள் தங்களுக்குத் தேவை என்பதை நிரூபிக்குமாறு வெளிநாட்டினர், பட்டியலின வகுப்பினரைக் கேட்டால் அதில் நியாயமிருக்கிறது.

இந்தியாவில் ஆதிக்க வகுப்பு இருந்து வருவதாகக் கூறுவது மட்டும் போதாது. மாறாக, வயதுவந்தோர் வாக்குரிமை சக்திகளுக்குக்கூட அடிபணிந்து போகாத அளவுக்கு தம்மை வலுப்படுத்திக் கொண்டுவிட்ட இழிந்த, வெறுக்கத்தக்க, பழிபாவத்துக்கு அஞ்சாததாக இந்த ஆதிக்க வகுப்பு ஓங்கி வளர்ந்துள்ளது என்பதை மெய்ப்பித்துக் காட்ட வேண்டும் என்று அவர்கள் கோருவதிலும் கூடத் தவறில்லை. இத்தகைய நிலையை அயல் நாட்டவர் மேற்கொள்வது முறையானதே. பட்டியலின வகுப்பு மக்கள் இதனை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.

உண்மையில், உலகின் பிற நாடுகளில் ஆதிக்க வகுப்பினர் வகிக்கும் நிலைக்கு மாறுபட்டதொரு நிலையை, இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர் வகித்து வருகிறார்கள். இதில் எள்ளளவும் அய்யமில்லை. பிற நாடுகளில் ஆதிக்க வகுப்பினருக்கும், மற்றவர்களுக்கும் இடையே நிலவுவது அதிகப் பட்சம் பிரிவினை; இரு சொற்களைப் பிரித்துக் காட்டுவதற்கு "ஹைபன்' என்னும் கோடு போடுகிறோமே அது போன்றது இது. ஆனால், இந்தியாவிலோ, இவ்விரு தரப்பினருக்குமிடையே வானெட்டும் ஒரு தடைச்சுவரே எழுந்து நிற்கிறது. "ஹைபன்' என்பது பிரிவினை மட்டும்தான்; ஆனால், தடுப்பு என்பதோ நலன்களும், உணர்ச்சி ஒருமைப்பாடும் முற்றிலும் துண்டிக்கப்பட்ட ஒன்று.

மற்ற நாடுகளில் ஆதிக்க வர்க்கம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டே வருகிறது. அவர்கள் அந்த வர்க்கத்தில் ஏற்கெனவே இடம் பெறாதவர்கள். ஆனால், அதற்கு இணையாக உச்ச நிலையை அடைந்திருப்பவர்கள்; இப்போது இதில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், இந்தியாவில் உள்ள ஆதிக்க வகுப்பினர், மற்றவர்களுக்கு கதவை ழுவதுமாக மூடிவிட்ட அமைப்பினராவர். அந்த வகுப்புக்குள் பிறக்காத எவரும் அதில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது. ஆதிக்க வகுப்பு எங்கு ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டுமே உரித்தானதாக இருக்கிறதோ, அங்கு பாரம்பரியம், சமூக சித்தாந்தம், சமூகக் கண்ணோட்டம் உடைபடாதவையாகவே இருக்கும். முதலாளிகளுக்கும் அடிமைகளுக்கும், சலுகை பெற்றவர்களுக்கும் சலுகை பெறாதவர்களுக்கும் இடையேயான வேறுபாடு வடிவத்தில் மாறாததாகவும், சாரம்சத்தில் வலிமைமிக்கதாகவும் இருந்து வரும்.

ஆனால், அதேநேரம் ஆதிக்க வகுப்பினர், ஒரு மூடப்பட்ட காப்பிடம் போல் இல்லாமல், அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே சமூக ஒத்துணர்வு எங்கு நிலவுகிறதோ, அங்கு ஆதிக்க வகுப்பினர் பெரிதும் வளைந்து கொடுக்கக் கூடியவர்களாகவும், அவர்களது சித்தாந்தம், குறைந்த அளவு சமூக விரோதப் போக்குடையதாகவும் இருக்கும். இந்த வேறுபாடுகள் பற்றிய உண்மையை உணர்ந்து கொண்ட வெளிநாட்டினர், பிற நாடுகளில் ஆதிக்க வர்க்கத்தினரை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு, வெறும் வயதுவந்தோர் வாக்குரிமையே போதுமானதாக இருப்பதையும் இந்தியாவில் வயதுவந்தோர் வாக்குரிமையால் அத்தகைய பலனை ஏற்படுத்த முடியாமல் போவதையும் காண்பார்கள்.

இதனால் சுதந்திர இந்தியாவை ஜனநாயகத்துக்குப் பெரிதும் பாதுகாப்பானதாக ஆக்கும் ஆர்வத்தில், அரசியலமைப்புச் சட்டத்தில் கூடுதல் பாதுகாப்புகளைக் கோரிவரும் தீண்டத்தகாத மக்களும், இந்தப் பாதுகாப்பை எதிர்த்து வருபவர்களும், சுதந்திர இந்தியாவை ஆதிக்க வகுப்பினர் கைகளில் தாரை வார்த்திட நினைக்கும் காங்கிரசை விடவும் அதிக ஆதரவு பெற வெகுவாகத் தகுதி உடையவர்களாகின்றனர்...

ரத்தினச் சுருக்கமாகக் கூறினால், வகுப்பு சித்தாந்தம், வகுப்பு நலன்கள், வகுப்புப் பிரச்சினைகள், வகுப்பு மோதல்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் இயக்கம் தனக்கு சாவுமணி அடிக்கும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு உணர்ந்துள்ளது. அடிமை வகுப்புகளை திசைதிருப்புவதற்கும், அவற்றை ஏமாற்றுவதற்கும் மிகச் சிறந்த வழி தேசிய உணர்வையும், தேச ஒற்றுமையையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு அறியும். ஆதிக்க வகுப்பினருடைய நலன்களைப் பெரிதும் பயனுள்ள முறையில் பாதுகாப்பதற்கு ஒரே மேடை, காங்கிரஸ் மேடைதான் என்பதையும் அது தெரிந்து வைத்துள்ளது...

'டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 9 பக்கம் : 232



மன்னை முத்துக்குமார்
இந்துக்களாக இருந்து கொண்டு ஒடுக்குமுறையை எதிர்க்க முடியாது

மூன்று பலம் நமக்குத் தெரியும்.

1. மனித ஆற்றல் 2. நிதிபலம் 3. அறிவு வலிமை.

இம்மூன்றில் உங்களிடம் எது இருக்கிறது? மனித ஆற்றலைப் பொருத்தவரை, நீங்கள் சிறுபான்மையினராக இருக்கிறீர்கள் என்பது தெளிவு. பம்பாய் மாகாணத்தில், தீண்டத்தகாதவர்கள் மொத்த மக்கள் தொகையில் எட்டில் ஒரு பாகமே இருக்கின்றனர். அதுவும் அவர்கள் ஒருங்கிணைக்கப்படாமல் உள்ளனர். அவர்களிடையே உள்ள சாதி, அவர்களை ஒருங்கிணைக்க முடியாமல் செய்து விடுகிறது. அவர்கள் ஒரே இடத்தில் வாழ முடியவில்லை. கிராமங்களில் அவர்கள் உதிரிகளாக வாழ்கிறார்கள்.

இது போன்ற சூழ்நிலைகளால், இக்கட்டான தருணங்களில் மிகக் குறைவாக உள்ள மக்கள் ஒரு போராடும் சக்தியாகத் திகழ முடியாது. நிதி பலமும் இதேபோல்தான் இருக்கிறது. மறுக்க முடியாத உண்மை என்னவெனில், உங்களிடம் குறைந்தபட்சமாவது மனித ஆற்றல் உள்ளது; ஆனால், நிதி சற்றும் இல்லை. உங்களிடையே வியாபாரம், தொழில், நிலம் எதுவுமே இல்லை. ஆதிக்க சாதியினர் வீசி எறியும் ரொட்டித் துண்டுகளே உங்களின் வாழ்வியலுக்கான ஆதாரமாகிறது.

உங்களுக்கு உண்ண உணவு இல்லை, உடுத்த உடை இல்லை. பிறகு என்ன நிதி ஆதாரம் உங்களுக்கு இருக்கிறது? நீதிமன்றங்களில் வாதாடி நீதியைப் பெறும் வாய்ப்பும் உங்களுக்கு இல்லை. ஆயிரக்கணக்கான தீண்டத்தகாதவர்கள், தங்கள் மீது இழைக்கப்படும் அவமானங்களை சகித்துக் கொள்பவர்களாகவும் சாதி இந்துக்களின் கொடுங்கோன்மையையும் ஒடுக்கு முறையையும் துளியளவும் எதிர்த்துப் பேச முடியாத நிலையிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனெனில், நீதிமன்றம் செல்வதற்கு ஆகும் செலவுகளை அவர்களால் கொடுக்க முடியாது. அறிவாற்றலைப் பொருத்தவரை, நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. சாதி இந்துக்களின் இழிவையும் கொடுமைகளையும் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாத அளவுக்கு, வன்கொடுமைகளால் ஏற்பட்ட சகிப்புத்தன்மை அவர்களிடையே கிளர்ந்தெழும் போர்க்குணத்தை மழுங்கடித்து விட்டது. தன்னம்பிக்கை, உற்சாகம், இலக்கு முற்றிலுமாக உங்களிடமிருந்து மறைந்து விட்டது. நீங்கள் எல்லாம் ஆதரவற்றோராக, வலிமையிழந்து காணப்படுகின்றீர்கள்.

நான் மேலே விவரித்துள்ளவை சரி என்றால், நீங்கள் என் முடிவை ஏற்க வேண்டியிருக்கும். நீங்கள் உங்கள் சொந்த பலத்தை மட்டுமே நம்பியிருந்தால், இந்துக்களின் கொடுங்கோன்மையை நீங்கள் முறியடிக்க முடியாது. நீங்கள் பலமற்று இருப்பதால்தான் ஒடுக்கப்படுகிறீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இங்கு நீங்கள் மட்டுமே சிறுபான்மை சமூகத்தினர் அல்ல. முஸ்லிம்களும் சிறுபான்மை மக்களே. "மகர்', "மாங்' மக்களைப் போல, முஸ்லிம்களும் குறைந்த அளவிலேயே கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், முஸ்லிம்களின் வீட்டைத் தாக்க எவருக்கும் துணிவு வருவதில்லை. நீங்கள்தான் ஒவ்வொரு முறையும் கொடுங்கோன்மைக்கு ஆட்படுகிறீர்கள்.

ஏன் இந்த நிலை? ஒரு கிராமத்தில் இரண்டே இரண்டு முஸ்லிம் வீடுகள் இருந்தாலும், அவர்களைத் தாக்க எவரும் துணிவதில்லை. ஆனால், உங்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தாலும், மொத்த கிராமமே உங்கள் மீது வன்மையான தாக்குதலைத் தொடுக்கிறதே. என்னைப் பொருத்தவரை, இக்கேள்விக்கு ஒரேயொரு பதில்தான் இருக்கிறது.

இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும், ஒரு கிராமத்தில் இருக்கும் இரண்டு முஸ்லிம் வீடுகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை இந்துக்கள் உணர்ந்திருக்கின்றனர். எனவே, அவர்கள் மீது தாக்குதல் தொடுக்க அவர்களுக்குத் துணிவில்லை. இந்த இரு முஸ்லிம் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் அச்சமற்ற வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். ஏனெனில், இந்துக்கள் அவர்களைத் தாக்கினால், பஞ்சாப் முதல் சென்னைவரை வாழும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் எப்பாடுபட்டாவது தங்களைப் பாதுகாக்க அணிதிரளுவார்கள் என்று உறுதியாக நம்புகின்றனர்.

ஆனால், உங்கள் மீது தாக்குதல் நடத்தினால் உங்களைப் பாதுகாக்க எவரும் முன்வர மாட்டார்கள் என்பதில் தெளிவாக உள்ளனர். தாசில்தாரும் போலிசும் சாதி இந்துக்களாகவே இருக்கின்றனர். இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மக்களுக்கும் இடையே பிரச்சினை என்றால், அவர்கள் தாங்கள் பணி செய்யும் வேலைக்கு நேர்மையாக இருப்பதைவிட, தங்கள் சாதிக்கே விசுவாசமாக இருப்பர். நீங்கள் ஆதரவற்று இருப்பதால்தான், இந்துக்கள் உங்களுக்கு அநீதி இழைக்கின்றனர்; உங்களைக் கொடூரமாகத் தாக்குகின்றனர்.

1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் ஆற்றிய உரை.


மன்னை முத்துக்குமார்

ஆத்மா' என்று ஒன்று இருந்தால் அது என்ன வேலையை செய்கிறது ?


ஆத்மா என்கின்ற விஷயத்தைப் பற்றி யார் என்ன சொல்லி இருந்தாலும், உலகமே என்ன கருத்துக் கொண்டிருந்தாலும் அதை லட்சியம் செய்யாமல், நாம் நம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லுகின்றோம்.

அதாவது, ஆத்மா என்பது ஒரு பொருள் அல்ல. அது சுதந்திரம், அறிவு, உணர்ச்சி ஆகியவைகளை உடையதல்ல என்பதோடு, அது பெரிதும் அர்த்தமற்ற ஒரு வார்த்தை என்றே நமக்கு காணப்படுகிறது. இங்கிலீஷ் – தமிழ் அகராதியில் பார்த்தாலும் ஆத்மா என்பதற்கு இங்கிலீஷில் (Soul) ‘சோல்' என்றும், ‘சோல்' என்றால் அறிவு – யோசனை – ஆசை பிறக்குமிடம், ஊக்கம், உள் சக்தி, மனித வர்க்கம், உயிர் என்ற பொருள்கள் காணப்படுகின்றன.

தமிழ் அகராதிகளிலும் அதுபோலவே ஆத்மா அல்லது ஆன்மா என்றால் காற்று, அறிவு, உடல், உயிர், பிராணன், மூளை, முயற்சி, பிரம்மன், சுபாவம் என்கின்ற பொருள்கள் காணப்படுகின்றன.

இந்த வார்த்தைகளில் இருந்து விளக்கப்பட வேண்டியது ஒரே ஒரு வார்த்தைதான் ஆகும். பிராணன் அல்லது உயிர் என்பதற்குதான் அர்த்தம் விளங்க வேண்டியிருக்கின்றது. மற்ற வார்த்தைகள் எல்லாம் தானே அர்த்தம் புரியும்படியாயிருக்கின்றன. ஆகவே, பிராணன் என்பது என்னவென்று பார்த்தால், அது ஒரு காற்று – பிராண வாயு, இருதயத்தில் இயங்கிக் கொண்டிருப்பது என்பதாகத்தான் அகராதியில் காணப்படுகிறது.

இது இங்ஙனமிருக்க, இப்போது புழக்கத்தில் ஆத்மா என்றால், அது சரீரத்திற்குள் இருக்கும் ஒரு நித்திய வஸ்து என்றும்; அது சூட்சும வஸ்து என்றும்; அதற்குப் பிறப்பு, இறப்பு இல்லை என்றும்;

அது மனிதன் இறந்த பின்பு வெளிப்பட்டு மறுபடியும் சரீரம் எடுப்பது என்றும்; மற்றும் அது சரீரத்தில் இருக்கும்போது செய்த காரியங்களுக்காக அதன் பயனை – சரீரத்தை விட்டுப் பிரிந்து பின்பு கடவுள் மூலம் அனுபவிக்கிறதென்றும்; மற்றும் எத்தனையோ விதமாக அதைப் பற்றிப் பல மதங்களில் பலவிதமாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றதாய் அறிகின்றோம்.

உதாரணம் என்னவென்றால், அது மனிதனுக்குள் இருந்து மனித சரீரத்திற்கு வேறாய் ‘என் சரீரம்' என்று சொல்வதன் மூலம் – சரீரத்திற்கும் வேறுபட்டதென்றும் சொல்லுவது போன்ற ஏதேதோ பிரிவுகள் காட்டி, அந்த ஆத்மா சரீரம் விட்டுப் பிரிந்த பிறகு அடைய வேண்டிய, அடையக்கூடிய பலன் ஆகியவைகளைப் பிரதானமாகக் கருதி அதற்குத் தகுந்தபடி, அதற்காகவே மனிதன் வாழ வேண்டியது அவசியமென்று சொல்லப்பட்டு – அந்த மாதிரி ஆத்மாவுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையே மதங்கள் போதிக்கின்றன என்றும், அதற்காகவே உலகத்தில் மனித கோடிகளுக்கு அவசியமென்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே பவுத்தம், இஸ்லாம், கிறிஸ்து, இந்து ஆகிய மதங்களில் பவுத்தம் தவிர மற்ற முக்கியமான மூன்று மதங்களும் ஏறக்குறைய ஒரே கொள்கையில்தான் ஆத்மாவையும், ஆத்மாவுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் பற்றிய விஷயங்களை வைத்துக் கொண்டிருக்கின்றன.

மனிதன் என்பதின் தன்மை விளக்கம் ‘தான்' ‘நான்', ‘என்' என்கின்ற குறிப்பு உணர்ச்சிகளேயாகும். அக்குறிப்புகளில் ஒரு மனிதன் தன்னை – ‘நான்' என்று சொல்லிக் கொள்ளும்போதும், ‘எனக்கு', ‘என்னுடைய' என்று சொல்லிக் கொள்ளும்போதும் ஏற்படுகின்ற உணர்ச்சி எப்படிப்பட்டது? அது எப்படி உண்டாகிறது? என்பதைக் கவனித்தால், ஆத்மத் தன்மை என்பது தானாகவே விளங்கும்.

அதாவது ஒரு மனிதன் ‘நான்' என்பதில் அந்த மனித சரீரத்தின் எந்தப் பாகம் தனித்து இருந்து நான் என்கின்றது? அல்லது, அந்த உடல் மொத்தமுமா அல்லது சரீரமில்லாமலா? சரீரத்தில் எதுவரை ‘நான்' என்கின்ற உணர்ச்சி இருக்கிறது? சரீரத்திலிருந்து எது போய்விட்டால் ‘நான்' என்பது போய்விடுகின்றது? என்கின்ற கேள்விகளுக்குப் பதில் கிடைத்தால் ஒழிய ‘நான்' என்பது விளங்காது.

இந்த முறையில் நான் என்பதைக் கவனிக்கும் போது என் சரீரம், என் உயிர், என் ஆத்மா,
என் ஆவி, என் ஜீவன், என் மனம், என் அறிவு, என் புத்தி, என் எண்ணம், என் சித்தம், என் கடவுள், என் ஆண்டவன், என் பிராணன், என் பிராணவாயு,

என் சூட்சம சக்தி என்பன போன்ற – அதாவது, மனிதன் அல்லது ஆத்மா அல்லது ஜீவன் என்பவைகளாகிய எது எதை நாம் மனிதனாக, ஆத்மாவாக இருக்கக்கூடும் என்று கருதுகின்றோமோ அவைகளை எல்லாந் தன்னில் இருந்து தனிப்படுத்தி அவைகளோடுகூட ‘என்' என்பதைப் பேசுவதைப் பார்க்கின்றோம். ஆகவே, என் (நான்) வேறு, மேற்கண்ட மற்றவைகள் எல்லாம் வேறு என்பதாக நினைக்கும்படியாக இருக்கின்றது. ஆதலால், இவைகள் எல்லாம் மனிதனுடைய தன்மை உணர்ச்சி ஆகிய ‘நான்' என்பது அல்ல என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.

இந்த நிலையில் மனிதனாகிய நான் என்னும் தன்மை உணர்ச்சி செய்த காரியங்களுக்காக – நான் அல்லாத அதாவது என் ஆத்மா என்பதாகிய ஒரு வஸ்துவோ, ஒரு ஜீவனோ, ஒரு சக்தியோ, ஆகிய சூட்சும ஜீவன் என்பது எப்படி அந்தப் பயனை அனுபவிக்க முடியும்? அனுபவிப்பதுதான் எப்படி நியாயமாகும்? நான் செய்த காரியத்திற்கு ஆத்மாவைத் தண்டிப்பதோ, கண்டிப்பதோ, சன்மானமாகியவைகளைக் கொடுப்பதோ எப்படிக் கடவுளின் நீதியாகும்? என்கின்றதான விஷயம் மிகவும் யோசிக்கத்தக்கதாகும்.

குடி அரசு' கட்டுரை – 21.4.1945
மன்னை முத்துக்குமார்
இந்து சமூகத்தை நான் ஏன் வெறுக்கிறேன்?

டாக்டர் அம்பேத்கர்

இந்துக்களுக்கும் இந்து மதத்துக்கும் நான் பயன்படுத்தும் அளவுகோல் மிகவும் கடுமையானது.

இந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால், இன்றுள்ள நமக்குத் தெரிந்த எல்லா மதங்களும் தோற்றே போகும் என்கிறார் ‘மகாத்மா'. என் அளவுகோலின் தரம் உயர்வானது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அவை உயர்வானவையுõ தாழ்வானவையுõ என்பதல்ல பிரச்சனை. அவை சரியானவையுõ என்பதே.

சமூக நீதியின் அடிப்படையிலான சமூக அளவுகோலைக் கொண்டே மக்களையும் அவர்களின் மதத்தையும் மதிப்பிட முடியும். மக்களின் நன்மைக்கு அவசியமானதே மதம் என்று கொள்ளப்பட்டால், வேறு அளவுகோலைப் பயன்படுத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இந்துக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் நான் பயன்படுத்தும் அளவுகோலே மிகச் சரியானது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். அதைவிட சரியான வேறு எந்த அளவுகோலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

நமக்குத் தெரிந்த எல்லா மதங்களும் என் அளவுகோலின் முன் தோற்றுப் போகலாம் என்ற கருத்து உண்மையாயிருக்கலாம். ஆனால், இந்தக் கருத்து, ‘மகாத்மாவை' இந்துக்களின் தானைத் தலைவன் என்பதாகவும் இந்து மதத்துக்கு ஆதரவாகவும் போய்விடக் கூடாது.

அப்படிப் போனால் அதற்கும், ஒரு பைத்தியக்காரன் மற்ற பைத்தியக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பது அல்லது ஒரு குற்றவாளி மற்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பது என்பதற்கும் வித்தியாசம் இருக்காது. நான் குற்றம் சாட்டும் நிலைமைகள் மீது எனக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புக்கு இந்துக்களும் இந்து மதமுமே காரணம்.

இந்த உலகம் மிகவும் குறைபாடுகள் கொண்ட உலகம். இதில் வாழவிரும்புபவன் அதன் குறைபாடுகளை சகித்துக் கொண்டுதான் வாழ வேண்டும் என்பதை நான் அறிவேன். நான் இருந்து வாழவேண்டிய இந்த சமுதாயத்தின் குறைபாடுகளைச் சகித்துக் கொள்ள நான் தயார். ஆனால், தவறான லட்சியங்களை வளர்க்கும் சமுதாயத்திலோ, சரியான லட்சியங்கள் இருந்தாலும் அதன்படி சமூக வாழ்வை நடத்தாத சமூதாயத்திலோ எனக்கு சம்மதமில்லை.

இந்து மதமும் இந்துக்களும் தவறான லட்சியங்களை நாடுவதாலும் தவறான சமூக வாழ்வை நடத்துவதாலும்தான்
நான் அவர்களை வெறுக்கிறேன். அவர்களின் சமூக நடத்தையிலுள்ள குறைபாடுகள் மீதல்ல என் சண்டை. அதைவிட அடிப்படையானது. அதாவது அவர்களின் லட்சியங்களைப் பற்றியது.

இந்து சமூதாயத்துக்கு ஒரு தார்மீக மறுமலர்ச்சி தேவைப்படுகிறது. இதைத் தள்ளிப் போடுவது அபாயகரமானதாகுமென்று தோன்றுகிறது. இந்த தார்மீக மறுமலர்ச்சியைத் தீர்மானித்துக் கட்டுப்படுத்தயாரால் முடியும் என்பதே கேள்வி. அறிவு மலர்ச்சி பெற்றவர்களும் தம் அறிவு தெளிவால் பிறந்த முடிவையே துணிவுடன் செயல்படுத்தும் நேர்மை கொண்டவர்களுமே மேற்சொன்ன தார்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

இந்த அளவுகோலின்படி பார்த்தால், இன்றுள்ள முன்னணி இந்து தலைவர்கள் இந்தப் பணிக்கு சுத்தமாக லாயக்கற்றவர்கள் என்பது என் கருத்து. அறிவு மறுமலர்ச்சியின் பாலபாடத்தைக்கூட அவர்கள் கற்கவில்லை. அப்படிக் கற்றிருந்தால், பாமரப் பெரும்பான்மையைப் போலவே எளிமையாக அவர்கள் தமக்குத்தாமே மயங்கி நிற்கவும் மாட்டார்கள். மற்றவர்களின் ஆதிகால அறியாமையில் தங்களுக்கு வசதியாக குளிர்காயவும் மாட்டார்கள்.

மாத்யூ அர்னால்டின் வார்த்தைகளில் சொன்னால், இந்துக்கள்
""செத்துப்போன உலகத்துக்கும் இன்னும் பிறக்க சக்தியற்ற உலகத்துக்கும் இடையில் அல்லாடுபவர்கள்''

அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? தங்களின் வழிகாட்டியாக அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள "மகாத்மாவோ சிந்தனையை நிம்புபவர் அல்ல. எனவே, அனுபவ சோதனைக்குத் தாக்குப்பிடிக்கும் உருப்படியான உதவியை அவரால் தர முடியாது.

மக்கள் அறிவாளி வர்க்கத்தை உதவிக்கு எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்த அறிவாளி வர்க்கத்தினரோ நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள்; அல்லது மக்களுக்கு கல்வி தந்து சரியான வழிகாட்டும் அக்கறையற்றவர்களாக இருக்கிறார்கள். உண்மையாகவே நாம் ஒரு மாபெரும் சோக நிகழ்ச்சியின் பார்வையாளர்களாக இருக்கிறோம். இந்த சோகத்தின் முன்னிலையில் "ஓ இந்துக்களே! இதுதான் உங்கள் தலைவர்களின் லட்சணம்'' என்று அங்கலாய்க்க மட்டுமே நம்மால் முடிகிறது.


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 1 பக்கம் : 94 96

மன்னை முத்துக்குமார்
.
சமூக இழிவு நீக்க போராட்டத்தில் தந்தை பெரியார் உரை :

Get this widget | Track details | eSnips Social DNA

.
மன்னை முத்துக்குமார்
.
அவர்தான் பெரியார்...புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்

Get this widget | Track details | eSnips Social DNA

.
மன்னை முத்துக்குமார்
.
நாமெல்லாம் காட்டு மிராண்டிகள் ----அப்படித்தான் இந்துமதம் சொல்லுது...

Get this widget | Track details | eSnips Social DNA

.
மன்னை முத்துக்குமார்
.
தமிழர்கள் - தொட்டதற்கெல்லாம், எடுத்ததற்கெல்லாம் பழமைப்பெருமை பேசுவதென்பது காட்டுமிராண்டித்தனமேயாகும். அதிலும் நமது “பழம்பெரும் இலக்கியம்” என்பவற்றை அதற்கு ஆதாரமாகக் காட்டுவது என்பது அக்காட்டுமிராண்டித் தனத்திற்கு உண்மை நடப்பை ருஜுப்படுத்துவது போலும்.

நமது இலக்கியங்களின் காலம் சுமார் கிபி 500க்கு அல்லது 1000க்கு மேற்பட்ட காலமாக இருக்கலாம் என்பதாக வைத்துக் கொண்டாலும், அவற்றின் கர்த்தாக்கம் சமய சம்பந்தமான பெரியவர்களே தவிர, அறிவு சம்பந்தமான பெரியவர்கள் அறவே கிடையாது.

குறளின் புதுமை ஏது?

அறிவுத்துறைப் பெரியவர்கள் வள்ளுவரை பலர் காட்டலாம். அதற்கு இரண்டாயிரம் ஆண்டு ஆயுள் சொல்லுகிறார்கள். என் கருத்துப்படி அதற்கு 1500 ஆண்டுகளுக்கு மேல் சொல்லுவதற்கு இட மில்லை; என்றாலும், அதிலும் எவ்விதப் புதுமையையும் காணமுடியவில்லை என்பதோடு, தற்கால நிலைமைக்கு அல்லாமல், எதிர்காலத்து வளர்ச்சிக்கு வழி காட்டும் துறை எதுவும் காண முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

காட்டுமிராண்டி ஆரியர்கள்

குறள், ஆரியர் காட்டுமிராண்டித்தனங்களை பல இடங்களில் கண்டித்திருக்கிறது என்பதல்லாமல், குறளாரும் பல காட்டுமிராண்டித் தனத்திற்கு ஆளாகியிருக்கிறார். வேண்டுமானால், தமிழரைவிட ஆரியர் மாபெரும் காட்டுமிராண்டிகளாய் இருக்கிறார்கள்என்பதாகச் சொல்லி ஒரு அளவுக்கு குறளைப் பற்றித் திருப்தி அடையலாம்.

இதில் ஒரு குறிpபிடத்தக்க விஷயம் என்னவென்றால் நமது பழங்கால நிலை; அதாவது கி.பி.க்கு முன்னுள்ள சரித்திரம், நடப்பு, அடையாளம் ஒன்றும் நிச்சயமாய் தெரிவதற்கில்லை. ஆதலால்தான் நம்மை விட ஆரியர்கள் மகா காட்டுமிராண்டிகளாய் இருந்திருக்கிறார்கள் என்று சொல்லுகிறோம். காரணம், அவர்களால் புகுத்தப்பட்ட கடவுள், கடவுள் கதைகள் மற்றும் ஜோசியம், சகுனம், ராசிகள், யாகம், யோகம், தேவர்கள், அசுரர்கள் முதலியவர்கள் விஷயங்களைப் பார்க்கிறபோது ஆரியர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாய் இருந்தார்கள் என்பது நல்லவண்ணம் விளங்குகிறது.

காட்டுக் கற்பனைகள்

நமது புலவர்களும், பக்தர்களும் அந்த ஆரியக் காட்டுமிராண்டிக் கற்பனைகளை அடிப்படையாய்க் கொண்டே “நமது இலக்கியங்” களை உண்டாக்கி இருக்கிறார்கள். ஆதலால், அந்த

இலக்கியங்களைக் கொண்ட நமது பழங்கால நிலை என்பதைக் காட்டுமிராண்டித்தனம் என்கிறேன்.

நமது புலவர்கள் எவ்வளவு பெரிய காட்டுமிராண்டிகள் என்பதற்கு கம்பனையும், இளங்கோவையும் எடுத்துக் கொண்டாலே போதும்; இவர்களதும் மற்றும், பழங்காலம் புலவர்களதும் இலக்கியங்களையும் (நூல்களை) எடுத்துக் கொண்டு, அதன் இலக்கண - கற்பனை அமைப்பு முறை ஆகியவற்றை நீக்கிவிட்டு, அதிலுள்ள கற்பனைக் கதை வடிவங்களை எடுத்துக் கொண்டு பார்ப்போமானால் - அவற்றின் காட்டுமிராண்டித்தனம் எவ்வளவு குறைந்த அறிவுள்ளவர்களுக்கும் நல்லவண்ணம் விளங்கும்.

இந்நிலையில் நம்மை நாம் – பழங்காலப் பெருமை பேசும் காட்டுமிராண்டிகள் என்பதைத் தவிர வேறு சொல்ல என்ன இருக்கிறது.

தமிழர்களான கவிஞர்கள், கட்டுரையாளர்கள், அறிவுரைப் பிரச்சாரம் செய்பவர்கள், எழுத்தாளர்கள், மற்றும் நடிப்புத் துறையில் உள்ளவர்கள் முதலிய யாவரும் தங்கள் கலைகளை மக்களுக்குப் பயன்படும் தன்மையில் அவற்றைக் கையாள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழர்கள் புரட்சிகரமான மாறுதலடைய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

கைதூக்கிவிட ஆள் இல்லை

தமிழர்களை கைதூக்கிவிட இன்று எந்தக் கலையும் எந்தக் கவிஞரும் இல்லை உள்ளவர்கள் எல்லோரும் “பத்தாம் பசலிக்காரர்கள்” என்று சொல்லும்படி பழமையைக் கையாண்டே தங்கள் கலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

தமிழர்களைத் தாழ்த்தியதும், தலைதூக்கவொட்டாமல் அழுத்தியதும், தமிழ் அறிஞர், கலைஞர், கவிஞர், புலவர் முதலியவர்கள் கையாண்ட சமய இலக்கியமும், முன்னோர்களைப் பின்பற்றி வந்த நடப்புகளும், தமிழர்கள் உழைத்து உருவாக்கிய அரசியலுந்தான்.

தமிழன் வளர்ச்சிக்கு, அறிவுக்கு, கலைகளுக்கு, சமயத்திற்கு, அரசியலுக்கு, பார்ப்பான் காட்டிய வழியைத் தவிர ஒரு தமிழன் காட்டிய வழி என்று சொல்ல இன்று என்ன இருக்கிறது? நமது கலைஞர்கள், கவிஞர்கள், புலவர்கள், அரசியலார்கள், பார்ப்பானை குறை மாத்திரம் சொல்லிக் கொண்டு இவன் கலாச்சாரத்தில் மூழ்கி, அவன் காட்டிய வழியில் நடந்து கொண்டு வாழ்கிறவர்களாகத்தான் இருந்துவந்தார்கள்; வருகிறார்கள் என்பதல்லாமல், தமிழர் நலனுக்கு, வளர்ச்சிக்கு, இழிவு நீக்கத்திற்கு என்று யாராவது எந்த அளவுக்காவது பாடுபட்டார்கள் என்று ஒரு விரலையாவது நீட்ட முடிகிறதா?

சமுதாய அளவிற்கு விரியவில்லை

எல்லா தமிழ் உணர்ச்சியாளரும், எம்படிப்பட்ட பார்ப்பன “வெறுப்பாளரும்” தனது நலத்திற்கு வேண்டுமான அளவுதான் வெறுப்பைக் காட்டிக் கொள்ளுகிறார்களே தவிர தமிழர் நலத்திற்கு, தமிழர் சமுதாய நலத்திற்கு என்பதாகக் காட்டிக் கொண்டவர்கள் தமிழர்களில் மிக மிக அரிதாகவே இருந்து வருகிறார்கள்.

தமிழ்ப் பெரியோர்கள், கல்வியாளர்கள், மேதாவிகள், பெரும் பதவியாளர்கள் யாவரும் தமிழர்களின் கேட்டிற்கும், இழிவிற்குமே பார்ப்பனர்களால் கற்பனை செய்து உண்டாக்கப்பட்ட கதைகள், காவியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவைகளில் புகுத்தப்பட்ட கடவுள்கள், கந்தன், சிவன், விஷ்ணு, கணபதி, ராமன், கிருஷ்ணன் முதலியவற்றைக் கும்பிடுபவர்களாகவும், இவர்களது பெண்டு, பிள்ளைகளையும் பின்பற்றி நடப்பவர்களாகவும் இருக்கிறார்களே தவிர, அறிவைப் பற்றியோ, மானத்தைப் பற்றியோ, இன நலத்தைப் பற்றியோ சிந்தித்தவர்கள் என்று சொல்லி ஒருவரையும் குறிப்பிட முடியவில்லையே.

எப்படி முன்னேறுவான்?

எந்த பெரிய மனிதன், அறிஞர், கவிஞர், வித்துவான், மேதாவி என்பவர் யாரானாலும் அவர் “திவசம்” “திதி” முதலிய பார்ப்பனக் காரியங்களைச் செய்பவரும், இவை சம்பந்தமாக நெற்றியில் சாம்பல், செம்மண், சுண்ணாம்பு, பூச்சுப்பட்டை அடித்துக்கொள்பவர்களும், கடவுள் சமயப் பற்றும் உடையவர்களுமாகத்தான் இருக்கிறார்களே ஒழிய இவை எதற்கு? இவற்றில் பலன் என்ன என்று சிந்தித்தவர்கள். சிந்திக்கிறவர்கள் ஒருவரையும் காணமுடியவில்லையே.

இன்றும் தமிழன் சூத்திரனாக இருக்கிறான் என்றால், இருந்துகொண்டு திவசம், திதி செய்து கொண்டு சாம்பல்மண்ணை நெற்றியில் அடித்துக் கொண்டு கோவில் குளங்களுக்குப் போய்க் கொண்டிருக்கிறான் என்றால், தமிழன் எந்தவகையில் முன்னேறத்தக்கவன் என்பது புரியவில்லை. பார்ப்பானைக் கூப்பிட்டு திதி கொடுக்கிற தமிழன் எப்படித் தன்னை சூத்திரன் அல்ல என்று சொல்லிக்கொள்ள முடியும்?

இன்னும் தமிழனுக்கு மானம் - வெட்கம் பகுத்தறிவு வரவில்லையென்றால் மற்ற எந்த நூற்றாண்டில் வரமுடியும்?

தந்தை பெரியார் - நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-30-33



மன்னை முத்துக்குமார்
.
வர்க்கத் திரட்சிக்கு எது தடையாக இருக்கிறது?

பொது உண்மைகளை அலசும்போது, பொருளாதார வல்லுநர்கள் ஓர் எச்சரிக்கையை மேற்கொள்ளுவர். நாம் ஒரு பொருளாதார மனிதனை அடிப்படை உண்மையாக வைத்துக் கொண்டால், பிற புறச் சூழல்களும் சரிசமமாக அமைந்திருக்கின்றன என்னும் கருத்து நிலையிலேயே - அப்படி ஒரு பொருளாதார மனிதனைக் கற்பனை செய்து கொள்கிறோம் என்றுதான் - அவர்கள் எச்சரிக்கை வரையறையுடன் தமது ஆய்வுகளையும், முடிவுகளையும் வெளியிடுவர். ஆனால், தொழிலாளர் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள் பயன்படுத்தும் பிற புறச்சூழல்களின் சாதக நிலையை அறவே மறந்து விடுகின்றனர். அய்ரோப்பாவில்கூட, மார்க்ஸ் சொன்னது சரியாக இருந்தது என்று சொல்வதற்கில்லை.

"ஜெர்மனியில் ஓர் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மனிதன் இருக்கிறான். அதே போல் பிரான்சில் சுரண்டப்பட்டு, அழிக்கப்பட்ட ஒரு கைவினைஞன் இருக்கிறான். இரு நாட்டு ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மனிதர்களும் - ஓர் இனம், ஒரு கொள்கை, ஒரு கடந்த காலம், ஒரு நிகழ்காலம், ஓர் எதிர்காலம் என்பதற்குச் சொந்தக்காரர்கள்தான்; அவர்கள் ஒன்று சேர வேண்டும்'' என்று மார்க்ஸ் காலத்தில் அறைகூவல் விடப்பட்டது.
ஆனால், உண்மையில் ஜெர்மனியில் உள்ள ஏழை - ஒடுக்கப்பட்ட மனிதனும், பிரான்சில் சுரண்டப்பட்டு வாழ்வே சிதைந்து போன கைவினைஞனும் இணைந்து நிற்கிறார்களா? நூறு ஆண்டுகள் கடந்த பிறகும் அவர்கள் ஒன்றுபடக் கற்றுக் கொள்ளவில்லை. கடந்த உலகப் போரில் கூட, அவர்கள் எதிரெதிர் அணியில் நின்று மூர்க்கத்துடன் போரிட்டனர். இந்தியாவுக்கும் அது பொருந்தும். இந்தியாவிலும் அத்தகைய ஒற்றுமை ஏற்படவேயில்லை.

பணக்கார வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற தெளிவான பிரிவினை - இந்தியாவில் ஏற்படவே இல்லை. எல்லா தொழிலாளர்களும் ஒரே வர்க்கம் என்பது ஒரு லட்சியம். அது அடையப்பட வேண்டிய லட்சியமே ஒழிய, அதுவே இன்றைய உண்மையான சூழல் என்று முடிவு செய்து கொள்வது தவறு. இந்நிலையில் தொழிலாளர் அணிகளை எப்படி திரட்ட முடியும்? தொழிலாளர்களிடையே எப்படி ஒற்றுமையைக் கொண்டு வர முடியும்? ஒரு பிரிவுத் தொழிலாளர்கள், இன்னொரு பிரிவுத் தொழிலாளர்களை நசுக்குவதைத் தடுப்பதன் மூலம்தான் - அவர்களிடையே ஒற்றுமையை உருவாக்க இயலும். ஒடுக்கப்பட்ட பிரிவுகள் அமைப்பு ரீதியாகத் திரள்வதைத் தடுப்பதன் மூலம் அது முடியாது. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் பிரிவினரைத் தடுப்பதன் மூலம் அத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது.

இனம், மதம் ஆகிய பின்னணியில் பகைமை கொள்ளுவதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து களைவதுதான் ஒற்றுமையைக் கொண்டு வருவதற்கான ஒரே வழி. ஒரு தொழிலாளி மற்ற தொழிலாளர்களுக்குத் தர விரும்பாத உரிமைகளை, அவன் மட்டும் பெற வேண்டும் என்பது தவறான சிந்தனை என்பது, அவனுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். தொழிலாளர்களிடையே ஒற்றுமையைக் கொண்டு வர சிறந்த வழி - தங்களுக்கிடையே சமூக வேறுபாடுகளைக் கடைப்பிடிக்கும் போக்கு, தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையைச் சிதைத்து விடும் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதுதான். வேறு வார்த்தைகளில் சொன்னால், சமத்துவமின்மை என்னும் குணாம்சத்தை அதாவது பார்ப்பனியத்தைத் தொழிலாளர் மத்தியிலிருந்து வேரோடு களைந்தெறிய வேண்டும். இத்தகைய முயற்சியில் இறங்கிய தொழிலாளர் தலைவர்கள் யார்? முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர் தலைவர்கள் ஆவேசமாகப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், பார்ப்பனியத்திற்கு எதிராக தொழிலாளர்களிடையே எவருமே பேசியதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் அவர்கள் சாதிக்கும் மவுனம் வெளிப்படையாகத் தெரிகிறது.

ஒரு வேளை தொழிலாளர் அமைப்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றுக்கும் - பார்ப்பனியத்துக்கும் தொடர்பே இல்லையென்று அவர்கள் நினைக்கிறார்களா? அல்லது தொழிலாளர்கள் சிதறிக் கிடப்பதற்கு பார்ப்பனியம் பெருமளவு காரணமாக இருக்கிறது என்பது, இன்னும் அவர்களுக்குத் தெரியவே இல்லையா? ஒருவேளை இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தால் தொழிலாளர் உணர்வுகளைப் புண்படுத்தி விடக் கூடாது; அப்போதுதான் நாம் தலைமைப் பொறுப்பில் நீடிக்க முடியும் என்று நம்புகிறார்களா? இப்படித் தொழிலாளர் வர்க்கம் சிதறுண்டு கிடப்பதற்கு அடிப்படைக் காரணம் பார்ப்பனியமே என்பதை ஏற்றுக் கொண்டால், அந்தப் பார்ப்பனியப் போக்கு தொழிலாளர்களிடையே நிலவுவதையும் விளக்கியே ஆக வேண்டும். இந்தத் தொற்று நோயை அலட்சியம் செய்வதாலோ, அதைப் பற்றி மவுனம் சாதிப்பதாலோ - அதை ஒழித்துவிட முடியாது. இந்தப் பார்ப்பனியப் போக்கைத் தேடிக் கண்டறிந்து, தோண்டித் துருவி ஆராய்ந்து அடியோடு கில்லி எறிய வேண்டும். அப்போதுதான் தொழிலாளர் ஒற்றுமை சாத்தியப்படும்.


(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்: 179)




மன்னை முத்துக்குமார்
புத்தரின் அகிம்சை ஆக்கப்பூர்வமான வன்முறையே ........

நாம் வழிவகைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். யாருடைய வழிவகைகள் மேலானவை, நீண்டகாலம் நிலைத்துப் பயன்தருபவை என்று பார்க்க வேண்டும். எப்படி இருப்பினும், இரு தரப்பிலும் சில தவறான புரிதல்கள் உள்ளன. இதைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். வன்முறையை எடுத்துக் கொள்ளுங்கள். பலருக்கு வன்முறையைப் பற்றிய நினைப்பே நடுக்கத்தைத் தருகிறது. ஆனால், இது வெறும் உணர்ச்சியே. வன்முறையை முற்றிலுமாகக் கை விட்டுவிட முடியாது. பொதுவுடைமையைக் கடைப்பிடிக்காத நாடுகளிலும், கொலை செய்தவன் தூக்கிலிடப்படுகிறான். தூக்கிலிடுவது வன்முறை ஆகாதா? பொதுவுடைமை அற்ற நாடுகள், பொதுவுடைமை அற்ற பிற நாடுகள் மீது போர் தொடுக்கின்றன. பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள். இது வன்முறை ஆகாதா?

ஒரு கொலைகாரன், ஒரு குடிமகனைக் கொன்றான் என்பதற்காக அவனைக் கொல்லலாம் என்றால், போரில் ஒரு படை வீரன் பகை நாட்டைச் சேர்ந்தவன் என்பதற்காக இன்னொருவனைக் கொல்லலாம் என்றால், உடைமைகள் தனி ஒருவனுக்குச் சொந்தமாயிருக்கும் காரணத்தால் பிற மனிதர்கள் துன்பத்துக்குள்ளாகிறார்கள் என்றால், அந்த உடைமைகளின் சொந்தக்காரனை ஏன் கொல்லக் கூடாது? உடைமைகளின் சொந்தக்காரனுக்கு ஏன் விலக்களிக்க வேண்டும்? தனியுடைமை ஏன் புனிதமானதாகக் கருதப்பட வேண்டும் என்பதற்குக் காரணமே இல்லை.

புத்தர் வன்முறையை எதிர்த்தார். ஆனால், அவர் நீதியை ஆதரித்தார்; நீதியை நிலைநாட்ட வன்முறையைப் பயன்படுத்துவதை அவர் அனுமதித்தார். அவருக்கும் வைசாலியின் படைத் தலைவரான சிம்ம சேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் இதை விளக்குகிறது. புத்தர் அகிம்சையை அறிவுறுத்துகிறார் என்று கேள்விப்பட்ட சிம்மசேனா அவரிடம் சென்று கேட்டார்:

"பகவானே, நீங்கள் அகிம்சையை அறிவுறுத்துகிறீர்கள். அப்படியெனில், குற்றம் செய்த ஒருவனை தண்டிக்காமல் விட்டுவிட வேண்டுமா? நாங்கள் எங்களுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் செல்வங்களைக் காப்பாற்றுவதற்குப் போர் செய்யக் கூடாது என்று சொல்கிறீர்களா? அகிம்சையின் பெயரால் நாங்கள் குற்றவாளிகளிடம் துன்புற வேண்டுமா? ததாகதரே, நீங்கள் உண்மையின் நலனுக்கும் நீதியின் நலனுக்கும் வேண்டியதான போராயிருந்தால் கூட, அறவே தடை செய்கிறீர்களா?''

புத்தர் பதிலளித்தார்: "என் அறிவுறையை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். குற்றம் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும்; குற்றமற்றவன் விடுவிக்கப்பட வேண்டும். குற்றம் செய்தவனைத் தண்டிப்பது நீதிபதியின் தவறு அல்ல. தண்டனை விதிக்கும் நீதிபதி சட்டத்தைத்தான் செயல்படுத்துகிறார். அவர் அகிம்சையை மீறிவிட்டதாகக் குற்றம் கூற முடியாது. நியாயமான அமைதியைப் பாதுகாப்பதற்கான எல்லா வழிகளும் தோல்வியடைந்து போனால், போர் தொடங்குகிறவன் மீதுதான் இம்சையின் பொறுப்பு சாரும். தீய சக்திகளுக்கு ஒரு போதும் ஒருவன் பணியக் கூடாது. போர் இருக்கலாம். ஆனால், அது சுயநல நோக்கங்களுக்காக இருக்கக் கூடாது.''

வன்முறைக்கு எதிராகப் பேராசிரியர் ஜான் திவே கூறுவது போன்ற வேறு வாதங்களும் இருக்கின்றன. குறிக்கோள் நல்லதானால், எந்த வழிவகையும் நியாயம்தான் என்பது அறநெறியைத் தலைகீழாக மாற்றும் கொள்கை. இப்படி சொல்கிறவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் பேராசிரியர் திவே சரியாகவே கேட்கிறார்: குறிக்கோளைத் தவிர வேறு எது வழிவகையை நியாயப்படுத்த முடியும். குறிக்கோள்தான் வழிவகையை நியாயப்படுத்துகிறது என்கிறார்.

குறிக்கோள்தான் வழிவகையை நியாயப்படுத்துகிறது என்பதை புத்தர் ஒப்புக்கொண்டிருக்கக்கூடும். வேறு எது நியாயப்படுத்தக்கூடும்? குறிக்கோளின் நலனை முன்னிட்டு வன்முறை நியாயப்படுத்தப்பட்டால், அந்தக் குறிக்கோளை அடைவதற்கு வன்முறையைக் கையாள்வது சட்டபூர்வமான வழியேயாகும் என்று அவர் கூறியிருப்பார். வன்முறைதான் ஒரே வழியாயிருந்தால் உடைமையாளர்களுக்கு அவர் வன்முறையிலிருந்து நிச்சயமாக விலக்களித்திருக்க மாட்டார்.

ஆனால், குறிக்கோளை அடைவதற்கு அவரது வழிவகைகள் வேறு விதமானவை என்பதை நாம் காணப்போகிறோம். வன்முறை என்பது என்ன என பேராசிரியர் திவே சுட்டிக்காட்டியிருக்கிறார். "ஆக்கரீதியான நோக்கங்களுக்கு பலத்தைப் பயன்படுத்துவது அவசியமானாலும், பலத்தை ஒரு சக்தியாகப் பயன்படுத்துவதற்கும், அதை வன்முறையாகப் பயன்படுத்துவதற்கும் இடையே ஒரு வேறுபாடு இருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.''

புத்தரின் அகிம்சை, ஜைன மதத்தை நிறுவிய மகாவீரரின் அகிம்சையைப் போல அவ்வளவு முழுமையானது அல்ல. அவர் பலத்தைச் சக்தியாகப் பயன்படுத்துவதை மட்டுமே அனுமதித்திருப்பார். பொதுவுடைமைவாதிகளின் அகிம்சையைப் போல அவ்வளவு முழுமையானது அல்ல. பொதுவுடைமைவாதிகள் அகிம்சையை முற்றான ஒரு தத்துவமாகப் பேசுகிறார்கள். ஆனால், புத்தர் இதற்கு முற்றிலும் முரணான கருத்தைக் கொண்டிருந்தார்.

‘பாபாசாகேப் டாக்டர் அம்போத்கர் ஆங்கில நூல் தொகுப்பு': 3 பக்கம்: 450