.
வர்க்கத் திரட்சிக்கு எது தடையாக இருக்கிறது?
பொது உண்மைகளை அலசும்போது, பொருளாதார வல்லுநர்கள் ஓர் எச்சரிக்கையை மேற்கொள்ளுவர். நாம் ஒரு பொருளாதார மனிதனை அடிப்படை உண்மையாக வைத்துக் கொண்டால், பிற புறச் சூழல்களும் சரிசமமாக அமைந்திருக்கின்றன என்னும் கருத்து நிலையிலேயே - அப்படி ஒரு பொருளாதார மனிதனைக் கற்பனை செய்து கொள்கிறோம் என்றுதான் - அவர்கள் எச்சரிக்கை வரையறையுடன் தமது ஆய்வுகளையும், முடிவுகளையும் வெளியிடுவர். ஆனால், தொழிலாளர் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள் பயன்படுத்தும் பிற புறச்சூழல்களின் சாதக நிலையை அறவே மறந்து விடுகின்றனர். அய்ரோப்பாவில்கூட, மார்க்ஸ் சொன்னது சரியாக இருந்தது என்று சொல்வதற்கில்லை.
"ஜெர்மனியில் ஓர் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மனிதன் இருக்கிறான். அதே போல் பிரான்சில் சுரண்டப்பட்டு, அழிக்கப்பட்ட ஒரு கைவினைஞன் இருக்கிறான். இரு நாட்டு ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மனிதர்களும் - ஓர் இனம், ஒரு கொள்கை, ஒரு கடந்த காலம், ஒரு நிகழ்காலம், ஓர் எதிர்காலம் என்பதற்குச் சொந்தக்காரர்கள்தான்; அவர்கள் ஒன்று சேர வேண்டும்'' என்று மார்க்ஸ் காலத்தில் அறைகூவல் விடப்பட்டது.
ஆனால், உண்மையில் ஜெர்மனியில் உள்ள ஏழை - ஒடுக்கப்பட்ட மனிதனும், பிரான்சில் சுரண்டப்பட்டு வாழ்வே சிதைந்து போன கைவினைஞனும் இணைந்து நிற்கிறார்களா? நூறு ஆண்டுகள் கடந்த பிறகும் அவர்கள் ஒன்றுபடக் கற்றுக் கொள்ளவில்லை. கடந்த உலகப் போரில் கூட, அவர்கள் எதிரெதிர் அணியில் நின்று மூர்க்கத்துடன் போரிட்டனர். இந்தியாவுக்கும் அது பொருந்தும். இந்தியாவிலும் அத்தகைய ஒற்றுமை ஏற்படவேயில்லை.
பணக்கார வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற தெளிவான பிரிவினை - இந்தியாவில் ஏற்படவே இல்லை. எல்லா தொழிலாளர்களும் ஒரே வர்க்கம் என்பது ஒரு லட்சியம். அது அடையப்பட வேண்டிய லட்சியமே ஒழிய, அதுவே இன்றைய உண்மையான சூழல் என்று முடிவு செய்து கொள்வது தவறு. இந்நிலையில் தொழிலாளர் அணிகளை எப்படி திரட்ட முடியும்? தொழிலாளர்களிடையே எப்படி ஒற்றுமையைக் கொண்டு வர முடியும்? ஒரு பிரிவுத் தொழிலாளர்கள், இன்னொரு பிரிவுத் தொழிலாளர்களை நசுக்குவதைத் தடுப்பதன் மூலம்தான் - அவர்களிடையே ஒற்றுமையை உருவாக்க இயலும். ஒடுக்கப்பட்ட பிரிவுகள் அமைப்பு ரீதியாகத் திரள்வதைத் தடுப்பதன் மூலம் அது முடியாது. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் பிரிவினரைத் தடுப்பதன் மூலம் அத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது.
இனம், மதம் ஆகிய பின்னணியில் பகைமை கொள்ளுவதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து களைவதுதான் ஒற்றுமையைக் கொண்டு வருவதற்கான ஒரே வழி. ஒரு தொழிலாளி மற்ற தொழிலாளர்களுக்குத் தர விரும்பாத உரிமைகளை, அவன் மட்டும் பெற வேண்டும் என்பது தவறான சிந்தனை என்பது, அவனுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். தொழிலாளர்களிடையே ஒற்றுமையைக் கொண்டு வர சிறந்த வழி - தங்களுக்கிடையே சமூக வேறுபாடுகளைக் கடைப்பிடிக்கும் போக்கு, தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையைச் சிதைத்து விடும் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதுதான். வேறு வார்த்தைகளில் சொன்னால், சமத்துவமின்மை என்னும் குணாம்சத்தை அதாவது பார்ப்பனியத்தைத் தொழிலாளர் மத்தியிலிருந்து வேரோடு களைந்தெறிய வேண்டும். இத்தகைய முயற்சியில் இறங்கிய தொழிலாளர் தலைவர்கள் யார்? முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர் தலைவர்கள் ஆவேசமாகப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், பார்ப்பனியத்திற்கு எதிராக தொழிலாளர்களிடையே எவருமே பேசியதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் அவர்கள் சாதிக்கும் மவுனம் வெளிப்படையாகத் தெரிகிறது.
ஒரு வேளை தொழிலாளர் அமைப்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றுக்கும் - பார்ப்பனியத்துக்கும் தொடர்பே இல்லையென்று அவர்கள் நினைக்கிறார்களா? அல்லது தொழிலாளர்கள் சிதறிக் கிடப்பதற்கு பார்ப்பனியம் பெருமளவு காரணமாக இருக்கிறது என்பது, இன்னும் அவர்களுக்குத் தெரியவே இல்லையா? ஒருவேளை இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தால் தொழிலாளர் உணர்வுகளைப் புண்படுத்தி விடக் கூடாது; அப்போதுதான் நாம் தலைமைப் பொறுப்பில் நீடிக்க முடியும் என்று நம்புகிறார்களா? இப்படித் தொழிலாளர் வர்க்கம் சிதறுண்டு கிடப்பதற்கு அடிப்படைக் காரணம் பார்ப்பனியமே என்பதை ஏற்றுக் கொண்டால், அந்தப் பார்ப்பனியப் போக்கு தொழிலாளர்களிடையே நிலவுவதையும் விளக்கியே ஆக வேண்டும். இந்தத் தொற்று நோயை அலட்சியம் செய்வதாலோ, அதைப் பற்றி மவுனம் சாதிப்பதாலோ - அதை ஒழித்துவிட முடியாது. இந்தப் பார்ப்பனியப் போக்கைத் தேடிக் கண்டறிந்து, தோண்டித் துருவி ஆராய்ந்து அடியோடு கில்லி எறிய வேண்டும். அப்போதுதான் தொழிலாளர் ஒற்றுமை சாத்தியப்படும்.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்: 179)