மன்னை முத்துக்குமார்
இந்தியாவில் ஒருவனுடைய பிறப்பே
அவனை ஆளும் வர்க்கமாக மாற்றுகிறது


காங்கிரஸ், பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், பட்டியலின வகுப்பினருக்குப் பாதுகாப்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்ற பிரச்சினையைத் தீர்மானிப்பதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்பிரச்சினையைத் தீர்மானிக்கும் விஷயம், காங்கிரசின் பிரதிநிதித்துவத் தன்மைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. இந்த முடிவு, தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்க முடியும். இங்கு எழும் கேள்வி இதுதான்: பட்டியலின வகுப்பினர் கோரும் பாதுகாப்புகள் அவர்களுக்குத் தேவைதானா, அவசியம்தானா? காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற காரணத்துக்காக, பட்டியலின வகுப்பினருக்கு எதிராக காங்கிரசை வெளிநாட்டினர் ஆதரிப்பது நியாயமல்ல. பாதுகாப்புகள் தங்களுக்குத் தேவை என்பதை நிரூபிக்குமாறு வெளிநாட்டினர், பட்டியலின வகுப்பினரைக் கேட்டால் அதில் நியாயமிருக்கிறது.

இந்தியாவில் ஆதிக்க வகுப்பு இருந்து வருவதாகக் கூறுவது மட்டும் போதாது. மாறாக, வயதுவந்தோர் வாக்குரிமை சக்திகளுக்குக்கூட அடிபணிந்து போகாத அளவுக்கு தம்மை வலுப்படுத்திக் கொண்டுவிட்ட இழிந்த, வெறுக்கத்தக்க, பழிபாவத்துக்கு அஞ்சாததாக இந்த ஆதிக்க வகுப்பு ஓங்கி வளர்ந்துள்ளது என்பதை மெய்ப்பித்துக் காட்ட வேண்டும் என்று அவர்கள் கோருவதிலும் கூடத் தவறில்லை. இத்தகைய நிலையை அயல் நாட்டவர் மேற்கொள்வது முறையானதே. பட்டியலின வகுப்பு மக்கள் இதனை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.

உண்மையில், உலகின் பிற நாடுகளில் ஆதிக்க வகுப்பினர் வகிக்கும் நிலைக்கு மாறுபட்டதொரு நிலையை, இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர் வகித்து வருகிறார்கள். இதில் எள்ளளவும் அய்யமில்லை. பிற நாடுகளில் ஆதிக்க வகுப்பினருக்கும், மற்றவர்களுக்கும் இடையே நிலவுவது அதிகப் பட்சம் பிரிவினை; இரு சொற்களைப் பிரித்துக் காட்டுவதற்கு "ஹைபன்' என்னும் கோடு போடுகிறோமே அது போன்றது இது. ஆனால், இந்தியாவிலோ, இவ்விரு தரப்பினருக்குமிடையே வானெட்டும் ஒரு தடைச்சுவரே எழுந்து நிற்கிறது. "ஹைபன்' என்பது பிரிவினை மட்டும்தான்; ஆனால், தடுப்பு என்பதோ நலன்களும், உணர்ச்சி ஒருமைப்பாடும் முற்றிலும் துண்டிக்கப்பட்ட ஒன்று.

மற்ற நாடுகளில் ஆதிக்க வர்க்கம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டே வருகிறது. அவர்கள் அந்த வர்க்கத்தில் ஏற்கெனவே இடம் பெறாதவர்கள். ஆனால், அதற்கு இணையாக உச்ச நிலையை அடைந்திருப்பவர்கள்; இப்போது இதில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், இந்தியாவில் உள்ள ஆதிக்க வகுப்பினர், மற்றவர்களுக்கு கதவை ழுவதுமாக மூடிவிட்ட அமைப்பினராவர். அந்த வகுப்புக்குள் பிறக்காத எவரும் அதில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது. ஆதிக்க வகுப்பு எங்கு ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டுமே உரித்தானதாக இருக்கிறதோ, அங்கு பாரம்பரியம், சமூக சித்தாந்தம், சமூகக் கண்ணோட்டம் உடைபடாதவையாகவே இருக்கும். முதலாளிகளுக்கும் அடிமைகளுக்கும், சலுகை பெற்றவர்களுக்கும் சலுகை பெறாதவர்களுக்கும் இடையேயான வேறுபாடு வடிவத்தில் மாறாததாகவும், சாரம்சத்தில் வலிமைமிக்கதாகவும் இருந்து வரும்.

ஆனால், அதேநேரம் ஆதிக்க வகுப்பினர், ஒரு மூடப்பட்ட காப்பிடம் போல் இல்லாமல், அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே சமூக ஒத்துணர்வு எங்கு நிலவுகிறதோ, அங்கு ஆதிக்க வகுப்பினர் பெரிதும் வளைந்து கொடுக்கக் கூடியவர்களாகவும், அவர்களது சித்தாந்தம், குறைந்த அளவு சமூக விரோதப் போக்குடையதாகவும் இருக்கும். இந்த வேறுபாடுகள் பற்றிய உண்மையை உணர்ந்து கொண்ட வெளிநாட்டினர், பிற நாடுகளில் ஆதிக்க வர்க்கத்தினரை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு, வெறும் வயதுவந்தோர் வாக்குரிமையே போதுமானதாக இருப்பதையும் இந்தியாவில் வயதுவந்தோர் வாக்குரிமையால் அத்தகைய பலனை ஏற்படுத்த முடியாமல் போவதையும் காண்பார்கள்.

இதனால் சுதந்திர இந்தியாவை ஜனநாயகத்துக்குப் பெரிதும் பாதுகாப்பானதாக ஆக்கும் ஆர்வத்தில், அரசியலமைப்புச் சட்டத்தில் கூடுதல் பாதுகாப்புகளைக் கோரிவரும் தீண்டத்தகாத மக்களும், இந்தப் பாதுகாப்பை எதிர்த்து வருபவர்களும், சுதந்திர இந்தியாவை ஆதிக்க வகுப்பினர் கைகளில் தாரை வார்த்திட நினைக்கும் காங்கிரசை விடவும் அதிக ஆதரவு பெற வெகுவாகத் தகுதி உடையவர்களாகின்றனர்...

ரத்தினச் சுருக்கமாகக் கூறினால், வகுப்பு சித்தாந்தம், வகுப்பு நலன்கள், வகுப்புப் பிரச்சினைகள், வகுப்பு மோதல்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் இயக்கம் தனக்கு சாவுமணி அடிக்கும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு உணர்ந்துள்ளது. அடிமை வகுப்புகளை திசைதிருப்புவதற்கும், அவற்றை ஏமாற்றுவதற்கும் மிகச் சிறந்த வழி தேசிய உணர்வையும், தேச ஒற்றுமையையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு அறியும். ஆதிக்க வகுப்பினருடைய நலன்களைப் பெரிதும் பயனுள்ள முறையில் பாதுகாப்பதற்கு ஒரே மேடை, காங்கிரஸ் மேடைதான் என்பதையும் அது தெரிந்து வைத்துள்ளது...

'டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 9 பக்கம் : 232