புத்தரால் தோற்றுவிக்கப் பெற்றதால் சமயம் பௌத்தம் எனப்பட்டது. உலக வாழ்க்கையை வெறுத்த சித்தார்த்தர் கடுமையான தவம் மேற்கொண்டு புத்தர் ஆனார். ஆசையே துன்பங்களுக்குக் காரணம் என்று அவர் உணர்ந்த உண்மையை உலகத்திற்கு அளித்தார்.
புத்தரான பிறகு ஒருநாள் அவர் அரச மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தபோது சுஜாதை என்பவள் அவருக்குப் பால் உணவு ஒன்றை அளித்தாள். பசுக்களில் சிறந்த பசுவைத் தேர்ந்தெடுத்து, அதன் பாலைக் கறந்து அதைப் பலமுறை பக்குவம் செய்து சுவை சேர்த்து உலகத்தில் எங்கும் கிடைக்காத உணவாக அதை உருவாக்கியிருந்தாள். புத்தர் அதனை அருந்தினார். அவரிடம் உணவின் சுவையைப் பற்றிக் கேட்டார். புத்தர் புலன்களுக்கு அடிமையாகாதவராக இருந்ததனால் அந்த உணவு அவரைப் பெரிதும் கவரவில்லை. எனினும், நன்றாக இருந்தது என்று கூறினார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு புத்தரை சுந்தன் என்ற வேடன் விருந்துக்கு அழைத்தான். வருவதாகப் புத்தரும் வாக்குறுதி கொடுத்துவிட்டார். விருந்தின் போது என்ன உணவு செய்திருக்கிறாய்? என்று கேட்டார். நல்ல பன்றியை நான் உணவாக்கி வைத்திருக்கிறேன் என்று சுந்தன் கூறினான். வாக்குறுதி கொடுத்துவிட்ட புத்தரால் அதனை மீற முடியவில்லை. பற்று இல்லாமல், சுவைக்கு அடிமை ஆகாமல் அந்த உணவை உட்கொண்டார்.
இரவில் வயிற்றுவலியால் புத்தர் துடித்தார். இறப்பு அவரை நெருங்கியது. அப்போது தனக்குப் பக்கத்திலிருந்த ஆனந்தர் என்ற சீடரிடம்
“புத்தருக்கு சுஜாதை அளித்த பாலுணவும், சுந்தன் கொடுத்த இறைச்சி உணவும் ஒன்றுதான். புத்தரின் இறப்புக்கு சுந்தன் அளித்த உணவு காரணமில்லை என்று கூறுங்கள்” என்று கூறினார்.
இவ்வாறு எதையும் ஒரு பற்றில்லாமல் அணுகும் வாழ்க்கை முறையைப் பௌத்தம் வகுத்துத் தந்தது.