.
உத்தப்புரம் -உடைக்க முடியாத சாதி சுவர்...

உத்தப்புரம் செல்லும் வழியெங்கும் ஊருக்கு ஊர் இருக்கும் முத்துராமலிங்கத் தேவர் சிலை, அந்தப் பகுதியில் சாதியின் இருப்பையும் ஆதிக்கத்தையும் புரிய வைக்கின்றன. எத்தனையோ சாதிய வன்கொடுமைகளையும், அடக்குமுறைகளையும் நாள்தோறும் சந்திக்கும் அலுப்பும் சோர்வும் வேதனையும் பொதுவாகவே அங்கு தலித் மக்களிடம் அப்பியிருக்கிறது. பள்ளிக்கூடம், பால்வாடி, தண்ணீர் தொட்டி, கோயில், கிணறு என இரண்டிரண்டாக இருக்கும் எல்லாமும் - வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஜனநாயகத்தைப் பார்த்து சவால் விடுகின்றன. சுவர் தகர்த்து திறக்கப்பட்ட புதுப்பாதையில் காலடி எடுத்து வைக்கும் போது, பிடுங்கப்பட்டு புதிதாக கட்டப்பட்ட பல்லில் படக்கென்று பரவும் கூச்சம் போல் உடல் குறுகுறுக்கிறது. இது என்னுடைய நாடு, ஊர் என்ற உரிமையை விட என்னை அடிமைப்படுத்திய, அடிமைப்படுத்தும் மனிதர்கள் வாழும் மண் என்ற விரக்தியால் உண்டான குறுகுறுப்பு.
சுவரை இடிக்க வேண்டும் என்று வந்தவர்கள், சுவரை இடிக்கக் கூடாதென்று வந்தவர்கள், வேடிக்கை பார்த்து நின்றவர்கள்... எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க... வீடுகளைத் துறந்து மலையடிவாரத்துக்கு விரைந்தனர் ஆதிக்க சாதியினர். ஆம், இம்முறையும் தலித்துகளின் சமத்துவப் போராட்டத்திற்கு எதிராக கோபித்துக் கொண்டு மலையேறியது ஜாதி.
ஜாதி, இந்த சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறதுதான். நாகரிகத்தின் அத்தனைப் பரிமாணங்களையும் வரித்துக் கொண்டு, மெருகேறி மெருகேறி வளர்ந்து வந்திருக்கிறது அது. அதன் அழியாத்தன்மையை கட்டிக் காக்க, இந்த சமூகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் உழைத்திருக்கிறார்கள். தன் மனதிலும், மூளையிலும், அணுக்களிலும் - சாதியற்றவர்களை இங்கு கண்டறிவது அரிது. உணவு வேண்டாம், உடை வேண்டாம், சாதி மட்டும் போதும் என்றிருக்கிறவர்கள் இங்கு அதிகம். உண்மை என்னவென்றால், சாதி இருந்தால் எல்லாமும் தேடி வரும். உத்தப்புரம் அதற்கோர் ‘சிறந்த' எடுத்துக்காட்டு. சாதி ஆதிக்கத்துக்கு சிறு பங்கம் உண்டாவதையும் பொறுக்கமாட்டாமல் மலையடிவாரத்துக்கு இடம் பெயர்ந்த பிள்ளைமார்களுக்கு உண்டாக்கப்பட்ட அனுதாப அலை, இதற்கு முன் வேறெந்த நிகழ்வுக்காவது உண்டாகியிருக்குமா என்பது சந்தேகமே.
ஊடகங்கள் வழக்கம் போல தங்கள் சாதி ஆதரவு நிலைப்பாட்டை பளிச்செனக் காட்டின. அண்மையில் பரபரப்பான ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பிரச்சனைக்காகக்கூட ஒன்று சேராத அரசியல் கட்சிகள் – ‘பாவப்பட்ட' பிள்ளைமார்களுக்கு, கட்சி சார்பில் நிதியுதவி அளித்து உதவியிருக்கின்றன (முற்பகல் செய்யின் பிற்பகல் தேர்தலில் செமத்தியாக விளையும்).
ஏ.சி. சண்முகம், சேதுராமன் மாதிரியான ‘மனிதாபிமானிகள்' மக்கள் வீடுகளை துறந்திருப்பது கண்டு பொறுக்கமாட்டாமல் ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார்கள். இது தவிர, உத்தப்புரத்தைச் சுற்றியிருக்கும் பதினெட்டுப்பட்டி சாதி இந்துக்களும் பணமும், அரிசி பருப்பு மாதிரியான பொருட்களையும் கொடுத்திருக்கிறார்கள். குடும்ப அட்டைகளையும், வாக்காளர் அட்டைகளையும் திருப்பி அளிக்கப் போவதாக மிரட்டியதன் விளைவு, உத்தப்புரம் பிள்ளைமார்களுக்கு நல்ல வசூல். சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குகூட இவ்வளவு விரைவாக, இவ்வளவு அதிகமாக பொருளாதார உதவியும், தார்மீக ஆதரவும் என்றாவது கிடைத்திருக்கிறதா?
நாங்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லை என வலியுறுத்தி குடும்ப அட்டைகளைத் திருப்பி ஒப்படைக்கும் நிலைப்பாட்டை, தலித் மக்களும் பல்வேறு அடக்குமுறைகளின் போது எடுத்திருக்கிறார்கள். ஆனால், அப்போதெல்லாம் என்ன நடந்தது? அவர்களின் குரல்கள் நசுக்கப்பட்டதும், கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதும் கண்கூடு. அப்படியொரு போராட்டம் நடந்ததற்கான எந்த அறிகுறியையும் ஊடகங்கள் கசியவிடாது. உலகக் காதுகளுக்கு கேட்காத தலித் மக்களின் உரிமைக் குரல்கள் இன்னும் சேரிகளில் எதிரொலித்துக் கொண்டுதானிருக்கின்றன. கண்டதேவி தேரோட்டத்தில் வடம் பிடிக்க விடாமல், ஊர் எல்லைக்குள்ளேயே அனுமதிக்கப்படாத தலித் மக்கள் குடும்ப அட்டைகளை, அடையாள அட்டைகளை திருப்பி ஒப்படைக்கும் முழக்கத்தோடுதான் போராட்டம் நடத்தினார்கள். ஒவ்வொரு ஆண்டு ஆனி மாதமும் கேட்கும் தலித் மக்களின் போராட்டக் குரல்களை முழுமையாகப் புறக்கணிக்கும் இந்த ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் இன்று பிள்ளைமார்களுக்காக இவ்வளவு பதற்றமடைந்திருப்பது வேறெதைக் காட்டுகிறது, சாதி ஆதரவைத் தவிர!
சாதி வன்முறையும் அடக்குமுறையும் வன்கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கும் மற்ற ஊர்களுக்கும் உத்தப்புரத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. ஆதிக்க சாதியினர் அடங்கா சினங்கொண்டு தலித் மக்களை ஊரைவிட்டு விரட்டியடிப்பதே எல்லா இடங்களிலும் நடக்கும் வழக்கம். ஆனால் உத்தப்புரத்தில், பிள்ளைமார்கள் தாங்களே விரும்பி ஊரைவிட்டு வெளியேறினார்கள். தலித் மக்கள் அவர்களை மிரட்டவில்லை, மல்லுக்கு நிற்கவில்லை, கெட்ட வார்த்தைகளில் திட்டவில்லை, அவர்கள் உண்ணும் உணவில் மண்ணள்ளிப் போடவில்லை. தங்கள் போக்குவரத்துக்குப் பெரும் இடைஞ்சலாகவும், தங்களை ஊரிலிருந்து துண்டாக்கியுமிருக்கும் அந்த 600 அடி சுவரைத் தகர்க்குமாறு வைத்த கோரிக்கைதான் பிள்ளைமார்களை ஊரைவிட்டே விரட்டியது.
ஊரைச் சுற்றி முழுக்க முழுக்க பிள்ளைமார்களுக்கு நிலங்கள் இருக்கின்றன என்றாலும், தாங்கள் தங்குவதற்கு ஏற்ற இடமாக அவர்கள் தேர்ந்தெடுத்தது, தாழையூத்து மலையடிவாரத்தில் இருக்கும் தலித் மக்களின் விவசாய நிலங்களை. அந்த காட்டுப் பகுதிகளை சீர்படுத்தி விவசாய நிலமாக மாற்ற, தலித் மக்கள் எவ்வளவு உழைத்திருப்பார்கள். ஊருக்குள் போகாமல் அங்கேயே எட்டுக்கு எட்டு அளவில் குடிசை அமைத்து மழையென்றும் வெயிலென்றும் பாராமல் அங்கேயே உண்டு உறங்கிப் பிழைத்து வந்தவர்களை, தங்கள் நிலங்களை விட்டு விரட்டியடித்தனர் பிள்ளைமார்கள். அவர்கள் தங்கியிருந்த எட்டு நாட்களும் தலித் மக்கள் தங்கள் நிலங்களுக்கும் வீட்டிற்கும் திரும்ப முடியவில்லை. பயிர்களை சேதம் செய்து, மரங்களை வெட்டியெறிந்ததோடு ஆடு, மாடுகளை வெட்டிக்கொன்று, காவல் நாய்களை குடிசையோடு எரித்து, பொருட்களை சிதைத்துப் பெரும் சேதத்தை உண்டாக்கினர். பிள்ளைமார்கள் பட்டினி கிடப்பதாகவும் மருத்துவ வசதிகள் இன்றி மலையடிவாரத்தில் சிரமப்படுவதாகவும் பொய்களை வாசித்த ஊடகங்கள், அங்கும் தலித் மக்கள் பாதிக்கப்பட்டது குறித்து கண்டுகொள்ளவே இல்லை.
"மனுசன மனுசன் மதிக்காத இந்த நாட்டுல பொறந்ததுக்காக வெட்கப்படுறேங்க. நியாயப்படி எங்களை ஒதுக்கி வச்சு சுவரக் கட்டுனதுக்காக நாங்க தான் கோவிச்சுட்டுப் போயிருக்கணும். ஆனா எங்கள தேடி யாரு வந்து உதவியிருக்கப் போறாங்க. அப்படியே பட்டினி கெடந்து புள்ள குட்டிகளோட சாக வேண்டியதுதான். பண பலமில்லை. ஆள் பலமுமில்ல. அவுங்க மலையடிவாரத்துக்குப் போனதுக்காக பதினெட்டுப்பட்டிலயும் இருக்கிற அவங்க சாதிக்காரங்க தேடி வந்து கூட நிக்கிறாங்க. நம்ம மக்கள் யாரும் எங்களுக்கு ஆதரவா வரலியே! அவ்வளவு ஏங்க தலித் தலைவருங்ககூட வரல! அப்புறம் என்னத்தப் பண்றது? கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்கதான் வந்து இப்போ எங்களுக்கு தெம்பு குடுத்திருக்காங்க. இல்லேன்னா எங்க நிலைமை இந்தளவுக்குக்கூட தெரியாமப் போயிருக்கும்'' - உத்தப்புரத்தைச் சேர்ந்த ராமரின் ஆதங்கம் இது.
தலித் மக்களிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்; அதனால் அந்த சுவரை இடிக்கக் கூடாது என்று சூளுரைக்கும் ஆதிக்க சாதியினரின் பொய்யை அரசும், ஊடகங்களும், சமூகமும் நம்புகின்றன; அல்லது நம்புவது போல் நடிக்கின்றன. தலித் மக்களிடமிருந்து பாதுகாப்பைப் பெறும் நிலையிலா இந்த சாதிய சமூகத்தில் ஆதிக்க சாதியினர் இருக்கிறார்கள்? ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் சாதியைப் பாதுகாக்க எவ்வளவு சிரத்தையெடுத்துக் கொள்கின்றன. இந்தியாவின் ஏதோவொரு மூலையில் இருக்கும் குக்கிராமம் தொடங்கி நாடாளுமன்றம் வரை சாதியின் சுவடுகள் படிந்திருக்கின்றன. இவ்விரண்டு எல்லைகளையும் இணைக்கும் வலுவான தொடர்பாக சாதி இருக்கிறது. சாதியை எதிர்க்கிறவர்களே எப்போதும் உயிரிழப்புகளையும், பொருட்சேதங்களையும், வன்கொடுமைகளையும் சந்திக்கிறார்கள். இந்நிலையில் உத்தப்புரம் பிள்ளைமார்கள் தங்களுக்கு தலித் மக்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டுமென்று கேட்டிருப்பதில் துளியேனும் நியாயம் இருக்கிறதா?
உத்தப்புரம் தலித் மக்கள் பங்குனி திருவிழாவின் போது, குல தெய்வமான கருப்பசாமியை வழிபடுவதற்கு முன் சாமியாடிப் போய் தங்கள் முன்னோர்கள் நட்டு வளர்த்த அரசமரத்தைச் சுற்றி வருவது வழக்கம். இந்த அரசமரம் பிள்ளைமார்களின் குலதெய்வக் கோயிலுக்கு அருகில் இருப்பதால், தலித் மக்கள் அங்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததோடு, தகராறு செய்தது, கல்லெறிந்து காயப்படுத்துவது போன்ற செயல்களில் பிள்ளைமார்கள் ஈடுபட்டனர். சாமி கும்பிடக் கூட தங்கள் பகுதிப் பக்கமே வரக் கூடாது என்று எதிர்ப்புக் காட்டும் பிள்ளைமார்களின் சாதி ஆதிக்க மனோபாவம், வேறென்ன இடையூறுகளையும் இன்னல்களையும் தலித் மக்களுக்கு கொடுத்திருக்கும் என்பது ஊகிக்கக் கூடியதே! பிற ஊர்களில் உள்ள எல்லா அடக்குமுறைகளும் உத்தப்புரத்திலும் உண்டு.
இங்குள்ள தலித் மக்களுக்கு கொஞ்சம் நிலங்கள் இருந்ததால், அவர்கள் பிள்ளைமார்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போனதும் ஒரு பதற்றம் எப்போதும் நிலவுவதற்கு காரணமாக இருந்தது. இந்தச் சூழலில்தான் 1989இல் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கலவரம் மூண்டது. பிள்ளைமார்கள் சாமியாடிப் போனவர்கள் மேல் கல்லெறிந்து தலையை உடைத்து கலவரத்தைத் தொடங்கி வைத்தனர். அன்றிலிருந்து தினமும் இரவு நேரத்தில் பிரச்சனை உருவாக்க அவர்கள் தவறவில்லை. தங்கள் வன்மத்தை எப்படியாவது காட்ட நினைத்த சாதி இந்துக்கள், நாகமுத்து என்ற இடைத்தரகரை அடித்துப் பொசுக்கி, பிணத்தை மறைத்து விடுகிறார்கள். இந்த செய்தி வெளியே தெரிந்து தலித் மக்கள் உஷாராவதற்கு முன்பாகவே பக்கத்து ஊரான எழுமலையிலிருந்து பேருந்தில் வந்த தலித்துகள் இருவரை வெட்டிக் கொல்கின்றனர். பதற்றமடைந்த தலித் மக்கள் கோபத்தில் ஒரு பிள்ளைமாரை வெட்டுகின்றனர். தலித் மக்கள் வெட்டப்படும்போது வராத போலிஸ், அவர்கள் ஆயுதத்தை எடுத்தவுடன் வந்ததும் வராததுமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று தலித்துகள் கொல்லப்பட்டனர். பரவலாக தலித் மக்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் காவல் நிலையத்திலும் துன்புறுத்தப்பட்டனர்.
கைதானது போக மீதமுள்ள மக்கள் அருகருகே உள்ள வேறு ஊர்களில் தஞ்சமடைய, இங்கு அவர்களின் வாழ்வாதாரமான நிலங்கள் காய்ந்து பொருளாதாரம் நிலை குலைந்தது. ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் மலையடிவாரத்தில் போய் உட்கார்ந்ததற்கு இவ்வளவு உச்சுக் கொட்டும் இந்த சமூகமும், அரசும், ஊடகங்களும் அன்று தலித் மக்கள் எல்லாவற்றையும் துறந்து எங்கு போகிறோமென்ற தகவல் கூட இல்லாமல் ஓடி ஒளிந்தபோது முற்றிலுமாகப் புறக்கணித்தன.
இந்த நிலையில்தான் உத்தப்புர ஒப்பந்தம் கையெழுத்தானது. பதினெட்டுப்பட்டி சாதி இந்துக்களும் எழுமலையில் ஒன்று கூட, உத்தப்புரத்தில் திரை அரங்கில் வலுக்கட்டாயமாக தூக்கி வரப்பட்டார்கள் அய்ந்து தலித் மக்கள். முழுக்க முழுக்க தங்களுக்கு எதிரான அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும்படி தலித் மக்கள் மிரட்டப்பட்டனர். அரச மரத்தின் மீது தலித்துகள் உரிமை கொண்டாடக் கூடாதென்பதும், பொதுப் பாதையில் சாமியாடி வரக் கூடாதென்பதும், அரச மரத்துக்கு தடுப்புச் சுவர் எழுப்புவது, பிள்ளைமார்களின் பிணம் தலித் மக்கள் வசிப்பிடம் வழியாகவே போக வேண்டும் என்பது உள்ளிட்ட பல அடக்குமுறைகளும் ஒப்பந்தமாகின. பஞ்சாயத்தார்களாக வந்த 23 பேர்களில் ஒருவர் மட்டுமே தலித். அதன் பின்னர் தான் தலித் மக்களை விலக்கி வைத்து சுவர் கட்டப்பட்டது. இந்த சுவர் தலித் மக்களின் பயன்பாட்டுக்கான மூன்று பொதுப் பாதைகளை மறித்து எழுப்பப்பட்டது.
தீண்டாமையின் எல்லா வடிவங்களும் உத்தப்புரத்தில் மீண்டும் புத்துயிர் பெற்றன. முழுக்க முழுக்க தலித் மக்களை மிரட்டி எழுதி வாங்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை காட்டித்தான் சுவரை இடிக்க எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள் பிள்ளைமார்கள்.
அரசும் பயந்து தயங்கி சில கற்களை நோகாமல் உருவியெடுத்து ஒரு பாதையை திறந்து விட்டிருக்கிறது. முதலமைச்சரும் ‘பாகுபாடும் வேண்டாம், பாதுகாப்பும் வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார். ஓர் அநீதி நடக்கும் போது நீங்கள் நடுநிலை வகிக்க முற்பட்டால், அது அநீதிக்கு ஆதரவளிப்பதற்கு சமம். இங்கு பெரும்பாலான அறிவுஜீவிகளும், சமூகப் போராளிகளும், பகுத்தறிவாளர்களும் அப்படித்தான் சாதிக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக வலுவான ஓர் அறிக்கையைக் கூட நம்மால் பார்க்க முடியவில்லை. அப்புறம் எங்கிருந்து போராட்டம் வெடிப்பது?
"யார்கிட்டயிருந்து யாருக்குப் பாதுகாப்பு வேண்டுமாம்?! அந்த கலவரம் நடந்தப்போ என் மகனுக்கு 18 வயது. ஆடு மேய்க்கப் போனவன புடுச்சுட்டுப் போயி ஸ்டேசன்ல போட்டு அடிச்சே கைவிரலை உடைச்சானுங்க. கோயிலுக்குள்ள இழுத்துட்டுப் போயி அடிக்கிறது... தெருவுல நடந்து போனா ‘பள்ளக் கழுத வருதுனு' காறி எச்சி துப்புறதுனு எங்கள கொஞ்ச அவமானமா பண்ணியிருக்காங்க? ஊருக்குள்ள எங்கள வரவிடாம பண்ணதோட கொஞ்ச நஞ்ச அடியா வாங்கியிருப்போம். போலிசும் அரசாங்கமும் அவுங்களுக்கு ஆதரவாதான் நடந்துகிட்டாங்க. எங்க பக்கம் தான் உசுரு போச்சு, நாங்கதான் அஞ்சி ஊரவிட்டு ஓடுனோம். ஊர்வழி போக பாதை இல்லாம நாங்கதான் கஷ்டப்படுறோம். இதுல அவங்களுக்கு என்ன பாதுகாப்பு வேணுமாம்?'' - கோபமும் வேதனையுமாக கேட்கிறார் வீரம்மா.
கீழ்வெண்மணி முதல் மேலவளவு வரை... முதுகுளத்தூர் முதல் மாஞ்சோலை வரை... சங்கனாங்குளம் முதல் கொடியங்குளம் வரை..... உஞ்சனை முதல் திண்ணியம் வரை... சென்னகரம்பட்டி முதல் பாப்பாப்பட்டி வரை, காளப்பட்டி முதல் கீரிப்பட்டி வரை, எங்கும் விரவி வேரூன்றியிருப்பதுதான் உத்தப்புரத்தில் சுவராக எழுந்து நிற்கிறது. செங்கல்லும் சிமெண்டும் சேர்த்துக் கட்டப்பட்ட வெறும் சுவராக இருந்திருந்தால், இந்த 19 ஆண்டுகளில் அது தானாகவேனும் இடிந்து விழுந்திருக்கக்கூடும். ஆனால் பதினெட்டுப்பட்டி சாதி இந்துக்களும் சேர்ந்து நட்ட ‘ஜாதி’ என்னும் அடிக்கல்லை அடித்தளமாகக் கொண்டிருப்பதால், இன்று வரை அது நிற்கிறது சிறு பிளவுமின்றி. சுவற்றிலிருந்து ஒரு கல் அகற்றப்பட்டாலும் ஜாதியும் ஆதிக்கமும் அகற்றப்படுவதாகவே சாதி இந்துக்கள் பதறுகின்றனர்.
எடுக்கப்பட்ட 16 உடைகற்களும் இந்தியா என்னும் சாதி ஆதிக்க தேசத்தில் யாரை எங்கெல்லாம் காயப்படுத்தி இருக்கும், அடங்கா கொந்தளிப்புகளை எவர் எவரின் அடிமனதில் தூண்டிவிட்டிருக்கும் என்பது நம் புரிதலுக்கு உட்பட்டதுதான். பத்து மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு இயக்கம், பல்வேறு கிராமங்களில் நடத்திய ஆய்வில் 47 விதமான தீண்டாமையின் வடிவங்களைக் கண்டறிந்தது. உத்தப்புரம் சுவரும் வெளிச்சத்துக்கு வந்தது அதன் தொடர்ச்சியாகவே...
சாதி ஒழிப்புக்கும் தீண்டாமை ஒழிப்புக்கும் உள்ள வேறுபாட்டை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். தீண்டாமையை ஒழித்தாலும் சாதி இருக்கும். காரணம் சாதியின் ஒரு கூறுதான் தீண்டாமை. தேசத் தந்தையாக இருந்தும் காந்தி தலித் மக்களின் எதிரியாக ஆனதற்குக் காரணம், அவர் சாதிக்கு எதிராக எப்பொழுதுமே குரல் கொடுக்காதது தான். அவரும் வசதியாக தீண்டாமையை மட்டுமே எதிர்த்தார். இப்போதும் அந்தத் தவறுதான் நடக்கிறது. பாகுபாடற்ற ஒரு சமூகத்தை உருவாக்க சாதியை வலுவாக நாம் எதிர்த்தாக வேண்டியிருக்கிறது. அந்த விடுதலைப் போராட்டத்தின் முக்கியக் கூறுகளாக பகுத்தறிவுப் பரவலாக்கமும், இந்து மத எதிர்ப்பும் இருக்க வேண்டும்.
தலித் மக்கள் பொதுவாக எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் சகித்துக் கொள்கிறார்கள்தான். காரணம், இதுதான் வழக்கம் விதி என்பதை அவர்களும் நம்புகின்றனர். நம்ப வைக்கப்பட்டிருக்கின்றனர். சுவர் கட்டப்பட்ட இந்த 19 ஆண்டுகளில் ஒரு நாள் கூட இது நம்மை தனிமைப்படுத்தியிருக்கும் அவமானச் சின்னம் என்பதை உத்தப்புரம் தலித் மக்கள் உணராததே இதற்கு சான்று. எதுக்குப் பிரச்சனை என்று காலப்போக்கில் அவர்களும் ஒதுக்கப்பட்டிருப்பதை ஏற்கத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் வாழ்வின் உரிமைகளையும் உணர்வுகளையும் நசுக்கும் எல்லா ஒடுக்குமுறைகளையும் சகித்துக் கொள்ளும் தலித் மக்கள் கிளர்ந்தெழுவது ஒரேயொரு விஷயத்துக்காகத் தான். அது தங்களது வழிபாட்டு உரிமை. சமூக அங்கீகாரம், கல்வி, பொருளாதாரம் இப்படி எதை விடவும் மிக மேன்மையானதாக வழிபாட்டு உரிமையை அவர்கள் மதிக்கிறார்கள்.
மற்றபடி.... இடிக்கப்பட்ட 15 அடி சுவரைப் பற்றிப் பேச நமக்கு எதுவுமில்லை. ஏனென்றால் ‘எங்கே சாதி இந்துக்களுக்கு வலித்துவிடப் போகிறதோ' எனப் பார்த்து பதமாக உடைக்கப்பட்ட சுவர் அது. உடைக்காத சுவர் பற்றியும் பேச நமக்கு எதுவுமில்லை. ஏனெனில் அது இருந்தாலும் இல்லையென்றாலும் தலித் மக்களின் நிலைமை ஒன்றும் மாறிவிடப் போவதில்லை. சாதிப் பெயரால் சாடியபடி எச்சில் துப்புவதும், கல்லெறிவதும், பொதுவென்று ஏதுமில்லாமல் தனித்துவிடப்படுவதும், வன்மமும் கொலைவெறியும் இருக்கத்தான் போகிறது.
உத்தப்புரத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கும் எல்லோரிடமும் நாம் கேட்கும் கேள்வி.... நீங்கள் சுவர் உடைக்கப்படுவதை விரும்புகிறீர்களா? சாதி தகர்த்தெறியப்படுவதை விரும்புகிறீர்களா? ஏனென்றால் சுவரை இடிப்பதில் உங்கள் கவனமும் முயற்சியும் உழைப்பும் இருந்தால் சுவர் உடைந்துவிடும். ஆனால் சாதி அப்படியே இருக்கும். அதே கவனமும் முயற்சியும் உழைப்பும் சாதியை தகர்ப்பதில் இருந்தால் இந்த சுவரென்ன? நாடு முழுக்க ஒவ்வொரு கிராமத்தையும் நகரத்தையும் ஊராகவும் சேரியாகவும் பிரித்து வைத்திருக்கும் - கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ சுவர்கள் தாமாகவே உடையும். அவரவரின் மனசாட்சி இந்த கேள்விக்கான பதிலை கண்டறியட்டும்...
1989 கலவரம் ...............