மன்னை முத்துக்குமார்
.
சமூக, பொருளாதார ஜனநாயகமின்றி அரசியல் ஜனநாயகம் வெற்றி பெறாது..

முதலில், ஒப்பந்த சுதந்திரம் என்னும் கருத்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாழ்படுத்திவிட்டது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்தக் கருத்து சட்டத்தின் ஒப்புதலைப் பெற்றதோடு, சுதந்திரத்தின் பெயரால் அது நிலைநாட்டவும் செய்தது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நாடாளுமன்ற ஜனநாயகம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, ஒப்பந்த சுதந்திரத்தின் விளைவாக ஏற்படக்கூடிய சுதந்திரம் வலுமிக்கவர்கள் வலுவற்றவர்களை ஏமாற்றுவதற்கும், வஞ்சிப்பதற்கும் வாய்ப்பளிப்பது பற்றியும் கவலைப்படவில்லை. இதன் விளைவு என்ன? சுதந்திரத்தின் பாதுகாவலனாக இருக்க வேண்டிய நாடாளுமன்ற ஜனநாயகம் ஏழை எளிய மக்களுக்கு, அடிமட்டத்தில் அமிழ்ந்து கிடக்கும் மக்களுக்கு, சொத்துமை பறிக்கப்பட்ட வர்க்கத்துக்கு மென்மேலும் பொருளாதாரத் தீங்குகளை, சீர்கேடுகளை, துயரங்களை இழைத்து வந்தது

நாடாளுமன்ற ஜனநாயகத்தை சின்னாபின்னப்படுத்திய இரண்டாவது சித்தாந்தம்: சமூக, பொருளாதார ஜனநாயகம் இல்லாமல் அரசியல் ஜனநாயகம் வெற்றி பெற முடியாது என்பதை நாடாளுமன்ற ஜனநாயகம் உணரத் தவறியதாகும். இந்தக் கூற்றை சிலர் மறுக்கக்கூடும். இதை மறுப்பவர்களிடம் ஓர் எதிர்க்கேள்வி கேட்க விரும்புகிறேன். இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயகம் ஏன் அவ்வளவு எளிதில் வீழ்ச்சி அடைந்தது? அதே நேரம், இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அது ஏன் அத்தனை எளிதாகத் தகர்ந்து விடவில்லை? என்னைப் பொறுத்தவரை, இதற்கு ஒரு பதில்தான் இருக்கிறது. முதலில் குறிப்பிட்ட நாடுகளைவிட, இரண்டாவதாகக் குறிப்பிட்ட நாடுகளில் பொருளாதார ஜனநாயகமும், சமூக ஜனநாயகமும் அதிக அளவில் இருந்ததே இதற்குக் காரணமாகும்.

சமூக ஜனநாயகமும், பொருளாதார ஜனநாயகமும் அரசியல் ஜனநாயகத்தின் நரம்புமும் நாளமும் ஆகும். இந்த நரம்பும் நாளமும் உறுதியாக இருந்தால்தான் உடல் வலுமிக்கதாக, ஆரோக்கியமானதாக இருக்கும். ஜனநாயகம் என்பது, சமத்துவத்திற்கு மற்றொரு பெயர். நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்திர தாகத்தை, விழைவைக் கிளர்த்தி விட்டு விட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமத்துவத்திற்கு ஆதரவாக அது ஒரு போதும் தலையசைத்ததுகூட இல்லை. சமத்துவத்தின் முக்கியத்துவத்தை அது உணரத் தவறிவிட்டது. அதுமட்டுமல்ல, சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும்கூட, அது எத்தகைய முயற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதன் விளைவு, சுதந்திரம் சமத்துவத்தை விழுங்கி விட்டது. அதுமட்டுமல்ல, பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் தோன்றவும் வழிவகுத்து விட்டது.

நாடாளுமன்ற ஜனநாயகம் தோல்வியடைந்ததற்குத் தவறான கோட்பாடுகள் ஒரு காரணம் என்ற என் கருத்தை இதுவரை எடுத்துரைத்தேன். ஆனால், அதே நேரம் ஜனநாயகம் தோல்வியடைந்ததற்கு தவறான கோட்பாட்டை விடவும், மோசமான அமைப்பு முறை ஒரு காரணம் என்பதிலும் எனக்கு எள்ளளவும் அய்யமில்லை. எல்லா அரசியல் சமுதாயங்களும் இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்துள்ளன: ஆளும் வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் என்பவையே அவை. இது ஒரு தீமையாகும். இந்தத் தீமை இத்துடன் நிற்கவில்லை. இதிலுள்ள மிகவும் கேடான அம்சம் என்னவென்றால், இந்தப் பிரிவினை ஒரே மாதிரியானதாகவும், படிநிலையில் அமைந்திருப்பதுமாகும். இதனால் ஆளுபவர்கள் எப்போதும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஆளப்படுபவர்கள் ஒருபோதும் ஆளும் வர்க்கமாக மாற முடியாதவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

இதன் காரணமாக, மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வதில்லை; அவர்கள் ஓர் அரசாங்கத்தை அமைத்து, அது தங்களை ஆள்வதற்கு விட்டு விடுகின்றனர். இத்தகைய நிலைமையில், நாடாளுமன்ற ஜனநாயகம் மக்களது அரசாங்கமாகவோ அல்லது மக்களால் நடத்தப்படும் அரசாங்கமாகவோ ஒருபோதும் இருப்பதில்லை. இதன் காரணமாக, அது மக்களுக்கான அரசாங்கமாகவும் எக்காலத்திலும் இருப்பதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகம் ஒரு மக்கள் அரசாங்கத்துக்குரிய அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும், உண்மையில் அது வழிவழியாக ஓர் ஆளப்படும் வர்க்கத்தை வாழையடி வாழையாக ஓர் ஆளும் வர்க்கம் ஆளுகின்ற ஓர் அரசாங்கமாகவே எப்போதும் இருந்து வருகிறது.

அரசியல் வாழ்க்கை இவ்விதம் நேர்மைக் கேடாக, ஒழுக்கக்கேடாக, நெறிபிறழ்வாக உருவாக்கப்பட்டிருப்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் இவ்வாறு படுதோல்வி அடைந்திருப்பதற்குக் காரணமாகும். மேலும், இதன் காரணமாகவே, சுதந்திரம், சொத்துரிமை, நல்வாழ்வு ஆகியவற்றை சாமானிய மனிதனுக்கு உறுதி செய்வதாகத் தான் அளித்திருந்த வாக்குறுதியை, நாடாளுமன்ற ஜனநாயகத்தால் நிறைவேற்ற முடியவில்லை

அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து.