மன்னை முத்துக்குமார்
.
சமூக இழிவு ஒழிந்தால்தான் நிரந்தர உரிமை பெற முடியும்

மக்களிடையே சரிசமத்துவமான உணர்ச்சியும், பொதுவாக அன்பும் நாணயமும் ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் - எது அவசியம் வேண்டுமோ, அதை அடியோடு மறந்துவிட்டு அரசியலில் ஆதிக்கம் பெற்றுவிட்டால் போதும்; அதுவே எல்லா இழிநிலையையும் போக்கும் தக்க வழியென்று கருதி, அதற்கேற்ப அரசியல் ஆதிக்கப் போட்டியில் நகரங்களில் காலங் கழிப்பதே - சென்னை நகர் பொதுநலத் தொண்டர்கள் எனப்படுவோருக்கும், தலைவர்கள் என்று கூறிக்கொள்ளுபவர்களுக்கும் முக்கிய வேலையாயிருந்து வருகிறது. பதவி கிடைத்துவிட்டால் பெரிதும் சுயநலமும் நாணயக்குறைவும்தான் காணலாம்.

அரசியலாரின் தலைமை நிலையம் உள்ள சென்னை, நாகரிகத்தில் மட்டும் மற்ற இடங்களைவிட தாழ்ந்திருப்பதைக் கண்டும், அதைப் பற்றி சிறிதும் திருந்தாமல் கவலைப்படாதிருப்பதைப் பார்த்தும் வருந்தியே இவ்வாறு கூறுகிறேனே அல்லாது வேறில்லை.

அதிலும் சமுதாயத்திலே மிக இழிநிலையிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அச்சமூகத் தலைவர்கள் என்போருக்கும் - அச்சமுதாய இழிவு அறவே ஒழிந்து, நிரந்தர உரிமை அடைய வேண்டுமென்பதில் அக்கறையே இருப்பதில்லை. எதை விற்றானாலும் பதவி பெறுவதே லட்சியம். அரசியல் அதிகாரமும், பதவியும் கிடைத்தால் இழிவு நீங்கி விடுமா? நீங்கிவிட்டதா?
இன்று சட்டசபையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று 30 ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் சிறிது சர்க்காரை மிரட்டினால் 10 ஸ்தானங்கள்கூட சேர்த்துக் கொடுக்கலாம். ஜஸ்டிஸ் கட்சி காலத்தில்கூடத்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உத்தியோகமும் சில சலுகைகளும் தரப்பட்டன. எனினும் இவைகளினால் அம்மக்களின் நிலை உயர்ந்ததென்று கூற முடியுமா? ஒரு சிலருக்கு தனிப்பட்ட முறையில் நன்மை பயக்கலாம்.

பொதுவாக சமுதாய இழிவு நீங்க, இந்த உத்தியோகங்கள் எந்த விதத்தில் பயன் பட்டன என்று கேட்கிறேன். எனது அன்பிற்குரிய நண்பரும், அறிஞருமான டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இன்று மத்திய ஆட்சியில் பெரிய பதவியிலிருக்கிறார். பதவி போனவுடன் அவர் யார்? நமது கனம் சிவசண்முகம் அவர்கள் இன்று சட்டசபை தலைவராகவே இருக்கிறார். இப்பதவிக்குப் பிறகு அவர் யார்? அதுமட்டுமல்ல. பதவிகளிலிருக்கும்போதுதான் அவர்களுக்கு சமுதாயத்திலே என்ன உயர்வு அல்லது சரி சமத்துவம் இருக்கிறதென்று கூற முடியும்? தோழர்கள் முனுசாமிப் பிள்ளையையும், கூர்மய்யாவையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

பணமும் பட்டமும் பதவியும்தான் மக்கள் முன்னேற்றத்திற்குக் காரணம் என்றால், அதுவே சமுதாய விடுதலைக்கு வழி வகுக்கும் என்றால் தோழர்கள் ஆர்.கே. சண்முகம், சர். ஏ. ராமசாமி முதலியார், ராஜா சர். முத்தையா செட்டியார், கோவை ரத்தின சபாபதி முதலியார் போன்ற பிரபுக்களும் சமுதாய நிலையில் சூத்திரர்கள்தானே? பெரிய அறிவுக் களஞ்சியம் என்று நாம் போற்றுகிறோமே மறைமலை அடிகளார், கல்யாண சுந்தரனார் ஆகிய அவர்களும் சூத்திரர்கள்தானே?

ஆனால் பார்ப்பனருக்கு மட்டும் அப்படியில்லை. அவர்கள் பதவியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும், இழி தொழில் செய்தாலும், கிரிமினல் ஆனாலும், பிறவியின் காரணமாய் தனி உயர்வு உரிமையும், பெருமையும் அளிக்கப்படுகின்றது. அந்த தனி உரிமையை, அதன் அஸ்திவாரத்தைத் தகர்த்தெறிந்தால்தான் - சமுதாய வாழ்வில் நாம் மனிதர்களாக வாழ முடியும் என்பதை தாழ்த்தப்பட்ட மக்கள் முதல் மற்ற எல்லா திராவிடரும் உணர வேண்டும்.



நமது கவர்னர் ஜெனரல் கனம் ஆச்சாரியார் அவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைக்கு உள்ளபடியே மனம் வருந்துபவர்தான். சில சமயங்களில் அவர்களது தாழ்ந்த நிலைக்குப் பரிதாபப்பட்டு கண்ணீரும் வடிப்பார். ஆனால் இந்த பரிதாபமோ, பச்சாதாபமோ அவருக்கு ஏற்படுகிறதென்றாலுங்கூட, தாழ்ந்த நிலைக்கு ஆதாரமான சாஸ்திரத்தை அழிக்காமல் காப்பாற்றி வைத்தும், மனுதர்மத்தை நிலைநிறுத்திக் கொண்டும்தான் அவர்களுக்கு ஆவன செய்ய வேண்டுமென்று கூறுவார்.

நான் என்ன சொல்லுகிறேன் என்றால் அல்லது திராவிடர் கழகம் கூறுவது என்னவெனில், அந்த சாஸ்திர ஆதாரமும், அஸ்திவாரமும் தகர்த்தெறியப்பட்டு, மனிதனின் இயற்கை உரிமை என்பதை முதலாவதாகக் கொண்டே சமுதாய அமைப்பை ஏற்படுத்த வேண்டும். பழைய சாஸ்திரத்தையும், இதிகாசங்களையும் ஆதாரமாக வைத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்யப்படும் அல்லது கொடுக்கப்படும் எப்பேர்ப்பட்ட சலுகைகளும், பதவி அதிகாரங்களும் பிச்சை கொடுப்பதாகுமேயன்றி உரிமை ஆக்கப்பட்டு விட்டதாகாது.

இப்போதுகூட தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பதவி நிலை, அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்ட சலுகைப் பிச்சையேயாகும்; உரிமை அல்ல. இந்தத் தன்மை ஒழிய வேண்டும் என்றால், பிச்சை வாங்குவதால் ஒழியாது; அஸ்திவாரம் இடிபட வேண்டும்.