மன்னை முத்துக்குமார்
.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலும் தீண்டாமைச் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. திண்டிவனம் நகராட்சியின் 3ஆவது வார்டு ரோசனை. இது ‘ரிசர்வ்' வார்டு. துரைசாமி ஆசிரியர் என்பவர் தன்னுடைய 2 ஏக்கர் 2 சென்ட் நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்தார். அதை வாங்கியவர்கள் வழிகளை உருவாக்கி பிளாட் போட்டிருந்தார்கள். ரோசனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கும், முருங்கம்பாக்கம் பள்ளிக்கும், முருங்கம்பாக்கத்திலிருந்து சோலார் பள்ளிக்கும் செல்பவர்கள் ஆண்டுக் கணக்கில் இந்த வழிகளைப் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் புதுச் சேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் இந்த இடத்தை வாங்கினார். உடனடியாக இந்த 2 ஏக்கர் நிலத்தைச் சுற்றி நான்கு பக்கமும் சுற்றுச் சுவர் எழுப்பினார். பாஸ்கர், அப்துல் கலாம் நகர் என்று பெயர்ப் பலகை வைத்து, நகர் திறப்பு விழாவும் நடத்தினார். ரோசனையில் உள்ள 4 தெருவின் பின்பக்க வழியை மறைத்து நிலத்தைச் சுற்றி இந்த ஆளுயரச் சுவரை எழுப்பியுள்ளார்கள். அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு இருந்த வழிகள் மறைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தலித் மக்கள் வார்டிலிருந்து துண்டிக்கப்பட்ட பகுதியாக இது உள்ளது. அந்த புதிய நகருக்கு, குடிநீர் மற்றும் மின் வசதி போன்றவை 3 வார்டிலிருந்துதான் செல்ல வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் வழியில்லாமல் நான்கு பக்கமும் சுவர் உள்ளது

தலித் ஒருவரிடமிருந்து வாங்கிய நிலத்தை விற்கவேண்டும் என்பதற்காக, தலித் குடியிருப்பிற்கும் அந்த இடத்திற்கும் உள்ள தொடர்புகளைத் தடுத்து, நான்கு பக்கமும் சுற்றுச் சுவர் எழுப்பியுள்ள இச்சம்பவம் குறித்து கள ஆய்வு செய்து, தலையீட்டுப் பணிகளையும் செய்து வருகின்ற திண்டிவனம், ‘இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்ய'த்தின் திட்ட மேலாளர் மோகன் அவர்களை சந்தித்து கேட்டபோது அவர் நம்மிடம், "சமூக ஓட்டத்தில் எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்ற நிலையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாறாமலிருப்பது சாதி ஒன்றுதான். உலகம் நவீனமயமாகி வருகின்ற நிலையில் தீண்டாமையும் நவீன வடிவம் எடுக்கிறது. இப்போது அந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், இது தீண்டாமைச் சுவர் கிடையாது. புதிய நகர் உருவாக்கத்தில், அனைத்து வசதிகளுடன் கூடிய நகரை உருவாக்குகின்றோம். அதன் ஓர் அங்கம்தான் இந்தச் சுவர் என்பார்கள். ஆனால், தலித் மக்களுக்கு சொந்தமான இடத்திலிருந்து, அவர்களைப் பிரித்து, தனிமைப்படுத்தி, தலித் குடியிருப்பில் இருந்து அந்த இடத்தை பிரித்துக்காட்ட சுற்றுச்சுவர் எழுப்பியிருப்பது என்பது தீண்டாமை இல்லாமல் வேறென்ன?

தமிழகம் முழுவதும் தலித்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்கள் அனைத்தும் பறிபோனது. இப்போது, தலித் குடியிருப்புகளை ஒட்டியுள்ள இடங்கள் எல்லாம் நகரமயமாக்கம் என்ற பெயரில் திருடப்பட்டு வருவதுடன், அந்தப் பகுதிகளில் இருந்தெல்லாம் தலித்துகள் வெளியேற்றப்படுவதும் நடந்து வருகிறது. இந்தச் சுவரை இடித்து, வழி ஏற்படுத்தி, தீண்டாமைச் சுவர் கட்டிய ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசுக்குப் புகார் அனுப்பியுள்ளோம்'' என்று கூறினார்.