மன்னை முத்துக்குமார்
.
பெண் கடவுள்களை பார்ப்பனர்கள் அரியணையில் அமர்த்தியது ஏன்?

கடவுள்களை வழிபடுவது என்பது, எங்கும் சாதாரணமாக வழக்கில் உள்ளது. ஆனால் பெண் கடவுள்களை வழிபடுவது சாதாரணமானதல்ல. காரணம், கடவுள்கள் பொதுவாக திருமணமாகாதவர்களாகவே இருக்கிறார்கள். பெண் கடவுள்கள் என்று உயர்த்தி வைப்பதற்கு, கடவுள்களுக்கு மனைவிகள் இல்லை. கடவுளை மணமானவராகக் கருதுவது, எந்தளவுக்கு மனம் ஒவ்வாததாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஏசுவைக் கடவுளின் மகன் என்று யூதர்களை ஏற்கச் செய்வது, தொடக்கக் காலத்தில் கிறித்துவர்களுக்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதைக் குறிப்பிடலாம்.

கடவுளுக்கு மணமாகவில்லை என்றும், அதனால் ஏசு எப்படிக் கடவுளின் மகனாக இருக்க முடியும் என்றும் யூதர்கள் கேட்டார்கள்.
இந்துக்கள் விஷயத்தில் நிலைமை முற்றிலும் வேறு விதமாக உள்ளது. அவர்கள் ஆண் கடவுள்களை வழிபடுவது மட்டுமின்றி, பெண் கடவுள்களையும் வழிபடுகிறார்கள்...

இதுவரை கூறியதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று, இந்துக் கடவுள் திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதும், அவர் சாதாரண மனிதனைவிட உயர்வாக நடந்து கொள்ளவில்லை என்பதால், அவரோ, அவரை வழிபடுகிறவர்களோ கூச்சப்பட வேண்டியதில்லை என்பதும் ஆகும். இரண்டாவது, கடவுளின் மனைவி அவரை மணந்து கொள்ளும் காரணத்தாலேயே, அந்தக் கடவுளை வழிபடுபவர்களின் வழிபாட்டுக்குத் தகுதி பெற்றுவிடுகிறார்.

வேத காலத்தைவிட்டு புராண காலத்திற்கு வந்தால், பல பெண் கடவுள்களின் பெயர்களைக் காண்கிறோம்: தேவி, உமா, சதி, அம்பிகை, பார்வதி, ஹேமாவதி, கவுரி, காளி, நிர்நிதி, சண்டி, காத்யாயினி, துர்கை, தஷ்புஜா, சிங்கவாகினி, மகிஷாசுர மர்த்தினி, ஜகதாத்திரி, முக்தகேசி, தாரா, சின்னமுஸ்தகா, ஜதக் கவுரி, பிரத்யங்கிரா, அன்னப்பூர்ணா, கணேஷ் ஜனனி, கிருஷ்ணக்ரோரா, லட்சுமி ஆகியோர். இந்தப் பெண் கடவுள்களில் யார் எவர் என்ற பட்டியலை வரைவது கடினம். முதலாவதாக இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பெண் கடவுள்களைக் குறிக்கின்றனவா அல்லது ஒரே பெண் கடவுளின் வெவ்வேறு பெயர்களா என்று கூறுவதும் கடினம். இதேபோல இவர்களின் தாய் தந்தை யார் என்று கூறுவதும் கடினம். இவர்களின் கணவர்கள் யார் என்பதையும் யாரும் உறுதியாகக் கூற முடியாது...

இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரும் ஒரே கடவுளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதாகக் காட்ட முயலுகின்றனர். இவர்களில் சரஸ்வதி பிரம்மாவின் மனைவி, லட்சுமி விஷ்ணுவின் மனைவி, பார்வதி சிவனின் மனைவி என்பதையும், இந்த மூன்று கடவுள்களும் ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதையும் பார்க்கும்போது, வராகப் புராணம் கூறும் விளக்கம் விந்தையாக உள்ளது.

கவுரி யார்? பார்வதியின் மற்றொரு பெயர் தான் கவுரி என்று புராணம் கூறுகிறது. இதற்குக் காரணம் பின்வருமாறு கூறப்படுகிறது: சொர்க்கத்தில் சிவனும் பார்வதியும் ஒன்றாக இருக்கும்போது, அவர்களிடையே சிறு சிறு சண்டைகள் வரும். அப்படியொரு நேரத்தில் சிவன் பார்வதியின் கருப்பு நிறத்தை சுட்டிக்காட்டி அவரைச் சீண்டினார். இதனால் மன வருத்தம் அடைந்த பார்வதி, சிலகாலம் சிவனை பிரிந்து சென்று கடும் தவம் புரிந்தார். அதன் விளைவாக பிரம்மா அவருடைய மேனி பொன் நிறமாக விளங்கும் என்று வரம் கொடுத்தார். இதனால் அவருக்கு கவுரி என்று பெயர் வந்தது.

மற்ற பெண் கடவுள்களைப் பார்த்தால், அவை ஒரே பெண் கடவுளின் வெவ்வேறு பெயர்களா? அல்லது தனித்தனி கடவுள்களா? என்று உறுதியாகத் தெரியவில்லை...வேதத்தில் கூறப்படும் பெண் கடவுள்களையும் புராணங்களில் கூறப்படும் பெண் கடவுள்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது வரலாற்றை எழுதுவது மட்டுமின்றி, அதற்குப் பொருள் கூறுவதையும் பணியாகக் கொண்டுள்ள ஒரு மாணவனுக்கு தவிர்க்க முடியாததாகும். ஒரு விஷயத்தில் இந்த இரண்டு வகை பெண் கடவுள்களுக்கிடையே பெரிய வேறுபாடு உள்ளது.

வேதத்தின் பெண் கடவுள்கள், கடவுள்களின் மனைவியர்களாக இருந்ததின் காரணமாகத்தான் வணங்கப்பட்டார்கள். புராணப் பெண் கடவுள்கள் அப்படியல்லர். இவர்கள் கடவுள்களின் மனைவியர் என்பதினாலன்றி, தங்களுடைய சொந்த முறையிலேயே வழிபாட்டைப் பெறுகிறார்கள். இந்த வேறுபாட்டிற்குக் காரணம், வேதப் பெண் கடவுள்கள் போர்க்களத்திற்கு சென்றதோ, வீரச்செயல்கள் புரிந்ததோ கிடையாது. ஆனால், புராணங்களின் பெண் கடவுள்கள் போர்க் களம் சென்று பெரும் வீரச் செயல்கள் புரிந்துள்ளார்கள். துர்கைக்கும் இரண்டு அசுரர்களுக்கும் இடையே பெரும் போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுவே துர்கைக்கு பெரும் புகழைக் கொடுத்தது...

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தமிழ் நூல் தொகுப்பு : 8, பக்கம்: 131)



மன்னை முத்துக்குமார்

ஜாதி மீது பற்று இருப்பவன் தீண்டாமையை எதிர்க்க மாட்டான்

இந்து சமூக சீர்திருத்தவாதிகளில் மிதவாதிகளின் பிரிவு ஒன்று உள்ளது. இந்தப் பிரிவினர், தீண்டாமை என்பது சாதி முறையிலிருந்து வேறுபட்டது என்று கருதுகிறார்கள். இந்தக் கருத்தைப் பின்பற்றி இவர்கள் சாதி முறையைத் தாக்காமலேயே தீண்டாமையை ஒழித்துவிட முடியும் என்று கருதுகிறார்கள். மத உணர்வுள்ள இந்து, சாதி முறையை ஒழிப்பதற்கு எதிராக இருப்பது போலவே, தீண்டாமையை ஒழிப்பதற்கும் எதிராகவே இருக்கிறார். சமூக சீர்திருத்தத்தை ஒரே கட்டமாக நடத்துவதை எதிர்ப்பதைப் போலவே, இரண்டு கட்டமாக நடத்துவதையும் அவர் எதிர்க்கிறார். ஆனால், அரசியல் ஈடுபாடு கொண்ட இந்துவுக்கு இந்தக் கருத்து மிகவும் பிடித்திருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஓர் இந்து தான் உண்மையில் நடந்து கொள்வதைவிட மிகச் சிறந்த ஜனநாயகவாதி என்று உலக அரங்கில் காட்டிக் கொள்வதற்கு இது வாய்ப்பளிக்கிறது. இரண்டாவதாக, சாதியை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால் சாதி இந்துக்கள் காங்கிரசைக் கைவிட்டுவிடும் ஆபத்து இருக்காது.



சாதி முறைக்குத் தீங்கு இல்லாமல் தீண்டாமையை ஒழிக்க விரும்புவோர், மநுஸ்மிருதி பத்தாம் அத்தியாயம் நான்காம் சுலோகத்தைத் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள். இந்த சுலோகத்தில் மநு, நான்கு வர்ணங்கள்தான் உண்டு என்றும், அய்ந்தாவது வர்ணம் இல்லை என்றும் கூறுகிறார். இந்த சுலோகத்தின்படி, தீண்டத்தகாதவர்கள் நான்காம் வர்ணத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் சூத்திரர்களில் ஒரு பகுதியினர் என்றும், சூத்திரர்களைத் தொடுவதற்குத் தடை இல்லாததால் – தீண்டத்தகாதவர்களைத் தொடுவதற்கும் தடை இருக்க முடியாது என்று பொருள் கூறப்படுகிறது. அரசியல் ஈடுபாடு உள்ள இந்துவுக்கு இவ்வாறு பொருள் கூறுவது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், இது மநு கூற விரும்பும் கருத்துக்குப் பொருந்துவதாக இல்லை.

இந்த சுலோகத்துக்கு மற்றொரு விதமாகவும் பொருள் கூற முடியும். நான்கு வர்ணங்களுக்கு வெளியே உள்ள இந்த சமுதாயங்களை, அய்ந்தாம் வர்ணமாக ஏற்றுக் கொண்டு, சதுர்வர்ண முறையைப் பஞ்சவர்ண முறையாக விரிவுபடுத்த மநு தயாராக இல்லை என்பதும் இதன் பொருளாக இருக்க முடியும். அய்ந்தாம் வர்ணம் இல்லை என்று அவர் கூறுவதன் பொருள், இந்த சமுதாயம் நான்கு வர்ணங்களுக்கு பதில் அய்ந்து வர்ணங்களைக் கொண்டதாகச் செய்வதன் மூலம், நான்கு வர்ணங்களுக்கு வெளியில் உள்ள மக்களை இந்து சமூகத்தில் இணைத்துவிட விரும்பவில்லை என்பதேயாகும். அவர் கூற விரும்பிய கருத்து இதுதான் என்பது, ‘பாஹ்யர்கள்' அல்லது ‘வர்ண பாஹ்யர்கள்' என்ற ஒரு பிரிவைப் பற்றி அவர் பேசுவதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது.

எல்லா மக்களையும் நான்கு வர்ணங்களுக்குள் சேர்த்துக் கொள்ள மநு விரும்பியிருந்தால், சிலரை ‘வர்ண பாஹ்யர்கள்' என்று பேச காரணம் இல்லை. உண்மையில் வர்ண பாஹ்யர்களில் இரண்டு உட்பிரிவுகளை அவர் குறிப்பிடுகிறார். இந்த உட்பிரிவுகளை ‘ஹீனர்கள்' என்றும் ‘அந்த்யோவாசின்கள்' என்றும் அவர் அழைக்கிறார். இந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும்போது, மநுஸ்மிருதி சுலோகத்துக்குக் கூற முயலும் பொருள், தீவிர மதப் பற்றுள்ள இந்துவை ஏமாற்றிவிட முடியாது. தீண்டாமையைப் பின்பற்றுவது மநுஸ்மிருதிக்கு முரணானது என்றும், அதை ஒழிப்பது இந்து மதக் கோட்பாடுகளுக்கு முரணானது அல்ல என்றும் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

மநுஸ்மிருதிக்கு இவ்வாறு பொருள் கூறி எடுத்து வைக்கப்படும் வாதம், கல்வியறிவில்லாத சாதாரண இந்துவுக்குப் புரியாத அளவுக்கு அறிவு நுட்பம் வாய்ந்தது. அவருக்குத் தெரிந்தது, சமூக உறவுகளில் தாம் பின்பற்ற வேண்டிய மூன்று தடைகள் உள்ளன என்பதே. இந்தத் தடைகள் : 1. சேர்ந்து உண்ணக் கூடாது 2. கலப்புத் திருமணம் செய்யக் கூடாது 3. சில வகுப்பு மக்களைத் தொடக் கூடாது. முதல் இரண்டு தடைகளும் சாதிப் பிரிவினையாகும்; மூன்றாவது தடை தீண்டாமையாகும். சாதி இந்துவுக்குத் தடைகளின் எண்ணிக்கை பற்றிக் கவலையில்லை. தடைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் அவர் குறியாயிருக்கிறார். தடையைப் பின்பற்ற வேண்டாம் என்று அவரிடம் கூறினால், ஏன் வேண்டாம் என்று அவர் திருப்பிக் கேட்கிறார்.

அவருடைய வாதம் இதுதான் : முதல் இரண்டு தடைகளையும் நான் பின்பற்றலாம் என்றால், மூன்றாவது தடையைப் பின்பற்றுவதில் என்ன தவறு? உளவியல் ரீதியாக சாதியும் தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒருங்கிணைந்த முறையாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பதேயாகும்.

இந்தக் கருத்தை வைத்துப் பார்த்தால், சாதி முறையை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்து தவறானது. இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன, சேர்ந்தேதான் அவை வீழும்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் 94)

மன்னை முத்துக்குமார்

“ஒரு தலித் நாடாளுமன்றத்திற்குள் நுழையலாம்; ஆனால் அவனால் ஒரு பொது இடத்திலோ, உள்ளூரில் உள்ள ஒரு கோயிலிலோ நுழைய முடியாது. ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் ஒரு கிராமம் (சேரி) இருப்பது தேசிய அவமானம். மத்திய அரசு, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கென ஓர் அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். சிறப்பு உட்கூறுத் திட்டத்திற்கு, பட்டியல் சாதியினர் சிறப்பு உட்கூறுத் திட்டம் என்று பெயரிட்டிருப்பது-தலித்துகளுக்கெதிரான பாகுபாட்டையே வெளிப்படுத்துகிறது. தலித் மாணவர்களுக்கு மேல்நிலைப் பள்ளிகளில் முதல் இரண்டு பிரிவுகளை வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றொரு அரசாணை உள்ளது. ஆனால் மாநிலத்தில் உள்ள எந்தப் பள்ளியிலும் இந்த ஆணை பின்பற்றப்படுவதில்லை.''

தொல். திருமாவளவன், "தி இந்து', 1.7.2009

இந்தியாவில் மட்டும் ஒரு கோடியே 70 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இது, உலகிலேயே மிக அதிக அளவாகும். இதல் 19 சதவிகிதத்தினர் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 85 சதவிகிதத்தினர் முறைசாரா பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 90 சதவிகித குழந்தைகள் கிராமங்களில் உள்ள பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கேடுகெட்ட கோயில்கள்

தென் மாவட்டங்களில் உள்ள 85 ஊராட்சிகளில், தலித்துகள் “கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றார்களா என்றொரு ஆய்வை "எவிடன்ஸ்' என்ற அமைப்பு மேற்கொண்டது. அதன்படி, 69 கோயில்களில் நுழைய தலித்துகளுக்கு அனுமதி இல்லை; பிற 72 கோயில்களில் அவர்களுக்கு அனுமதி இருந்தாலும், அக்கோயில்களில் உள்ள பொது வழிபாட்டுக்குரிய இடங்களில் நின்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 33 கோயில்களில் தலித்துகளுக்கு கோயில் தேரை இழுக்க உரிமை மறுக்கப்பட்டுள்ளது. 54 கோயில்களைச் சேர்ந்த "தர்மகர்த்தாக்கள்' கோயில் தேரை தலித் தெருவுக்குள் அனுமதிப்பதில்லை. 64 கோயில்களில் திருவிழாக்களின் போது சடங்குகளை செய்யவோ, தங்களுடைய பண்பாட்டு நிகழ்வுகளை அரங்கேற்றவோ அனுமதி இல்லை. சுருக்கமாகச் சொன்னால், தலித் மக்களை ஒடுக்குவதற்கும், சாதி மோதல்களை வளர்த்தெடுப்பதற்குமான ஒரு களமாக இந்து கோயில்கள் விளங்குகின்றன என்றும், இதைத் தடுக்க அரசு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவான 3(1) (14) 1989 அய் பயன்படுத்தி, வழிபாட்டு உரிமைகளையும், கோயில் நுழைவை மறுப்பவர்களையும் தண்டிக்க வேண்டும் என்றும் ஆய்வை மேற்கொண்ட அமைப்பு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

மேற்கண்ட கள ஆய்வு தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்டவை. எனினும், வேறு திசைகளில் உள்ள மாவட்டங்களிலும் இதே போன்ற கள ஆய்வை செய்தால், கூடுதல் உண்மைகள் வெளிவரும். சாதிகளை உற்பத்தி செய்து, தீண்டாமையை கடைப்பிடித்து, ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், அதைப் புனிதமானதாக ஆக்கவுமே கோயில்கள் உருவாக்கப்பட்டன. இந்த நவீன யுகத்திலும் கோயில்கள் ஜனநாயகமாக்கப்படவில்லை என்பதை யார் மறுக்க முடியும்? அது மட்டுமா, அவை இன்றளவும் அரசால் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் எவ்வளவு பெரிய சட்டங்கள் இயற்றினாலும், அவை கோயில்களை என்ன செய்துவிடும்? இனவெறியைப் புனிதப்படுத்தும் கோயில்களுக்குள் நுழைய அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை தலித்துகள் பரிசீலனை செய்ய வேண்டும். அந்த கேடுகெட்ட இடத்திற்குள் இனி எங்கள் கால் தடத்தைக் கூட பதிக்க மாட்டோம் என்று சொல்லத் துணிவதுதான் புரட்சியின் பாற்பட்டது. 

“இதுதாண்டா போலிஸ்''

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு கிராமத்தின் அருகில் இருக்கும் பெருமாள் மலையில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோயில் திருவிழாவில், ஒரு தலித் பெண் பங்கேற்பதை அங்கிருக்கும் சாதி இந்துக்கள் (21.6.09) தடுத்துள்ளனர். அந்த தலித் பெண் தனது தலையில் சுமந்து சென்ற குடத்து நீரை சாதி இந்துக்கள் பிடுங்கி, அவரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதால், அப்பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். சக தலித்துகள் அவரைத் தடுத்துள்ளனர். இப்பிரச்சனையை கையிலெடுத்துப் போராடும் "விழுதுகள்' அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் கூறுகிறார் : “காவல் நிலையத்தில் வழக்கமாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில்லை. அதற்குப் பதில் அவர்கள் சாதி இந்துக்களுக்கு தகவல் கொடுத்து, அதன் மூலம் தலித்துகளின் புகாரை திரும்பப் பெற வைக்கின்றனர். ஏறக்குறைய 45 அருந்ததியர் குடும்பங்கள் சாதி இந்துக்களின் வயல்களில் வேலை செய்வதால், அவர்கள் வழக்கைத் திரும்பப் பெற அச்சுறுத்தப்படுகின்றனர். ஆறு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் நல்லூரில் உள்ள விழுப்புரம்மன் கோயிலுக்குள் ஒரு தலித் தம்பதியினர் வழிபட சென்றனர். அவர்கள் சாதி இந்துக்களால் தாக்கப்பட்டனர். இவ்வழக்கில் கூட, அந்த தம்பதியினர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை, புகாரை கொடுத்த பழனிச்சாமி என்ற தலித்தையே கைது செய்தது''("இந்தியன் எக்ஸ்பிரஸ்' 22.6.09).

வாக்களித்தால் தமிழன்; வாக்களிக்காவிட்டால் தலித்!

“நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வன்னியர்களுக்கு எதிராக நாங்கள் வாக்களித்ததால், அவர்கள் எங்களைத் தாக்குகின்றனர்'' என்று குற்றம் சாட்டி, ஊரையே காலி செய்து பக்கத்து கிராமத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர், தருமபுரி மாவட்ட மொரப்பூர் ஒன்றியத்தின் நத்தமேடு கிராம தலித் மக்கள். நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த கல்யாணி, பானுமதி, பாப்பாத்தி ஆகியோர் இது குறித்து விளக்கினர் : “சாமி! உங்களுக்குப் புண்ணியமாப் போவட்டும். எங்களை அவங்கக்கிட்ட இருந்து பிரிச்சு வேற எடத்துல குடியேத்தச் சொல்லுங்க. இத்தனை நாளும் நடந்த கொடுமைகளைப் பொறுத்துக்கிட்டு அங்க இருந்தோம். எங்கள் வீட்டு ஆண்கள் வேலைக்காக வெளியே போயிட்டாங்கன்னு தெரிஞ்சா, சாத்தியிருக்கிற வீட்டுக்குள்ள பூந்து, தப்பா நடக்கிறதுக்காக கூசாம கூப்பிடறாங்க. குறிப்பா, பாட்டாளி மக்கள் கட்சிக்காரங்க பண்ணற அடாவடிக்கு அளவேயில்லை. இனிமே குடியேறணும்னு கட்டாயப்படுத்தினா, பெட்ரோல் ஊத்திக் கொளுத்திட்டு சாவறதைத் தவிர வேற வழி எங்களுக்குத் தெரியல'' ("குமுதம் ரிப்போர்ட்டர்' 2.7.09). தேர்தல் நேரத்தின்போது தமிழர்களாய் ஒன்றிணைய வேண்டும் என்று மேடையில் வாய் கிழியப் பேசும் பாட்டாளி மக்கள் கட்சியினர்,
தேர்தலில் தோற்றதும் வன்னியத் தமிழர்களை விட்டுவிட்டு, சேரித் தமிழர்களை மட்டும் தாக்குகிறார்கள். தமிழீழ அங்கீகார மாநாட்டை மிகவும் துணிச்சலாக நடத்தி ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலாக நின்ற விடுதலைச் சிறுத்தைகள், ஈழ ஆதரவு அணியில் இல்லை (அரசியலில் மட்டும்) என்ற ஒரே காரணத்திற்காக-அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மறுத்து, பா.ம.க.வின் தலித் விரோத போக்கைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல்-மாம்பழச் சின்னத்திற்கு வாக்கு கேட்கச் சென்ற ஈழ ஆதரவாளர்கள், இந்த அநீதிக்கு எதிராக வாய் திறப்பார்களா?
மன்னை முத்துக்குமார்
சாதி அமைப்பை உயிர்த் துடிப்புடன் இயங்க வைக்கும் அங்கீகாரம் எது?

சட்டத்தின் மூலமோ, பகுத்தறிவு ரீதியான உத்திகளாலோ தீண்டாமை மறைந்து விடாது என்பதற்கு மற்றொரு காரணம் உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்து சமூக அமைப்பு படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு, படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. முன்னது பலவீனமானது. பின்னது, தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டு நிலைக்கும் திறன் கொண்டது. சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பில் கீழ்நிலைப் பிரிவுகள் ஒன்று சேர்ந்து அமைப்பைக் கவிழ்த்துவிட முடியும். அவற்றில் எதற்கும் அந்த அமைப்பைப் பாதுகாப்பதிலும் விருப்பம் இல்லை.

ஆனால், படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை நிலவும் அமைப்பில், பாதிக்கப்பட்ட பிரிவுகள் ஒன்றிணைந்து பொதுவான தாக்குதல் நடத்தும் வாய்ப்புக்கு இடமேயில்லை. இத்தகைய அமைப்பில் பாதிக்கப்பட்ட பிரிவினர் பொதுவான நிலையில் இல்லை. உயர்ந்தது, தாழ்ந்தது என்ற நிலைகள் மட்டுமே உள்ள போதுதான் இவ்வாறு இருக்க முடியும். படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை முறையில் மிக உயர்ந்தவர்கள் (பார்ப்பனர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே, சற்று அதிகம் உயர்ந்தவர்கள் (சத்திரியர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே உயர்ந்தவர்கள் (வைசியர்கள்) உள்ளனர். அவர்களுக்குக் கீழே, தாழ்ந்தவர்கள் (சூத்திரர்கள்) உள்ளனர். அவர்களுக்கும் கீழே, அதிகம் தாழ்ந்தவர்கள் (தீண்டத்தகாதவர்கள்) உள்ளனர். இவர்கள் அனைவருமே மிக உயர்ந்தவர்களிடம் மனத்தாங்கல் கொண்டவர்கள்தாம்; அவர்களைக் கீழே வீழ்த்திவிட விருப்பம் உள்ளவர்கள்தான். ஆனால், இவர்கள் ஒன்றிணைய மாட்டார்கள்.

சற்று அதிகம் உயர்ந்தவன் மிக உயர்ந்தவனை ஒழித்துவிட ஆவலாயிருக்கிறான். ஆனால் அவன், உயர்ந்தவனுடனும் தாழ்ந்தவனுடனும் மிகத் தாழ்ந்தவனுடனும் இணைய விரும்பவில்லை. அவர்கள், தன்னுடைய நிலையை அடைந்து தனக்கு சமமாகிவிடுவார்களோ என்று அவன் நினைக்கிறான். உயர்ந்தவன் தனக்கு மேலே உள்ளவனான சற்று அதிகம் உயர்ந்தவனை வீழ்த்திவிட விரும்புகிறான். ஆனால், அவன் தாழ்ந்தவனுடனும் மிகத் தாழ்ந்தவனுடனும் சேர விரும்பவில்லை. அவர்கள் தனது சமூக நிலைக்கு உயர்ந்து தன்னுடன் சமநிலைப் பெற்று விடுவார்களோ என்று அவன் அஞ்சுகிறான். தாழ்ந்தவன், மிக உயர்ந்தவனையும், சற்று அதிகம் உயர்ந்தவனையும், உயர்ந்தவனையும் கீழே தள்ளி விட விரும்புகிறான். ஆனால் அவன் மிகத் தாழ்ந்த வனுடனும் கூட்டுச் சேரமாட்டான். மிகத் தாழ்ந்தவன் சமூக நிலையில் உயர்ந்து தனக்குச் சமமாகி விடுவான் என்று அவன் அஞ்சுகிறான்.

படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை நிலவும் அமைப்பில், சமூகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள பிரிவைத் தவிர, முற்றிலும் உரிமைகள் இல்லாதவர்கள் என்று எந்த வகுப்பினரும் இல்லை. மற்ற வகுப்புக்குகூட, மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்புடன் ஒப்பிடும்போது, ஓரளவு உரிமைகள் உள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் உரிமைகள் இருப்பதால், இந்த சமூக அமைப்பைப் பராமரிப்பதில் ஒவ்வொரு வகுப்புக்கும் அக்கறை இருக்கிறது.

தீண்டாமை, தீண்டத்தகாதவர்களுக்கு கெடுவாய்ப்பாக இருக்கலாம். ஆனால், இந்துக்களுக்கு அது ஒரு நல்வாய்ப்பே என்பதில் சந்தேகம் இல்லை. தங்களைவிட தாழ்ந்தவர்களாகக் கருதுவதற்கு ஒரு வகுப்பை, அது அவர்களுக்குக் கொடுக்கிறது. யாருமே முக்கியமானவர்களாயில்லாத ஓர் அமைப்பையும்; எல்லோருமே முக்கியமானவர்களாக உள்ள ஓர் அமைப்பையும் இந்துக்கள் விரும்பவில்லை. தாங்கள் முக்கியமானவர்களாகவும் மற்றவர்கள் முக்கியமில்லாதவர்களாகவும் உள்ள ஓர் அமைப்பையே அவர்கள் விரும்புகின்றனர். தீண்டத்தகாதவர்கள் முக்கியமில்லாதவர்கள். இது, இந்துக்களை முக்கியமானவர்களாக ஆக்குகிறது. தீண்டாமை முறை இந்துவின் இயல்பான பெருமை உணர்வுக்குத் தீனி போட்டு, அவர்கள் தங்களைப் பெரியவர்களாக நினைக்கவும், பெரியவர்களாகக் காட்டிக் கொள்ளவும் உதவுகிறது. இந்துக்கள், முக்கியமாக குறுகிய சிந்தனை உள்ளவர்களாக இருக்கும் இப்பெரும்பான்மை மக்கள், தீண்டாமை முறையைக் கைவிடும் வாய்ப்பு ஏன் இல்லை என்பதற்கு இது மற்றொரு காரணமாகும்.

இந்து சமூக அமைப்பு முழுவதும் குறிப்பாக, சாதி முறை ஒழிந்தால்தான் தீண்டாமை மறையும். இது சாத்தியமா? ஒவ்வொரு அமைப்பு முறையும் ஏதேனும் ஓர் அங்கீகாரத்தை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது. ஓர் அமைப்பு முறைக்கு இவ்வாறு உயிர் ஆற்றல் அளிக்கும் அங்கீகாரங்கள் மூன்று வகைப்படும். அவை சட்ட, சமூக, மத அங்கீகாரங்கள் ஆகும். சாதி முறைக்குப் பின்னால் உள்ள அங்கீகாரத்தின் தன்மை என்ன? கெடுவாய்ப்பாக, சாதி முறையின் பின்னே உள்ள அங்கீகாரம் மத அங்கீகாரம் ஆகும். வர்ண முறையின் புதிய வடிவமான சாதி முறை, தனது அங்கீகாரத்தை இந்து மதத்தின் புனித நூலாகவும், தவறுதல் அற்றதாகவும் கருதப்படும் வேதங்களிலிருந்து பெறுகிறது. கெடுவாய்ப்பாக என்று நான் கூறுவதற்குக் காரணம், மத அங்கீகாரம் பெற்ற எதுவும், புனிதமானதாகவும் நிரந்தரமானதாகவும் ஆகிவிடுகிறது என்பதே. ஓர் இந்துவுக்கு சாதி புனிதமானது, நிரந்தரமானது. சாதி மறைந்து போக முடியாது என்றால், தீண்டாமை ஒழிந்து போகும் என்ற நம்பிக்கைக்கு இடம் ஏது?

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் 101)
மன்னை முத்துக்குமார்
கடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி

இதுவரை நம்மிடையே நடைபெற்று வந்த நிகழ்ச்சியானது கல்யாணம், விவாகம் என்னும் பெயரால் நடைபெற்று வந்ததோடு, அதன் மூலம் பெண்களை அடிமைப்படுத்தவும், பெண்களை ஆண்களுக்கு நிரந்தர அடிமையாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டதால், மனித ஜீவனில் ஒருபாகமானப் பெண்கள் மனித சமுதாயத்திற்குப் பயன்பட முடியாமல் போய்விட்டனர். நம் மத, சாஸ்திரம், புராணம் யாவும் பெண்களை அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதேயாகும். இந்த நாட்டிலே பெண்கள் விடுதலைக்காக முதன் முதல் தொண்டாற்றியது சுயமரியாதை இயக்கமேயாகும்.

பழைய முறை என்பவற்றின் அடிப்படை, முதலாவது பெண்களை அடிமையாக்குவது. இரண்டாவது, ஆண்களை அறிவு கொண்டு சிந்திக்கமுடியாமல் அவர்கள் அறிவை முடமாக்கி, அவர்களை மூட நம்பிக்கைக்காரர்களாக்குவது. அடுத்து மூன்றாவதாக, நம் சமுதாயத்தில் சாஸ்திரத்தின் பெயரால் இருந்து வந்த ஜாதி இழிவை நிலைநிறுத்துவதுமாகும். இப்படி மூன்று அடிப்படைகளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டதே கல்யாணம், விவாகம் என்பதெல்லாமாகும்.

ஒரு பெண் தானாக சுதந்திரம் பெற வேண்டுமானால், விபச்சாரி என்ற பெயரோடுதான் சுதந்திரம் பெற முடியும். பின் அவர்கள் விடுதலைக்காக ஆண்கள்தான் முற்பட வேண்டும். அதற்காக நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், பெண்கள் 20 வயது வரை படிக்க வேண்டும். படிக்கும் போதே தனது ஜீவனத்திற்காக ஒரு தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும். பெண்களுக்குப் படிப்பும், ஜீவனத்துக்கான தொழிலும் இருந்தால் அந்தப் பெண், தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கருதவே மாட்டாள். ஆணுக்கு அடிமைப் பட்டிருக்கவும் மாட்டாள்.

அடுத்து இரண்டாவது காரியம், மூட நம்பிக்கையை நிலை நிறுத்துவதற்காகவேயாகும். திருமணமென்றால் முகூர்த்தம், நேரம், சகுனம், ஜாதகம், ஜோசியம் பார்ப்பதும், அறிவிற்கும் தேவைக்கும் சற்றும் பொருத்தமற்ற அம்மியைக் கொண்டு வந்து வைப்பதும், பானையை அடுக்குவதும், ஓமம் வளர்ப்பதும், மனிதனை மடையனாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவையே ஒழிய, அவை வேறு எதற்கும் பயன்படுவது கிடையாது. தாலி கட்டுவது என்பது பெண்களை அடிமை என்பதைக் காட்டுவதற்கும், கணவன் இறந்தால் அதை அறுத்து முண்டச்சி என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவுமே தவிர, வேறு எதற்காகத் தாலி பயன்படுகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.

மூன்றாவதாக, ஜாதி நிலை நிறுத்தப்படுவதற்கு நம் நாட்டில் முக்கிய காரணம், ஜாதியானது தொழிலோடு இணைக்கப்பட்டதாலேயே ஆகும். பரம்பரைப் பரம்பரையாக அந்தந்த ஜாதியைச் சார்ந்தவன் அந்தந்த ஜாதிக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்ட அந்தந்த தொழிலைச் செய்து வந்ததால், ஜாதியானது நிலை நிறுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகத்தான் ஜாதி காப்பாற்றப்பட வேண்டுமென்பதால்தான் பள்ளிக்கூடம் வைக்காமல் இருந்தனர். பள்ளிக் கூடங்கள்

வைத்தால் மனிதன் அறிவு பெற்று விடுவான். அறிவு பெற்றால் நான் ஏன் தாழ்ந்த ஜாதி? அவன் மட்டும் ஏன் உயர்ந்த ஜாதி? என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுவான் என்பதோடு, எவனும் தான் தாழ்ந்த ஜாதியாக இருக்க விரும்ப மாட்டான். ஆனதால் அரசாங்கங்கள், பள்ளிக்கூடங்கள் வைக்க முன்வரவில்லை என்பதோடு, மனிதனின் மூடநம்பிக்கை, முட்டாள்தனம் வளரும்படியான காரியங்களையே செய்து வந்தன.

எனக்கு இந்த மருத்துவ சமுதாயத்தோடு 12 வயது முதல் தொடர்பு உண்டு. எனது வீட்டிற்குப் பின்னால் இந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் வீடுகள் இருந்தன. அங்கிருந்து என்னோடு இரண்டு பையன்கள் பள்ளிக்கூடத்திற்குப் படிக்க வருவார்கள். அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரும்போதே வீட்டிலிருந்து ஓலைப் பாயைக் கையில் சுருட்டி எடுத்துக் கொண்டு வருவார்கள். பள்ளிக்கூடத்தில் நாங்கள் எல்லாம் உள்ளே போய் வகுப்பில் உட்காருவோம். அவர்கள் வகுப்புக்கு வெளியே தாழ்வாரத்தில் பாயை விரித்து அதில் உட்கார்ந்து கொள்வார்கள். வாத்தியார் சொல்வது அவர்கள் காதில் விழாது. 8 வருஷம் படித்தால் தங்கள் பெயரை அதுவும் தப்பும் தவறுமாக எழுதவே கற்றுக் கொள்வார்கள்.

பள்ளிக்கூடத்தில் மட்டும் அவர்களுக்கு இந்த நிலையில்லை. டிஸ்ட்ரிக் போர்டு-தாலுக்கா போர்டு மெம்பராக இருந்தாலும் அவர்கள் ஆபீஸ் கட்டடத்திற்கு வெளியேதான் உட்கார வேண்டும். என்ன பேசுகிறார்கள், என்ன தீர்மானம் போடுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. "மினிட் புக்'கை கொண்டு போய் இங்கு கையெழுத்துப் போடு என்று பியூன் காட்டினால், அந்த இடத்தில் கையெழுத்துப் போடுவார்கள். காங்கிரஸ் காலத்திலும் இந்த நிலைதான். இவர்களுக்காக சுயமரியாதை இயக்கம்தான் போராடி அவர்களுக்கு உரிமை வழங்கச் செய்ததே தவிர, வேறு எவரும் அவர்களின் உரிமைக்காகப் போராடவில்லை. அரசாங்கமும், ஜாதி ஆணவமும் மக்களை முன்னேற முடியாமல் செய்து விட்டன.

நாம் கடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம் இவற்றையெல்லாம் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். பழமை, முன்னோர் என்பது பற்றி சிந்திக்கவே கூடாது. நமக்கு முன் நடக்கும் நடப்புகளைப் பார்த்து அறிவிற்கேற்ப நடந்து கொள்ள முன்வர வேண்டும்.

திருச்சியில் 14.5.1969 அன்று நடைபெற்ற திருமணத்தில் ஆற்றிய உரை
மன்னை முத்துக்குமார்
.
எத்தனை மாறுதல் அறிவியல் யுகத்தில் வந்தாலும் மக்களின் மனோபாவமும் எண்ணங்களும் இன்றும் துளிகூட மாறவில்லை என்பதற்கு இது ஒரு சாட்சி...