மன்னை முத்துக்குமார்
.
பேராண்மை திரைப்படப்பாடல் --பொதுவுடைமை சமுதாயம் தொலைந்து போகவில்லை...
.
Get this widget | Track details | eSnips Social DNA
மன்னை முத்துக்குமார்
.
இம்மானுவேல் சேகரன்..தென்தமிழ்நாட்டில் நிலவும் தீண்டாமைக்கு எதிராக போராடிய ஒரே காரணத்தால் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டவர், அந்த சமூக போராளியை பற்றிய சிறு குரும்படம். பாருஙகள்.


மன்னை முத்துக்குமார்
.
மன்னை முத்துக்குமார்

சிறப்பு குரும்படம்

பார்ப்பனீயத்துக்கு முன் சாதி இந்துவும் பஞசமனும் ஒண்னுதான்,
அந்த ஆரிய பிழைப்பு வாதிகளின் பிரித்தாளும் தந்திரத்தை புரிந்துகொள்ளடா சகோதரா..என்று விளக்கும் இந்த குரும்படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று ,பாருங்கள்
.
மன்னை முத்துக்குமார்
.
மன்னை முத்துக்குமார்
.

சாதியை ஒழிக்க யாரை வீழ்த்துவது ?
"சாதி என்பது, இந்துக்கள் ஒருவரோடொருவர் கலந்து விடாமல் தடுக்கிற ஒரு செங்கல் சுவரோ, முள் வேலியோ அல்ல. அப்படி சாதி வெறும் சுவராகவோ, வேலியாகவோ இருந்தால் அதைத் தகர்த்துவிடலாம். சாதி என்பது ஒரு கண்ணோட்டம் - ஒரு மனநிலை. எனவே, சாதியைத் தகர்ப்பது என்றால், வெறும் பவுதீகத் தடையைத் தகர்ப்பது என்பது அல்ல. மாறாக ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். சாதியைக் கடைப்பிடிப்பதில் மக்களின் தவறு எதுவுமில்லை. சாதி என்கிற கண்ணோட்டத்தை இந்துக்களின் மனதில் ஆழமாகப் பதிய வைத்து இருக்கிற இந்து மதத்தின் மீதே தவறிருப்பதாக நான் கருதுகிறேன். என்னுடைய இந்தக் கருத்து சரியானதென்றால், நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி - சாதியைக் கடைப்பிடிக்கும் மக்கள் அல்ல; சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாஸ்திரங்களே உங்கள் பயங்கர எதிரி."
-புரட்சியாளர் அம்பேத்கர்

மன்னை முத்துக்குமார்
சுயமரியாதை வாழ்வுக்காகவும் சமூக சமத்துவத்திற்காகவும் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்து, இளம் வயதிலேயே சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்: 11.9.1957ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் எங்கோ ஓர் மூலையில் விதைக்கப்பட்டிருந்த – நீறுபூத்த நெருப்பாயிருந்த இத்தியாக வாழ்வு, இன்று தமிழகம் தழுவிய அளவில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் பாடமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரனின் 50 ஆம் நினைவு வீரவணக்க ஆண்டாக ஒடுக்கப்பட்ட மக்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் மக்கள் எழுச்சியைக் கண்டு வெம்பிக் கொண்டிருந்த சாதிவெறிக் கூட்டம், அதே ஆண்டு அக்டோபரில் பசும்பொன் முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை, தன் வன்மத்தை வெளிப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டது.

இவ்விழாவில் கலந்து கொள்ள அப்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி, முதுகுளத்தூர் செல்லும் சாலையில் தடையை மீறி சென்றபோது, தேவர் சாதி வெறியர்களுக்கும் தலித் மக்களுக்கும் ஏற்பட்ட மோதலின் நடுவில் சிக்கிக் கொண்டு காயமடைந்தார். இந்நிகழ்வு காட்டுத் தீயாய் பரவ, ஒரு சில மணி நேரத்திலேயே முதுகுளத்தூரில் வசித்து வந்த வின்சென்ட் என்ற தலித் ஆசிரியர் அவரது வீட்டின் அருகிலேயே சாதி வெறியர்களால் வெட்டிச் சாய்க்கப்பட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறுநாளே மரணமடைந்தார். வின்சென்ட் படுகொலையில் உசுப்பேறிய சாதி வெறியர்கள் முத்துராமலிங்கம் நூற்றாண்டு நிகழ்வுக்கு வரும் வழிகளில், தலித் மக்கள் பலவீனமாக வசிக்கும் பகுதிகளில் வேன், லாரி, கார்களில் வந்து கூட்டமாக இறங்கி தாக்கியும், கல்வீசியும் தங்கள் கொண்டாட்டத்தை நிறைவு செய்தனர்

நீறுபூத்த நெருப்பாகச் சாதிப் பகைமை எப்போதும் கனன்று கொண்டிருக்கும் மாவட்டமாக ராமநாதபுரம் இருக்கிறது. இதை உறுதி செய்யும் விதமாக, கடந்த ஆண்டு வின்சென்ட் படுகொலைக்குப் பழிதீர்க்கும் வகையில் முதுகுளத்தூர் பகுதியில் மறவர் சாதியைச் சேர்ந்த ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த ஆண்டு எவரும் எதிர்பார்த்திராத நிலையில், செப்டம்பர் 9 அன்று வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்ற இளைஞர், முதுகுளத்தூரில் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டிருக் கிறார். இவர் 2007ஆம்ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வின்சென்ட் மனைவியின் உடன்பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்த இழப்புகள். செப்டம்பர் 11 அன்று நடக்கவிருந்த இம்மானுவேல் சேகரனின் 52ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை சீர்குலைக்க, சாதி வெறியர்களால் திட்டமிடப்பட்டதே இப்படுகொலை நிகழ்வு என்பதை, தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் உறுதி செய்தன.

பரமக்குடி நோக்கி அணிதிரண்டு வந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாகனங்கள் மானாமதுரைக்கும் பார்த்திபனூருக்கும் இடையில் காவல் துறையால் அடித்து நொறுக்கப்பட்டு, இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உசிலம்பட்டியில் இது போலவே, சாதி வெறியர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட தலித் மக்கள் பலத்த தாக்குதலுக்கு உள்ளாயினர். இதைக் கண்டித்து தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட தலித் மக்களின் மீது, காவல் துறையும் தன் பங்குக்கு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. இத்தாக்குதல்களில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தலித் மக்கள் 29 பேர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். 70க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் புனையப்பட்டுள்ளன.

அறிவழகன் படுகொலையைக் கண்டித்தும் அவரது உடலை வாங்க மறுத்தும், செப்டம்பர் 10 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் புரட்சிகர இயக்கங்களும் போராட்டம் நடத்தின. மாலை 5 மணிவரை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பசுபதி பாண்டியன், முருகவேல் ராஜன், அண்ணாமலை (மள்ளர் இலக்கியக் கழகம்), ஆற்றலரசு (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), இளம்பரிதி (ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி) உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அறிவழகன் படுகொலைக்கு எவ்விதக் கண்டனமும் நிவாரணமும் அறிவிக்காத நிலையிலும், செப்டம்பர் 11 அன்று பல்வேறு இடங்களில் சாதி வெறியர்கள் மற்றும் காவல் துறையால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளைக் கண்டித்தும், செப்டம்பர் 24 அன்று மதுரை தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. தியாகி இம்மானுவேல் பேரவை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி, மள்ளர் நிலம், தமிழர் விடுதலைப் புலிகள், தமிழ்ப் புலிகள், வன்கொடுமைக்கு எதிரான வழக்குரைஞர் மய்யம் ஆகிய அமைப்புகள் இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர்.

எந்வொரு ஒடுக்குமுறையையும் தம்மக்களின் விடுதலையை முன்னெடுக்க எதிர்கொள்வோம் என்ற சூளுரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்கப்பட்டது. இம்மானுவேல் சேகரன் எனும் விதையிலிருந்து உருப்பெற்று, ஒடுக்கப்பட்ட மக்கள் அணையாது காக்கும் இத்தகைய எழுச்சியே, சாதி ஒழிப்பையும் சமூக விடுதலையையும் முன்னெடுக்கும் நெருப்பாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.


மன்னை முத்துக்குமார்
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மானவமானத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை. அவனது தலைமைக்கு அடிமை, மீட்சிபெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.


"மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவ முள்ள மிருகமே ஆவர்" என்ற அறிவுரைப்படி மான மில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி வைத்தத் தன்மைக்கு ஏற்பத் தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களைத் தமிழ்மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று அவற்றுக்கு அடிமையாகி, பின்பற்றித் தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள். அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக , பண்டிகை , விரதம், நோன்பு, உற்சவங்களாக, நல்ல நாள், தீயநாளாக , அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிருஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையில் ஒரு அளவுக்கு தலைகீழான மாறுதல் எற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும் கூட இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறு அளவு ஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித்திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகமும், துரோகம், மோசத்தாலும், வாழவேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கி விட்டார்களேயானால் எப்படி யார் எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதைக் காதில் வாங்கக்கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதே போல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள் அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உட்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும்புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக்கூறு இவைகளில் நிபுணர்கள் உட்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கு அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்துகொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமுமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக்காட்டாகக் கூற முடியும்?

நம் பள்ளிகளும் கல்லுாரிகளும் பல்கலைக்கழகங்களும் நம் மக்களுக்கு இந்த இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக் கூட அறிவைக் கொடுக்கவில்லையென்றால், இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர, வேறு என்னவென்று சொல்லமுடியும்? இதில் பயிலும் மாணவர்களுக்கு எந்த விதத்தில் தான் மானமும் அறிவும் விளையமுடியும்?

தீபாவளி என்றால் என்ன? புராணம் கூறுவது :---------

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக்
கொண்டுபோய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.

3. விரித்த உலகம்(பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது

4. ஆசைக்கு இணங்கி பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவிசெய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற
பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10 விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய் வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி நூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருதவேண்டியிருக்கிறது?

ஙீ பூமி தட்டையா? உருண்டையா?ஙீ தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?

ஙீ எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?

ஙீ சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து ஏக முடியுமா?

ஙீ எங்கிருந்து தூக்குவது ?

ஙீ கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?

ஙீ விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம்என்ன?

ஙீ அரக்கனைக் கொன்று பூமையை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?

ஙீ பூமி மனித உருவா? மிருக உருவமா?

ஙீ மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளைஉண்டாகுமா?

ஙீ பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?

ஙீ இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும்.

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?

நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம், இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் அசாம் மாகாணத் துக்கு அருகில் இருக்கிறது. இதைத் திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும் சொல்லுகிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத் துணி உடுத்து வதும் பட்டாசு சுடுவதும், இந்த பார்ப்பனர்கள் வந்து பார்த்து "கங்கா ஸ்நானம் ஆயிற்றா" என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டு காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்லுவது?

மாணவர்களே!

உங்கள் ஆசிரியர்களுக்கு மானம் புத்தி இல்லா விட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக்காலத்தில் நாம் ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதைத் தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

-------தந்தை பெரியார்..

மன்னை முத்துக்குமார்

இந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா?

இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது. "இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்' என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில்தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவதுதான் இந்தியின் தத்துவம். எனவேதான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு போர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால், இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். என்ன விலை கொடுத்தேனும், நாம் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். இது கடைசிப் போராட்டம் வெற்றி அல்லது தோல்வி, இரண்டிலொன்று பார்த்துவிடத்தான் வேண்டும்.

இந்தியில் மெச்சத் தகுந்த கலைகளே கிடையாது. அதிலுள்ள கலைகள்யாவும் துளசிதாஸ் ராமாயணமும், கபீர்தாஸ் சரித்திரமுந்தாம்; மநுதர்மமும், பாகவதமும்தான். இவற்றின் தன்மைதான் தெரியுமே உங்களுக்கு. இந்தி மொழி தலைசிறந்த அறிஞர்களைப் பெற்றெடுக்கவில்லை என்று திரு.வி.க. அவர்கள் குறிப்பிட்டார். இந்தி உற்பத்தி செய்த அறிவாளிகள் யார் என்றால், நோகாமல் பதவிக்கு வந்த நேருவையும், அவருடைய அய்யாவையுந்தான் குறிப்பிட வேண்டும். அவர்களது தியாகம் இன்று அந்தக் கூட்டம் குடும்பத்தோடு கொள்ளையடிப்பது (உங்களுக்குத் தெரிந்ததுதான்); வேறு ஆட்களைக் குறிப்பிட முடியாது. தமிழ் மொழியோ எண்ணற்ற கலைகளையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சித்தர்களையும், முத்தர்களையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியில் கலை இல்லை; காவியம் இல்லை; நீதி நூல் இல்லை. அம்மொழி மூலம் அறியக் கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை. ஆகவே, 100க்கு 97 போர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? இங்குள்ள பார்ப்பன கோஷ்டியார், இத்திராவிட நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து, இந்நாட்டை வடநாட்டுக்கு வால் நாடாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் மர்மமே ஒழிய ‘இந்தி தேசிய மொழி; ஆகவே, எல்லோரும் படிக்க வேண்டும்' என்று கூறுவதெல்லாம் பித்தலாட்ட வார்த்தைகள். இந்தி தேசிய மொழியாயின், எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகக் கண்டிப்பாகக் கூறிவிடட்டுமே! இந்தி அல்லது சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே, அது ஏன்? இந்தி தேசிய மொழியா? அல்லது சமஸ்கிருதம் தேசிய மொழியா? நீங்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது. ‘கன்னிகாதானம்' என்பதை வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று மாற்ற எவ்வளவு சிரமப்பட இருந்தது? ‘மாங்கல்ய தாரணம்' என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருந்தது? மற்றும், தேவை இல்லாத சடங்குகளை, புராண இதிகாசக் குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக் கடவுள் இவற்றின் மீதும் இருந்த மூடநம்பிக்கையையும், மூட பக்தியையும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது? இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களா?

சூத்திரன் என்ற வார்த்தையைக் கைவிட்டு ‘திராவிடன்' என்று பெருமிதத்தோடு கூறிக்கொள்ளும் நீங்கள், மறுபடி சூத்திரனாக மாற விருப்பம் கொள்வீர்களா? இந்த முற்போக்கைக் கண்டு அஞ்சும் பார்ப்பனக் கூட்டம் வட நாட்டாரின் கூலிகளாகி, அவர்களுக்கு வால்பிடித்து நம்மவர் சிலரை விபீஷணர்களாக்கிக் கொண்டு, தேசிய மொழி என்ற போரால் நம்மீது வடமொழியைச் சுமத்துகிறது என்றால் நம்மை, நம் நாட்டை வட நாட்டாருக்குக் காட்டிக் கொடுக்கிறதென்றால் நாம் அதற்கு இடங்கொடுக்கலாமா?

தோழர்களே! தாய்மார்களே! திராவிடர் - ஆரியர் போராட்டம், அதுவும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையறாது இருந்துவரும் இப்போராட்டம், இன்று ஒரு முடிவான கட்டத்திற்கு வந்துவிட்டது. இதை முடித்து வைப்பது நமக்குப் பெருமையுங்கூட. நமது பின் சந்ததியார் போற்றிப் புகழக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பத்தில் நாம் இன்று இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பின் சந்ததியரால் எள்ளி நகையாடப்படுவோம் என்பதோடு, அவர்களின் துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் நாமே காரணபூதர்களாகவும் ஆகிவிடுவோம்.

சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவு
மன்னை முத்துக்குமார்

ஒரு தலித் சைக்கிள் ஓட்டினால்...
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் மதுரையில், தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலின் எண்ணிக்கை புயல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து "தீண்டாமை ஒழிப்பு முன்னணி' 2007ஆம் ஆண்டு கள ஆய்வை மேற்கொண்டது. ஆயிரக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தில் இந்த ஆய்வு 44 கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டன. தீண்டாமையின் வடிவங்கள் பலவகையில் இக்கிராமங்களில் இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்தது.

பொதுக் குளம், கிணறு, குடிநீர்க் குழாய்கள், தேநீர்க்கடைகள், சமுதாயக் கூடம், சிகை திருத்தம், சலவைக் கூடம், பேருந்து நிறுத்தம், அஞ்சல் நிலையம், ரேசன் கடை, கிராம சபைக் கூட்டங்கள், பள்ளிக்கூடம், பொதுத் தெருக்கள், கோயில் வழிபாடு, திருவிழாக்கள் ஆகியவற்றில் தலித்துகளுக்கு எதிரான நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் உள்ளன என்றும் அறியப்பட்டது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் இந்த அறிக்கை, மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டதோடு மட்டுமின்றி, செய்தியாளர்கள் மத்தியிலும் வெளியிடப்பட்டது. ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்பதற்கு, நாகமலைப் புதுக்கோட்டை அருகே உள்ள வடிவேல் கரையில் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களே சான்று. ""மலம் அள்ளவும், பிணம் புதைக்கவும், தப்படிக் கவுமே பிறப்பெடுத்த சக்கிலியன் பட்டப் படிப்பு படிப்பதா, எங்கள் முன்னால் சைக்கிள் ஒட்டுவதா?'' என்ற கேள்வியோடு எழுந்த சாதிவெறி பேயாட்டத்தில் தலையில் 16 தையல்கள் போடும் அளவிற்கு பெரும் தாக்குதலை முருகன் எதிர்கொண்டுள்ளார்.

மதுரையில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வடிவேல்கரையைச் சேர்ந்தவர் அம்மாவாசி. இவர், வடிவேல் கரை ஊராட்சியில் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் "தோட்டி' வேலை செய்து வருகிறார். 600 குடும்பங்கள் வசிக்கக்கூடிய இந்த கிராமத்தில் தலித் குடும்பங்களின் எண்ணிக்கை 75. கல்வியறிவு மறுக்கப்பட்ட இச்சமூகக் குழந்தைகள், இந்தத் தலைமுறையில்தான் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். சாதிய மேலாதிக்கத்தாலும், குலத் தொழிலாலும் காலங்காலமாக கல்வி மறுக்கப்பட்ட தலித்துகள், வடிவேல்கரை கிராமத்தில் படிப்பது சாதி இந்துக்களின் கண்களை உறுத்துகிறது.

கல்வி நிலையம் சென்று கொண்டே வயிற்றுப்பாட்டுக்கு தப்படிக்கும் குழந்தைகள், பள்ளிக்குச் செல்லும் போது சாதி இந்து தெருவில் செருப்புப் போட்டு செல்ல முடியாததால், கண்மாய்க்குள் விழுந்து விடுகின்றனர். 75 தலித் குடும்பங்களில் பட்டம் படித்த ஒரே நபரான அம்மாவாசியின் மகன் முருகன் மீது உள்ள காழ்ப்புணர்வு காரணமாகவே, அவரைக் கொலை செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 13 அன்று ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தினர். இதனால் பாதிக்கப்பட்ட முருகன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தலைக்காய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முருகன் மீது தாக்குதல் நடத்தியவர்கள், தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டு காவல் நிலையம் நோக்கிச் செல்ல, முருகன் மற்றும் அவருடைய தந்தை அம்மாவாசி மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்துள்ளது காவல் துறை. தாக்குதல் நடத்திய ஆனந்த், லெட்சுமணன், சிலம்பரசன் ஆகிய ஆதிக்க சாதியினர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்த காவல்துறை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஆதித்தமிழர் அமைப்பு ஆகியவற்றின் கண்டன சுவரொட்டிக்குப் பிறகே, ஒப்புக்கு ஒருவர் மீது மட்டும் வழக்கைப் பதிவு செய்து தனது மேலாதிக்க விசுவாசத்தைக் காட்டியுள்ளது. ஆதிக்க சாதியினரால் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முருகன், எம்.காம். படித்து முடித்து விட்டு தற்போது பி.எட். படித்து வருகிறார்.

இந்நிலையில், காந்தி நகர் பகுதியில் உள்ள அருந்ததியர் குழந்தைகளுக்கு மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரை இலவசமாக "டியூசன்' எடுத்து வருகிறார். மலம் அள்ள நிர்பந்திக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு முருகன் பாடம் கற்றுத் தருவதா என்ற மநுவின் பேரப்பிள்ளைகள், முருகன் டியூசன் நடத்தும் இடத்திற்கு வந்து சத்தம் போடுவது, சீட்டு விளையாடுவது, தெரு விளக்கை அணைப்பது என அட்டகாசம் புரிந்து, கடைசியில் கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ""தோட்டி மகனுக்கு என்னடா படிப்பு'' எனக் கேட்டவாறே, அவர்கள் தன்னைத் தாக்கியதாக முருகன் கூறுகிறார்.

இதற்கு முன்பு 2007ஆம் ஆண்டு முருகனின் சகோதரர் அழகுப்பாண்டியின் மீது சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தியதும், அதனால் மூவர் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத் தகுந்தது. அழகுப்பாண்டி சைக்கிளில் சென்ற போது மூவர் வழி மறித்து நின்று கொண்டு செல்லவிடாமல் தடுத்துள்ளனர். ""அண்ணே, விலகிக் கோங்க'' என்று அழகுப்பாண்டி சொல்ல, அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த ஆதிக்க சாதியினர், ""சக்கிலிச்சிக்காடா நாங்க பிறந்தோம்'' என்று கூறியவாறே அழகுப்பாண்டியை அடித்துத் துவைத்துள்ளனர்.

தலித்துகள் செருப்புப் போட்டு நடக்கக்கூடாது; சைக்கிளில் செல்லக்கூடாது என்ற சாதி இந்துக்களின் சட்டங்கள் மீறப்படும்போது, அதை மீறுகின்றவர்கள் மீது கொலை வெறித்தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ள முருகனை எப்படியேனும் வெளியேற்றி, கைது செய்ய வேண்டும் என பல்வேறு முயற்சிகளை ஆதிக்க சாதியினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாகமலைப் புதுக்கோட்டையில் இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. தோட்டி மகன் படிக்கலாமா எனக் கேட்டு அருந்ததியர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியவே முடியாது என்று கூறி, ஆதிக்க சாதியினருக்கு ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசம் காட்டி வருகிறது தமிழகக் காவல் துறை.
மன்னை முத்துக்குமார்
.

.
ஒடுக்கபட்ட மக்களின் குரலாக ஒலித்த டாக்டர் அம்பேத்கர்,அய்யா பெரியார் ஆகியோரின் எண்ணங்களைத் தாங்கி வரும் நமது ஊமையின்குரல் ஆனந்த விகடனில் இந்த ”ஊமையின் குரல்” ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் என 30-09-2009 இதழில் வெளிவந்துள்ளது.