மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதையடுத்து, பரமக்குடியில் நடந்த சாலை மறியல் வன்முறையாக உருவெடுத்தது. அப்போது காவல்துறை 6 பேரை சுட்டுக் கொன்றது.

அதிகாரத்தின் வாயிலாக நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதம் குறித்து ஆய்வுசெய்ய, சமூகப் பொறுப்பும் படைப்பு மனமும் கொண்ட பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், ஆய்வு மாணவர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது. அமெரிக்கன் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் தர்மராஜன், அன்புச்செழியன், எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, அ.முத்துக்கிருஷ்ணன், ரேவதி, சந்திரா, கவின்மலர், ஓவியர் சந்துரு, வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், பகத்சிங், மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார், சுரேஷ், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்றப் பதிவாளர் பரமக்குடி ந.சேகரன், எஸ். அர்ஷியா உள்ளிட்டோர் அக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, தங்கள் மன வருத்தத்தை வெளிப்படுத்தினர். சம்பவம் நடந்த இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதிகாரிகளை சந்தித்துப் பேசினர்.

அதையொட்டி எழுதப்பட்டக் கட்டுரை இது...

ஆதிக்க சக்திகளின் எண்ணங்களும்...

சாதியத்தின் வீரியமும்...

அதிகார வன்முறை

கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியம் குறித்த விவாதம் நடந்தது. காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா, விவாதத்திற்கு பதிலளித்துப் பேசினார். குரலில் பெருமிதம் இருந்தது. அவர் பேசியது, இது தான். "மெட்ராஸ் போலிஸ் முறையாக அமைக்கப்பட்டு, ஒண்ணரை நூற்றாண்டு ஆகின்றது. இன்றைய தமிழகக் காவல்துறை நவீனமடைந்துள்ளது. மரபான பாரம்பரியமும் கொண்டுள்ளது. 1991 முதல் 1996 வரை நான் முதல்வராக இருந்த எனது முதல் ஆட்சியின் காலகட்டத்தில்தான் மாநிலக் காவல்துறை நவீனமாக்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்தவர்கள் முதிர்ந்த மனிதத்துடனும் நவீனத்துவத்துடனும் பொது மக்களைக் கனிவாக அணுகி, அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுவருகிறார்கள்!"

அவர் பேசி, சரியாகப் பத்தொன்பது நாட்கள்தான் கடந்து போயிருக்கின்றன. முதல்வர் தமிழக சட்டப்பேரவையில், என்ன சொல்லி மகிழ்ந்துப் பேசினாரோ, அதற்கு நேர்மாறாக மிருகவெறி யுடனும் நவீன ஆயுதங்களுடனும் கூடியிருந்த பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேரைக் கொன்று, செப்டம்பர் 11 ஆம் தேதி பகல் 12 மணியளவில், முதல்வரின் பெருமிதத்தைச் சிதைத்து அவமரியாதைக்கு உள்ளாக்கியது, தமிழகக் காவல்துறை.

1957 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி, பரமக்குடியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டுவிட்டு இரவு 9 மணியளவில் வீடு திரும்பிய இமானுவேல் சேகரனை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. படுகொலை செய்யப்பட்ட அந்தநாளை, தேவேந்திர குல வேளாள மக்கள், 'ஆதிக்க சக்திகளிடமிருந்து தங்கள் சமூகம் மீளப்பெற கடுமையாக உழைத்த' இமானுவேல் சேகரனின் நினைவுநாளாக, கடந்த 54 ஆண்டுகளாக அனுசரித்து, அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டு வந்தது.

இமானுவேல் சேகரனின் கல்லறை, பரமக்குடி நகரின் பேருந்து நிலையத்தையடுத்த ஒரு குறுகிய தெருவின் கடைசியில், ரயில் தண்டவாளத்துக்கு முன்புள்ள பராமரிக்கப்படாத ஒரு கல்லறைத் தோட்டத்துக்குள் இருக்கிறது. பிற சாதித் தலைவர்களின் நினைவிடங்களைப் போல, தனித்த இடமாக அது இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காக, சுயம்புவாக உருவாகிய அந்தத்தலைவரின் சமாதிகூட மக்களிடமிருந்து அந்நியப்படாமல், மற்ற சமாதிகளுக்கு இடையிலேயே இருக்கிறது.

நினைவு தினத்துக்கு, முதல்நாளிலிருந்தே தேவேந்திர குல வேளாள மக்களும் அரசியல் கட்சி களின் தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் வரத்துவங்கினார்கள். மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டுப் போனார்கள். அதுபோலத்தான் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தின் தலைவர் ஜான் பாண்டியன் செப்டம்பர் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அஞ்சலி செலுத்தப் புறப்பட்டு வந்துகொண்டிருந்தார். அவருக்கான நேரம் மாலை 3 மணியிலிருந்து 5 மணிவரை காவல்துறையால் அனுமதிக்கப்பட்டிருந்தது. முன்கூட்டியே வழங்கப்பட்ட அனுமதியையொட்டித்தான் அவரது பயணம் அமைந்தது.

புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே ஜான் பாண்டியன் காவல் துறையினரால் வழி மறிக்கப்படு கிறார். அவரது பயணத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது.

காரணமற்றத் தடையைக் கண்டித்து, ஜான் பாண்டியன் வாக்குவாதம் செய்து, பயணத்தைத் தொடர முயற்சி செய்தபோது, அவர் கைது செய்யப்படுகிறார். ஏற்கனவே முறையான அனுமதி வழங்கியிருந்தக் காவல்துறை, அவரது கைதுக்கு இப்போது சொன்ன புதிய காரணம்: 09092011 அன்று கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவன் பழனிக்குமார் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த ஜான் பாண்டியன் செல்லக்கூடும். சென்றால்... அதனால் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும்.

மண்டல மாணிக்கம் எனும் ஊருக்கு அருகேயுள்ள பள்ளப்பச்சோந் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகன் பிளஸ் ஒன் மாணவன் பழனிக்குமார், அருகேயுள்ள முத்துராமலிங்க புரத்தில் நடந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு நள்ளிரவில் ஊர் திரும்பும்போது 09092011 அன்று கொலை செய்யப்பட்டார். இப்படியான அசம்பாவிதங்கள் நடந்துவிடும்போது பாதிக்கப் பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று தலைவர்கள், பிரமுகர்கள் ஆறுதல் சொல்வது வழக்கத்தில் உள்ளது. அதைத் தடைசெய்வதுபோல காவல்துறையின் புதிய காரணம் உள் அர்த்தம் கொண் டதாக இருக்கிறது.

இமானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கு முன்பாக, தேவேந்திர குல வேளாளச் சமூகத்தைச் சேர்ந்த யாரையாவது, பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்து, மாவட்டம் முழுவதும் பதற்றத்தை உருவாக்கிவிடுவது நீண்டகாலமாகவே வழக்கத்தில் இருந்துவருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டில் மட்டும் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்பது சற்றே ஆறுதல் தரும் விஷயம்.

ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதுடன் மாவட்டம் முழுவதும் 144 தடை விதிக்கப் படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்ட சம்பவம் அவரது ஆதரவாளர்களுக்கு தெரியவந்ததும், அவர்கள் ஜான் பாண்டியனை விடுதலை செய்யக் கூறி, பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் கூடுகிறார்கள். ஐந்து முனை ரோடு என்பது பரமக்குடி நகரின் இதயப் பகுதி. பிற மாவட்டங்களிலிருந்து மட்டுமன்றி உள்ளூர்காரர்களே நகருக்குள் நுழையவும் வெளியேறவும் அந்த இடத்தைக் கடந்துதான் ஆகவேண்டும்.

ஏற்கனவே அந்த இடத்தில் காவல்துறையின் உயர் அதிகாரியிலிருந்து சாதாரணக் காவலர் வரை குவிந்து நிற்கிறார்கள். கூட்டத்தின் மீது தண்ணீர் பாய்ச்சிக் கலைக்கும் வஜ்ரா வாகனமும் அங்கிருக்கிறது. சென்னையிலிருந்து சிறப்புச் சேவைக்காக செந்தில்வேலன் எனும் காவல் அதிகாரியும் வந்திருந்தார்.

ஜனநாயக ரீதியில் தங்கள் தலைவரை விடுதலை செய்யக்கூறி, சாலை மறியல் செய்வதெல்லாம் எங்கேயுமே சகஜமான ஒன்றுதான். இதற்கு முன்பும் பல இடங்களில் பலமுறை நடந்திருக் கிறது. அதுதான் பரமக்குடியிலும் நடைபெற்றது.

144 தடையைப் பற்றி அறியாத பொதுமக்கள், ஜான் பாண்டியன் ஆதரவாளர்களின் சாலை மறியலை வேடிக்கைப் பார்த்தபடியே கடந்துபோகிறார்கள். அவர்களின் அன்றாடப் பாடு ஒன்றும் அங்கே தடைபடவில்லை. செய்தி கேள்விப்பட்டு ஜான் பாண்டியனின் ஆதரவாளர்கள் மேலும் சிலர் அங்கே கூடுகிறார்கள். அப்போதும்கூட குவிக்கப்பட்டிருந்தக் காவலர்களின் எண்ணிக்கைதான் அங்கே அதிகமாக இருந்தது. காவலர்களின் எண்ணிக்கை சாலை மறியல் செய்தவர்களுக்கு மிரட்சியைத் தந்தாலும் அவர்கள் மிரண்டு கலையவில்லை. விடுதலை செய்யச் சொல்லி தொடர்ந்து குரல் எழுப்புகிறார்கள்.

அப்போது பரமக்குடி காவல் ஆய்வாளர் சிவகுமார், ஆயுதப்படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கணேசன், துணை ஆணையர் செந்தில் வேலன் ஆகியோர் அவர்களைக கலைந்துபோகச் சொல்லி பேசினார்கள். அவர்கள் கலைய வில்லை. உரிய அதிகாரிகளை வைத்து பேச்சு வார்த்தை எதுவும் அவர்களிடம் நடத்தாத காவல் துறை அதிகாரிகளில் செந்தில் வேலன், நிராயுதபாணியாக இருந்து சாலை மறியல் செய்தவர் கள் மீது திடீரென்று தாக்குதலைத் தொடங்கியதும் மற்றவர்கள் எதிரே இருந்தவர்களை ரவுண்டு கட்ட ஆரம்பித்துவிட்டனர். இதை எதிர்பார்த்திராத சாலைமறியல் செய்தவர்கள் நாலா புறமும் சிதறி ஓடி... கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து காவல்துறை ஆட்கள் மீது எதிர்தாக்குதல் நடத்த...

திடீரென்று துப்பாக்கிகள் முழங்கும் சத்தமும், போலிஸ் பூட்ஸ்களில் கல்லும் மண்ணும் நெறிபடும் சத்தமும் ஒருபுறம் எழ, மறுபுறம் குண்டடிபட்டுக் கீழேவிழுந்து கதறும் ஓலமும், அதைப் பார்த்து மரண பீதியில் அலறிக்கொண்டு மக்கள் ஓடும் அவலமும் நடந்தேறியது.

மக்கள் சகஜமாக வந்துபோய்ப் புழங்கிக் கொண்டிருக்கும் ஓரிடம், கொஞ்ச நேரத்தில் காவல் துறையினரால் எதிர்த்து நிற்க ஆளில்லாதப் போர்க்களமாக ஆக்கப்பட்டிருந்தது. ஐந்து முனை ரோட்டில் எங்கு பார்த்தாலும் கற்கள். அறுந்த செருப்புகள். கிழிந்த ஆடைகள். அடித்து உடைக் கப்பட்ட சைக்கிள்கள். இருசக்கர மோட்டார் வாகனங்கள். கிழித்து வீசப்பட்டு கொழுந்துவிட்டு எரிந்த பிளக்ஸ்கள். கிழித்துக் கொண்டுவரப்பட்ட பிளக்ஸ் துணிகளால் மூடப்பட்ட பிணங்கள். துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பு, தங்கள் சொந்தவேலை விஷயமாக ஐந்துமுனை ரோட்டைக் கடந்து, சாலை மறியலை வேடிக்கைப் பார்த்தபடி போனவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தார்கள்.

உக்கிரமடைந்தக் காவல்துறை கண்ணில் பட்டவர்களையெல்லாம் விரட்டிவிரட்டி அடித்தது. மண்டை உடைந்தவர்கள்; கைகால்களில் சதை பிய்ந்துத் தொங்கியவர்கள்; கால் உடைந்தவர் கள்; புட்டத்திலும் முதுகிலும் அடிவாங்கி அலறியபடி ஓடி ஒளிந்தவர்கள்; கை ஓயாத காவல் துறை நகரின் நாலாபக்கமும் சுழன்று அசுர ஆட்டம் ஆடியது.

காக்கித் தாண்டவம் முடிந்து நகரம் நாசமாகி வெறிச்சோடியபோது, ஊருக்குள் வந்தவர்களைத் தேடி வரும் உறவினர் கூட்டம் பதற்றத்துடன் ஒவ்வொரு இடமாய் அலைந்து திரிந்தது. காயம் பட்டவர்களையோ... குண்டடிபட்டுச் செத்துக் கிடந்தவர்களையோ... அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் வருவதற்கு முன்பாகவே அடையாளமற்றுச் செத்துக் கிடந்த வர்களை ஆளுக்கு ஒரு கைபிடித்து காவல்துறையே அப்புறப்படுத்தி, அங்கிருந்த பிளக்ஸ் களையே கிழித்து மூடிப்போட்டிருந்தது. தரையில் பிளக்ஸ்களுக்குக் கீழே மறைக்கப்பட்டிருந்த பிணங்கள் யார் கண்ணுக்கும் தட்டுப்படவில்லை. அவர்கள் வேறு இடங்களைத் தேடியோ... 'அப்பாடா... நம்மாளுக்கு ஒண்ணும் ஆகலை' என்றோ ஆறுதல்பட்டுக்கொண்டு போனார்கள். ஆனால் அந்த ஆறுதல் நெடுநேரம் நீடிக்கக் கூடியதாக இருக்கவில்லை.

நடந்த முடிந்த இந்த சம்பவம் இருவேறு சாதிகளுக்கு இடையிலான மோதல் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அதற்கான பலிகளும் இல்லை. இது கைது செய்யப்பட்ட தலைவரை விடுதலை செய்யச் சொல்லி, சாலை மறியல் செய்த தேவேந்திர குல வேளாள மக்கள் மீது காவல்துறை நடத்திய அதிகாரத் தாக்குதல்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு அருகிலிருக்கும் பசும்பொன்னில் நடக்கும் உ.முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை, அரசு விழாவாக நடத்தப்படுகிறது. அதற்கு தமிழகத்திலுள்ள அத்தனை அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிறமாநில அரசியல் பிரமுகர்களும் வந்துபோகிறார்கள்.

முக்குலத்து இனமக்கள் உ.முத்துராமலிங்கத் தேவரை வழிபடுவதுபோல தேவேந்திர குல வேளாள மக்கள் இமானுவேல் சேகரனை வழிபடத் துவங்கியுள்ளனர். மக்கள் தொகை எண்ணிக்கையில் முக்குலத்தோரைக் காட்டிலும் தேவேந்திர குல வேளாள மக்களே அதிகமாக உள்ளனர். அவர்கள் தங்கள் இனத் தலைவராகக் கொண்டாடப்படும் இமானுவேல் சேகரனின் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க, அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

1988 ஆம் ஆண்டிலிருந்து தியாகி இமானுவேல் பேரவை, நினைவு நாளை அனுசரித்து வருகிறது. ஆண்டுக்காண்டு இமானுவேல் சேகரனின் கல்லறைக்கு வந்து அஞ்சலி செலுத்து பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது, அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆதிக்க சக்திகளின் கண்ணில் பொறாமையையும் நெஞ்சில் ஆற்றாமையையும் உருவாக்கியிருக்கிறது.

ஆதிக்க Œõதி வட்டாரத்தில் நாலைந்து கிராமங்களை ஒன்றுசேர்த்து 'நாடு' என்று அழைப்பது வழக்கம். அப்படி பலநாடுகள் ராமநாதபுர மாவட்டத்தில் உண்டு. அதில் முக்கியமான ஒரு நாடு, ஆப்ப நாடு. அங்கு ஒரு சங்கம் உண்டு. அதன்பெயர் ஆப்பநாடு மறவர் சங்கம். அந்த சங்கம் சில நாட்களுக்கு முன்பு தனது சாதியினருக்கு ஒரு சுற்றறிக்கை விடுகிறது. நீண்டு செல்லும் அந்த அறிக்கையில் இரண்டு தீர்மானங்களைச் செயல் வடிவாக்கும் அறிவிப்பும் இருக்கிறது. ஒன்று: ஆண்டு தோறும் அதிகரித்துவரும் இமானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கான கூட்டம் பற்றிய பொருமல். இரண்டு : இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பு செய்யவிடாமல் அரசைத் தடுப்பது குறித்துப் பேசுதல் என்று போகிறது. அங்கிருக்கும் பலநாடுகளின் சங்கங்களும் இதுபோன்ற தீர்மானங்களை நெடுநாட் களாகவே கையில் வைத்திருக்கின்றன.

இந்தத் தீர்மானங்களுக்கு அல்லது வரைவுகளுக்குப் பின்னாலிருக்கும் சாதி அரசியல் மிக முக்கியமானது. தேவேந்திர குல வேளாள மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளா தார நிலைகளில் படிப்படியாக முன்னேறி வருகின்றனர். சமூகத்தின் பிறநிலைகளில் தேவேந்திர குல வேளாள மக்களுக்கு சமூக மதிப்பு கிடைத்து இருக்கிறது. சாதியத்தின் பேரில் இதுவரை நடந்துவந்த ஆதிக்க அரசியலையும் அதன் மூலம் கிடைத்துவந்த அதிகாரத்தையும் சுயசாதி பெருமிதத்தையும் இந்த வளர்ச்சி இழக்கச் செய்வதாக இருக்கிறது.

அப்படி இழக்கும்போது புதிதுபுதிதாய் யோசிப்பதும், குறிப்பாய் மாற்று சமூகத்துத் தலைவர் களின் சிலைகளை, போஸ்டர்களை அவமதிப்பதும், உடைப்பதும், செருப்பு மாலைகள் சூட்டு வதும், அதன் வாயிலாகக் கலவரங்களுக்கு வழிவகுத்து உயிரைப் பறிப்பதுமாக, சாதியத்தின் இழிவான அரசியல் பன்முகம் காட்டியிருக்கிறது. காட்டியும் வருகிறது. இது எல்லோருக்குமே பொதுவான ஒன்று. அதன் மூலம் சாதியத்தின் கூர்முனை மழுங்கடிக்கப்படாமல் பாதுகாக்கப் படுகிறது. அதுதான் சாதியத்தின் மூலதனம். மூலதனத்தை அரச அதிகாரத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பதில் கவனமாக இருக்கிறார்கள். அல்லது இருக்க வைக்கப்படுகிறார்கள். இதற்கு இறந்துபோன தலைவர்களின் காலகட்டத்தில் நிலவிய வன்மத்தின் வெப்பம், பொத்திப் பொத்திப் பாதுகாக்கப்பட்டு, அதிகார வேட்கையுடன் திரிபவர்களால் அரசியலுக்கு தீ மூட்டி பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்தில், நடிகர் விக்ரம் நடித்த ஒரு திரைப்படம் "தெய்வத் திருமகன்' என்ற பெயரில் வெளி யாவதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. தெய்வத் திருமகன் என்ற பெயரில் அந்தப் படம் வெளியாகக் கூடாது என்பதில் ஆதிக்க சக்திகள் மும்முரம் காட்டினார்கள். கவனமாக இருந்தார்கள். பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்புதான் அந்தப் படம் திரையிட அனுமதிக்கப் பட்டது. அதன் ஒரே காரணம் நடிகர் விக்ரம் பிறந்த Œõதியின் அடையாளம் அவர், தெய்வத் திருமகன் என்ற பெயரில் நடிப்பதை ஆதிக்க சக்திகள் விரும்பவில்லை. அதேவேளையில் தேவர்மகன் என்றொரு படம். ஆதிக்க Œமூகத்திலிருந்து வந்த கமலஹாசன் நடித்து வெளியிடப்பட்டது. மிக உயர்ந்த (?) மேட்டுக்குடியைச் சார்ந்த ஒருவரால் நடிக்கப்பட்டு, தங்கள் தலைவர் பெருமிதப்படுத்தப்படுகிறார் என்பதாலேயே அந்தப் படத்துக்கு ஆதிக்கச் சமூகம் முழு ஆதரவு தந்ததை இங்கே பொருத்திப் பார்க்கலாம்.

சாதியத்தை பெரியார் தன் இறுதிமூச்சுவரை சாடியதுடன் சாதியத்துக்கு எதிரானப் பிரச்சாரத்தை செய்து வந்தார். அவர் வழி வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் சரி... அவ்வப்போது அவர் பெயரைச் சொல்லி ஆட்சி செய்பவர்களும் சரி... சுயலாப அரசியலின் இழிவான சாட்சியத்தின் ஆட்சியைத்தான் செய்துவருகிறார்கள். திராவிடக் கட்சிகள் இரண்டுக் குமே சாதியக் கட்சிகளின் தேவை அதிகமாக இருக்கின்றது. தேவையின்போது வரையறுக்கப் பட்ட, திட்டமிட்ட செயல்களால் அரசே வன்முறையை செய்து முடிக்கிறது. அல்லது செய்பவர்களை செய்யவிட்டு வேடிக்கை மட்டும் பார்க்கிறது.

பரமக்குடி சம்பவத்தில், அதிகாரத்தின் வாயிலாக அரச பயங்கரவாதம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவு மேலிருந்து வந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மைக் கருத்தா... உலவவிட்டக் கருத்தா... என்று ஆராயும் தருணம் இதுவல்ல. என்றாலும் நிறைய சந்தேகங்களையும் மேலிருந்து வந்ததாகச் சொல்லப்படும் கருத்து பூடகமாகக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. தொடர்ந்து கீழிருந்துக் கொடுக்கப்பட்டு வந்த Œõதி அழுத்தம் மேலிடத்தின் நிழலை அசைத்திருப்பதையும் அதன் மூலம் இந்த சம்பவத்துக்கான இசைவு வழங்கப்பட்டதாகவும் உணர முடிகிறது.

பரமக்குடி பயங்கரத்தில் மூன்று உயிர்கள் காவல்துறையின் குண்டுகளுக்கு சம்பவ இடத்தி லேயே பலியாகியிருக்கின்றன. இரண்டு உயிர்கள் சதை பிய்ந்து எலும்புகள் முறிந்து வாதை யினால் செத்துப்போயிருக்கின்றன. ஓர் உயிர், சம்பவம் நடந்து ஆறேழு மணி நேரத்துக்குப் பின்பு பரமக்குடியிலிருந்து அள்ளிக்கொண்டு செல்லப்பட்டு, வழியில் இளையாங்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் வாகனத்திற்குள் கிடந்து பரலோகம் போயிருக் கிறது.

இந்தப் படுகொலைகளுக்கானப் பின்னணி அரச அதிகாரத்தின் உளவியலிலிருந்து பிறந்திருப் பது கண்கூடு. இதற்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளின் ஒட்டுமொத்த எதிர் தாக்குதலாகத்தான் காவல்துறையின் இந்த ப(லி)ழிவாங்கலோ என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

கைதுசெய்யப்பட்ட தங்கள் தலைவரை விடுதலை செய்யச் சொல்லி மக்கள் திரள்வது வாடிக்கை. அப்போது உணர்வெழுச்சி உருவாவதும் இயற்கைதான். வன்முறைக்கான சாத்தியமும் உண்டு. அப்போது உருவாகும் வன்முறைப் போக்கைக் கலைப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அதன் இறுதிவடிவம்தான் துப்பாக்கி. ஆனால், அங்கு திரண்ட மக்களின் உணர்வெழுச்சியான வன்முறைப் போக்கிற்குத் தீர்வாக, காவல்துறை உடனடியாகத் துப்பாக்கிகளை கையாண்டிருக்கிறது. இது எதன் பொருட்டும் ஏற்புடையதும் அல்ல. துப்பாக்கியை எடுத்த எடுப்பிலேயே கையாண்டதன் மூலம் காவல்துறை சாதித்தது : ஆறு உயிர்களைக் கொன்றது மட்டும்தான். இதில் அதிகார முகத்தின் /ஆதிக்க சாதி முகத்தின் பிம்பம் தெரியவே செய்கிறது. மக்களாட்சி தத்துவத்தின் முகத்திரை ஜனநாயகம் கிழிந்து தொங் குகிறது.

இந்தப் பயங்கரத்தில் பலியானவர்கள் குறித்தத் தகவல்கள் மிகவும் வேதைன தருவதாக இருக்கிறது. அதிகார ஆணவத்தால் குண்டுகளை உமிழும் துப்பாக்கிகளுக்கு சுடப்படுபவர் வன்முறையாளரா என்று பார்க்கத் தெரியாது. ஆனால் அதை இயக்குபவரால் கண்டறிய முடியும். இங்கே துப்பாக்கிக்கும் அதை இயக்குபவருக்கும் தேவை, சுடப்படுவதற்கு உடல்கள் மட்டுமே. காரண காரியத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம். சொல்வதற்கு எளிதான வாசகங்கள் உண்டே. "திரண்டிருந்த வன்முறையாளர்கள் எங்களைத் தாக்கினார்கள். நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களைச் சுட்டோம்'. ஆனால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் எல்லோருமே சம்பவங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத, வன்முறையில்லாத மனிதர் களாகவே இருந்திருக்கிறார்கள்.

ஒருபுறம் ஆதிக்க சாதி நடத்தும் குருபூஜையை அரசுவிழாவாகவே நடத்தி அவர்களை ஆற்றுப் படுத்தும் அரசு, அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்வுகளின்போது உருவாகும் வன்முறையை அனுமதிக்கும அரசு, ஒடுக்கப்பட்ட மக்கள் சிறிய கிளர்ச்சியை, அதுவும் கைது செய்யப்பட்ட தங்கள் தலைவனை விடுதலை செய்யச் சொல்லி கிளர்ச்சி செய்யும்போது தடாலடியாக துப்பாக்கிகளைத் தூக்கச் செய்திருப்பது, கொடுங்கோன்மைக்கு சற்றும் குறைவில்லாததுதான். அதற்கு முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசிய பேச்சு பக்கபலமாக இருந்திருக்கிறது.

செப்டம்பர் 11 பரமக்குடி சம்பவம் இன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட பிரச்ச னையல்ல. ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், ஆதிக்க சக்திகளின் எண்ணங்களும் சாதியத்தின் வீரியமும் மாறுவதேஇல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் துயரம் நிறைந்த வாழ்வும், அவர்கள் மீதான ஆதிக்க அதிகார வன்முறையும் எல்லா ஆட்சிகளிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மதுரை இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மஞ்சூர் கிராமம். நாளொன்றுக்கு நாலாயிரம் வாகனங்கள் கடக்கும் பகுதி அது. அதிலிருந்து பிரியும் சாலையில் ஒருகிலோ மீட்டர் தூரத்திலேயே இருக்கிறது, மஞ்சூர் காலனி. மாவட்டத்துக்கே உரித்தான வறட்சியான கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். 19 வயது. தலித் பிரிவைச் சேர்ந்தவர். பொன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் காயத்ரி. 18 வயது. இடை Œõதி வகுப்பைச் சேர்ந்தவர்.

ஜெயபால் காயத்ரியை விரும்பிக் காதலிக்கிறார். அதை ஜெயபால் வீட்டில் ஏற்கவில்லை. காயத்ரியின் அம்மாவே "நல்ல பையனாக இருக்கிறான்' என்று சொல்லி மகளைக் கட்டிவைக்கிறார். ஒன்பது மாதமாகிறது, கல்யாணமாகி. இப்போது காயத்ரி ஒன்பது மாத கர்ப்பிணி. ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைச் சுமக்கிறது. தோள் கொடுக்க ஜெயபால்தான் இன்று இல்லை. மனைவியைப் பார்க்க பொன்னையாபுரம் போனவர், கலவரத்துக்குப் பயந்து ஒரு தெரு வில் ஓடிஒளிந்து, 'போலிஸ் துரத்துகிறதா?' என்று திரும்பிப் பார்க்க, காவல்துறையின் துப்பாக்கி கக்கிய குண்டு, அவர் நெஞ்சில் பாய்ந்து முதுகு வழியாக வெளியேறிவிட்டது.

ஜெயபால் அப்பா பாண்டி சொல்வதைக் கேட்போம். "துப்பாக்கியால போலிஸ் சுட்டு கலவரம் பண்ணிக்கிட்டுருக்குனு எங்களுக்குத் தெரியும். எங்க ஊர்க்காரங்க வந்து சொன்னாங்க. எங்கப் பையன் எந்தவம்பு தும்புக்கும் போகாதவன். அதனால போனவன் வந்துருவான்னு சும்மா இருந்துட்டோம். சாயங்காலம் அஞ்சு மணிவாக்குல பையனோட செல்லுலருந்து நம்பர் அடிச் சுச்சு. எடுத்து,'எங்கப்பா இருக்க?'ன்னு கேட்டேன். பேசுனது அவன் இல்ல. இன்ஸ்பெக்டர் சிவக்குமார்னு சொன்னாரு. எம்பையன் பேரு கேட்டாரு. சொன்னேன். ஊரு கேட்டாரு. சொன்னேன். போன் கட்டாயிருச்சு. எனக்கு பயமும் வந்துருச்சு. எதுக்கு போன் போட்டு கேக்க ணும்ன்னு நெனைச்சுக்கிட்டே பரமக்குடிக்கு ஓடுனா, அஞ்சு முக்கு அப்டிக் கெடந்துச்சு. அங்கன இருந்த போலிஸ்கிட்டக் கேட்டப்ப, 'கலவரம் செய்யச் சொல்லி அனுப்பி வைச்சுட்டு இப்ப வந்து எங்கக்கிட்ட கேக்குறியா?'னு என்னியவே கேக்குறாங்க. போ... போய் காட்டுப் பரமக்குடி ஆஸ்பத்திரில பாருன்னு சொன்னாங்க. அங்கன எம்புள்ளை இல்ல. புள்ளையக் காணாமேன்னு தேடுனப்ப அங்கனருந்த ஒரு ஆளு சொன்னாரு. செத்தவங்க கைகாலப் புடிச்சு செத்த நாய தூக்குற மாதிரி தூக்கிட்டுப் போனாங்க. சாக்கடைக்குள்ளாற தேடிப் பாருன்னு. அங்கனயும் தேடுனேன். எங்கன பாத்தாலும் ரத்தம். ஆனா எம்புள்ளை அங்கன இல்ல. கொஞ்ச பேத்தை ராமநாதபுரத்துக்கு தூக்கிட்டுப்போனதா சொன்னாங்க. அலறிய டிச்சுக்கிட்டு ராமநாதபுர ஆஸ்பத்திரிக்கு ஓடுனா... அங்கன உள்ளேயே விடமாட்டேன் னுட்டாங்க. ராத்திரி முழுசும் அங்கனயே இருந்தோம். மறுநாள் திங்கக்கிழமை சாயங்காலம் அஞ்சு மணிக்குத்தான் எம்புள்ளையோட முகத்தையே பாக்க முடிஞ்சுது. அதுவரைக்கும் அது எம்புள்ளையா இருக்காது. எங்கிட்டுருந்தாச்சும் 'அப்பா'ன்னு சொல்லிக்கிட்டு வந்துருவான்னு நெனச்சுக்கிட்டே இருந்தேன். ஆனா மனசுல ஒரு ஓரத்துல நம்ம புள்ளையா இருக்குமோன்னு தவிப்பும் இருந்துச்சு. அங்கேருந்த இன்ஸ்பெக்டருக்கிட்ட ஒரு தடவை பாத்துருறேனேன்னு சொன்னதுக்கு, 'ஒம்மகன்னு என்னடா நிச்சயம்?'ன்னு என்னை உள்ளாறயே விடல. பாடிய போலிஸ்காரங்க 40, 50 பேர்வரைக்கும் கொண்டு வந்து குடுத்தாங்க. எரிச்சிறணும்னு சொன்னாங்க. அவங்கள ஊர் எல்லையிலேயே தடுத்துட்டோம். ஊருக்குள்ளாற வரவிடலை. பாடிய எரிக்கலைய்யா. பொதைச்சுட்டோம். ஆளு அப்டியிருப்பான். குண்டு தொலைச்சுதுல கையகலத்துக்கு சதை பிய்ஞ்சுபோயிருந்துச்சு"

பெற்ற பிள்ளையை இழந்த தந்தையின் கதறல் அப்படியென்றால், திருமணத்துக்குப் போன உறவுக்காரர் இருவரில் ஒருவர் குண்டடிபட்டுச் சாக, அதைப் பார்த்துத் திகைத்துப் போன சின்னாள் சொல்கிறார். "மதுரைல கல்யாணம். ஆர்த்தி ஓட்டல்ல சாப்பாடு. பத்துக்கெல்லாம் வெள்ளைச்சாமியும் நானும் பஸ் ஏறிட்டோம். ஓட்டப்பாலத்துக்கிட்டயே பஸ் நின்னுருச்சு. எல்லாரும் எறங்கி நடந்தாங்க. வெள்ளைச்சாமியும் நானும் எறங்கி நடந்தோம். எனக்கு எழுவது வயசு. கொஞ்சம் மெதுவா நடந்தேன். ஒரு நாலடி முன்னால வெள்ளைச்சாமி போனாரு. திடு திடுன்னு ஏழெட்டுப் பத்து போலிஸ்காரங்க ஓடியாந்தாங்க. கையில் தடி, லத்தின்னு வெச்சுக் கிட்டு, போற வர்ற ஆளுகளைக் கண்ணு மண்ணு தெரியாம அடிச்சாங்க. முன்னாலப்போன வெள்ளைச்சாமிக்கு செமத்தியா அடி. அடிபட்டவங்க எல்லாரும் தப்பி ஓடுறாங்க. நான் அடிக்காதீங்கன்னு கத்துனேன். எனக்கு குண்டில நாலு அடி. அடின்னா அப்டியொரு அடி. இதுக்கு முன்னால நான் அப்டியொரு அடி வாங்குனதே இல்ல. பக்கத்துல சாக்கடை. நான் அதுல குதிச்சு பக்கத்து வீட்டுக்குள்ளாற பூந்துட்டேன். கம்பிக்கதவு போட்ட வீடு. அங்கனருந்து பாத்தா என்னோட வந்த வெள்ளைச்சாமிய போலிஸ்காரங்க மாத்தி மாத்தி அடிக்கிறாங்க. அவரு மயங்கி விழுந்துட்டாரு. அங்கனயே வெயில்ல அவரு கெடந்தாரு. அவரு மயங்கிக் கெடக்குறதப் பாத்ததும் நான் பதுங்கியிருந்த வீட்லருந்து வெளியே வரலாம்ன்னு வந்தேன். வீட்டுக்காரங்க விடமாட்டேன்னுட்டாங்க. 'போனா... போலிஸ் அடிச்சுக் கொன்னுரும்'ன்னு என்னையத் தடுத்துட்டாங்க. அங்கனருந்து பாத்தா எல்லாமே தெரியுது. யாரோ ஒருத்தரு 'ஏம்ப்டி செய்றீங்க?'ன்னு கேட்டாரு. அவருக்கும் செமத்தியா அடி. போலிஸ்காரங்களே தீயணைக்குற தண்ணீ லாரிக்கும் ஊதாக்கலர் லாரிக்கும் தீ வெச்சுக்கிட்டாங்க. அப்ப அங்கன ஒரு ஆளையும் செமத்தியா அடிச்சாங்க. அப்புறமா ஒரு போலிஸ் லாரில அங்கன கெடந்தவங் களையெல்லாம் செத்த நாய்களை தூக்கிக் குப்பை லாரில வீசுற மாதிரி போட்டு எடுத்துக்கிட்டு போனாங்க. வெள்ளைச்சாமி கெடந்த எடத்துல அவரக் காணாம்''

மறுநாள் காலை பரமக்குடியிலிருந்து 6 மணிநேரம் நடந்தே ஊருக்கு வந்துவிட்ட சின்னாள், திங்கட்கிழமை மதியம் 1 மணிவாக்கில் நடந்த சம்பவத்தைச் சொல்ல, தொலைக்காட்சிப் பெட்டிகளும் அந்தச் செய்தியைச் சொன்னனவாம். சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சாட்சியாக சின்னாள் இருக்கிறார்.

வெள்ளைச்சாமியின் பிணம் பல இடங்களில் தேடியலைந்த பின், மதுரை ராஜாஜி மருத்துவ மனை சவக்கிடங்கில் இருப்பதாக சத்திரக்குடி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தகவல் தந்தாராம். சத்திரக்குடி போலிஸ் ஏற்பாடு செய்து தந்த வேன் மூலம் மதுரைக்குப் போய் வெள்ளைச்சாமி யின் பிணத்தை வாங்கியிருக்கிறார்கள். அதற்கு போலிஸ் ஆறாயிரம் ரூபாய் வசூல் செய்து கொண்டதாம்.

மகன் கல்யாணத்துக்குப் பந்தக்கால் நட்டுவிட்டு, பத்திரிக்கை கொடுக்க பரமக்குடிக்குப் போன வர் பல்லவராயநேந்தல் கணேசன். அதிமுக பிரதிநிதி. அவர் வயிற்றில் பாய்ந்த குண்டும் முதுகு வழியாக வெளியேறியிருக்கிறது. சம்பவங்களுக்கு சற்றும் தொடர்பில்லாத ஆட்கள் பலியாகியிருப்பது மட்டுமன்றி, பலியானவர்களெல்லாம் தேவேந்திர குல வேளாள மக்களாக மட்டுமே இருப்பதும் கேள்விக்கு உரியதாக இருக்கிறது.

பரமக்குடி சம்பவம் நடந்த அதேநேரத்தில் மதுரை சிந்தாமணி புறவழிச் சாலையிலும் காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. அதில் இரண்டு பேர் படுகாயமடைந்தார்கள். இந்த இரண்டு இடத்திலும் ஒரே நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவு அல்லது மனநிலை எங்கிருந்து அல்லது எப்படி உருவானது என்பது ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது.

அன்று மாலை ஆறு மணியளவில் இளையாங்குடி காவல்நிலையம் அருகில் ஒரு துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. ஆனந்த் என்ற 16 வயது இளைஞர் கையில் குண்டு பாய்ந்து, மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் இளங்கோ என்பவரால் அந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி தியாகி இமானுவேல் பேரவையின் ஒன்றியச் செயலாளர் வி.முனியாண்டி சொல்கிறார். "எங்க அமைப்பு சார்பா மூணு பேனர்கள் வெச்சுருந்தோம். அதை போலிஸ் அறுத்து வீசிருச்சு. சம்பவத்தன்னிக்கு 54 வேன்கள்ல 1500க்கும் அதிகமான நாங்க பரமக்குடிக்கு புறப்படுறதுக்குத் தயாராகிட்டு இருந்தோம். அப்ப எங்களுக்கு ஜான் பாண்டியன் கைது ஆனத் தகவல் வந்துருச்சு. அடுத்து துப்பாக்கிச் சூடு தகவலும் வந்துருச்சு. நாங்க இங்கேயே இருந்துக்கிட்டு அடுத்த என்ன செய்றதுங்க்ற தகவலுக்காகக் காத்துக்கிட்டு இருந்தோம். இந்தப்குதி முழுசும் போலிஸ் குவிஞ்சுருந்துச்சு. டிஎஸ்பி இளங்கோ இங்குட்டும் அங்குட்டுமா போய்வந்துகிட்டு இருந்தார். என்னியக் கூப்புட்டு எதுவும் செஞ்சுறாதீங்கன்னு வேற சொன்னாரு. நான் அதெல்லாம் எங்க ஆளுக எதுவும் செய்ற ஐடியால இல்லன்னு சொன்னேன். அனாலும் அவரு இங்குட்டும் அங்குட்டுமா போய் வந்துகிட்டுதான் இருந்தாரு. அந்தப்போக்கு எனக்கு சந்தேகமாவே இருந்துச்சு. அதுனால நாங்களும் அவரு பின்னாலயே போய்ட்டு வந்துகிட்டு இருந்தோம். இதுலயே சாயங்காலம் ஆறு மணியாயிருச்சு. இளையாங்குடி பைபாஸ் ரோட்டுல ஒரு இருபத் தேழு பசங்க நின்னுகிட்டுருந்தாங்க. எல்லாரும் சின்னச்சின்னப் பசங்க. அப்ப டிஎஸ்பி இளங்கோ அந்தப் பக்கமா வந்துருக்காரு. அவரப் பாத்ததும் பசங்க சிதறி ஓடியிருக்காங்க. அப்ப ஆனந்த்ங்க்ற பயலோட செருப்பு அறுந்து போயிருச்சு. அதை எடுக்க அவன் குனிஞ் சுருக்கான். அவன் எதையோ எடுக்குறான்னு நெனச்சுக்கிட்ட டிஎஸ்பி அவனைப் பாத்து சுட்டுட்டாரு. அது அவன் கையில பாஞ்சுருச்சு. தகவல் கெடைச்சு நான் ஓடிப்போய் என்ன சார் அப்டி பண்ணீட்டீங்கன்னு கேட்டதுக்கு அவரு வில்லன் மாதிரி சிரிக்கிறாரு. நாங்க ஆளுக திரண்டுட்டோம். அப்ப ஒரு வேன் இங்கன ரொம்ப நேரமா நின்னுக்கிட்டு இருந்துச்சு. அதுக்குள்ளாறருந்து ஏதோ சத்தம். என்னன்னு எட்டிப்பாத்தா குப்பை மாதிரி ஏழெட்டுபேரு ஒண்ணுமேல ஒண்ணாக் கெடக்குறாங்க. கைகாலெல்லாம் ரத்தம். என்னசார் இப்டிப்போட்டு வெச்சுருக்கீங்கன்னு கேட்டதுக்கு அதுக்கும் சிநூந்ச்சாரு. எனக்கு பக்குன்னுருச்சு. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போவோம் சார்ன்னதுக்கும் சிரிச்சாரு. இந்த ஊர்ல தமுமுக ஆளுங்க கொஞ்சம் ஆக்டிவா இருப்பாங்க. அவங்களுக்கு போன் போட்டேன். அவங்க அம்பது அறுபது பேர் வந்துட்டாங்க. அவங்களும் ஆஸ்பத்திரில சேக்காம இப்டிப்போட்டு வெச்சுருக்கீங்களேன்னு கத்துனதும் எல்லாத்தையும் வெரட்டி அடிச்சுட்டு வேனை கௌம்பிட்டாங்க. அப்ப வேன்ல கெடந்த தீர்ப்புக்கனிங்க்கறவரு செத்துட்டாரு. அடிபட்டு ஆறேழு மணி நேரம் வரைக் கும் எதையும் கண்டுக்காம போட்டு வெச்சுருந்து கொன்னுட்டாங்க. அப்பவே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருந்தா அவரக் காப்பாத்தியிருக்கலாம்" என்றார்.

இமானுவேல் சேகரனுக்குப் பிறகு அந்தப் பகுதியில் செல்லத்துரை எனும் ஆசிரியர் செயல்பட்டு வந்திருக்கிறார். அவரும் படுகொலைக்கு உள்ளாகிறார். அவரது மகன் காமராஜ் என்பவர் சொல்லும் விஷயங்கள் மிக முக்கியமானதாகப்படுகிறது. "தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எங்கப்பா தொடர்ந்து போராடுனார். அவரைக் கொன்னுட்டாங்க. ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்ட எஸ்பியா செந்தில்வேலன் இருக்கும்போது, எங்கப்பா நினைவுநாள் பூஜைக்கு அனுமதி கேட்டேன். 'ஒங்கப்பா நினைவு நாள்ன்னா அத வீட்டுல வெச்சுக் கொண் டாடு'னு சொல்லி என்னைய வெளில அனுப்பிட்டாரு. ஆனா நாங்க அதையும் மீறி நடத்து னோம். இந்தவருஷ இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு போக்குவரத்து ஊழியர் சங்கம் 'தியாகி தெய்வத்திருமகன் இமானுவேல் சேகரன்'ன்னு ஒரு பிளக்ஸ் வெச்சாங்க. உடனே முக்குலத்தோர் போலிஸ்ல ஒரு புகார் கொடுத்து, அதை அகற்றச் சொன்னாங்க. தெய்வத்திரு மகன்ங்க்ற வார்த்தையை எடுத்துட்டுதான் அந்த பிளக்ஸ் அங்கே வைக்க முடிஞ்சது"

இதுபோன்ற சம்பவங்கள் காவல்துறை அதிகாரிகளின் அதிகாரச் செயல்பாட்டுக்கு பின்புலமாக இருக்க வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது. அதை சம்பவம் நடந்து ஆறு மணி நேரத்துக்குப் பின் காவல் ஆய்வாளர் சிவகுமார் கொடுத்திருக்கும் புகாநூந்ன் அடிப்படையில் பதிவு செய்யப் பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையில் காணமுடிகிறது. துப்பாக்கி குண்டுகளுக்கும் குண்டாந்தடிகளுக்கும் பலியான ஆறுபேர் மட்டும் பெயரும் அடையாளமும் தொந்ந்த ஆட்களாக இருக்கிறார்கள். வழக்கு பதியப்பட்ட 2000 பேரும் அடையாளம் தெரியாதவர்களாக இருப்பது, புதிர்தான்.

இதைத்தான் இளையாங்குடி சம்பவமும் காட்டுகிறது. நிராயுதபாணியாக நின்றிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து இரண்டு நாட்களுக்குப் பின் சம்பவம் நடந்த இடத்தில், கற்களை யும், செருப்புகளையும் போட்டு சம்பவத்தின்போது அவர்கள் கற்கள் எறிந்ததாகவும் தற்காத்துக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செட்அப் நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது.

அதுபோல பார்த்திபனூருக்கு அருகிலுள்ள எச்.பரளையிலும் ஆண்கள் யாருமில்லாத நேரத் தில் போலிஸே கலவரக்காரர்கள் வேடமிட்டு கற்களை வீசியும் கம்புகளால் தாக்கியும் மாறி மாறி நடித்து, அதை பதிவு செய்துகொண்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

பரமக்குடி தாசில்தார் எழுத்து மூல உத்தரவு கொடுத்த பின்பே துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டதாக ஆய்வாளர் சிவகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. தாசில்தார் மணியிடம் அதுபற்றிக் கேட்டால், வாயைத் திறக்க மறுக்கிறார். சம்பவத்தை நடத்தி முடித்துவிட்டு அவாந்டம் உத்தரவு வாங்கியதாக அதிகாரத்தரப்பிலிருந்தே தகவல்கள் கசிகின்றன.

அதுபோல இளையாங்குடியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று காவல் துறை தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலர் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அறிக்கை கொடுத்துள்ளார்.

"சாதிகள் இல்லையடி பாப்பா...' என்று சொன்ன பாரதியின் பிறந்த நாளில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது, வெட்கப்பட வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நாம் மனிதர்கள் என்று நாம் அழைக்கப்படுகிறோம்.


நன்றி -கீற்று வழியாக எஸ் அர்ஸியா..

மன்னை முத்துக்குமார்

`தனித் தொகுதி என்ற ஒன்று தேவையில்லை’ என்று சொன்ன இந்த குடிகார கூமுட்டையை யாரும் பெரிதாக கண்டிக்காததால் நான் செருப்பால் அடிக்கிறேன்..
மன்னை முத்துக்குமார்
சர்வதேச மரண தண்டனை ஒழிப்பு நாள் கருத்தரங்கம் : -
தோழர் கொளத்தூர் மணி உரை

மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
Justify Full
சற்குணத்தின் போர்க்குணம்தான் ‘வாகை சூட வா’இந்தியத் திரைப்பட வரலாற்றில், மூத்த படைப்பாக்கப் பெருமையை தமிழ் மொழி பெற்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதன் பண்பாட்டு ஆழம், இது வளர்த்து வைத்துள்ள பல்வேறு கலைகளின் வளர்ச்சி ஆகியவை, இந்த பெருமைக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. சினிமா என்னும் திரைப்படம், பல்வேறு கலைப்படைப்புகள் ஒன்று கூடி சேர்ந்து, இசைப்பதைப் போன்றது தான். போதிய கலை, வளர்ச்சி பெறாத மொழிகளால் சிறந்த திரைப்படங்களைப் பெற்றெடுக்க முடியாது.

கேமராவின் மொழி தான் சினிமா என்று கூறுவார்கள். இதில் உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், ஆழ்ந்து யோசித்துப் பார்க்கும்போது, பண்பாட்டின் மொழியாகவே சினிமாவை நான் உணருகிறேன். இன்றைய தமிழ் சினிமாக்கள், தமிழ் பண்பாட்டை அப்படியே, படுகொலை செய்கின்றன. கசாப்பு கடைகளில் கறியை கொத்திய ஆணவத்தில் கறிக்கடை கத்தி சத்தம் எழுப்புவதைப் போல, தமிழ்ப் பண்பாட்டைக் கொத்துக் கறியாக்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் சத்தம் செவிப் பறைகளைக் கிழித்துக் கொண்டிருக்கிறது.இந்தப் பின்னணியில் தான், தமிழ்ப் பண்பாட்டின் ஆழம் அறிந்து, அதனையே தன் மொழி கொண்டு, 'வகை சூட வா' என்ற கலைப்படைப்பை உருவாக்கியிருக்கிறார் திரைப்பட இயக்குநர் சற்குணம். சற்குணத்தைப் போன்றவர்களால் தமிழ்த் திரைவுலகின் எதிர்காலத்திற்கு மிகுந்த நம்பிக்கை கிடைத்து வருகிறது. கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் விட, நமது எதிர்காலம் மிகுந்த வலிமை கொண்டதாக இருக்கும் என்பதற்கு இவர்களே ஆதாரங்கள்.

கூட்டமாக நின்று தங்கள் உயிரை மண்ணுக்காக, ஈகம் செய்த முள்ளிவாய்க்கால் வரலாற்றுக்குப் பின், நாம் வேர் பரப்பி நிற்கும் மண் மீதான வேட்கை கூடுதலாகிறது. வாகை சூட வா திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம். அது ஒரு அழகிய கிராமம். அந்த மண்ணின் வரலாறு அறிந்த மூத்த மனிதர். மண்வாசணை நுகர்ந்து, வாயில் போட்டு ருசித்து இதை விடவும், சிறந்த மண் எங்கும் இல்லை என்ற போது மெய் சிலிர்த்துப் போகிறது. அந்த மண் தான் காளவாய்க்குள் சென்று திரும்பிய பின் யாராலும் உடைக்க முடியாத செங்கல்லாக மாறுகிறது.

இந்த செங்கல்லின் வாழ்க்கை தான் திரைக்கதை. செங்கல் சூளையில் வெந்து மடியும் மக்கள் வாழ்க்கைப் பற்றிய ஆழமான பதிவுகள் தமிழில் இல்லை. அந்தக் குறைபாட்டை சற்குணம் இப்பொழுது போக்கியிருக்கிறார். செங்கல் சூளைகள் கொத்தடிமைகள் மிகுந்த உலகம். சென்னை பெரு வளர்ச்சியில் செங்கல்லுக்கு முக்கியமான பங்கு உண்டு. சென்னையைச் சுற்றியிருக்கும் வற்றாத நீர்நிலைகள், வளம் மிகுந்த மண் ஆகியவற்றால் செங்கல் சூளைகள் வளர்ந்தன என்றால், அந்த சூளைகளால் தான் சென்னை நகரம் வளர்ந்தது. இன்று நாகரிகம் பேசி சொகுசாக வாழ்ந்து வரும் சென்னைவாசிகள் இந்த உண்மையை அறிந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

சென்னையைச் சுற்றி, செங்கல் சூளைக்கு விறகுகளை லாரிகளில் ஏற்றி வருவதைப் போல, தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் கொத்தடிமைகள் ஏற்றிவரப்படுவார்கள். இவர்கள் பிரச்சனையில் தொடர்ந்து தலையிட்டு வந்துள்ளது இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி. ஒரு தருணத்தில், வாங்கிய கடனுக்கு வேலை செய்யவில்லை என்று மனைவியையும் பெற்ற பிள்ளைகளையும் சிறை பிடித்து விட்டான் ஒரு செங்கல் சூளை முதலாளி என்று, கணவன் மட்டும், கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் கதறிக் கதறி அழுததை என் ஆழ்மனம் அப்படியே பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். வாகை சூட வா படத்தை என்னால் நாற்காலியில் அமர்ந்து பார்க்க முடியவில்லை. நான் மிகவும் கொந்தளித்துப் போனேன்.

கொத்தடிமைகளை போர்க்குணம் கொண்டு எழ வைக்கிறது கதை. எதார்த்தமற்ற சண்டைக் காட்சிகள் தான் தமிழ் சினிமாவின் அருவெறுப்பு. விமானம், கப்பல், ஆயிரக்கணக்கான மனிதத் தலைகள் என்று அனைத்தையும் தூள் தூளாக்கிக் காட்டும் கதாநாயகனின் வெற்று கைகளைப் பார்த்து, மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள்; கைத்தட்டுகிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் என்ன நடக்கிறது? தன்னுடைய கன்னத்தில் எவனோ ஒருவன் அறைந்தாலும், காப்பாற்றுவதற்கு கதாநாயகனை எதிர்பார்க்கும் நிலைதான். எங்கே சென்றது அவர்களின் மண் சார்ந்த போர்க்குணம்?

உலகப் புகழ் மிக்க வங்கத்தின் இயக்குநர் சத்தியஜித் ரே, அறுபதுகளில் போர்க்குணம் மிகுந்த திரைப்படங்கள் பலவற்றை வெளியிட்டிருக்கிறார். வெகு மக்களின் கோபம் எவ்வாறு கரு கொண்டு இடி, மின்னலாக வெளிப்படுகிறது என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறார். வெகு மக்களின் கோபம் எத்தகைய விளைவுகளை உருவாக்குகிறது என்பதை உலகில் பல நாடுகளும் இந்த வரிசையில் வெளியிட்டுள்ளன. இந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் ஒரு கூட்டத்தைப் புரட்டி எடுக்கும் வீரனாகக் காட்டப்படவில்லை. அடியாட்கள் கூட்டமாக நின்று தாக்குதல் நடத்தும்போது, ஏன் என்று மட்டும் கேட்கிறான். ஊரைவிட்டுப் போ என்றபோது, கொத்தடிமையாய் மாறிவிட்ட குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தருவதை நிறுத்திவிட்டுப் போக முடியாது என்று கூறிவிடுகிறான். கழுத்து நெறிபடுகிறது. மூச்சுத் திணகிறது. உயிர் போய்விடுமோ என்ற அளவிற்கு நிலைமை மோசமாகிறது. முடியாது என்று சொல் உறுதியுடன் இவனிடமிருந்து பிறக்கிறது. இந்த வைராக்கியத்திலிருந்துதான் மக்கள் உள்ளங்களில் நெருப்பு பற்றிக் கொள்வதற்கான முதல் தீப்பொறி கிடைக்கிறது.

இந்தத் தீப்பொறியை, கால் ஊனமுற்ற சிறுவன் ஒருவன் ஒரு செங்கல்லை எடுத்து வீசுவதன் மூலம் வீசி எறிகிறான். போர்க்குணம் மிக்க இந்த காட்சித் தூண்டல் தான், போராட்டங்களில் மக்கள் தன்னம்பிக்கையைப் பெறுவதற்கு அடிப்படையாக அமைகிறது. இதில் தான் இயக்குநரின் அசாத்திய துணிச்சல் வெளிப்படுகிறது. நம்பமுடியாத கற்பனை சாகசங்கள் நிறைந்த பொய்யான கதாநாயக சித்தரிப்புகளிலிருந்து சினிமாவை திசை மாற்றம் செய்து வெகுமக்களின் வீரத்தில் இதனை கௌரவப்படுத்தியிருக்கிறார். முற்றிலும் வியாபாரமயமாகிப் போன தமிழ் சினிமாவில் இயக்குநரின் முடிவை அசாத்திய துணிச்சல் என்ற வார்த்தைகளில் தான் குறிப்பிட்டுச் சொல்ல முடிகிறது.

குருவிக்காரரின் பாத்திரப் படைப்புதான் கதை பிரதிபலிக்கும் காலத்தின் குரலாகத் தெரிகிறது. 'குருவி எல்லாம் என் காதுலே கத்து' என்கிறார். மரங்களையும் கூடுகளையும் இழந்த குருவிகள் அவருடைய காதில் மட்டும் கத்தவில்லை, நம் காதிலும் கத்திக் கொண்டிருக்கின்றன. பசுமரங்களின் அழிவும், வாழ்வின் தார்மீக வீழ்ச்சியும் இந்தப் பாத்திரத்தின் மூலம் வேதனையை நம்முடன் திரைப்படம் பகிர்ந்துகொள்கிறது. குழந்தைத் தொழிலாளிகள் பற்றிய பொறுப்புணர்ச்சி, கல்வி அறிவில்லாதவர்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள், சாதிதான் மனஅடிமைத்தனத்திற்குக் காரணம் போன்ற நிகழ்வுகளை உணர்வுப்பூர்வமாக விளக்க கதை முயற்சிக்கிறது. இது ஒவ்வொன்றிலும் இயக்குநரின் பொறுப்புணர்ச்சியைப் பாராட்டுவது நமது கடமையாகும். இந்த சமூகக் கருத்துக்கள் எதிலும் ஒரு சிதைவு கூடாது என்பதில் கதை கவனமாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊர்கள் ஒவ்வொன்றின் வரலாறும், மிகவும் தொன்மையானது. காலப் பெருவெள்ளத்தில் இவை தேக்கி வைத்துள்ள, நுட்பம் மிகுந்த பண்பாட்டுக் கூறுகள் கொஞ்சம் கொஞ்சமாக இன்று அழியத் தொடங்கி விட்டன. உலகில் பல நாடுகள் தங்கள் பண்பாட்டுத் தொன்மையை ஆவணப்படுத்தும் கடமையைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆவணப்படுத்துவதில் பொறுப்புணர்வற்றத் தமிழர்கள், பண்பாட்டு சேமிப்புகளை இழந்து, மண் தந்த வாழ்க்கையிலிருந்து தூக்கி எறியப்பட்டு, அந்நியமயமாகி வருகிறார்கள். இதற்கான மீட்பு நடவடிக்கைகளில் சற்குணத்தின் படைப்புலகு தனிக்கவனம் கொண்டுள்ளது. இன்னமும் சொல்லப்போனால், இவரது திரைக்கான இயக்கும் ஆற்றலே பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது தான். காணாமல் போய்விட்ட பண்பாட்டுக் கூறுகளை திரைப்படத்தில் காணும்போது, வெகு காலத்திற்கு முன்னரே காணாமல் போய்விட்ட உறவுகளில் ஒன்று திடீரென்று கிடைத்துவிட்டால் எந்த வகையான மகிழ்ச்சி கிடைக்குமோ, அந்த மகிழ்ச்சி எனக்குக் கிடைக்கிறது.

ஊரே ஒன்று திரண்டு, இரவு நேரத்தில் பந்தம் பிடித்து, மலையேறி, காடுகரம்பைகளைக் கடந்து, திருவிழாவில் அனைவருமாக சங்கமிப்பது எத்தகைய மகிழ்ச்சியானது. இன்றைய தலைமுறையை, இந்த மகிழ்ச்சியை ஏக்கம் கொண்டு திரைப்படத்தில் பார்க்க வைத்துள்ளார் சற்குணம். மரண நிகழ்வு, 30 ஆம் நாள் நினைவுப்படையல் ஆகியவை இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பாரி சினிமாவுக்காகத் தயாரிக்கப்படவில்லை. ஆம்பலாபட்டின் மூத்த தாய், லெட்சுமி அம்மாள் அவர்களின் நூற்றாண்டு கால சோகத்தை சுமந்த ஒப்பாரிப்பாடலுக்கு எது இணை என்று யோசிக்க வைத்துவிடுகிறது. மாப்பிள்ளைக்கு அணிவிக்க வேண்டிய தங்க மோதிரத்தை இட்லியில் வைத்து, சாப்பிடும்போது அதிர்ச்சியுறச் செய்தல், மணமகனுக்கு இலை விருந்து செய்து, அவன் உணவு சாப்பிடும் நேரத்தில், வாழை இலையில் முன்னரே கட்டி வைத்திருந்த நூலால் இழுப்பது -இப்படி திரை முழுவதும் பண்பாட்டுக் கூறுகள் நிரம்பி வழிந்து தனி கலகலப்பை உருவாக்குகிறது.

கதையின் மையம் காதல் இல்லை; வாழ்க்கை தான். கதாநாயகன் விமல் நடிப்பு மிகவும் இயல்பாகவே இருக்கிறது. களவாணி திரைப்படத்திலிருந்து மாறுபட்ட பாத்திரம் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மிகவும் பொருத்தமுற நடிப்பு அமைந்துள்ளது. கதாநாயகி இனியாவின் கெட்டிக்காரத்தனத்தோடு கூடிய குறும்பு தனித்த வசீகரத்தைத் தந்துள்ளது. கணக்கு போடும் கதாபாத்திரமான தம்பி ராமையாவின் படைப்பு ரசிக்கத்தக்கதாகவே இருக்கின்றது. இசை, ஒளிப்பதிவு இயக்குநர்கள் பாராட்டுக்குரியவர்கள். கவிஞர்கள் வைரமுத்து, வே.இராமசாமி, கார்த்திக் மேத்தா ஆகியோரின் பாடல்கள் சிறப்புக்குரியவை என்றாலும், என் தோழன் அறிவுமதியின் பாடலை நிமிர்ந்து கேட்டு, எழுச்சி பெற்றேன்.

வலுவான கதை அமைப்பு, எந்த மொதலாளியையும் நம்பாதீங்க என்ற வசனத்தின் மூலம் கூலித் தொழிலாளிகளுக்கான பாதை எது என்பதை திரைப்படம் காட்டுகிறது. ஆதிக்க எதிர்ப்பும், பண்பாட்டுப் பார்வையையும் கொண்டுள்ள ‘வாகை சூட வா’ சற்குணத்தின் தனித்துவத்தைக் காட்டுகிறது. சற்குணம் பிறந்த பூமியான ஆம்பலாப்பட்டை நான் அறிவேன். அந்த செந்நிற ஆம்பல், தன் மடல் அவிழ்த்து, சற்குணம் என்னும் கலைப் போர்க்குணத்தை பெற்றெடுத்துக் கொடுத்துள்ளது. ஆம்பல் மண்ணுக்கு மீண்டும் என் வணக்கம்.

நன்றி -தோழர் சி.மகேந்திரன், கீற்று வழியாக்....
மன்னை முத்துக்குமார்
Get this widget | Track details | eSnips Social DNA
மன்னை முத்துக்குமார்
Get this widget | Track details | eSnips Social DNA
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி பல அடிப்படை தேவைகளை பெற்றுத் தந்த இம்மானுவேல் இன்பசேகரனின் குருபூஜைக்கு ஜான்பாண்டியன் அஞ்சலி தெலுத்த வந்த போது அவரை தடை செய்தது ஜெ. அரசு காவல்துறை. அவரை கைது செய்ததை கண்டித்து 500 தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர், அவர்களை கலைந்து போக செய்ய எண்ணறற வழிமுறைகள் இருக்கையில் துப்பாக்கியை புரயோகிக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த உத்தரவை யார் கொடுத்திருப்பார்கள்? காவல்துறையினர் தன் உயிருக்கு ஊறு நேரும் தருணம் தான் ஏதோ தவிர்க்க முடியாத சமயங்களில் பயன்படுத்தலாம் என்கிறது சட்டம். அப்படி இருக்கையில் ஆறு தலித்துக்கள் எத்தனை காவலர்களை தாக்க்கி இருக்கிறார்கள்? இது திட்டமிட்ட செயல் என்றே தலித்துக்கள் கருதுகிறாகள். இது யாரை சந்தோசப்படுத்த நடத்தப்பட்ட அரச கொலை மிரட்டல்? ஆதிக்க சாதியினருக்கு இருக்கும் வாழ்வுரிமை தலித்துக்களுக்கு ஏன் மறுக்கபடுகிறது?

பரமக்குடி அரச பயங்கவாதத்தை கண்டிது தமிழ்தேசியம் பேசுவோரில் இதுவரை யாருமே ஒரு வார்த்தையளவு கண்டனமும் தெரிவிக்கவிலை , அப்ப்டின்னா தமிழ் தேசியத்தில் தலித்துக்கள் இருப்பார்களா? இருக்க மாட்டார்களா? தமிழ்தேசியம் அமைக்கும் முன்பே ஒடுக்கப்பட்ட மக்களின் மீது இவ்வளவு அக்கரைக் கொண்டுள்ள இந்த தமிழ் தேசியம் தலித்துகளுக்கு தேவை தானா? ஆதிக்க சாதியினரின் பகைமையை பெற்றுவிடக்கூடாது என்பதில் தான் தமிழ்தேசியவாதிகளுக்கு எத்தனை அக்கரை? ம்ம்ம்...பேசுங்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாலும் உங்களால் தமிழ் த்தேசியம் அமைக்க முடியாது என்பதை சவாலாகவே நான் முன்வைக்கிறேன்.

நாம் தமிழரில் (சீமான்) கூட தலித்துக்கள் இல்லாமல் போய் விட்டார்களே! அப்ப தலித்துக்கள் தமிழர் கூட இல்லையா? என்ன கொடுமை?

இந்த அரச பயங்கரவாத துப்பாக்கி சூடு தலித்துக்களுக்கு தாங்கள எந்த அளவில் இந்த (சுதந்திர?) இந்தியாவில் வாழ்கிறோம் என்று உணர்த்தி விட்டது..இனி தலித்துக்களின் உண்மையான விடுதலைய அடைய பல வகை போராட்டஙள் உருவெடுக்கும் என்பது மட்டும் உறுதி...
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
‘தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய ஆலய நுழைவுப் போராட்டத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம் காங்கியனூரில் தலித் மக்கள் மீது காவல் துறையினர் மிருகத்தனமான தடியடித் தாக்குதல் நடத்தினர். இப்போராட்டத்திற்கு தலைமையேற்ற சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதாவை காவல் துறையினர் கீழே தள்ளி, வயிற்றின் மேல் ஏறி நின்று, பூட்ஸ் கால்களால் உதைத்துள்ளனர். இதனால் அவரது கர்ப்பப்பை கடுமையாக பாதிப்படைந்து, தொடர்ச்சியான ரத்தக் கசிவு ஏற்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் சி.பி.எம். கட்சியினர் 104 பேர் கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இக்கொடுஞ்செயலைப் புரிந்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியபோதும், இதுவரை இதற்கான நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.'' – ‘தீக்கதிர்', 17.10.2009

அண்மைக்காலமாக சி.பி.எம். கட்சி, வர்ணப் பாகுபாட்டால் (வர்க்கப் பாகுபாட்டால் அல்ல) கீழ் ஜாதியாக்கப்பட்ட தலித் மக்களின் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதை வரவேற்கிறோம். ஆனால், இந்தியா முழுவதும் 25 கோடி மக்களாக ஊருக்கு அப்பால் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள தீண்டத்தகாத மக்களின் சிக்கலை, இவர்கள் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதற்கு இக்கட்சியின் புரட்சிகர கம்யூனிச செயல் திட்டங்கள் மட்டும் போதாது. புரட்சியாளர் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு செயல்திட்டங்களை ஆழமாகப் புரிந்து கொண்டு செயல்படுத்த முன்வர வேண்டும்.

‘‘உளவியல் ரீதியாக சாதியும் தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒருங்கிணைந்த முறையாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பதேயாகும். சாதி முறையை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்து தவறானது. இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன; சேர்ந்தேதான் அவை வீழும்'' என்கிறார் அம்பேத்கர் (தொகுதி 5, பக். 94).

ஆனால் தீண்டாமையை மட்டும் தனியாக ஒழித்துவிட முடியும் என்று சி.பி.எம். நம்புகிறது. அவர்களுடைய நம்பிக்கைக்காக தலித்துகள் இந்துக்களாக வாழ முடியாது. அரதப் பழசான ஆலய நுழைவுப் போராட்டங்கள், இம்மக்களை நிரந்தர இந்துக்களாக்கவே பயன்படும். கோயிலில் நுழையும் உரிமை கிடைத்தால், ஒருவன் இந்(து)திய சட்டப்படி உரிமையுள்ள கீழ் ஜாதிக்காரன் ஆகிறான். இவர்களுக்கு முன்னாலேயே இவ்வுரிமையைப் பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் உரிமையுள்ள சூத்திரர்கள்தானே! கோயில் நுழைவினால் யாரும் மேல் ஜாதியாகிவிட முடியாது; சம நிலையையும் பெற முடியாது. வேறு எதற்காக இந்த செயல் திட்டம்?

பொது இடங்களில் உரிமையைக் கோருவது ஜனநாயகத்தின் பாற்பட்டது. சாதியின் உற்பத்திக் கேந்திரமான இந்து கோயில்களில் அவ்வுரிமையைப் பெற முனைவது, இந்து மதத்தில் கீழ் ஜாதிகளுக்கான உரிமையைக் கோரி, இந்து அடிமையாக செத்துப்போவதற்கே வழிவகுக்கும். பெரியார் அயராது பாடுபட்ட சுயமரியாதை கிடைக்காது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரானாலும், பார்ப்பன மேலாதிக்கம்தான் ஒழியும். ஆனால், கீழ் ஜாதிக்காரன் மணியாட்டும் உரிமையைப் பெற்றுவிடுவதாலேயே அவனுடைய ஜாதி ஒழிந்துவிடப் போவதில்லை!

கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி, தீண்டாமையை ஒழிக்கும் சி.பி.எம். கட்சி, 14 கோரிக்கை கொண்ட பட்டியலை தமிழக முதல்வரிடம் கொடுக்கிறது. அவரும் அதை வாங்கிக் கொண்டு, 1969 முதல், தான் நிறைவேற்றிய நீண்ட பட்டியலை கொடுக்கிறார். இப்படி மாறி மாறி பட்டியல்களை வாசிப்பதாலும், மனு கொடுப்பதாலும் – தீண்டாமை ஒழிந்து விடாது. எது தீண்டாமை? பிருந்தா காரத் சட்டத்தை மீறி உத்தப்புரம் செல்கிறார். அவர் காவல் துறையால் தடுக்கப்பட்டவுடன், அவரை விடுவிக்க முதல்வர் தொலைபேசியிலேயே ஆணைகளைப் பிறப்பிக்கிறார். அவரைத் தடுத்த குற்றத்திற்காக, அடுத்த நாளே ஓர் அய்.ஏ.எஸ். தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. ஆனால், அதே கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கோயில் நுழைவுக்காக அதே சட்டத்தை மீறினால், அவரை கீழே தள்ளி, எட்டி உதைக்கிறது போலிஸ். பிருந்தா காரத்திற்கு ஒரு நீதி; லதாவுக்கு ஒரு நீதி. இதுதாண்டா தீண்டாமை!

தீண்டாமையை ஒழிக்கும் இவர்களின் பட்டியல்கள், எதைக் கிழித்துவிடும்? ஒருவனுடைய ஜாதியை அவனுடைய பிறப்பு தீர்மானிக்கும்வரை, அதற்கு இறப்பு இல்லை. இல்லவே இல்லை. அதனால்தான் தொடக்க காலங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி, எண்ணற்ற செயல் திட்டங்களை உருவாக்கி, சிந்தனை ரீதியாகவும் செயல் ரீதியாகவும் உழைத்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தையே எழுதி, அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தந்தும், இறுதியில் எந்த வழிமுறையும் பயன்படாது என நிராயுதபாணியாக பத்து லட்சம் மக்களுடன் நின்று உரத்துச் சொன்னாரே – ‘நான் இந்துவாக சாக மாட்டேன்' என்று. அந்த ஒற்றை வரியில்தான் இருக்கிறது சாதி – தீண்டாமை ஒழிப்பும், சமூக விடுதலையும்!

நன்றி --தலித் முரசு ஆசிரியர் குழு


மன்னை முத்துக்குமார்
உண்மையான சமத்துவம் இந்த சுடுகாட்டுல... !ஆமாங்க , இது சாதாரண சுடுகாடு இல்லை. திருவாரூர் மாவட்டம் , மன்னார்குடி தாலுக்கா வை சேர்ந்த தலையாமங்கலம் என்ற ஊரில் இருக்கும் இந்த சுடுகாடு -ல மிகவும் பெருமை படக்கூடிய சம்பவம் பண்னெடுங்காலமாக நடக்குதுங்க. அது தாங்க நம்ம திராவிட இயக்க ஆண்டைகள் சொல்லளவில் பிதற்றும் சமத்துவம். இங்க யாரும் சொல்லாமலேயே என் பாட்டன் பூட்டன் காலம் தொட்டே நடைமுறையில் இருக்குது, அதாவது இந்த ஊரில் வாழும் தேவர், கோனார், அம்பலக்காரர் மற்றும் பஞ்சமர் அனைவருக்கும் ஒரே சுடுகாடு தான் . இதை சமீபத்தில் கேள்விப்பட்ட எனக்கு ஒரு சந்தேகம் வந்து என் ஐயாவிடம் கேட்டேன், அது வந்து ஒரே நேரத்தில் ஒரு பஞ்சமனும் கள்ளனும் இறக்க நேரிட்டால் என்ன செய்வார்கள் என்று. அதற்கும் அவரிடம் ஒரு பதில் இருந்தது , அப்படி ஒரு சமயம் தாழ்த்தப்பட்டவரும் கள்ளரும் இறக்க நேரிட்டப்போது இருவரையும் அருகருகே வைத்து ஒன்றாக எரித்தனர் என்றார். இதுவல்லவா சமத்துவ சமூகம் ?.

வாழ்க தலையாமங்கலம் மக்கள் ஒற்றுமை, வளர்க அவர்கள் புகழ்..
மன்னை முத்துக்குமார்
மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணம் வழங்கும் விழா :-

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் ஜுன் மாதம் 19 மற்றும் 20 தேதிகளில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மற்றும் வடுகப்பட்டியில் சென்னை முழுமதி அறக்கட்டளை, போடிநாயக்கனூர் ரீமாஸ் ட்ரஸ்ட் மற்றும் சென்னை பிரீடம் ட்ரஸ்ட் இணைந்து நடத்தினோம். அதில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரனங்கள் வழங்கும் விழா தேனி மாவட்டம் -தர்மத்துப்பட்டியில் சென்ற மாதம் அதாவது ஜூலை 31 ம் தேதி எங்கள் அறக்கட்டளை நிர்வாகிகளால் நடத்தப்பட்ட்து. விழாவில் எடுக்கப்பட்ட படங்கள் கீழே..

மருத்துவர் அன்பரசு ஒரு முதியவருக்கு உபகரணம் வழங்குகிறார்.
----

நடக்க முடியாத நண்பருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கிய போது......
------
நடக்க முடியாத மற்றொரு நண்பருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கிய போது......

தொடர்புடைய பதிவுக்கு கிழே சொடுக்கவும் ...
http://oomaiyinkural.blogspot.com/2011/06/2011-19-20.html
மன்னை முத்துக்குமார்
தெய்வத்திருமகன் - உணர்வுகளின் ஃபோட்டோ காப்பி


இது ’ஐ எம் சாம்’ ஆங்கில படத்தின் தழுவல்! இருந்துவிட்டுப் போகட்டும். இப்படி ஓர் உன்னதமான படைப்பை தர, அது தழுவலானாலும் தவறில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

தெய்வத்திருமகள் படத்தின் கதையையும், சில பல காட்சி அமைப்புகளும் ’ஐ அம் சாம்’ என்ற ஆங்கில படத்தின் தழுவல்தான் என்பதை யாரும் மறுத்து பேச முடியாது. இந்த தழுவல் விவகாரங்களைப் பற்றி பலரும் பேசிக்கொண்டிருக்க, அது உருவப்பட்ட கதையாக இருந்தாலும் அந்தக் கதையின் புனிதத்தன்மை குறைந்துவிடாமல் ஒரு மரியாதைக்குறிய படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

இதுவரைக்கும் தன்னை பல படங்களில் ஓர் அசாத்தியமான நடிகராக நிரூபித்த விக்ரம், தற்போதைய தமிழ் சினிமாவின் பரபரப்பான நடிகை அனுஷ்கா, மைனாவின் மூலம் இதயங்களை கொள்ளைக் கொண்ட அமலா பால், சிரிக்கவும் சில நேரத்தில் கடிக்கவும் செய்கின்ற சந்தானம் என படத்தின் போஸ்டரே எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துகிறது.ஆனால் எந்தவித அலட்டல்களும் அலப்பறைகளும் இல்லாமல் அமைதியான முறையில் படம் ரிலீசாகி உள்ளது.

உடலளவில் வளர்ந்திருந்தாலும் மனதளவில் குழந்தையாகவே இருக்கிறார் விக்ரம் (கிருஷ்ணா). இந்த வளர்ந்த குழந்தைக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த நேரம் தன் மனைவியை இழக்கிறார் விக்ரம். குழந்தை சாராவை (நிலா) ஐந்து வயதுவரை தானே வளர்க்கிறார் விக்ரம். குழந்தை படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியை அமலாபால். அமலா பாலும் சாராவும் நண்பர்களாகவே பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் குழந்தை சாரா அமலாபாலின் அக்கா குழந்தை என்றும், அவரின் அக்கா விக்ரமை காதலித்து மணந்தார் என்றும் தெரியவர... அந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட்!

குழந்தையின் தாத்தா செல்வாக்கு நிறைந்தவர். அவர் விக்ரமிடமிருந்து குழந்தையைப் பிரித்துவிட, மனநலம் பாதிப்பான கிருஷ்ணாவிடம் குழந்தையை ஒப்படைக்க மறுத்து, அனுஷ்கா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவுக்கான வழக்கை மூத்த வழக்கறிஞர் நாசரிடம் ஒப்படைக்க, அனுஷ்கா அவ்வளவு பெரிய வழக்கறிஞரிடம் போராடி குழந்தையை கிருஷ்ணாவிடம் ஒப்படைப்பதும், அதன் பிறகு நடப்பதுமே கதை.

தமிழ் சினிமாவின் வழக்கமான காதல், மோதல் விஷயங்களை ஓரம்கட்டிவிட்டு ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசத்தை ஹீரோயிசமாக மையப்படுத்தி எடுத்த விஜய்யின் தில்லுக்கு ஒரு சபாஷ்!

விக்ரமின் நடிப்பு... கேட்கவா வேண்டும்! அசத்தியிருக்கிறார் மனிதர். கோர்ட்டில் கேட்கிற கேள்விகளுக்கு அவர் கையை பிசைந்தபடி பதில் சொல்லும்போது அவரின் கண்கள் மட்டும் அல்ல, அனைவரின் கண்களும் ஈரமாகியிருந்தன. ஆனால், தன் நடிப்பில் விக்ரமிற்கே சவால் விட்டிருக்கிறார் சிறுமி சாரா. பிரிவின்போது இருவரும் நிலாவைப் பார்த்து பேசும்போது ஆயிரம் அழகான கவிதைகள் இதயத்தில் வலம்வருகின்றன.

அனுஷ்காவும் அமலா பாலும் கொடுத்ததை சிறப்பான முறையில் செய்திருக்கிறார்கள். ஆபாசம் கலக்காத அனுஷ்காவை காண்பித்த இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் ஒரு சல்யூட். சந்தானம், கதைக்களத்தின் சீரியஸ்னஸ் கருதி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் முதல் பாதியில் சிரிக்க வைக்கிறார்.

’தாயாக தந்தை மாறும் புது காவியம்! இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்!’ என்ற முத்துக்குமாரின் உணர்வான வரிகளுக்கு உயிர் சேர்த்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். நிரவ் ஷாவின் கேமரா இமைகளுக்குள் புகுந்து இதயத்தில் தங்கிவிடுகிறது.

எல்லாம் சரி! ஆனால் இது ஆங்கில படத்தின் கதை என்பதே இந்த படைப்பின் மீது விழுந்திருக்கும் காயம். பல ஹாலிவுட் கதைகளை ரிபீட் அடித்து கமர்ஷியல் பஞ்சாமிர்தமாக்கும் படங்களுக்கு மத்தியில் இது பரவாயில்லை என்றே இதயத்தை தேற்றிக்கொள்வோம்.

தெய்வத்திருமகன் - வார்த்தைகளால் எழுத முடியாத உணர்வுகளின் ஃபோட்டோ காப்பி
நன்றி- நக்கீரன்.
-------

இந்த தெய்வத்திருமகன் , டாக்டர் சீயான் விக்ரம்,குழந்தை நட்சத்திரம் சாரா, ஜி.வி பிரகாஷ் ,பாடலாசிரியர் நா.முத்துக்குமார் ஆகியோருக்கு தேசிய விருதை பெற்றுத்தரும்.

ஊமையின்குரல்
மன்னை முத்துக்குமார்
வெண்மணி முதல் கயர்லாஞ்சி வரை:
தலித்துக்களுக்கு எதிரான வன்முறையின் வரலாறு


2006 செப்டம்பர் 29 அன்று கயர்லாஞ்சில் நிகழ்த்தப்பட்ட தலித் படு கொலைகள் குறித்த முழுமையான தகவல்களைத் திரட்டி, அதன் அடிப்படையிலான ஒரு சமூகவியல் ஆய்விற்கு தற்போதைய நிலைமைகளை உட்படுத்தும் வகையில்,நாட்டின் முக்கிய தலித் செயல் பாட்டாளர்களில் ஒருவரான ஆனந்த் டெல்டும்டே எழுதிய புத்தகம் கயர்லாஞ்சி: எ ஸ்டிரேஞ் அண்ட் பிட்டர் கிராப். (khairlanji: A Strange and Bitter Crop, Anand Teltumde, navayana publising, NewDelhi. 2008).

மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டம், மொஹாடி தாலுகாவிலுள்ள குக்கிராமம் கயர்லாஞ்சி. பையாலால் போட்மாங்கே என்ற தலித் குடும்பத்தினர் மீது அக்கிராமமே வன்மம் கொண்டு பலி தீர்த்த வரலாற்றுப் போக்குகளையும், சமூகப்படிநிலைகளின் வன்மங்களை யும், முக்கிய அரசியல் கட்சிகள் மட்டுமல் லாமல், அரசு (காவல்துறை), சட்டம் (நீதி மன்றம்), ஊடகம் ஆகிய அரசமைப்புக ளும் அதற்கு எவ்வாறு துணை போயின, இதுகுறித்த தகவல்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் இருட்டடிப்பு செய்தன, நீதியைத் தாமதப்படுத்தி வருகின்றன என்பதையும் இப்புத்தகம் புள்ளிவிவரப் படுத்துகிறது. கயர்லாஞ்சி வன்கொடுமை மீது தலித் அமைப்புகள் தொடுத்த எதிர்வினைகள், தாக்குதல்கள் மூலம் அரசு எந்திரம் அதை எதிர்கொண்ட விதம் குறித்தும், தலித் மீதான வன்முறைகள் குறித்த செய்திகளை வெகுமக்கள் ஊடகங்கள் ஏன் பாகுபாட்டுடன் அணுகுகின்றன என்பதையும் ஆய்வு செய்கிறார்.

தலித்துகளின் துயரங்களைக் குறைப்பது தொடர்பான அரசமைப்புச் சட்ட நிவாரணங்கள் எவ்வாறு போதுமானவையாக இல்லை; சமூகப் பாகுபாடுகளில் இருந்து அம்மக்களைப் பாதுகாக்க ஏன் இயலவில்லை ஆகியவற்றுடன் கயர்லாஞ்சி படுகொலைகளின் அரசியல் பொருளாதாரப் பின்னணியையும் ஆராய்கிறார். முக்கியமாக விடு தலைக்குப் பிந்தைய இந்தியாவில் தலித்துகள்மீதான வன்கொடுமை களில் புதிய பரிமாணமாக உருவாகியுள்ள அபாயக்கூறுகள், சாதியப் படிநிலைகளில் தலித்துகளுக்கு எதிராக வளர்ந்துள்ள புதிய ஆதிக்க சக்திகள் குறித்தும் டெல்டும்டே புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறார்.

முன்னர் குறிப்பிட்ட நாளில் கயர்லாஞ்சி கிராமத்தில் பையாலால் போட்மாங்கே குடும்பத்தைச் சேர்ந்த அவரது மனைவி சுரேகா(40), அவர்களது மகன்கள் ரோஷன்(21), சுதிர் (19) மற்றும் மகள் பிரியங்கா (17) ஆகியோர் சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகள் பொதுவெளியில் அறியப்பட ஒரு மாதமாகியது. இப்படுகொலைகளில் ஈடுபட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினரும் காவல்துறை அதிகாரி களும், அரசு வழக்கறிஞரும் முழுமூச்சுடன் இந்த இருட்டடிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவை வெறும்(!) படுகொலைகள் மட்டு மல்ல. ஒரு ஒட்டுமொத்த கிராமமே பல காலமாக வன்மத்தால் பகை வளர்த்துத் தீர்த்துக்கொண்ட பலி.

குடும்பத்தின் மூத்த உறுப்பினரான பையா லால் போட்மாங்கே இல்லாத நேரத்தில் பெண்கள் உட்பட கிராமத்தினர் திரண்டு ஊரின் ஒதுக்குப்புறமான போட்மாங்கே வீட்டைச் சுற்றி வளைத்துத் தாக்கியுள்ள னர். அவரது மனைவி, மகள் ஆகியோரை வெளியே இழுத்து வந்து நிர்வாணப் படுத்தி, மகன்கள், சகோதரர்கள் எதிரே கும்பல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ள னர்.17வயதுச் சிறுமி பிரியங்கா சித்ரவதை தாங்காமல் உயிரிழந்த பின்னரும் சடலத்தைக்கூட விட்டுவைக்காமல் வன் புணர்ச்சியில் ஈடுபட்டனர். வீட்டுக்கு தீ வைத்து நிர்மூலமாக்கினர். அவர்களை கிராமத்தின் களத்துமேடு போன்ற இடத் துக்கு இழுத்து வந்து அடித்து சித்ரவதை செய்து கொன்றுள்ளனர். பின்னர், சடலங் களை ஒரு டிராக்டரில் போட்டு, வெற்றி ஊர் வலம் நடத்தி ஊருக்குச் சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆற்றங்கரையில் வீசி விட்டு நிம்மதியாக வீடு திரும்பியுள்ளனர். இவ்வளவு கொடுமைகளையும் பையா லால் போட்மாங்கே புதர்மறைவில் பதுங்கி, கையறுநிலையில் மௌன சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

ஒட்டுமொத்தக் கிராமமும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கு எதிராக இத்தகைய கொடூர பகைவெறி கொண்டது எதனால்? அவர்களின் ஆதிக்கசாதி அகங்காரத்துக்கு எதிராக போட் மாங்கே குடும்பம் நடத்திய தொடர்போராட்டம்தான். குறிப்பாக, போட் மாங்கேயின் மனைவி சுரேகா நடத்திய போராட்டங்கள் ஆதிக்க சாதி யின் ஆண் மமதையை நிர்மூலமாக்கியுள்ளது. இதற்காக அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் 'ஒழுக்க நீதி'. போட்மாங்கே நடத்திய போராட்டங்களில் தார்மிக ஆதரவாக இருந்துவந்த பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சித்தார்த்த காஜ்பியேவுக்கும் சுரேகாவுக்கும் கள்ளக்காதல் இருப்பதாக நீண்டகாலமாகவே ஒரு கதையை இட்டுக்கட்டி வந்துள்ளனர். இதற்காக அந்தத் தாய் மட்டுமல்லாமல் அவளது மகன்களும், மகளும் உயிரிழக்கவேண்டியிருந்தது.

ஒழுக்கக்கேட்டுக்கு எதிராக சமூகமே தன்னெழுச்சியாக வெகுண்டெ ழுந்ததால் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடந்த எழுச்சியாக புனிதப் படுத்தும் வாதம் மூலம் நீதியைத் தாங்களே கையிலெடுத்துக் கொள் வது நியாயப்படுத்தப்படுகிறது. நீண்டகாலப் பகையைப் பலி தீர்க்க இதுபோன்ற ஒழுக்க நியதிகளை இட்டுக்கட்டும் போக்கு புராணங்கள் புனையப்பட்டதில் இருந்தே தொடர்கிறது. இதற்கு உச்சாடனமாக, மநு முன்னிறுத்திய நான்கு வர்ணம் எனும் இந்து அறம் முன்னிற்கிறது. இந்த அறத்தைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், கொண்டு செலுத்த வும் கீழ்சாதியினருக்கு என்னவிதமான தண்டனை அளிக்கவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மநு வழி வகுத்துத் தந்துள்ளார். ஆனால், சில தலித் செயல் பாட்டாளர்களின் முன் முயற்சிகள் இல்லையென் றால் அங்கு நடந்த இக்கொடுஞ் செயல்கள் அனைத்தும் இத்தகைய 'புதிய' மநுவாதிகளால் எவ்வாறு மூடிமறைக்கப்பட்டிருக்கும் என்பதை யும், இதில் பெரு ஊடகங்களின் வெட்கக்கேடான செயல்களையும் டெல்டும்டே அம்பலப்படுத்துகிறார். ஒரு பொதுப்பிரச்சனை குறித்து சிந்திக்கவும், தீர்வுகூறவும் கீழ்சாதி யினருக்கு அருகதையில்லை என்னும் மநுநீதி காலம்காலமாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. மீறுபவர்களுக்கு என்னவிதமான தண்டனை அளிக்கவும் ஆதிக்க சக்திகளுக்கு மநு உரிமை அளித் துள்ளார். இதுவே சமூக ஒழுங்காகவும் அறமாகவும் பயிற்றுவிக்கப் பட்டு வந்துள்ளது. அனைவருக்கும் சமத் துவ உரிமை, சுதந்தரம், நீதியுடன் கூடிய இறையாண்மை கொண்ட, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக இந்தியா திகழும் என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதங்கள் அமலாக்கப்பட்டு வரும் காலத்திலும் மநுகால அறம் தொடர்வதும், அதை நிலைநிறுத்தவும், தண்டனை அளிக்கவுமான அதிகாரங் களை ஆதிக்கசக்திகள் கையில் எடுத்துக் கொள்வதும் எவ்வாறு என்ற கேள்வியை டெல்டும்டே எழுப்புகிறார்.

குறிப்பாக சில சூத்திரர்கள் தாமும் பார்ப் பனியத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் என் பதை மறந்து புதிய ஆதிக்க சக்திகளாக வும், அதிகார மையங்களாகவும் உருக் கொண்டுள்ளனர். விடுதலை இந்தியா வில் அவர்களே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடு பட்டு வருகின்றனர் என்பதை பட்டியலிடுகிறார். கீழ்வெண்மணி (தமிழ் நாடு) முதல் பெல்ச்சி(பீகார்), கரம்சேடு (ஆந்திரா), மேலவளவு (தமிழ் நாடு), ஜஜ்ஜார் (ஹரியானா) வரை கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளைப் பட்டியலிட்டு, இவற்றில் ஈடுபட்டவர்கள் பார்ப்பனரல்லாத சாதி இந்துகள், குறிப்பாக சூத்திரர் என்று ஒதுக்கப்பட்டுள்ள பிரிவினர் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். (இதில் கீழ்வெண்மணியில் நிகழ்ந்த தாக்குதல் என்பது சாதிய ஒடுக்கு முறை மட்டுமல்ல. கீழ்தஞ்சை மாவட்டத்தில் நூற்றாண்டுகளாக நீடித்துவந்த நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு எதிராக வர்க்கரீதி யாக அணிதிரண்ட விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங் களுக்கு எதிரான தாக்குதல்களின் உச்சக்கட்டமே என்ற இன்னொரு பரிமாணம் இருப்பதை டெல்டும்டே கவனிக்கத் தவறியுள்ளார்.) சகிப்புத்தன்மை, அகிம்சை, சமாதான விரும்பிகளாக இந்திய மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர் என்ற கருத்து நிலவுகிறது. இக்கருத்து, கிராமங்களில் மநு கூறும் சமூக ஒழுங்கு, காலம் காலமாக கட்டிக்காக்கப்படுவதை நிரூபணமாக்குவதாக விளங்குகிறது. இந்தச் சமூக ஒழுங்கு குலையும்போது, அங்கு சமூக ஒழுங்குகளையும், அமைதியையும் நிலைநாட்ட கயர்லாஞ்சி வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. எனவே, இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் எப்போது வேண்டுமானாலும் கயர்லாஞ்சியாகும் வாய்ப்புள்ளது என்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் எந்தளவுக்குச் சமரசம் செய்து கொள்கிறார் களோ அந்த அளவுக்கே அமைதியாக வாழமுடியும்; நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைகளில் மட்டுமல்லாது, முதலாளித்துவ உற்பத்திநிலை களிலும், தற்போதைய உலகமயமாக்கல் நிலைகளிலும்கூட இச் சமூகப்படிநிலை தொடர்கிறது; நிலப்பிரபுத்துவத்துடன் முதலாளிய சக்திகள் செய்துகொண்ட சமரசத்தால்தான் 60 ஆண்டுகால விடு தலை வரலாற்றிலும்கூட சாதியப்படிநிலைகளை நீக்கமுடியவில்லை. சிறுநகரங்கள், பெருநகரங்களிலும் அண்மைக்காலமாக தொடரும் சாதீய (தலித்துகள் மீதான) வன்முறைகளை இதற்கு நிரூபணமாகச் சுட்டிக்காட்டுகி றார்.

கிராமங்களில் மட்டுமல்லாது, இச்சாதியசக்திகள் நகர்ப்புறங்களிலும் இதே சமூக அமைதியை விரும்புகின்றன, அது குலைக்கப்படும் போது அங்கும் வன்மம் உருவாகிறது. இது சித்ரவதைகளாக, படுகொலைகளாக, வன்புணர்ச்சிகளாக, கயர்லாஞ்சிகளாக வெடிக்காமல் இருக் கலாம். ஆனால் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் தலித்துகளுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும்போது மவுன ஒதுக்கல் மூலம் தலித்துகளின் ஆசா பாசங்கள் நசுக்கப்படுகின்றன. தனியார் குழும நிறுவனங்கள் தலித்துகளை அனுமதிப்பதே இல்லை. அவர்கள் பாரம்பரியமாகவே தகுதிக் குறைவான வர்கள் என்று கூறி தனியார் நிறுவனங் கள் ஒதுக்கி வருகின்றன. இது, கயர் லாஞ்சிகளில் நடப்பதைவிட மோசமான அநீதி என்று சுட்டுகிறார் டெல்டும்டே. மேலும், கயர்லாஞ்சியில் நிகழ்ந்த வற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் சாதியப்படிநிலைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானித்து, சாதியப்படிநிலைகள் அதன் கட்டமைப்பு மற்றும் பருண்மை நிலைகளில் மாற்றமின்றி தொடர்ந்தாலும், அதன் உள்ளமைப்பு மற்றும் குணங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கவனப்படுத்துகிறார்.

ஏழாம் நூற்றாண்டிலிருந்து நிகழ்ந்து வந்த ஊடுருவல்கள், 11ஆம் நூற்றாண்டிலிருந்து செல்வாக்கு செலுத்திய ஆளும்வர்க்கக் கொள்கைகளால் ஏற்பட்ட மாற்றங்களைவிட, பிரிட்டிஷ் காலனியாக் கத்தின் போது ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை என்கிறார். காலனியாக்கத்தின் தொடக்கத்தில் தொடங்கிய மாற்றங்கள் கடந்த நூற்றாண்டுவரை நீடித்தன. புனிதமாகக் கருதப்பட்ட நால்வருண முறை முழுமையாக இல்லாவிட்டாலும், குறிப்பிடத் தக்க அளவுக்குப் பலவீனமடைந்தது. சாதிகளின் சடங்கு அடிப்படைகள் ஒரு விதிவிலக் காகவே எதிர்கொள்ளப்பட்டன.

ஆனால், இன்றைய சாதி முறைகளை மதம் அல்லது மரபு ஆகிய வற்றின் அடிப்படையில் மட்டுமே புரிந்துகொள்ள முடியாது. நம் காலத்தின் குணங்களைத் தீர்மானிக்கும் சக்தியாகிய அரசியல் பொருளாதாரத்தின் செல்வாக்கால் தற்கால சாதிமுறைகள் மேலும் குழப்பங்களுக்கு ஆட்பட்டுள்ளன. கடந்த 60 ஆண்டுகால 'மதச்சார் பற்ற ஜனநாயக' அரசியல், 'சோசலிச' பொருளாதாரக் கொள்கை களால் சாதிய அமைப்புமுறை புதிய வாழ்க்கையைப் பெற்றுள்ளது. கடந்தகாலத்தின் சமூக- பண்பாட்டு - உளவியல் மிச்சசொச்சங் களுக்கு இடையேயான உள்ளீடுகளின் இடைக்கால வெளிப்பாடாக வும், சில குறிப்பிட்ட வகுப்புகளுக்கு சலுகைகள் அளிக்கும் வகையில் அரசு பின்பற்றிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளாலும் ஏற்பட்ட வெளிப்பாடாகவும் தற்காலச் சாதிஅமைப்புகள் பிரதிபலிக்கப் படுகின்றன என்று விளக்கமளிக்கிறார் டெல்டும்டே. "பாரம்பரியமாக உரிமை பெற்ற சாதிகள்தாம் (பார்ப்பனர் மற்றும் இரு பிறப்பாளர்) சாதியப்படிநிலைகளுக்குப் பொறுப்பாவார்கள் என்று இன்றும் அறிவிஜீவிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். (நீதிமன்றம், நாடாளுமன்ற- சட்டமன்றப் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் என) அரசு மற்றும் குடிமைச் சமுதாயங்களில் அவர்களின் மேலாதிக்கம் இன்றும் நீடிக்கிறது என்றபோதிலும், கிராம சமூகப் படிநிலைகளில் அவர்களின் பிடிமானம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

உண்மையில், தங்கள் பங்கை அதிகரிப்பதில் இதர சமூகக் குழுக்கள் முன்னேறியே வருகின்றன. மேலாக, தமது தொடக்ககாலப் பண்பாட்டு மேலாண்மையுடன், பொருளாதாரத்தின் புதிய கூறுகளான முதலாளித்துவம் மற்றும் உலக மயமாக்கல் ஆகிய வளர்ச்சிகளின் பலன்களையும் அனுபவிக்கும் வகையில் அப்பிரிவுகளுடன் இந்தப் பாரம்பரிய மேல்சாதிகள் (பார்ப்பனியர் மற்றும் இருபிறப்பினர்) தம்மைத் தகவமைத்துக் கொண்டனர். இதனால், முன்னர் சாதியப் பாகுபாடு மற்றும் உயர் சாதித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்டவர்களும், இதர பிறபடுத்தப்பட்டவர்களும் இப்போது முன்னேறி வருகிறார்கள். கயர்லாஞ்சி போன்ற தாக்குதல்களில் இரு பிறப்பாளர் போன்ற உயர் சாதியினர் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் கீழ்வெண்மணி முதல் கயர்லாஞ்சி வரை நடந்த தாக்குதல்களிலும் பார்ப்பனர்கள் நேரிடையாக ஈடுபட்டதாகத் தெரியவில்லை. 1960 களுக்குப் பின்னர் நிகழ்ந்துள்ள இத்தாக்குதல்களில் சமூகத்தில் உயர் நிலை பெற்ற பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர்களே ஈடுபட்டுள்ளனர்' என்று அம்பலப்படுத்துகிறார் டெல்டும்டே. இந்தியாவை இங்கிலாந்து தனது நேரடியான காலனியாக்கத்தின் கீழ் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ராணுவ பலத்தாலும், தந்திரங்களாலும் தனது ஆதிக்கத்தின் கீழ் நாட்டைக் கொண்டுவந்தபின் நிர்வாகத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஜமீன்தாரி முறை, ராயத்வாரி முறை போன்றவை அவை. இத்தகைய ஜமீந்தாரர்களாகவும், மிராசுகளாகவும் இருபிறப்பாளர் அல்லாத சூத்திர சாதியினரை நியமித்தது. அதேநேரத்தில் உயர் நிர்வாக மட்டத்தில் பார்ப்பனர்களையும், இரு பிறப்பாளர்களையும் நியமித்தது. இதனால் பார்ப்பனர் காலனியாக்கத்தின் நேரடியான பலன்களை உடனுக்குடன் அனுபவித்து வந்தனர். என்னதான் பண்ணைகளாக இருந்தாலும் பார்ப்பனர்களின் அந்தஸ்தை புதிய ஜமீந்தார்களால் அடையமுடியவில்லை. எனேவே அதிகாரத்தில் பங்கு கோரும் கோரிக்கைகள் எழுந்தன.

இதற்கிடையே மராட்டியம் போன்ற பகுதிகளில் தலித் விழிப்புணர்வு ஏற்பட்டது. ஜோதிராவ் புலேவைத் தொடர்ந்து தலித் கண்ணோட்டம் நாடு முழுவதும் உருவானது. தொடர்ந்து 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மராட்டியம், தமிழகம் போன்ற பகுதிகளில் பிராமணல்லாதோர் இயக்கம் உருவா னது. இதன்மூலம் காலனிவாதிகளிடம் பெரும்சலுகைகளைப் பெற முடிந்தது. புதிய பதவிகள் பெற்றதுடன் புதிய தொழில்துறைகளிலும் ஈடுபட்டனர். இந்திய தொழில்மயமாக்கத்தில் இவர்கள் பங்கு உறுதிப் படுத்தப்பட்டது. அத்துடன் தொடர்ந்த சீர்திருத்த இயக்கங்கள் மூலம் பெற்ற செல்வாக்கைக் கொண்டு அவர்கள் விடுதலை இந்தியாவிலும் அரசியல் பொருளாதாரச் செல்வாக்கு பெற்ற புதிய சக்திகளாக உயர்ந்தனர் என்கிறார். அதேசமயம், ஏற்கனவே கொழுத்த நிலை யில் இருந்த நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொள்வதையே இந்திய முதலாளித்துவம் விரும்பியதையும், நவீனமயமாக்கலால் தங்களுக்கும் மேலும் லாபம்தான் என்பதால் நிலப்பிரபுத்துவ பிற் போக்காளர்கள் அந்த சமரசத்தை (இன்றுவரை) ஏற்றுக் கொண்டுள் ளதையும் அவர் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலை பெற்ற இந்தியாவில் நவீனப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. நெசவு, தோல், கயிறு, கள் இறக்குதல் போன்ற பாரம்பரியத் தொழில்கள் நசிவடைந்தன. ஒதுக்கப்பட்ட பல சாதிகளைச் சார்ந்த கோடிக்கணக்கானோர் இதனால் நலிவடைந்தனர். அதேநேரத்தில் பசுமைப்புரட்சி போன்ற திட்டங்கள் நிலவுடமைச் சாதிகளின் அதிகாரத்தை உயர்த்துவதில் முடிவடைந்தது. இதனால் ஏராளமானவர்கள் நிலமிழந்தவர்களாக வும், பாரம்பரிய வாழ்வுரிமைகளை இழந்தவர்களாகவும் ஆயினர். அதேநேரத்தில் நிலவுடமையாளர்களிடம் உபரி குவிந்ததுடன், பாரம்பரிய கிராமத் தன்னிறைவுப் பொருளாதாரத் தன்மைகளை அழித்து, கிராமப் பொருளாதாரத்தை வணிகக் கலாச்சாரமாக்கியது.

இக்காலகட்டத்திற்குள் பார்ப்பனர்களும், இரு பிறப்பினரும் நகரங் களுக்குக் குடிபெயர்ந்தனர். கிராமங்கள் முற்றிலும் புதிய ஆதிக்க சாதிகளின் (பிற்படுத்தப்பட்டவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள்) கீழ் வந்தன. அரசின் வளர்ச்சித் திட்டங்களில் எந்தவிதமான (சமூகப்) பாதுகாப்புக்கூறுகளும் பின்பற்றப்படாததால் அவற்றால் தலித்தல் லாத சாதிகள் மட்டுமே பாரம்பரிய தன்னிறைவுக் கிராம முறைகளின் அனைத்துப் பலன்களையும் அடைந்து வளர்ந்தன என்கிறார். பொருளாதார பலம் பெற்ற நிலஉடமைச் சூத்திரசாதிகள் அரசியல் ரீதி யாகவும் தம் சாதி மக்களை அணிதிரட்டும் வல்லமை பெற்றன. சிறிய சாதிகள்கூட தமது விகிதாச்சாரத்துக்கு அதிகமான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறும் நிலை உருவாகியதையும் சுட்டிக்காட்டுகிறார். பலநிலைகளில் அவர்கள் தலித்துகளின் பொரு ளாதார நிலையுடன் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் உள்ள னர்.எனினும் அவர்கள் நில உடமைச் சாதிகளுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளதால், அவர்களை சமூகரீதியாக நலிவடைந்த தலித் மக்களின் பொருளாதார நிலைக்குள் இணைக்க முடியாது என்கிறார். தலித்துகள், பிற்பட்ட, இதர பிற்பட்ட மக்கள்திரள் ஒன்றிணைய வேண் டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அது சாதி அடிப்படையில் இல்லாமல் வர்க்க அடிப்படையில் அமைய வேண்டும் என்கிறார். (இதற்கு உதாரணமாக தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் வர்க்கரீதியாக அணி திரண்டதைச் சுட்டிக் காட்டமுடியும். ஆனால், அவர் அவ்வாறு சுட்டிக்காட்டவில்லை.) சமூகங்கள் சாதியுணர்வுடன் நீடிக்கும்வரை இதுபோன்ற இணைப்புப் போராட்டங்களால் சமூக சமத்துவம் ஏற்பட வாய்ப்பில்லை.

தலித் அல்லாத, பார்ப்பனரல்லாத சாதிகளுக்குள் சாதிக் கலப்புத் திருமணங்கள் இக்காலத்தில் பரவலாகக் காணப்பட்ட போதும், இன்னமும் தலித் சமூகங்கள், தலித்தல்லாத, பார்ப்பனரல்லாத சாதிகள் இடையேயான திருமணங்கள் அரிதாக இருக்கிறது. அவர்கள் இன்னமும் சமூகரீதியாக விலக்கப்பட்டுள்ளனர். நிலப்பிரபுத்துவ பிற்போக்காளர்களுடன் இந்திய அரசு செய்து கொண்ட சமரசத்தின் விளைவாகவே இச்சமூகப்படிநிலை நீக்கப்படவில்லை. இதனால் புதிய பொருளாதார வலிமையும், அரசியல் செல்வாக்கும் பெற்று வளர்ந்து வரும் தலித்தல்லாத, பார்ப்பனரல்லாத நில உடமைச் சாதி கள் சமூக ஒதுக்கலைத் தொடர எந்த எல்லைகளையும் மீறத் தயாரா கும் துணிச்சலோடு உள்ளனர். இதுவே கீழ்வெண்மணி முதல் கயர் லாஞ்சி வரை தலித் படுகொலைகள் தொடரத் தைரியமளித்துள்ளது. இருந்தபோதிலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் எப்படி காட்டுமிராண்டிகளாக நடந்துகொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. கயர்லாஞ்சி படுகொலையில் ஈடுபட்ட ஆதிக்கசாதிகள் பெரிய அளவிலான மிராசுதார்கள் கூட இல்லை. சிறிய அளவிலான விவசாயிகள் தாம். அதுவும் இந்த பண்டாரா மாவட்டம் விவசாயிகள் தற்கொலைக்குப் புகழ்பெற்ற விதர்பா பகுதியில் உள்ளது. கடன்சுமை தாளாது தற்கொலை செய்தோரில் அனைத்து சாதிகளும் உள்ளனர். ஆனால், போட்மாங்கேயின் 17 வயது மகள் பிரியங்காவின் பெண்குறியில் வண்டியில் மாட்டைப் பூட்டப் பயன்படுத் தும் கம்பினை நுழைத்து சித்ரவதை செய்ததாக உண்மை அறியும்குழு கூறியுள்ளது. உள்ளூர் பாரதிய சனதா கட்சித் தலைவர் ஒருவர் பிரியங்கா உயிரிழந்த பின்னரும் பொதுமக்கள் முன்னிலையில் வன்புணர்ச்சியில் ஈடு பட்டுள்ளார். இதேபோன்று தமிழ்நாட் டில் திண்ணியம் கிராமத்தில் தலித்துகள் வாயில் மலம் திணிக்கப்பட்டது.

இக்கொடுமைகளைச் செய்யும் துணிச் சல் ஆதிக்க சக்திகளுக்கு எவ்வாறு ஏற் பட்டது என்ற கேள்வியை எழுப்பும் டெல்டும்டே, தான் செய்வது அனைத் தும் சரி என்ற எண்ணமும், அதற்குப் பக்கபலமாக மதரீதியாகவும் (மநுவின் வர்ணாசிரம தர்மம்), பண்பாடு, மரபுரீதியாகவும் தாம் மேலானவர்கள் என்ற மமதையும் இவர்களிடம் உள்ளது. அத்துடன் தற்கால அரசியல் மேலாதிக்கம் ஆகியவையும் இவற்றுக்கு ஊற்றுக்கண்ணாகக் உள்ளன என்கிறார். தலித்துகள் கீழானவர்கள், அவர்களுக்கு என்ன தண்டனையும் கொடுக்க தமக்கு உரிமை உள்ளது. தாம் தண்டிக்கா விட்டால் அவர்கள் தம்மைத் தண்டித்துவிடுவர் என்ற கண்ணோட் டத்தை இவர்கள் வெகுஇயல்பாகவே கொண்டுள்ளனர் என்கிறார். இதனை தலித்துகளும் தம்மை அறியாமல் ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். இதனாலேயே தம் மீது திணிக்கப்படும் வன்முறைகள் குறித்து புகார் அளிக்க தலித் மக்கள் அஞ்சுகின்றனர் என்கிறார். இவை அனைத்தையும்விட நீதி அளிக்கும் முறை தலித்துகளுக்கு எதிராகவே செயல்படுவதையும் தெளிவுபடுத்துகிறார். தலித்துகள் தம் மீதான தாக்குதல்கள் குறித்து காவல்நிலையங்களில் புகார் அளிக் கும் நிலைமைகூட சுதந்திரமாக்கப்படவில்லை. புகார் ஏற்கப்பட்டாலும் அதன் பிந்தைய விசாரணைகள் தலித்துகளை மிரட்டுவதாக உள்ளது. வழக்குகளில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்கள்கூட தலித் மக்கள் ஆதரவாளராகவோ, தலித் கண்ணோட்டம் கொண்டவரா கவோ இருப்பதில்லை. இறுதியாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டு நீதி தாமதமாக்கப்படுகிறது. இது ஆதிக்க சக்திகளுக்கு சாதகமாகவே முடிகிறது என்று கூறும் டெல்டும்டே தேசிய குற்றப்புள்ளிவிவரங்க ளில் இருந்து ஏராளமான தகவல்களை வழங்குகிறார். எனவே இந்திய சமூகம் முழுவதும் புரையோடியுள்ள சமூகப் படிநிலை ஆதிக்க மனோபாவம் அகலாமல் இது அகலாது. ஏனெனில், இதை எதிர்த்து பலாத்காரரீதியில் போராடும் வலிமை தலித்துகளிடம் இல்லை.

சமூக, பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் எண்ணிக்கை அளவிலும் குறைவானவர்களாக உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். நிலத்தினைத் தேசியமயமாக்குவதில் இப்பிரச்சனைக்குத் தீர்வு இணைந்துள்ளது. அதை உணர்ந்ததால்தான் ஒப்புக்கு நிலச்சீர்திருத் தம் என்பதைவிட, நில தேசியமயமாக்கம் மிக முக்கியத்துவம் வாய்ந் தது என அம்பேத்கர் வலியுறுத்தினார். இதனை மேற்கொள்ள ஆட்சியில் நிபந்தனையற்ற புரட்சி ஏற்படவேண்டும். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமைகள் சென்றுசேர வேண்டு மானால், உண்மையான ஜனநாயக நிறுவனங்கள் அமைத்து அவற்றை ஆளும் வர்க்கம் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இப்படியான நிலை உருவாகியிருக்காது. ஆனால், உண்மையில் எந்தவிதமான நிர்வாகப் புரட்சியையும் மேற்கொள்ளும் நிலையில் அரசு இல்லை. இந்திய அரசு நிர்வாகிகள் அதாவது மத்திய தர வர்க்க அதிகாரிகள் முதலாளித்துவ அமைப்பைவிட பிற்போக்கு விசுவாசிகளாக உள்ளனர். இன்று தலித் உரிமைகளைப் பாதுகாக்கப் பல சட்டங்களும், அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ள போதும் அவர்கள் அதைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதில்லை. விடுதலையால் தலித்துகள் எதையும் அடையவில்லை என்றும் சொல்ல முடியாது. வழங்கப்பட்ட பாதுகாப்பு ஒருசில தலித்துகளுக்கு சென்றுசேர்ந்துள்ளது. ஆனால், சாதியப் படிநிலை மாறவில்லை. மாறாக சாதிகள் பெருகிவருகின்றன.

விடுதலை இந்தியாவின் தொடக்க ஆண்டுகள் சாதிய சமத்துவத்தில் குறிப்பிட்ட முன்னேற்றம் அடைந்தபோதும், குறிப்பிட்ட தனிநபர்கள் மட்டுமே வளர்ச்சியின் பலன்களை அனுபவிக்கும் நிலைமைகள் மேலும், மேலும் உருவா னதைத் தொடர்ந்து அதில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலைமை கள் பழையபடி உள்சாதிகளை உருவாக்குவதிலும், உள் சாதிப் புனிதங்களிலும் சிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களுக்குள்ளேயே உள்சாதி பெருமை பேசும் அவல நிலைக்கு சமூகம் தாழ்ந்துள்ளது. புதிய சமுதாய நிலைகளில் பார்ப்பனியத்துக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் என்ற அம்பேத் கரிய கண்ணோட்டம் அகன்ற நிலையில், முக்கியமான மகர் சாதியில் கூட உள்சாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு தங்களுக்குள் உயர்வு- தாழ்வு பார்க்கும் நிலை தோன்றியுள்ளது. இச்சூழ்நிலையில் கயர்லாஞ்சிகள் முக்கியத்துவம் வாய்ந்த அபாய எச்சரிக்கைகள் என்று டெல்டும்டே வருத்தத்துடன் முன்னறிவித்திருக்கிறார்.

- அப்பணசாமி

நன்றி தலிதமுரசு

தொடர்புடைய பதிவு-

http://oomaiyinkural.blogspot.com/2009/11/blog-post_6918.html


மன்னை முத்துக்குமார்
சிதம்பரம் பேருந்து நிலையம்

மேலே நீங்கள் காணும் திறந்தவெளி பொதுக்கழிப்பிடம் சிதம்பரம் பேருந்து நிலையம் தான். அங்கே பேருந்துக்காக காத்து இருக்கும் பொதுமக்கள் சிறுநீர் கழிக்க நகராட்சி நிர்வாகம் அமைத்து கொடுத்து இருக்கும் கழிவரை தான் இது. ஆண்கள் வேறு வழியின்றி அதை பயன்படுத்தும் போது பெண்களின் நிலை பரிதாபத்துக்குறியது. சம்பந்தப் பட்ட நாடாளும்னற சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு நவீன கழிப்பறையை கட்டி கொடுப்பார்களா?
மன்னை முத்துக்குமார்
சென்னை முழுமதி அறக்கட்டளை, சென்னை ப்ரீடம் அறக்கட்டளை மற்றும் போடிநாயக்கனூர் ரீமாஸ் அறக்கட்டளை இணைந்து 2011 ஜூன் மாதம் 19 மற்றும் 20 தேதிகளில் மாற்று திறனாளிகளுக்கான இலவச மறுத்துவ முகாம் நடத்தப்பட்டது.


முகாமிற்கு கலைமாமனி பேராசிரியர் மருத்துவர் திரு.D.சுந்தர் அவர்கள் தலைமயேற்று நடத்தி தந்தார்கள்.


19-06-2011 அன்று போடிநாயக்கனூர் ஜ.கா.நி துவக்கப்பள்ளியில் காலை 9 மணிக்கு துவங்கிய முகாமில் சுமார் 120 மாற்று திறனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. அதில் மூன்று சக்கர வாகனம், பொய் கால் , பொய் கை போன்றவை தேவைப்படுவோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர், மறுநாள் தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் வேளாளர் திருமன மண்டபத்தில் (20-06-2011) அன்று நடந்த முகாமில் சுமார் 110 பயனாளிகள் பங்கு பெற்று மருத்துவ ஆலோசனை பெற்றனர், அங்கு உபகரணம் தேவைப்படுவோர் கணக்கிடப்பட்டு அவர்களுக்கான உபகரணம் இன்னுமொரு மாதத்தில் வழங்க அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்ப்பாடு செய்துள்ளனர்.
நிகழ்ச்சி ஏற்ப்பாடுகளை ரீமாஸ் அரக்கட்டளை நிர்வாகிகள் நண்பர்கள் செந்தில் கணபதி , மருத்துவர் அன்பரசு, சதீஷ்குமார், குமார்பாண்டி,பிரபு,பாண்டியன் மற்றும் முழுமதி அறக்கட்டளை நிர்வாகிகள் அருள், பாலமுருகன், செயலாளர் மன்னை முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
மன்னை முத்துக்குமார்
கண் சிவந்தால் மண் சிவக்கும் திரைப்படப் பாடல். கேளுங்கள்
.
Get this widget | Track details | eSnips Social DNA
மன்னை முத்துக்குமார்
அன்னா ஹசாரே..வின் -- போராட்டம் வெற்றி பெற வாழ்த்துவோம்...

இந்த சம கால சமூகப் போராளியைப் பற்றி...

சமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் 'மாதிரி சிற்றூர்' என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை...

* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், 'அன்னா ஹசாரே' என்று அழைக்கப்படுபவர்.

* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.

* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.

கிராம மேம்பாட்டுப் பணி...

* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.

பின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, 'ஷ்ரம்தன்' என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.

* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.

* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.

* 1998-ல் சிவசேனா - பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தகவல் அறியும் சட்டம்...

* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்...

நடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச - ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.

இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து 'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பின் உறுப்பினர்கள் 'ஜன் லோக்பால் மசோதா' என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.

இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.

ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.

லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.

அன்னா ஹசாரேவின் வலைத்தளம் : http://www.annahazare.org/