மன்னை முத்துக்குமார்

மூன்று நாள் மகிழ்வுடன்
ஊர் திருவிழா நிறைவுபெற்றது.

சேட்டுக்கடை பக்கம் போகும் போதெல்லாம்
ஆசையாய் மகளுக்கு வாங்கி போட்ட அரைஞான் கயிறு
மனசை அறுக்கிறது.
.
அடுத்த குடை வருவதற்குள் மீட்டுடனும்
மீட்டாலும் , வச்சிடக்கூடாது என்ற வழக்கமான
வைராக்கியத்துடன் செவலக்காளையோடு
வேலையை தொடரச்செய்கிறது காலை பொழுது !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்

முத்தம்
சைவமா ?
அசைவமா ?
என்கிறாய் ;

நீ கொடுத்தா சைவம்
நான் கொடுத்தா அசைவம் என்கிறேன்.

இன்று வெள்ளிக்கிழமையென்று
நழுவுகிறாய் !!
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்


எத்தனை பெரிய
பாராட்டு விழா தான்
எனக்கு என்றாலும்

உனது 
ஒரு முத்தத்தினால் மட்டுமே
அது முழுமை பெறுகிறது !
**

மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்

விரும்பிய நாவலின்
” முற்றும்” பகுதியை
கிழித்து விட்ட குழந்தையை
கோபிக்க மனமில்லை ;

முடிவு காணாமல் போனது
இதில் மட்டுமல்ல என்பதை
புரிய வைத்தது குழந்தை தானே ?
எனும் போது !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
  காதல்
கல்யாணத்தில்
  “முடிகிறது ”  !

*
 தெரிந்தே வருகிறாள்
மணமேடை.
மஞ்சள் தண்ணி தெளிக்கப்பட்ட
ஆட்டை போல !

*
 காதலின் பேரால்
இழந்த நட்பை
எப்படி சொல்லித் தருவாள் தன் பிள்ளைக்கு
நட்பு வேறு காதல் வேறு என்று ?

*
கோதி விடுவதற்காகவே கலைத்து விடப்படுகிறது
பெண்களின் கூந்தல் முடி !

*
ஒவ்வொறு முறையும்
விரிகிறது படுக்கை.

பிரசவ வைராக்கியாமாய்
கோபம் கலையப்பட்டு !

*
யுக யுகமாய்
பேசாவிடாது செய்வதாலே
மெளனம் என்ற போர்வைக்குள்
நகர்த்துகிறாள் நாட்களை !

*
  பல வீடுகளில் 
மனைவிக்கு சிரிக்கவும் தெரியுமென்பதை 
விருந்தினர்கள் தான் 
காண்பிக்கிறார்கள் !

*
 எத்தனை யுகம் தான்
தலை குனிவாள்
மணமேடையில் ?

*
 இங்கு
கல்யாணத்திற்காவே
காதலிக்கப்படுவதால்,

ஹோம புகையிலேயே
காதல்
சுவாசிக்க மறந்து
விடுகிறது !

*
 துப்பட்டாவால் போர்த்தியபடி
பில்லியனில் விரைவது
காதல் போலி !

*
 குழந்தை !

யார் சொன்னது
அவனுக்கு ஒரு நிமிடம்
அவளுக்கு வாழ்க்கை என்று ?

தாய் தன் வயிற்றில் சுமக்கிறாள்
தந்தை தன் மனதில் சுமக்கிறான் !!
*
  குழந்தை !

 சறுக்கும் காதலை
இணைக்கும் சங்கிலி !

*
 சண்டைக்கு
பின்னான
தழுவலில் தான்
இருக்கம் அதிகம் !

***
-மன்னை முத்துக்குமார்.
 
 
மன்னை முத்துக்குமார்

ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.

“உள்ளே வா” – அழைத்த கடவுள்,
“என்னைப் பேட்டியெடுக்கணுமா?”

“ஆமாம்…
உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.

கடவுள் சிரித்தார்.

“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?”

“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”

கடவுள் சொன்னார்…

“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.

பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…

எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!

” சாகாமல் இருக்க வாழ்கிறான்.
ஆனால் வாழாமலே சாகிறான்…”

கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.
சில நொடிகள் மவுனம்.

“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?”

மீண்டும் கேட்டான்.
கடவுளிடமிருந்து ஒரு புன்னகை.

தம்பி, யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.

வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…

ஒன்றைவிட ஒன்று சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.

எல்லாம் இருக்கிறவன் பணக்காரன் என்று நினைக்காதே… உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்!

நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…

நம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…

பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.

இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.

ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!

அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…

நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”

பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள். அவரது கதவுகள் மூடின…

தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன் ,
விழித்தெழுந்தான் அவன்!
*
* இது ஒரு ஜென் கதை.
மன்னை முத்துக்குமார்


 .
எப்படி வேண்டுமானாலும் 
வாழ்ந்துவிட முடியும் 
என்ற சுதந்திரம் 
கட்டுப்பாட்டை விடவும் ஆபத்தானது.
**
-மன்னை முத்துக்குமார்.

.
மன்னை முத்துக்குமார்

ஒரு வயதான போர் வீரர்… பெரும் வீரர் அவர். பல போர்க்களம் பார்த்தவர். போர்க்கலையிலிருந்து ஒதுங்கி கிராமத்தில் தங்கி இளைஞர்கள் பலருக்கு பயிற்சி தந்து கொண்டிருந்தார்.

வயதானாலும் எந்த எதிராளியையும் தோற்கடித்து விடும் உடல் வலிவும் மன பலமும் அவருக்கு இருந்தது.

ஒரு இளம் வீரன் அந்த கிராமத்துக்கு வந்தான். இந்த முதிர்ந்த போர் வீரரை வீழ்த்தி முதன்மை வீரன் என தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளத் துடித்தான்.

அவனுக்கு உடல் பலம் மட்டுமல்ல, எதிராளியின் பலவீனத்தைக் கண்டுபிடித்து அவனை வீழ்த்தும் அசாத்தியத் திறமையும் இருந்தது. தன் பேச்சால் எதிராளியை தூண்டிவிட்டு, முதல் தாக்குதலுக்காக காத்திருப்பான். அதில் எதிராளியின் பலவீனம் அறிந்து, பலமாகத் தாக்கி எடுத்த எடுப்பில் வீழ்த்துவதுதான் அவன் சண்டை யுத்தி.

இப்படி அவனால் வீழ்த்தப்பட்ட வீரர்கள் பலர்.

கிராமத்தில், வயதான வீரரின் பயிற்சிக் கூடத்துக்கு வந்த வீரன், தன் திட்டத்தைச் சொன்னான். இதைக் கேட்ட முதிய வீரரின் மாணவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

இவனுடன் போட்டியிடுவதை வயதான வீரரும் விரும்பவில்லை. ஆனால் வருபவனுக்கும், தன் மாணவர்களுக்கும் ஒரு பாடம் கற்றுத்தர விரும்பினார்.

இளம் வீரனின் சவாலை ஏற்பதாக அறிவித்தார்.

நகரின் நாற்சந்தியில் மோதல் களம். களத்துக்கு வந்ததும் இளம் வீரன் முதியவரின் கோபத்தைத் தூண்டிவிட மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டினான். அவரது முகத்தில் காறி உமிழ்ந்தான். சிறு கற்களை வீசினான். மண்ணை வாரி இறைத்தான்.

அவரை அவமானப்படுத்தி, கோபப்படுத்தி தன் தாக்குதலைத் துவங்கலாமென்பது அவன் நோக்கம். ஆனால் வயதான வீரரோ அசைவற்று அமைதியாக நின்றிருந்தார். கடைசியில் களைத்துப் போய், தோற்றுவிட்ட மனதுடன் அந்த இளைஞன் களத்திலிருந்து வெளியேறினான்.

இளைஞர்கள் அனைவரும் தங்கள் குருவைச் சூழ்ந்து கொண்டனர். “என்ன இது… எப்படி இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொண்டீர்கள்? நீங்கள் தோற்றிருந்தாலும்கூட பரவாயில்லை, பதிலுக்கு உங்கள் வாளை உருவி அவனுடன் மோதியிருக்கலாமே.. இப்படி அமைதியாக இருந்து எங்களை அவமானப்படுத்திவிட்டீர்களே குருவே?,” என்றனர்.

குரு அதே அமைதியுடன் அவர்களை ஏற இறங்கப் பார்த்து, ஒரு கேள்வி கேட்டார்… “யாராவது உங்களுக்கு பரிசு கொடுக்க விரும்புகிறார்கள். அவர்களில் உங்கள் எதிரிகளும் இருக்கலாம். அந்தப் பரிசு மோசமானதாகவும் இருக்கலாம். அந்தப் பரிசை நீங்கள் பெற மறுத்துவிட்டால் அது யாருக்குச் சொந்தம்?”
.
.
.
.
ஒருவர் தரும் பரிசை ஏற்றுக் கொள்ளாதவரை, அந்தப் பரிசு கொடுத்தவருக்கே சொந்தமாகிறது. அது மரியாதையாக இருந்தாலும் சரி, அவமரியாதையாக இருந்தாலும் சரி!!
மன்னை முத்துக்குமார்


*
அதிகாலை எழுந்து
வண்ணக் கோலம் போட்டாள் .
மின்னல் இடியுடன் மழை !
*

-மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்

ஒரு வார்த்தையில்
கவிதை கேட்டார்கள் .
அம்மா என்றேன்.

கேட்டது என் அம்மாவாக இருந்திருந்தால்
ஒரு எழுத்தில் சொல்லி இருப்பேன்
நீ என்று !
*
படித்ததில் பிடித்தது.
மன்னை முத்துக்குமார்


எத்தனை பெரிய
பாராட்டு விழா தான்
எனக்கு என்றாலும் ;

உனது ஒரு முத்தத்தினால் மட்டுமே
அது முழுமை பெறுகிறது !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!
வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை!
**
--உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

.
மன்னை முத்துக்குமார்


தமிழா! நீ பேசுவது தமிழா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?
**
-- கவிஞர் காசி ஆனந்தன்.
.
ஓவியம் : தோழர்  மணி வர்மா
மன்னை முத்துக்குமார்


ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

எதிரே வந்த முல்லா “என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?”
என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.

“என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்” என்றார்.

முல்லா தலைவரிடம் சொன்னார். “அது நாய் என்று எனக்குத் தெரியும்.
நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்” என்றார்.

தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது.

எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன்
அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு

நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது

தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.

“ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?”

“இல்லை” என்றார் நீதிபதி.

சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று “தலைவா என்னை மன்னித்து விடுங்கள்”

என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.
*
மன்னை முத்துக்குமார்
 *
குருட்டுப் பிச்சைக்காரனின்
பிச்சையோட்டில் தட தட சத்தம்
ஆலங்கட்டி மழை
**

-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்

இலவச அரிசி ,
வேலையின் பேரில்
வியர்வையில்லாமல் சம்பளம் ;

”அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்

கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலுந் துணிந்து நில் “

ஆரம்ப பள்ளி மகனுக்கு
வீட்டு பாடம் சொல்லித் தந்தார்,
டாஸ்மாக்கிலிருந்து திரும்பிய வேகத்தில் தந்தை !

*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
ஒரு ஊரிலே, ஒரு ராஜா.

அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.

அரசனின் முகத்தைக் கவனித்த அமைச்சருக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம்.ஆகவே அமைச்சர் ஒரு யோசனை சொன்னார். ‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’

‘ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லையே!’

‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் அமைச்சர்.

‘புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்?’ அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!’

‘குரு’ என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி. வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.

அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.

சம்பிரதாயங்கள் முடிந்தபிறகு அரசன் தன் குருவைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களைக் கொட்டினான். அவற்றைச் சரி செய்ய தான் மனதில் வைத்திருக்கும் தீர்வுகளையும் சொன்னான். குரு எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டார்.

கடைசியாக அரசன் கேட்டான்…

‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’

அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ புறப்படலாம்’ என்றார்.

அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. புதிய மலர்ச்சி. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் நாட்டை நோக்கிப் பயணமானான்.

அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்துவைத்தீர்கள் குருவே?’ என்று ஆர்வத்தோடு கேட்டார்.

‘உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான். என் யோசனை அவனுக்கு தேவைப்படவில்லை’ என்றார் குரு.

அப்படி என்ன செய்திருப்பார் குரு?.
.
.
.
.
.
.
‘நான் செய்ததெல்லாம், அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்!’
மன்னை முத்துக்குமார்
அவனவன் எண்ணத்திற்கேற்ப தான் அவன் தேவையும் இருக்கும் . அதுக்கு ஒரு ஜென் கதை.


  புகழ்பெற்ற புத்தத் துறவி அவர். மலையடிவாரத்தில் ஒரு குடிசையில் தனியாக வசித்து வந்தார்.

அவருக்கென பெரிய தேவைகள் இல்லை. அவர் குடிசை வெறுமையாகக் கிடந்தது. அருகில் கிடைக்கும் பழங்கள், காய்கள் அல்லது விவசாயிகள் எப்போதாவது தரும் தானியங்களைச் சாப்பிடுவார். கட்டாந்தரையில்தான் தூங்குவார். எப்போதும் ஒரு பாறையில் அமர்ந்து தியானம் செய்வது அவர் வழக்கம்…

அவரது குடிசைக்கு கதவுண்டு. ஆனால் ஒரு நாளும் பூட்டப்பட்டதில்லை. திறந்தே கிடந்தது.

ஒரு நாள் மாலை நேரம்… குரு வெளியில் சென்றிருந்தார். ஒரு திருடன் மெதுவாக தவழந்தபடி அந்த வீட்டுக்குள் நுழைந்தான். உள்ளே வந்த பிறகுதான் அவனுக்குத் தெரிந்தது, அந்த வீட்டில் ஒன்றுமே இல்லை என்பது. அப்போது குரு வீட்டுக்கு திரும்பிவிட்டார். உள்ளே இருந்த திருடனைப் பிடித்துவிட்டார்.

பின்னர் அவனை பரிவுடன் நோக்கிய அவர், கைகளைப் பிடித்து குலுக்கினார்.
திருடனுக்கு ஆச்சர்யம்.

“பாவம்… நீண்ட தூரத்திலிருந்து வந்திருப்பாய் என நினைக்கிறேன். உன்னை வெறுங்கையுடன் அனுப்ப விரும்பவில்லை” என்றார் குரு.
உடனே, அந்த காலி வீட்டை மீண்டும் ஒரு முறை நோட்டமிட்டான் திருடன். ஒன்றுமே கண்ணுக்குப் புலப்படவில்லை. குருவும் ஒரு முறை அறையை நோட்டம் விட்டார்.

தான் அணிந்திருந்த ஒரே உடையை கழட்டி அவனுக்குக் கொடுத்து, “இதை எனது அன்பளிப்பாக வைத்துக்கொள்,” என்றார்.

வியப்புடன் அந்த உடையை வாங்கிக் கொண்ட திருடன், அந்த குளிர் இரவில் மெல்ல நழுவினான்.

வெற்றுடம்புடன் அறையில் இருந்த குரு, ஜன்னல் வழியே ஒளிர்ந்த நிலவை நோக்கினார். அவர் உதடுகள் இப்படி முணுமுணுத்தன…

“அவனுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்… உண்மையில் இந்த நிலவை அவனுக்குப் பரிசளிக்க நினைத்தேன். அவனோ அழுக்கு உடையோடு திருப்தியடைந்துவிட்டானே!”
.
மன்னை முத்துக்குமார்
இது அனைவருக்கும் தெரிந்த கதை தான். தெரியாதவர்களுக்கு.

ஒரு ஊரில் ஒரு கல்வெட்டி இருந்தான். கல்லுடைப்பது அவன் வேலை. வருமானம் போதவில்லை. வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது அவனுக்கு.

ஒரு நாள், அவன் போன வழியில் ஒரு பணக்கார வீடு தென்பட்டது. அந்த வீட்டின் வாசல் வழியே அவன் கண்ணில் பட்ட அத்தனை பொருள்களும் செல்வங்களும் அவனை விழிபிதுங்க வைத்தன.

அடடா.. அந்த பணக்காரனுக்கு எத்தனை செல்வாக்கு… என நினைத்தான். பணக்காரன் மீது பொறாமையாக இருந்தது. தனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் எப்படியிருக்கும்? என நினைத்துப் பார்த்தான்.

அட, என்ன அதிசயம்… அவன் பணக்காரனாகிவிட்டான். வாழ்க்கையில் அவன் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு செல்வங்கள் குவிந்துவிட்டன.

மற்றொரு நாள்… ஒரு பெரிய அரசு அதிகாரி பல்லக்கில் அவனைத் தாண்டிச் சென்றார். அந்த அதிகாரியின் பின்னே பல சேவகர்கள்… படை வீரர்கள்… மக்கள் பயந்து கும்பிட்டு வழிவிட்டனர். அதிகாரியின் உத்தரவு தூள் பறந்தது. எப்பேர்ப்பட்ட பணக்காரனும் விழுந்து வணங்கினான். இப்போது கல்வெட்டிக்கு மனசெல்லாம் அந்த அதிகாரிதான் நின்றார்.

‘இருந்தா இப்படியல்லவா இருக்கணும்… என்னா அதிகாரம்..!’ என்று நினைத்தான். அவன் நினைப்பு பலித்தது. பெரும் அதிகாரம் படைத்த அதிகாரியாகிவிட்டான். அவனைப் பார்த்தாலே எல்லாம் பயந்தனர். கொஞ்ச நாளில் மக்கள் வெறுக்கும் அளவுக்கு அவன் அதிகாரம் எல்லை மீறிப் போனது.

ஒரு கோடை நாள்… தனது பல்லக்கில் பயணித்துக் கொண்டிருந்தான் இப்போது அதிகாரியாக இருக்கும் கல்வெட்டி. வெயில் சுள்ளென்று சுட்டது. இருக்கையில் உட்காரவே முடியாத அளவு வெப்பம் தகித்தது. அண்ணாந்து பார்த்தான்… வானத்தில் கம்பீரமாக தகதகத்தது சூரியன்!

“ஓ… உலகத்துக்கு மேலே உட்கார்ந்துகிட்டு இந்த சூரியன் என்னமா ஆட்டிப் படைக்குது… இருக்கட்டும். நானும் சூரியனாகி எல்லாரையும் எனக்கு கீழே வச்சி வாட்டி எடுப்பேன்…” என்றான்.

அவன் இப்போது சூரியனாகிவிட்டான்!

தனது கிரணங்களை பல மடங்கு வெப்பமாக்கி பூமியில் செலுத்தி அத்தனைப் பேரையும் துன்புறுத்தினான். விவசாயிகளும் தொழிலாளர்களும் சாபமிட்டனர் அவனுக்கு. அந்த நேரம் பார்த்து ஒரு கரிய மேகம் கடந்துபோனது. சூரியன் அந்த மேகத்துக்குள் மறைய, மக்கள் மகிழ்ந்தார்கள்.

“ஓ… மேகம் நினைச்சா சூரியனையே காலி பண்ணிடுமா… அப்ப நானும் மேகமாகிட்டா போச்சு,” என நினைத்தான். நினைத்தபடி மேகமாகிவிட்டான்.

இப்போது பூமியெங்கும் மழையை மடை திறந்த வெள்ளம் போல கொட்டினான். எங்கும் வெள்ளக்காடு. மக்கள் சபித்தனர். திடீரென பலத்த காற்று வீச, மேகம் தாக்குப் பிடிக்காமல் ஓடிப் போனது.

“பார்றா… காத்துக்கு எவ்வளவு சக்தி.. நானும் காத்தா மாறி உலகுக்கு ஒரு காட்டு காட்டப் போறேன்,” என்று நினைத்தான் மேகமாக இருந்த கல்வெட்டி.

அப்படியே நடந்தது. மேகம் இப்போது வலிமையான காற்றாகி மாறி, பூமியையே ஆட்டிப் பார்த்தது. மரங்களையும் வீடுகளையும் பெயர்த்தெடுத்து வீசியது. மக்கள் கோபமாகி திட்டித் தீர்த்தனர். அப்போது திடீரென ஏதோ ஒரு பெரிய உருவம் தடுத்து நிறுத்தியது போல உணர்வு. பார்த்தால் ஒரு பெரும் பாறை.

“ஓஹோ… காற்றையும் தடுக்கும் அளவு இந்தப் பாறைக்கு பலமா… நானும் பாறையாவேன்,” என்றான். பாறையானான். பூமியில் யாராலும் அசைக்க முடியாத பலத்துடன் இருந்தான். அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது… ஒரு உளியை வைத்து தன் மீதே யாரோ அடிக்கும் சத்தம்…

“அட… உலகின் சர்வ பலம் மிக்க இந்த பாறையை விட பலமானவன் யாரடா அது…?”

குனிந்து பார்த்தால்…

பாறையை உளியால் உடைத்துக் கொண்டிருந்தான் ஒரு கல்வெட்டி!

-------***-----
மன்னை முத்துக்குமார்

புத்தரால் தோற்றுவிக்கப் பெற்ற சமயம் பௌத்தம் எனப்பட்டது. உலக வாழ்க்கையை வெறுத்த சித்தார்த்தர் கடுமையான தவம் மேற்கொண்டு புத்தர் ஆனார். ஆசையே துன்பங்களுக்குக் காரணம் என்று அவர் உணர்ந்த உண்மையை உலகத்திற்கு அளித்தார்.

புத்தரான பிறகு ஒருநாள் அவர் அரச மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தபோது சுஜாதை என்பவள் அவருக்குப் பால் உணவு ஒன்றை அளித்தாள். பசுக்களில் சிறந்த பசுவைத் தேர்ந்தெடுத்து, அதன் பாலைக் கறந்து அதைப் பலமுறை பக்குவம் செய்து சுவை சேர்த்து உலகத்தில் எங்கும் கிடைக்காத உணவாக அதை உருவாக்கியிருந்தாள்.

புத்தர் அதனை அருந்தினார். 

அவரிடம் உணவின் சுவையைப் பற்றிக் கேட்டார். புத்தர் புலன்களுக்கு அடிமையாகாதவராக இருந்ததனால் அந்த உணவு அவரைப் பெரிதும் கவரவில்லை. எனினும், நன்றாக இருந்தது என்று கூறினார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு புத்தரை சுந்தன் என்ற வேடன் விருந்துக்கு அழைத்தான். வருவதாகப் புத்தரும் வாக்குறுதி கொடுத்துவிட்டார். விருந்தின் போது என்ன உணவு செய்திருக்கிறாய்? என்று கேட்டார். 

நல்ல பன்றியை நான் உணவாக்கி வைத்திருக்கிறேன் என்று சுந்தன் கூறினான். வாக்குறுதி கொடுத்துவிட்ட புத்தரால் அதனை மீற முடியவில்லை. பற்று இல்லாமல், சுவைக்கு அடிமை ஆகாமல் அந்த உணவை உட்கொண்டார்.

இரவில் வயிற்றுவலியால் புத்தர் துடித்தார். இறப்பு அவரை நெருங்கியது. அப்போது தனக்குப் பக்கத்திலிருந்த ஆனந்தர் என்ற சீடரிடம்

“புத்தருக்கு சுஜாதை அளித்த பாலுணவும், சுந்தன் கொடுத்த இறைச்சி உணவும் ஒன்றுதான். புத்தரின் இறப்புக்கு கந்தன் அளித்த உணவு காரணமில்லை என்று கூறுங்கள்” என்று கூறினார்.

இவ்வாறு எதையும் ஒரு பற்றில்லாமல் அணுகும் வாழ்க்கை முறையைப் பௌத்தம் வகுத்துத் தந்தது.

---மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்


மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்!

இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.

ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.

‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.

அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.

நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.

ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.

புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.

ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.

மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.

புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.

மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.

ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.

விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:

“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.

அமைச்சர் மவுனம் காத்தார்.

“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார்.

அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!

----------*****--------------
மன்னை முத்துக்குமார்


கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். நம் குடிமக்களை பார்த்து பொறாமை கொண்டு , அப்படி என்ன தான் இருக்கு இந்த டாஸ்மாக் கடைக்குள் ' என்று பார்த்துவர உள்ளே சென்று பார்த்து அப்படி என்னடா இதில் இருக்க போகுது ? சரி  குடித்து தான் பார்த்து விடுவோம் என்றெண்ணி ஆர்டரும் செய்தார்

5 பீர் முழுவதும் முடிந்தது. ஒரு வித்தியாசமும் தெரியல , தொட்ர்ந்தார் 2 FULL.. அப்பொழுதும் ஒன்னும் ஆகல.

மீண்டும் ஆரம்பிதார் , 2 BEER.

கடைகாரருக்கு ஆச்சரியம் தாளாமல் , கேடடார் .. "யாருய்யா நீ?

இவ்வளவு குடிச்சும் உனக்கு போதை எறல? மறுபடியும் கேட்குரே ?

" அதற்கு நம்ம கடவுள் " நான் தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது" என்றார் .

கடைகாரர் : " தோ டா ..! தொரைக்கு இப்ப தான் ஏர அரம்பிச்சி இருக்கு..! 


நடகட்டும் ..! நடகட்டும் ..!"
*
மன்னை முத்துக்குமார்


ஒரு செய்தியைப் புரியும்படி சொல்வதில் பண்டிதனை விடப் பாமரன் தேர்ச்சியுடையவனாகவுள்ளான்.

 

அதற்கு கல்கி அவர்கள் சொன்ன ஒரு கதை

 பேராசிரியர் கல்கி ஒரு முறை “தமிழில் சிறுகதை“ என்னும் தலைப்பில் வானொலியில் பேசினார். அதில் அவர் “ ஒரு கதைபற்றிக் கூறும் போது, ஸ்ரீராமகிருஷ்ணர் மாதிரி கேட்பவர்களுக்குப் புரியுமாறு சொல்லவேண்டும் என்றார்.

சிறுகதை என்பது முதல் வரியைக் கூறும் போதே கேட்பவர் அடுத்தவரி என்ன? என்று கேட்கத் தூண்டுவதாக இருக்கவேண்டும்“ என்றார். உதாரணத்தையும் கூறினார்.

ஒருநாள் காஞ்சிபுரம் உபய வேதாந்த சுவாமிகள் தம் வேலையாளைக் கூப்பிட்டு , “குப்பா நீ ஸ்ரீபெரும்புதூருக்குப் போய், திருவெங்கடாச்சாரியார் ஐயங்கார் சுவாமிகள் திருக்கோவில் ஆராதனைக்கு திருத்துழாய் எடுக்கையில், திருக்கோயிலின் திருக்குளத்தில் திருப்பாசி வழுக்கி திருவடி தவறி விழுந்துவிட்டார் என்று கூறிவா“ என்றார்.

பின்னர், “குப்பா, சொல்வாயா. எங்கே ஒரு முறை கூறிக்காட்டு பார்க்கலாம் என்றார்.

அதற்குக் குப்பன், “ சாமி, கும்பகோணத்து ஆசாமி குட்டையில் விழுந்ததை, ஸ்ரீபெரும்புதூர் ஆசாமிக்குச் சொல்லவேண்டும் அவ்வளவுதானே? என்றான்.

ஒரு செய்தியைப் புரியும்படி சொல்வதில் பண்டிதனை விடப் பாமரன் தேர்ச்சியுடையவனாகவுள்ளான்.
மன்னை முத்துக்குமார்
பறிபோன உரிமைகளை பிச்சையாக பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ மன்றாடுவதன் மூலமோ நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத் தான் கோயில்களின் முன் வெட்டுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல. -அம்பேத்கர்.

பாபா சாகேப் பீமராவ் டாக்டர் அம்பேத்கர். திரைக்காவியம். தமிழில்
-
.
மன்னை முத்துக்குமார்
-
எண்ணங்களையும் துறப்பதே துறவு !! 


வாங்க கதைக்கு போவோம்.

இரு துறவிகள்… ஒரு ஆற்றைக் கடந்து கரைக்குச் செல்ல நீரில் இறங்கினர்.

அப்போது ஆற்றைக் கடக்க முடியாமல் ஒரு இளம்பெண் தவித்துக் கொண்டிருந்தாள். துறவிகளிடம் தன்னை மறுகரை கொண்டு சேர்க்க முடியுமா? என்று கேட்டாள். ஒரு துறவியோ தயங்கினார்.

ஆனால் மற்றவர் தயங்கவில்லை. அந்தப் பெண்ணை தன் தோள் மீது ஏற்றி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கத் துவங்கிவிட்டார். மறுகரையில் சேர்த்ததும் அந்த இளம்பெண் துறவிக்கு நன்றி கூறிவிட்டுச் சென்று விட்டாள்.

துறவிகள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

சிறிது நேரம் கழித்து பெண்ணுக்கு உதவ மறுத்த துறவி கேட்டார்: “நம் மதக் கோட்பாடுகளின் படி நாம் எந்த பெண்ணையும் தொடக்கூடாது அல்லவா? நீங்கள் ஏன் அந்த பெண்ணைத் தொட்டு தூக்கி தோளில் சுமந்தீர்? இது தவறுதானே?” என்றார்.

பெண்ணுக்கு உதவிய துறவி சொன்னார்… “நான் அப்பெண்ணை அக்கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். நீங்கள்தான் இன்னும் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்!” என்றார் புன்முறுவலுடன்.
-
மன்னை முத்துக்குமார்
   ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், " ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?" என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான்.

அதற்கு அந்த துறவி "அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை" என்று சொன்னார்.

சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து "ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?" என்று கேட்டார்.

அதற்கு அத்துறவியோ "ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு சென்றான்" என்றார்.

மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவனும் துறவியிடம் "வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?" என்று பணிவுடன் கேட்டான்.

உடனே துறவி "மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்." என்று சொன்னார்.

உடனே ஆச்சரியத்துடன் மன்னர் "துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொன்னீர்கள்" என்று கேட்டான்.

அதற்கு துறவி "இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்" என்று சொல்லி, "முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது" என்று பொறுமையாக விளக்கிக் கூறினார்.
மன்னை முத்துக்குமார்

மனித வரலாற்றை எழுத வேண்டுமாயின் அதை இரண்டாக பிரித்து எழுத வேண்டும் . ஒன்று கார்ல் மார்க்ஸ் பிறப்பிற்கு முன்பு மற்றொன்று கார்ல் மார்க்ஸ் பிறப்பிற்கு பின்பு . என்பார்கள் வரலாற்று ஆய்வாளார்கள்.

வர்க்க சிந்தனையை மட்டுமின்றி பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்தும் தனது தொலைநோக்கு பார்வையால் மனித சிந்தனையை பக்குவப்படுத்திய தோழர் கார்ல் மார்க்ச் அவர்கள் பிறந்த தினம் இன்று

05-05 2013

மூலதனம் தந்த அந்த மாமேதையின் வாழ்க்கை வரலாறு :

பிறப்பு: 05-05-1818.
தந்தை: ஹெர்ஷல் மார்க்ஸ்.
தாய்: ஹென்ரிட்டா.

பிறந்த இடம்: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ளது ரைன் நதிக்கரை. அந்த நதிக்கரையின் அருகில் உள்ள ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதி – 664 இலக்கமிட்ட வீடு.

மதம்: யூத மதம்.
சொந்த நாடு: பிரெஞ்சு.
பிறந்து வளர்ந்தது: ஜெர்மன்.
உடன் பிறந்தவர்கள்: 8 பேர்.

தந்தையை பற்றி: சாதாரணமான வக்கீலாக இருந்து குடும்ப வறுமை காரணமாக ப்ராட்டஸ்டன்ட்டுக்கு மதம் மாறியவர்.
பள்ளி படிப்பு ஆரம்பித்த காலம்: 12 வயது.
பள்ளி படிப்பு முடித்த காலம்: 25-08-1835.

கல்லூரி வாழ்க்கைத் தொடக்கம்: பான் பல்கலைக்கழகம், வக்கில் படிப்பு(தந்தையின் விருப்பத்திற்காக)

கல்லூரி வாழ்க்கை: பான் நகரில் சமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறினார்.

கல்லூரி இறுதி வாழ்க்கை: தனது ஒழுங்கீனமான வாழ்க்கைக்கு காரல் மார்க்ஸின் தந்தையால் முடிவு எழுதப்பட்டது.

காதல் வாழ்க்கை:
காதலியின் பெயர்: ஜென்னி வான் வெஸ்ட் ப்ளான்.

காதலியிடம் இரசித்தது: உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம்! ஓர் எரி மலையின் இதயத்தில் வாடாத மலராக…

காரல் மார்க்ஸின் தோற்றம்: காணச் சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி அவரது கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர்.

ஜென்னியின் தோற்றம்: ரைன் லாந்தின் மிகச் சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானிய பெண்.

காதல் உருவாக்கம்: ஷேக்ஸ்பியரின் இரசிகரான இவர் அவரது கவிதைகள் அனைத்தையும் மனனம் செய்தவர். ஜென்னியின் தந்தை லுட்விக் மற்றும் மார்க்ஸ் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து பேசுவார்கள். ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பும். தன்னையும் மீறி மார்க்ஸினுலிருந்த கவிதாவேசம் பீறிட்டெழும். இதுவே ஜென்னி மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.

ஜென்னி இரசித்த ஆணின் அழகு: அகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமுமே ஓர் ஆணின் அழகு!!!

மார்க்ஸின் கூற்று: ஜென்னி எனும் ஒரு அசாதாரணமான பெண் தன் வாழ்வில் வர வேண்டுமென்றால், தானும் தனது வாழ்க்கையும் அசாதாரணமானதாக இருக்க வேண்டும் எனும் எண்ணம். இதுவே அவர் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்கான மூல காரணம்.

இரண்டாவது கல்லூரி வாழ்க்கை:

ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக் கழகத்தில் தத்துவம் படிக்க ஆரம்பித்தார். அந்த பல்கலைக் கழகத்தில் “ஆய்வு மாணவர்கள்” என்ற ஒரு சங்கம் நிறுவி காரசாரமாக வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதித்தார். முதல் நாள் சங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுநாள் அவரின் பதிலால் எதிரிகள் வாயடைத்து நின்றனர். தொடர்ந்து அவருக்குள் பெரும் அறிவுத் தீ, படித்து களைத்து உறங்காத விழிகள், வாராப்படாத கேசம், தாடியை நீவி விட்டுக் கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது, பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது போன்றவை பல்கலைக்கழகமே அவரைப்பற்றி பேச வைத்தது. தொடர்ந்த படிப்பின் ஆர்வம் காரணமாக ஜென்னியைப் பற்றியே மறக்க வைத்தது.

ஜென்னியின் காதல்:

“என் மகன் உனக்கு உகந்தவன் அல்ல” மற்றும் “நீ அவனை மறந்து விடு” போன்று மார்க்ஸின் பெற்றோர் கூறிய வார்த்தைகள் அவளை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது. இந்த சூழ்நிலையில் அவருக்கு ஒரு காதல் கடிதம் மார்க்ஸிடம் இருந்து வந்தது. அதை அவள் தன் விரல்கள் நடுங்க எடுத்து பார்த்தாள். கண்ணீர் ததும்பியதால் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தன. அவள் கண்களில் இருந்து “மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுத்தன” . அவற்றிற்கு காரணமான வரிகள் “இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி… ஜென்னி என்றால் காதல்….”

தொழில்:

பட்டப்படிப்பை முடித்து ரைன் கெஜட் என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்நது பத்தே மாதத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸின் எழுத்துக்கள் ஜெர்மானியரின் மத்தியில் நம்பிக்கையின் வெளிச்சத்தை ஏற்றத் துவங்கின. பத்திரிக்கையின் வியாபாரமும் சடசடவென எகிற ஆரம்பித்தது.

திருமண வாழ்க்கை:

ஜென்னிக்கு 29 வயதாகி விட்டது. தனது இளமையின் பாதி வாழ்க்கையை தூய காதலின் பொருட்டும், அவரது கனவாம் உலக மக்களின் நன்மைகளின் பொருட்டம் தியாகம் செய்து இருந்தாள். அதன் முடிவாக 1843ம் ஆண்டு ஜீன் 19ம் நாள் காரல் மார்க்ஸ் ஜென்னி என்ற இரு இதயங்கள் இணைந்தன. அந்த திருமணம் எளிமையுடனும், அழகுடனும் நடந்தேறியது. அவர்கள் திருமணத்துடன் அவர்கள் அறியாமலேயே இன்னும் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன.

1. உலகின் தலைசிறந்த காதலுக்கான இலக்கண புத்தகம் மூடிவைக்கப்பட்டது.

2. உலகின் தலைசிறந்த குடும்ப வாழ்க்கைக்கான புத்தகம் திறக்கப்பட்டது.

தொழில் புரட்சி: உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும் என மார்க்ஸ் ஆணித்தரமாக கூறியதோடு இல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார். இதைப்பற்றி அவர் எழுதிய பத்திரிக்கையின் பெயர்தான் “முன்னேற்றம்”. இதன் காரணமாக “முன்னேற்றம்” பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. ஜெர்மன் அரசு மார்க்ஸை நாடு கடத்த உத்திரவிட்டது. அப்போது அவருக்கு “ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தரப்பட்டது. ஒரே ஒரு வார்த்தை… அந்த வார்த்தையை மட்டும் அவர் சொல்லிவிட்டால் போதும் அவர் எந்தத் தடையும் இல்லாமல் வாழலாம் அந்த ஒரு வார்த்தை… மன்னிப்பு”!!!

நாடு மாற்றம்: சீறிப்பாயும் ஏவுகணைக்குப் பின்னால் பாயும் நெருப்பைப் போல், மார்கஸின் பின்னிருந்து இயக்கிய சொல் புரட்சி. சில நாட்களிலேயே மார்க்ஸ் குடும்பத்துடன் பெல்ஜியம் வந்து குடியேறினார். “பெல்ஜியம் அரசு நடுங்க ஆரம்பித்து. 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து ஒரு நாடே பயந்தன என்றால் இந்த இளைஞனின் எழுத்தும் சிந்தனையும் எத்தகைய வீரம் உடையதாக இருக்கும். “நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது மீறினால் சிறையில் தள்ளுவோம்” என எச்சரித்தது.

கம்யுனிஸ்ட்கள்: இந்த சூழ்நிலையில் ஒத்த கருத்துக்களை உடைய நெசவுத் தொழில் அதிபர் மகனான ஏங்கல்ஸ் மார்கஸ் உடன் சேர்ந்தார். இவர்கள் இருவரின் இணைவு “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதாலாளித்துவத்துக்கு எதிரான சக்தியாக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது”. அதன் பெயர் தான் “பொதுவுடமைச் சங்கம்”. இதில் தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக் கொண்டனர்.

இதன் பிண்ணனியாக “லண்டன் மாநகரத்தில் பிரமாண்டமான நட்சத்திரமாக உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த முதல் கம்யூனிஸ்ட் சங்கம் உதயமானது”. அதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுக்க தொழிலாளர்களிடையே உற்சாக ஊற்றைக் கிளப்பிய கம்யுனிஸ்ட் அடுத்த வருடமே இரண்டாவது மாநாட்டை லண்டனில் கூட்டியது. தங்களது புகழ்ச்சிக்கர எண்ணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின இதயங்களில் மார்க்ஸீம் ஏங்கல்ஸீம் பிதாமகன்களாக உருவெடுத்தனர்.

இதன் விளைவாக, 1848ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று பாரீஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மன்னன் லூயி பிலிப் தப்பியோடினான். அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் நாட்டின் மன்னன் தன் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டான். அதே நேரத்தில் மார்க்ஸீம் அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜென்னியை அந்த நாட்டின் “தேக விற்பனை பெண்” கைதிகளுடன் அடைத்தனர். அந்த இரவு அவளுக்கு நரகமாக இருந்தது. 24மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பல முறை பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இத்தாலி என்று நாடு கடத்தப்பட்டார். அப்போது அவர் கூறியது,

“எல்லா நாடும் என் நாடே!
எல்லா மக்களும் என் மக்கள்!!
நானோர் உலக மகன்

சோதனைக் காலம்: வாழ்க்கையில் சோதனைகள் வரும். ஆனால், சோதனைகளிலேயே வாழ்க்கை ஓடினால் என்ன ஆகும்? மார்க்ஸின் வரலாற்றுப் பாதையில் என்றேனும் ஒரு அடி… ஓரே ஒரு அடி… “சலிப்பின் காரணமாக ஜென்னி பின் வாங்கியிருந்தால் கூட உலக வரலாறே திசை மாறியிருக்கும்”.

இறுதியாக மார்க்ஸ் தனது புகலிடமாக இலண்டன் வந்தார். உலகின் பணக்கார நாடான இலண்டனில் அவர்க்கு பிரச்சனை வீ்ட்டுக்குள்ளயே முளைத்தது. பசி என்ற இரண்டு எழுத்து அவரது வீட்டினுள் நுழைந்தது. அப்போது அவருக்கு நான்கு குழந்தைகள் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பசி என்றால் நன்கு அறியும் வயது. குழந்தைகளுக்கும், மார்கஸீக்கும் பரிமாறி விட்டு பட்டினி கிடக்க ஆரம்பித்தாள் ஜென்னி. இதனால் ஜென்னியின் தனங்களில் பால் வற்றத் துவங்கியது. ஒரு காலக் கட்டத்தில் தனங்கள் சுருங்கி இரத்தம் கசிய ஆரம்பித்தது. அன்று இரவு மார்க்ஸின் வீட்டில் குழந்தை அழும் சத்தம் மட்டும் இல்லாமல் பிரபு குடும்பத்தில் பிறந்த ஜென்னியின் அழுகை சத்தமும் சேர்ந்து ஒலித்தது.

இதற்கிடையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கொடுமைக்கார எஜமானியால் விட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் ஜென்னியின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அபகரித்தனர். இந்த “பெருங்கொடுமை கொலை வெறியோடு அவர்களது மூன்று குழந்தைகளையும் தின்று தீர்த்தது”. இதை விட ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு மனிதருக்கும் நேர்ந்திராது. இந்த கொடுமையான சமயத்தில் ஜென்னி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை”.

தன் குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் துயருற்ற இந்தக் காலக்கட்டத்தில் தான் “உலகத்தின் பொருளாதாரம்” பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்தார் மார்க்ஸ். 1867 செப்டம்பர் 14, உலகத் தொழிலாளர்களின் வாழ்வில் நிரந்தர விடிவெள்ளி முழுமையாக உதயமான நாள். மார்க்ஸ் எனும் இயந்திரத்தின் 15 ஆண்டுகளின் வியர்வை துளிகள் எழுத்துருக்களாகி காகிதங்களில் பிரசுரமாகி “மூலதனம்” எனும் புத்தகமாக வெளிவந்தது. வெளியான நாள் முதலே “மூலதனம்” உலகமெங்கும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இதைத் தொடர்நது மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் வெளியாயின. இன்றளவும் உலகின் தலைச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக “மூலதனம்” கருதப்படுகிறது.

இந்த சமயத்தில் ஜென்னி தன் தாயின் இறப்பு காரணமாக ஜெர்மன் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவர் மனைவியின் பிரிவை இவ்வாறு கூறினார்.

உன் பிரிவு எனக்குள் மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்து போவதை கண் கூடாகக் பார்க்கிறேன். ஒரே ஒரு முறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக் கொண்டால் போதும் என் இதயம் அமைதியாகி விடும். அதன் பிறகு எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது.

மூலதனம் நூல்: உதாரணமாக நமக்கு ஒரு பென்சில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாமே சுயமாக உற்பத்தி செய்ய நீண்ட நேரமும் கடும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த தொல்லையே இல்லாமல், ஒரு விலை கொடுத்து அந்தப் பென்சிலை கடையிலிருந்து நாம் வாங்கிக் கொள்கிறோம். உண்மையில் நாம் பென்சிலை வாங்கவில்லை. அந்த பென்சிலை தயாரிக்கத் தேவைப்படும் “நம் உழைப்புக்கு பதிலாக இன்னொருவருடைய உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். அவ்வளவு தான்!!!”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை!!! பென்சில் தயாரிக்க மூலதனம் போட்ட காரணத்தால் பெரும் இலாபத்ததை அந்த முதலாளியும், பெரிய உழைப்பு இல்லாமல் அதை வாங்கி விற்கும் வியாபாரிகளுமே அதன் பலனை அனுபவிக்கினறனர்.

இது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அந்தத் தொழிலாளி அற்பப் பணம் கொடுத்துத் தன் உழைப்பைச் சுரண்டிக் கொடுக்கும் முதலாளியை கடவுளாக நினைத்து வணங்குகிறான். அதோடு மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட பென்சிலை பலரும் உற்பத்தி செய்து, வியாபாரத்தில் போட்டி ஏற்படுகிற போது அதைச் சரிகட்ட பென்சிலின் விலையைக் குறைக்கிறான் முதலாளி. அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தொழிலாளியின் தோளில் அதிகப்படியான உழைப்பை சுமத்தி அவர்களை முழுவதுமாக நசுக்க அரம்பிக்கிறான். இதைத்தான் மார்க்ஸ் தனது “மூலதனம்” எனும் நூலில் தெளிவுபடுத்தி தொழிலாளர்களின் வாழ்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்தார்.

பிடித்த விஷயம்: புகைப்பிடிப்பது, பால் கலக்காத கருப்பு காபி குடிப்பது மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி.

பிடிக்காத விஷயம்: பிச்சைப் போடுவது. “பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது எவ்வளவு மேலான விஷயம்”.

மனைவியின் இறப்பு: 1881ம் அண்டு, இரக்கமற்ற டிசம்பர் மாதத்தில், உலகத்துக் காதலையும், பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொடுத்த ஜென்னி எனும் மலர் பூமியில் உதிர்ந்தது.

மார்க்ஸின் இறப்பு: 1883ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு படுக்கை அறையிலிருந்து படிக்கும் அறைக்கு நடந்த சென்று தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது கைகளில் தந்தை, மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு கடைசி வார்த்தைகள் என எதுவும் சொல்லாமல் தனது 61வது வயதில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி பூரண அமைதிக்குள் ஆழ்ந்தார்.

“யூதனாகப் பிறந்தார்!
கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!
மனிதனாக இறந்தார்!!!

காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்.

மன்னை முத்துக்குமார்

-
அச்சம் தவிர் நையப்புடை
மானம் போற்று ரௌத்திரம் பழகு
அச்சம் தவிர் நையப்புடை
மானம் போற்று ரௌத்திரம் பழகு
ஆண்மை தவறேல் தாழ்ந்து நடவேல்
சூரரைப் போற்று தீயோர்க்கஞ்சேல்
அச்சம் தவிர் நையப்புடை
மானம் போற்று ரௌத்திரம் பழகு

ஓய்தல் ஒழி நேர்படப் பேசு
தாழ்ந்து நடவேல் சாவதற்கஞ்சேல்
ஓய்தல் ஒழி நேர்படப் பேசு
தாழ்ந்து நடவேல் சாவதற்கஞ்சேல்
காலம் அழியேல் கீழோர்க்கஞ்சேல்
போர்த்தொழில் பழகு தோல்வியில் கலங்கேல்

புதியன விரும்பு வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு தொன்மைக்கஞ்சேல்
புதியன விரும்பு வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு தொன்மைக்கஞ்சேல்
வெளிப்படப் பேசு நன்று கருது
வவ்வுதல் நீக்கு தவத்தினை நிதம் புரி

கற்றது ஒழுகு கைத்தொழில் போற்று
சேர்க்கை அழியேல் பேய்களுக்கஞ்சேல்
கற்றது ஒழுகு கைத்தொழில் போற்று
சேர்க்கை அழியேல் பேய்களுக்கஞ்சேல்
ஞாயிறு போற்று மந்திரம் வலிமை
சௌரியந் தவறேல் நாளெல்லாம் வினைசெய்

அச்சம் தவிர் நையப்புடை மானம் போற்று ரௌத்திரம் பழகு

பாடல் : பாரதியார்.
பாடியவர் : மிஸ்கின்
ஓவியம் : மணி வர்மா.
மன்னை முத்துக்குமார்


வங்காள மொழி திரைப்பட இயக்குனரும், திரையுலக மேதை என்று அறியப்பட்டவருமான  சத்யஜித் ரேயின்  பிறந்த தினம் இன்று 

  பதேர் பாஞ்சாலி, சாருலதா, அபுர் சன்சார், அபராஜிதோ உள்ளிட்ட மிகச்சிறந்த திரைப்படங்களை இயக்கிய இவர் உலக சினிமாவின் மகத்தான அம்சங்களை இந்திய சினிமாவிற்கு கற்றுக் கொடுத்தவர் என்றால் மிகையாகாது.

வங்காள மொழியில் இயக்கியிருந்தாலும், அவரது திரைப்படத்தில் வரும் மனிதர்கள் தூலமானவர்கள். இந்தியா முழுவதையும் பிரதிபலிக்கும் மனோ நிலையை அவரது கதாபாத்திரங்கள் பிரதிபலித்துள்ளன.

கலை சார்ந்த, அடிப்படையான மனித இயல்புகள் சார்ந்த விஷயங்களை திரைச் சலனங்களில் படம்பிடித்துக் காட்டுவதில் தரமான இயக்குனர்களுக்கு இன்றும் அவர் வழிகாட்டியாகவே இருந்து வருகிறார்.

சாருலதா என்ற திரைப்படத்தில், பெண்ணின் தனிமையை எடுத்துரைக்கும் ஒரு அபாரமான காட்சியில், பைனாகுலர் மூலம் அந்த பெண் மாடியிலிருந்து அனைத்தையும் பார்ப்பார், அப்போது அவரது கணவர் வருவார் கணவரையும் அந்த பைனாகுலர் வழியாகவே பார்ப்பார்.

எந்த ஒரு ஆவேச வசனமும் இல்லாத இந்த அற்புதமான காட்சி பெண் சமுதாயத்தின் நிலையை, தனிமையை அப்படியே தத்ரூபமாக காட்டியது. இந்த படம் வெளிவந்த போது விமர்சகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்: ஒரு பெண் வாசலுக்கு வந்து கதவைத் திறப்பதை 15 நிமிடம் காட்டவேண்டுமா என்றார். அதற்கு சத்யஜித் ரே பதில் கூறுகையில், ஒரு பெண் வாசலுக்கு வரும் ஒரு 15 நிமிடத்தை உங்களால் பொறுக்கமுடியவில்லை எனில், இவ்வளவு ஆண்டுகாலமாக வெளியே வராமலேயே இருக்கும் பெண்களைப் பற்றி உங்களுக்குக் ஒன்றுமே தெரியவில்லையா? என்றார்.

கறுப்பு வெள்ளை காலக் கட்டத்திலேயே கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள நெருக்கமின்மையை பைனாகுலர் காட்சி மூலம் சூட்சமமாக வெளிப்படுத்தியவர் இவ்வாறுதான் பதிலளிப்பார்.

கிராமிய வாழ்வின் சோகம் கலந்த ஒரு இனிமை இவரது படங்களில் வெளிப்பட்டுள்ளன. தூரத்து இடிமுழக்கம் (இது தமிழில் வந்த தூரத்து இடி முழக்கம் அல்ல) என்ற படத்தில் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் இந்தியாவை தாக்கும் அச்சுறுத்தல் இருந்தபோது ஒரு கிராமம் எவ்வாறு தனது பிழைப்பிற்கு கஷ்டப்பட்டது என்றும் அப்போது வறுமையிலும் அந்த மனிதர்கள் எவ்வாறு செம்மையாக வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டியுள்ளார்.

எந்த துன்பமான காலக் கட்டத்திலும் மனித உறவுகள் கைகோர்த்தால் துன்பத்தை வெல்லலாம் என்று இந்த படத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ளார் ரே.

"இவரது படங்களை காணத் தவறியவர்கள், சூரியனையும், சந்திரனையும் காணாத ஒரு உலகத்தில் வாழ்வதாகவே பொருள்" என்று ஜப்பானிய இயக்குனர் மேதை அகிரா குரொசாவா கூறியது நினைவு கூறத்தக்கது.

-
பதேர் பாஞ்சாலி திரைப்படம் .
.


நன்றி : வெப்துனியா. யூ டியுப்.